Advertisement

     அவள் முத்தத்தை ரசித்தவன் “இவ்வளவு நாள் ஆச்சு உனக்கு எங்க முத்தம் கொடுக்கன்னே தெரியலை. டிரெயினிங்க் பத்தாது போல”, என்றவன் அவளுடைய உதடுகளைச் சிறை செய்தான்.

     அவன் முத்தத்தில் மூழ்கிப் போய் அவள் இருக்க சிறிது நேரம் கழித்து அவளிடம் இருந்து விலகி “நம்ம வீட்டுக்கு போகலாமா டி? இல்லை இங்கயே இருக்கணுமா? எனக்கு நீ வேணும். அதுவும் இப்பவே. ரொம்ப நாள் ஆச்சா? அன்னைக்கு கடைசியா அப்படி ஒரு கம்பெனி கொடுத்துட்டு அப்புறம் பட்டினியா போட்டுட்ட?”, என்று சொல்ல “என்னை மன்னிச்சிருங்க. அன்னைக்கு நான் பண்ணினது ரொம்ப பெரிய தப்பு. ஒரு கணவனா ஆசையா என் கிட்ட நெருங்கினா உங்களை அவமானப் படுத்திட்டேன்”, என்றாள்.

     “எனக்கு புரியுது டா. ரிஷி விஷயம் நினைச்சிட்டு இருக்கும் போது உன்னோட அந்த கோபம் இயல்பானது தான்னு அப்புறம் புரிஞ்சிக்கிட்டேன்”

     “அப்படின்னா என் மேல உங்களுக்கு கோபமே இல்லையா?”

     “ஒரு சதவீதம் கூட இல்லை. ஆனா நூறு சதவீதம் லவ் இருக்கு. சரி சொல்லு வீட்டுக்கு போகலாமா?”, என்று தாபத்துடன் கேட்டான். ,

     “சரி போகலாம்”, என்று சொன்னவள் உடனே அவனுடன் கிளம்பி விட்டாள். அதற்கு மேல் அவனை பட்டினி போட அவளுக்கு மனதில்லை.

     கீழே வந்தவர்களுக்கு உணவு பரிமாறினார் பரமசிவம். அவன் வீட்டில் உண்டு விட்டாலும் அவர்களுக்காக சாப்பிட்டான். பின் அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினார்கள்.

     போகும் போது “மாமா பேசாம நீங்க நம்ம வீட்டுக்கே வந்துறீங்களா? அப்பா தான் இதை கேக்கச் சொன்னாங்க”, என்றான்.

     “நீங்க கேட்டதே எனக்கு சந்தோஷம் மாப்பிளை; ஆனா நான் இங்க தான் இருக்கணும். நான் போயிட்டா இந்த தோட்டம் என்ன ஆகும்? இன்னும் கொஞ்சம் உடல் தளர்ந்த உடனே அங்க தான் வருவேன். எனக்கும் உங்களை விட்டா வேற யார் இருக்கா? அது வரை அப்ப அப்ப பாத்துக்கலாம். என் பொண்ணை ஒரு நல்ல இடத்துல நல்ல மனுசனுக்கு கட்டி வச்சிருக்கேன். அவ புத்திசாலி. நல்லா பொழைச்சிக்குவான்னு நம்பிக்கை இருக்கு”, என்றவர் “பாத்து இரு டா. அப்பா அடிக்கடி பாக்க வரேன். குழந்தை பத்திரம். கொஞ்ச நாள் வீட்ல ரெஸ்ட் எடு. ஹெல்தியா சாப்பிடு. எதுனாலும் மாப்பிளை கிட்ட கேளு”, என்றார்.

     “சரிப்பா”, என்றாள் மதி. இருவருக்கும் சந்தோஷமாக விடை கொடுத்தார் பரமசிவம்.

     அவர்கள் வீட்டுக்கு வரும் போது மணி பதினொன்று ஆகி இருந்தது. அனைவரும் உறங்கச் சென்றிருக்க தமயந்தி மட்டும் டி‌வி பார்த்துக் கொண்டிருந்தாள்.

     ஆதி தான் வருகிறான் என்று எண்ணி தமயந்தி பார்க்க அங்கே மதியும் நின்றதும் தமயந்தி ஓடிச் சென்று அவள் கையைப் பற்றிக் கொண்டு “வந்துட்டியா மதி மா? எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இனி இப்படி கோபப் பட்டு போகக் கூடாது சரியா? இது உன் வீடு”, என்றாள்.

     “சரிங்க அத்தை”, என்று புன்னகைத்தாள் மதி.

     “எப்படி ஆதி மதியை கூட்டிட்டு வந்த? உங்க அப்பா கூட நாளைக்கு தானே கூட்டிட்டு வரச் சொன்னார்? ஆனா நீ இன்னைக்கே கூட்டிட்டு வந்துட்ட?”, என்று தமயந்தி கேட்க மனதுக்குள் அலறினான் ஆதி. ஏனென்றால் தந்தை சொன்னதால் தான் அவன் அவளை அழைக்க வந்திருக்கிறான் என்று மதி நினைக்க வாய்ப்பு இருக்கிறதே.

     ஆனால் அதைப் பற்றி கேட்காமல் “உங்க பிள்ளைக்கு நான் இல்லாம இருக்க முடியலையாம் அத்தை. அதான் வந்துட்டாங்க. மாமா எதுக்கு என்னை கூட்டிட்டு வரச் சொன்னாங்க அத்தை?”, என்று கேட்டாள்.

     “இவன் சொல்லலையா?”, என்று கேட்ட தமயந்தி திருமண விசயத்தைச் பற்றிச் சொல்ல உண்மையாகாவே சந்தோஷப் பட்டாள் மதி.

     “ரொம்ப சந்தோஷமா இருக்கு அத்தை எனக்கு”

     “எனக்கும் தான் மா. இதுக்கெல்லாம் காரணம் நம்ம ஆதி தான். அவன் தான் கல்யாண விஷயம் பேசினான்”, என்று தமயந்தி பெருமையாக சொல்ல “அம்மா இதுக்கு காரணம் நான் இல்லை. சாட்சாத் உங்க மருமகள் மதி தான்”, என்றான் ஆதி.

     “என்னப்பா சொல்ற? அவ தான் இந்த பேச்சு வார்த்தை நடக்கும் போது இங்க இல்லையே?”, என்று கேட்க அவன் நடந்தவற்றை விளக்கினான். எல்லாவற்றையும் கேட்டு கண் கலங்கிய தமயந்தி “எனக்கு அப்புறம் இந்த வீட்டை பொறுப்பா பாத்துக்குவேனு எனக்கு நம்பிக்கை இருக்கு டா”, என்று சொல்லி மதியை அன்பாக அணைத்துக் கொண்டாள்.

     “சரி சரி மாமியாரும் மருமகளும் பேசினது போதும். எனக்கு என் பொண்ணு கிட்ட பேசணும். அதனால எங்களை சீக்கிரம் விடுங்க”, என்றான்.

     அதைக் கேட்டு மதி முகம் சிவக்க “என்ன டா உளறல் இது? பொண்ணு அது இதுன்னு”, என்று கேட்ட தமயந்தி முகம் அவன் சொன்னதைக் கேட்டு மலர “நீங்க பாட்டி ஆகப் போறீங்க மா”, என்றான் ஆதி.

     “நிஜமாவா டா? எவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்லிருக்கீங்க? நான் இப்பவே எல்லாரையும் எழுப்பிச் சொல்லப் போறேன்”, என்று தமயந்தி பரபரக்க “அம்மா இப்ப வேண்டாம். நாளைக்கு சொல்லிக்கலாம்”, என்றான்.

     “சரி டா. பத்திரம். மதி, என்ன வேணும்னாலும் என் கிட்ட கேளு சரியா?”, என்று சொல்லி இருவருக்கும் விடை கொடுத்து விட்டு சந்தோஷமாக அறைக்குச் சென்றாள் கணவரிடம் சொல்ல. அவரோ நல்ல உறக்கத்தில் இருக்க காலையில் சொல்ல முடிவு எடுத்து படுத்தாள். ஆனால் சந்தோசத்தில் தமயந்திக்கு தூக்கம் தான் வரவில்லை.,

     அறைக்குள் வந்த ஆதி கொஞ்சம் கூட பொறுமையே இல்லாமல் அவளை முத்தங்களால் திணறடித்தான். அவள் வயிற்றில் பிள்ளைக்கு என்று சொல்லி அவன் கொடுத்த முத்தங்களை நிச்சயம் எண்ண முடியாது. அவன் இதழ்கள் ஆர்வமாக அவள் இதழ்களை விழுங்கிக் கொண்டிருந்தது.

     அவள் கரங்களும் உயர்ந்து அவன் கழுத்தை வளைத்துக் கொண்டது. அவளின் இதழ் தேன் மொத்தமும் பருகியவன் அந்த முத்தத்தை முடிக்க முடியாமல் முடிக்க மனதில்லாமல் திணறினான்.

     இத்தனை நாள் பிரிவில் அவனது தாபம் அதிகரிக்க அவள் கழுத்தில் இளைப்பாறியவன் அவளுக்கு நெருக்கமாக மாற முழு மனதுடன் முழு காதலுடன் அவனை ஏற்றுக் கொண்டாள் ஆதியின் மதி.

     அடுத்த நாள் காலையில் பரபரப்பாக சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள் தமயந்தி. நெய்யின் வாசனையும் பலகாரத்தின் வாசனையும் அந்த வீட்டையே நிறைத்தது.

     ஒவ்வொருவராக எழுந்து வர ஒவ்வொருவரையும் தனித்தனியாக டீ வேண்டுமா, காபி வேண்டுமா என்று கவனிக்கும் தமயந்தி இன்று சமையல் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. யாரையும் கண்டு கொள்ளவும் இல்லை.

     “அம்மாடி எனக்கு ஒரு டீ வேணும் மா”, என்று சேதுராமனே கேட்ட பிறகு தான் அவருக்கு கொடுத்தாள் “சாரி மாமா”, என்ற அசடு வழிதலோடு.

     டீக்கு அந்த பாடாகிப் போக காலை உணவுக்கு அனைவரும் கீழே வந்து அமர்ந்திருக்க அப்போதும் தமயந்தி வெளியே வந்த பாடில்லை.

     “தமா எல்லாரும் சாப்பிட வந்துட்டோம். வா வந்து எடுத்து வை. நந்துவும் விக்கியும் காலேஜ் போகணும். எனக்கு மீட்டிங் இருக்கு. அப்பா அம்மா மாத்திரை போடணும். செழியன் வேற வேலைக்கு போகணும். ஆதி சாப்பிடாமலே போய்ட்டான் போல? ஆளைக் காணும்”, என்றார் ராயர்.

     “அதெல்லாம் ஆதி வெளிய போகலை. அவன் மேல தான் இருக்கான். இதோ இப்ப டிபன் எடுத்துட்டு வரேன்”, என்று சொன்னவள் ஒவ்வொரு ஐட்டமாக எடுத்து வர “என்ன மா இது இன்னைக்கு இவ்வளவு ஐட்டம் செஞ்சிருக்கீங்க?”, என்று கேட்டாள் நந்தினி.

     “சந்தோஷமான விஷயம் சொல்லணும். அதான் செஞ்சேன். எல்லாரும் முதல்ல உங்களுக்கு புடிச்ச ஸ்வீட் சாப்பிடுங்க. லட்டு இருக்கு, அல்வா இருக்கு, கேசரி, பாயாசம் எல்லாம் இருக்கு”

     “என்ன சந்தோஷமான விஷயம் தமயந்தி? என் பேரப் பிள்ளைகளுக்கு கல்யாணம் பேசினோமே அதுவா?”, என்று கேட்டாள் பார்வதி.

     “அது இல்லை அத்தை. இது என் பேரப் பிள்ளை வரப் போறதைக் கொண்டாட”, என்று சொல்ல அனைவரின் முகமும் மலர்ந்தது.

     “மதி உண்டாகி இருக்காளா தமயந்தி?”

     “ஆமா அத்தை. கூடிய சீக்கிரம் இந்த வீட்டுக்கு குட்டி ஆதியோ குட்டி மதியோ வரப் போறாங்க. நான் பாட்டி ஆகிட்டேன்”, என்று சொல்ல அனைவரின் முகமும் மலர்ந்து தான் போனது.

     “நிஜமா தமா? உண்மையா தான் சொல்றியா?”, என்று கேட்டார் ராயர்.

     “ஆமாங்க”

     “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு தமா. நான் தாத்தா ஆக போறேனா? எனக்கு இப்ப தான் ஆதி பிறந்த மாதிரி இருக்கு. இனி கொஞ்ச நாள்ல அவன் மகனே என்னைத் தாத்தானு கூப்பிடப் போறான்”, என்று அவ்வளவு சந்தோஷமாக கேட்ட ராயரை அனைவரும் வியப்பாக தான் பார்த்தார்கள்.

Advertisement