Advertisement

     “ஆன் அது… அது வந்து பா… இங்க… வேண்டாம் பா. நான் அங்கயே போறேன். மாமா என்னை நம்பி பொறுப்பைக் கொடுத்துருக்காங்க. நான் அவர் கூடவே போறேன் பா”, என்று சொல்ல வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “சரி மா”, என்றார்.

     சிறிது நேரத்தில் இருவரும் வீட்டுக்குள் வர மனதில் இருந்த சந்தோஷத்தை அடக்கி “நிஜமாவே உங்க ரெண்டு பேருக்கும் ஒண்ணும் இல்லை தானே? ஆஸ்பத்திரின்ன உடனே பயந்துட்டேன்”, என்று கேட்டான் ஆதி. அவன் கண்கள் எல்லாம் மனைவி மீது தான். அவளை இறுக்கி அணைக்க அவன் கைகள் பரபரத்தது. அதே போல அவள் பார்வையும் ஆசையாக ஏக்கமாக எதிர்பார்ப்பாக குழந்தை பற்றி பேச வேண்டும் என்று ஆவலாக அவன் மீது பதிந்தது.

     “எனக்கு ஒண்ணும் இல்லை மாப்பிள்ளை. உங்க பொண்டாட்டிக்கு தான் கொஞ்சம் உடம்பு சரி இல்லை. என்னன்னு அவங்களே சொல்லுவாங்க”, என்றவர் “மதி மாப்பிள்ளையை ரூமுக்கு கூட்டிட்டு போ”, என்றார்.

     அவனையே இமைக்காமல் பார்த்தவள் “வாங்க”, என்று சொல்லி அறைக்கு அழைத்துச் சென்றாள்.

     அறைக்குள் வந்தது தான் தாமதம். “சாரி மதி, தப்பு என் மேல தான். நான் உன்னை வீட்டை விட்டு போகச் சொல்லிருக்க கூடாது. நான் உன்னை நம்பாததுனால தானே உனக்கு கோபம். ஆனா நான் தேவையில்லாம கோபப் பட்டு உன்னைக் கஷ்டப் படுத்திட்டேன். நீ இல்லாம வீடு வீடாவே இல்லை. அதுவும் நம்ம ரூமுக்குள்ள உன்னோட பிரசன்ஸ் இல்லாம என்னால இருக்கவே முடியலை டி. அதான் கூப்பிட வந்துட்டேன். நம்ம வீட்டுக்கு போகலாமா? பிளீஸ் வந்துரு மதி. உன்னைப் போகச் சொன்னதுக்கு காரணம் நீ டைவர்ஸ்ன்னு பேசினதுனால தான். பிளீஸ் என்னை மன்னிச்சிரு”, என்றான்.

     அவன் கேட்ட மன்னிப்பில் அவள் உடல் அப்படி சிலிர்த்தது. தவறு முழுக்க அவள் செய்திருக்க அதை எல்லாம் அவன் தவறாக எண்ணி மன்னிப்பு கேட்கும் கணவனை எண்ணி அவ்வளவு பூரிப்பாக இருந்தது. இப்படி ஒருத்தன் கிடைக்க தான் என்ன புண்ணியம் செய்தோம் என்று எண்ணினாள். அவள் அவனையே இமைக்காமல் பார்க்க அவனுக்கு அவள் என்ன நினைக்கிறாள் என்று புரிய வில்லை. கோபத்தில் வர மாட்டேன் என்று சொல்லி விடுவாளோ என்று கூட பதறினான். அது மட்டுமில்லாமல் அவனுக்கு அவளையும் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் கொஞ்ச வேண்டும். அது அவள் சமாதானமானால் தானே நடக்கும்?

     “என்ன மதி அப்படி பாக்குற? என்னை மன்னிக்க மாட்டியா? என் கூட நம்ம வீட்டுக்கு வர மாட்டியா?”, என்று எதிர்பார்ப்புடன் கேட்டான்.

     “எத்தனை தடவைங்க செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேப்பீங்க? நீங்க கேக்குற மன்னிப்பு எனக்கு எவ்வளவு குற்ற உணர்வைக் கொடுக்குது தெரியுமா? எல்லா தப்பையும் நான் தான் செஞ்சேன்? நிறைய இடத்துல உங்களை இன்சல்ட் பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிருங்க”, என்று கேட்கும் போதே அவள் கண்கள் கலங்க அவள் பேச்சில் குழப்பம் வந்தாலும் அவளை நெருங்கி அவளை தன்னுடைய தோளில் சாய்த்து “என்ன இது சின்னக் குழந்தை மாதிரி…”, என்று சொல்லிக் கொண்டே அவள் கண்ணீரைத் துடைத்து விட்டான்.

     “தி கிரேட் ஆதித்யகரிகாலனை நான் ரொம்ப சாதாரணமா எடை போட்டுட்டேங்க. உங்களை ரொம்ப ஈஸியா எடுத்துக்கிட்டேன். என்னை மன்னிச்சிருங்க”, என்றவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள். அவனது அருகாமை அவளுக்கு இப்போது மிகவும் தேவையாக இருந்தது.

     “என்ன மதி என்னல்லாமோ சொல்ற? தப்பு நான் தானே பண்ணினேன்? ரிஷி பத்தி சொன்னதை நான் நம்பலை. கடைசியா உன்னை வீட்டை விட்டே போகச் சொல்லிட்டேன். என் மேல தானே தப்பு?”

     “அது நான் பேசின அதிகப் படியான பேச்சால தானே சொன்னீங்க? ரிஷி பத்தியும் நீங்க தானே கண்டு பிடிச்சீங்க? உங்களை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டேங்க. என்னை மன்னிச்சிருங்க”

     “மன்னிக்கிற அளவுக்கு நீ ஒரு தப்பும் செய்யலை மதி”

     “ஏது? தப்பு இல்லையா? நான் செஞ்சது எல்லாமே தப்பு தான். என்னைப் பத்தி ஒரு பொய்யான லட்டர் வந்து அதை நீங்க நம்பாதப்ப நான் அதை நம்பி உங்களை சந்தேகப் பட்டு உங்க கிட்ட விசாரிக்க வந்தது என்னோட முதல் தப்பு”

     “அது தப்பு இல்லை டா. நேருக்கு நேர் வந்து தெரிஞ்சிக்க நினைச்சது சரியான விஷயம் தான்”

     “ஆனா நீங்க வேற யாரையும் லவ் பண்ணலைன்னு சொன்னதைக் கூட நான் நம்பலை தானே?”

     “உன்னால எப்படி நம்பிருக்க முடியும்? நான் நீ கேட்டதுக்கு சத்தியம் பண்ணலையே? அப்ப நான் உன்னை லவ் பண்ணிட்டு இருந்தேன் டி. அதான் சத்தியம் பண்ணலை. அதான் நீ குழம்பின. இதுல உன் தப்பு என்ன இருக்கு?”

     “இருந்தாலும் நான் உங்களை நம்பிருந்துருக்கணும். அது தப்பு தான்”

     “சரி விடு. ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு”

     “விட மாட்டேன். எனக்கு இன்னைக்கு பேசணும்”

     “பேசு டா. நாம நிறைய விஷயம் பேசாம இருந்தது தான் பிரச்சனை. நான் மனசு விட்டு உன்னை பேச வச்சிருக்கணும். ஆனா அதுக்கு முன்னாடி ஆஸ்பத்திரிக்கு எதுக்கு போனேன்னு சொல்லு. உடம்புக்கு ஒண்ணும் இல்லையே? அந்த அளவுக்கு உனக்கு மன அழுத்தத்தைக் கொடுத்துட்டேனா?”

     “உடம்புக்கு ஒண்ணும் இல்லை. ஆனா”, என்று சொன்னவளின் முகம் சிவக்க “ஆனா என்ன டி?”, என்று தெரியாதது போல கேட்டான்.

     அவன் கையைப் பற்றி தன்னுடைய வயிற்றில் வைத்தவள் “ஜூனியர் ஆதி இஸ் தேர்”, என்று சொல்ல இப்போது உண்மையான சந்தோஷத்தை அடக்காமல் முகத்தில் காட்டினான்.

     “ஏய் நிஜமாவா சொல்ற?”, என்று கேட்டவன் அவள் வயிற்றை வருடியது மட்டும் அல்லாமல் முத்தங்களால் குளிர் வித்தான்.

     “ஐயோ போதும், விடுங்க”, என்று அவள் சிணுங்கிய பிறகு தான் விட்டான். ஆனாலும் அவளை அணைத்த படியே இருக்க அவளும் அவனை விட்டு விலக விரும்ப வில்லை.

     “என்னை மன்னிச்சிறுவீங்க தானே?”

     “நல்ல நேரத்துல எதுவும் பேச வேண்டாம் டி. காதலைச் சொல்லலைன்னாலும் என் மனசுல நீ இருக்க. உன் மனசுல நான் தான் இருக்கேன். அது நம்ம ரெண்டு பேருக்கும் தெரியும். நம்ம காதலுக்கு சாட்சியா என் பிள்ளை உன் வயித்துல இருக்கு. இது போதும் டி. வேற எதுவும் வேண்டாம்”

     “இல்லைங்க கடைசியா ஒரு தடவை பேசணும்”

     “சரி சொல்லு. ஆனா என் மடில ஊக்காந்தே சொல்லு”, என்று சொல்லி கட்டிலில் அமர்ந்து அவளை மடியில் அமர்த்திக் கொண்டான்.

     அவன் மடியில் அமர்ந்து அவன் கழுத்தில் கைகளைப் போட்டவள் “அடுத்து நான் செஞ்ச தப்பு எது தெரியுமா? வேலைக்கு போறேன்னு சொல்லி நீங்க பொறுமையா இருன்னு சொல்லியும் கேக்காம மாமா கிட்ட பேசினது. அந்த இடத்துல உங்களுக்கு நான் மதிப்பு கொடுத்துருக்கணும் தானே?”, என்றாள்.

     “அது எனக்கு கஷ்டமா இருந்துச்சு தான். ஆனா இப்ப என்ன அப்பா கிட்ட தானே கேட்ட? அதனால ஒண்ணும் இல்லை விடு. மேடம் வேற என்ன தப்பு பண்ணுனீங்க?”

     “அடுத்த தப்பு ரிஷி விஷயம் மறைச்சது. நான் மறைக்கணும்னு நினைகலைங்க. பாட்டி மாதிரி நீங்களும் என்னை தப்பா நினைச்சிறுவீங்களோன்னு பயம். அதான் சொல்லலை”

     “எனக்கு புரியுது மா. அவனைப் பத்தி எனக்கு எல்லாம் தெரியும். அதுல எனக்கு உன் மேல எந்த வருத்தமும் இல்லை. ஆனா அவனைத் தனியா பாக்கப் போனது தான் கோபம். அங்க அவன் உன்னை ஏதாவது செஞ்சிருவானோன்னு ரொம்ப பயந்துட்டேன். என் உயிரே என் கிட்ட இல்லை தெரியுமா?”

     “தப்பு தான். மன்னிச்சிருங்க. ஆமா உங்களுக்கு எப்படி நான் போனது தெரியும்? எப்படி நீங்களும் போலீசும் அங்க வந்தீங்க?”, என்று கேட்க நடந்ததை விளக்கினான். இப்போதைய ரிஷியின் நிலமையைப் பற்றியும் சொன்னான்.

     “அப்புறம் நான் செஞ்ச கடைசி தப்பு டைவர்ஸ் பத்தி பேசினது தான். அது பாட்டி என்னை தூண்டி விட்டுட்டாங்க. கோபத்துல அப்படிச் சொல்லிட்டேன். ஆனா நிஜமாவே உங்களை என்னால வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. உங்களை விட்டு பிரிஞ்சும் இருக்க முடியாது”

     “நீ டைவர்ஸ்ன்னு சொன்னதும் என்னை வேற கல்யாணம் பண்ணச் சொன்னதும் எனக்கு உண்மையிலே கோபம் தான். என்னோட காதல் இவளுக்கு புரியவே இல்லையான்னு ஆத்திரத்துல தான் இங்க கொண்டு வந்து விட்டுட்டேன். அப்புறம் தான் நீ மணி அத்தை வீட்ல வச்சு என்னை விட்டுக் கொடுக்காம பேசினது நினைவு வந்துச்சு. என் காதல் புரிஞ்சும் நீ அப்படி பேசினது கோபத்துனால தான்னு புரிஞ்சது. அதான் உன்னைக் கூப்பிட வந்துட்டேன். இங்க வந்து பாத்தா இந்த குட்டி வயித்துல ஒரு குட்டி கிஃப்ட்டை ஒழிச்சு வச்சிருக்க. இந்த உலகத்துலே யார் சந்தோஷமா இருக்கான்னு கேட்டா நான் என்னைத் தான் சொல்லுவேன் டி”, என்று சொல்ல அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

Advertisement