Advertisement

அத்தியாயம் 16

சிறகை விரித்துப் பறந்து திரிகிறது 

எந்தன் காதல் நினைவுகள்!!!

     அப்போது அங்கே வந்த டாக்டர் “பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்லை. ரொம்ப யோசிச்சதுனால வந்த ஸ்ட்ரெஸ் தான். இந்த மாதிரி நேரத்துல பொண்ணுங்களுக்கு ஸ்ட்ரெஸ் வரது இயல்பு தான். இன்னும் கொஞ்ச நேரத்துல கைனகாலஜிஸ்ட் வருவாங்க. அவங்க ஒரு ஸ்கேன் எடுத்துட்டு பேபி பத்தி சொல்லுவாங்க. கேட்டுட்டு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்”, என்று சொல்ல “டாக்டர் நீங்க என்ன சொல்றீங்க?”, என்று கேட்டார் பரமசிவம்.

     “யெஸ். ஷி இஸ் பிரேக்னண்ட். பேபிக்கு ஐம்பத்தி ஏழு நாள் ஆகிருச்சுன்னு பேசன்ட் சொன்னாங்க”, என்று சொல்ல பரமசிவம் சந்தோஷமாக கண்ணீர் வடிக்க ஆதியோ அதிக சந்தோசத்தில் அங்கிருந்த சேரில் தளர்ந்து போய் அமர்ந்தான். அவன் இப்படி ஒரு விஷயத்தை எதிர் பார்க்கவே இல்லை. கண்கள் எல்லாம் கலங்கி உடல் எல்லாம் சிலிர்த்து ஒரு மாதிரி பரவச நிலையில் இருந்தான். அவனை ஆண் என்று உலகிற்கே உணர்த்த வரப் போகும் உயிராயிற்றே.

     அவளை ஓடிச் சென்று பார்த்து கட்டிப் பிடிக்க ஆசை வந்தது., அப்போது தான் அவள் தன்னை வேண்டாம் என்று சொன்னதும் அதுவும் தானே அவளை வீட்டை விட்டுப் போகச் சொன்னதும் நினைவில் வந்தது.

     இப்போது அவளைச் சென்று பார்த்தால் குழந்தை விஷயம் தெரிந்து தான் அவன் வந்திருப்பதாக அவள் நினைப்பாள். அப்படி நினைத்தால் அவனுடைய காதல் அதில் மேலும் அடி பட்டுப் போகும் என்று உணர்ந்தவன் “மாமா”, என்று அழைத்தான்.

     “சந்தோசத்துல எனக்கு பேச்சு மூச்சே வரலை மாப்பிள்ளை. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. நான் தாத்தாவாகிட்டேன். நீங்க அப்பாவாகப் போறீங்க? உங்க அத்தை இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பா”, என்று நெகிழ்ந்து போய் உரைத்தார்.

     “ஆமா மாமா”, என்று சொன்னவனின் கண்களும் ஆனந்தத்தில் பனித்தது.

     “வாங்க அவளைப் போய் பாப்போம்”

     “மாமா உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்”

     “சொல்லுங்க மாப்பிளை”, என்று அவர் கேட்க “இப்படி வாங்க, இங்க உக்காருங்க”, என்று சொல்லி அவரை அமர வைத்தவன் அவளை முதன்முதலில் பார்த்தது காதலில் விழுந்தது தரகரிடம் பேசியது, திருமணம் நடந்தது, சந்தோஷமான வாழ்க்கை, ரிஷி பற்றி, கடைசியாக அவள் டைவர்ஸ் பற்றி பேசியதால் அவளை வீட்டை விட்டு போகச் சொன்னது வரை அனைத்தையும் சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டு பிரம்மித்துப் போய் இருந்தார் பரமசிவம்.

     ஆதியின் மேல் இன்னும் அதிக மரியாதையும் அன்பும் வந்தது என்றால் மகளை எண்ணி பூரிப்பாகவும் பெருமையாகவும் இருந்தது.

     “இவ்வளவு விஷயம் நடந்துச்சா மாப்பிள்ளை? எனக்கு பிரம்மிப்பா இருக்கு. இந்த கழுதை என் கிட்ட ஒண்ணுமே சொல்லலையே?”

     “ஆமா மாமா. கொஞ்சம் மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் தான். சத்தியமா நான் அவளைக் கூப்பிட உங்க வீட்டுக்கு தான் கிளம்பிட்டு இருந்தேன். ஆனா அது அவளுக்கு தெரியாதுல்ல. நான் வீட்டை விட்டு போகச் சொன்னதுனால என் மேல கோபத்துல இருப்பா. இப்ப நான் வந்ததைக் கூட குழந்தைக்காக வந்ததா நினைப்பா. அதனால…”

     “அதனால என்ன மாப்பிள்ளை?”

     “அதனால நீங்க என்ன பண்ணுறீங்கன்னா இங்க எல்லாம் முடிச்சிட்டு வீட்டுக்கு வாங்க. நான் முன்னாடியே உங்க வீட்ல போய் வெயிட் பண்ணுறேன். அங்க வீடு பூட்டிருக்குறதைப் பாத்துட்டு நான் உங்களுக்கு கால் பண்ணுறேன். அப்ப அவளுக்காக வந்ததா நினைப்பால்ல? குழந்தை விஷயமும் எனக்கு முன்னாடியே தெரிஞ்சது அவளுக்கு தெரிய வேண்டாம். எனக்கு அவ காதல் வேணும் மாமா. பிளீஸ். இப்ப இதைச் செய்யலைன்னா அது அவ மனசுல ஆறாத வடுவா பதிஞ்சிரும்”

     “எனக்கு புரியுது மாப்ள. கண்டிப்பா என் பொண்ணு அப்படி தான் நினைப்பா. இதுவே நீங்க அவளுக்காக வந்தது தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப் படுவா. எனக்கு என் பொண்ணு சந்தோஷம் தான் முக்கியம். நான் அவ கிட்ட நீங்க வந்ததைச் சொல்ல மாட்டேன். நீங்க கிளம்புங்க. வீட்ல வெயிட் பண்ணுங்க. இப்ப ஸ்கேன் எடுக்க வெளிய கூட்டிட்டு வருவாங்க”, என்று சொல்ல சந்தோசமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

     ஆதி அங்கிருந்து சென்றதும் சிறு சிரிப்புடன் நின்றிருந்தார். அறைக்குள் இருந்த மதியும் அவ்வளவு சந்தோஷமாக இருந்தாள். வீட்டில் நடந்த கலவரத்தால் அவள் இதை கவனிக்கவே இல்லை. ஆதியிடம் சொல்லி அவன் நெஞ்சில் சாய ஆசை வந்தது. ஆனால் அவன் தன்னை வீட்டை விட்டுப் போகச் சொன்னது நினைவில் வந்து அவளை இம்சித்தது.

     “எனக்கு ஆதி வேணும்? எப்படி அங்க போகன்னு தானே யோசிச்சேன்? இப்ப எங்க பிள்ளையே அதுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துருக்கு. வீட்டுக்கு போனதும் அப்பா கிட்ட சொல்லி ஆதி கிட்ட சொல்லச் சொல்லணும். அவன் உடனே வந்து என்னைக் கூட்டிட்டு போய்டுவான்”, என்று சந்தோஷமாக எண்ணிக் கொண்டாள்.

     அப்போது மதியை ஸ்கேன் எடுக்க அழைத்து சென்றார்கள். வெளியே சந்தோஷமாக பரமசிவம் நின்றிருப்பதைக் கண்டவள் “அப்பா”, என்று அழைக்க “மதி, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டா. நான் தாத்தா ஆகப் போறேன்”, என்று குதூகலித்தார்.

     புன்னகையுடன் அவரைப் பார்த்தவள் “நான் ஸ்கேன் எடுத்துட்டு வரேன் பா”, என்றாள்.

     “மாப்பிள்ளைக்கு சொல்லட்டுமா மா?”, என்று கேட்க ஒரு நொடி திகைத்தாலும் முகத்தை சரி செய்தவள் “வீட்டுக்கு போய் நானே சொல்லிக்கிறேன் பா. நீங்க யார் கிட்டயும் சொல்ல வேண்டாம்”, என்றாள்.

     “சரி டா”, என்று அவர் சொன்னதும் சிஸ்டருடன் ஸ்கேன் எடுக்கச் சென்றாள். அவள் சென்றதும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த பரமசிவம் ஏற்கனவே ஆதிக்கு அழைத்திருந்த கால் ஹிஸ்டரியை டெலீட் செய்தார். டீச்சரையே திருடன் வேலை பார்க்க வைத்தான் அவரது மாப்பிள்ளை.

     ஸ்கேன் எடுத்து முடிந்ததும் மருத்துவரிடம் சில அறிவுரைகளையும் மருந்துகளையும் வாங்கிக் கொண்டு வெளியே வர அப்போது மதிக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தான் ஆதி. அவளது மொபைல் வீட்டில் இருப்பது தெரிந்து பரமசிவம் எண்ணுக்கு அழைத்தான்.

     ஆட்டோவில் வரும் போது போன் அடிக்க யாரென்று பார்த்த பரமசிவம் “பாப்பா மாப்பிள்ளை கூப்பிடுறார் டா”, என்றார்.

     “இன்னேரத்துலயா? எதுக்கு கால் பண்ணுறான் அதுவும் அப்பாவுக்கு?”, என்று குழம்பியவள் “ஸ்பீக்கர்ல போட்டு பேசுங்கப்பா”, என்றாள்.

     அவள் சொன்ன படி செய்தவர் “மாப்பிள்ளை என்ன இந்த நேரத்துல கூப்பிட்டுருக்கீங்க?”, என்று ஒன்றும் தெரியவாதவர் போல கேட்டார்.

     “மாமா நீங்க எங்க இருக்கீங்க? மதி எங்க? அவளுக்கு கால் பண்னினேன். அவ எடுக்கலை. எங்கயாவது வெளிய போயிருக்கீங்களா? நான் மதியை பாக்க வந்தேன். கையோட அழைச்சிட்டு போகணும்னு தான் வந்தேன். ஒரு நாள் கூட அவ இல்லாம இருக்க முடியலை. அதான் வந்தேன். ஆனா வீடு பூட்டி இருக்கு. இங்க வீட்டு முன்னாடி தான் இருக்கேன்”, என்று சொல்ல அவள் கண்கள் ஒளிர்ந்தது. அதைக் கண்ட பரமசிவத்துக்கு “மாப்பிள்ளை நம்ம பொண்ணை நல்லா தான் புரிஞ்சி வச்சிருக்கார்”, என்ற எண்ணம் தான் வந்தது.

     “அப்படியா மாப்பிள்ளை? நாங்க ஆஸ்பத்திரிக்கு வந்தோம். இப்ப வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கோம். கால் மணி நேரத்துல வந்துருவோம். உங்களுக்கு சாவி வைக்கிற இடம் தெரியும் தானே? சாவியை எடுத்து வீட்டுக்குள்ள போய் இருங்க”

     “ஆஸ்பத்திரிக்கா? எதுக்கு? என்ன ஆச்சு? உங்களுக்கு ஒண்ணும் இல்லையே? மதி நல்லா இருக்காளா?”, என்று அவன் பதற அவன் பதட்டம் அவளை சுகமாக தாலாட்டியது. ஏற்கனவே அவன் மீது எந்த தவறும் இல்லை என்று தெரிந்து அவனைக் காண ஆவலாக இருக்கும் போது தான் அவள் மயங்கி விழுந்தது. இப்போது அவனே அவளைத் தேடி வந்திருக்க அவளுக்கு அவ்வளவு சந்தோசமாக இருந்தது.

     “எனக்கு ஒண்ணும் இல்லை மாப்பிள்ளை. மதிக்கும் ஒண்ணும் இல்லை. நல்லா இருக்கா. கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ல மயங்கி விழுந்துட்டா? வேற ஒண்ணும் இல்லை. நாங்க கால் மணி நேரத்துல வந்துருவோம்”

     “நான் கூப்பிட வரவா மாமா?”

     “நீங்க இங்க வந்து நாங்க அங்க வர இன்னும் நேரம் ஆகும். நானே கூட்டிட்டு வரேன் மாப்பிள்ளை”, என்று சொல்லி போனை வைக்க அவனும் சிறு சிரிப்புடன் வீட்டுக்குள் சென்றான்.

     “என்ன மதி இது? பாரின் போறேனு சொன்ன மாப்பிளை இப்படி வந்து நிக்குறார்?”, என்று தெரியாதது போலவே கேட்டார்.

     “தெரியலைப்பா. ட்ரிப் கேன்சல் ஆகிருச்சோ என்னவோ?”

     “ஓ, சரி மா. இப்ப குழந்தை விஷயம் சொன்னா ரொம்ப சந்தோஷப் படுவார். இந்த மாதிரி நேரத்துல அலைய வேண்டாம். நீ இங்கயே இரு சரியா? ஏற்கனவே இங்க கொஞ்ச நாள் இருக்கணும்னு ஆசைப் பட்ட தானே?”, என்று கேட்டவர் அவளையே கூர்மையாக பார்த்தார்.

Advertisement