Advertisement

     பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது போல இருந்தது மணிமேகலை மற்றும் சுந்தரேஸ்வரருக்கு. அவர்கள் நன்றியோடு ஆதியைப் பார்க்க இதைக் கேட்ட பார்வதி மற்றும் சேதுராமன் முகமும் சந்தோசமாக இருந்தது.

     மணிமேகலையின் ஆசை ஏற்கனவே ராயருக்கு தெரியும் என்பதால் இப்போதும் தங்கையின் புன்னகை முகத்தையே ஒரு நொடி பார்த்தவர் “செழியன் கிட்டயும் நந்தினி கிட்டயும் இப்பவே கேக்குறேன். நீங்களும் அஞ்சு கிட்டயும் நிரஞ்சன் கிட்டயும் கேளுங்க. அவங்களுக்கு சம்மதம்னா எனக்கும் சந்தோஷமும் சம்மதமும் தான்”, என்றார்.

     “நாங்க ஏற்கனவே பிள்ளைகள் கிட்ட பேசிட்டோம். அவங்க ராயர் மாமாவும் நீங்களும் யாரைப் பாத்தாலும் சந்தோஷம் தான்ன்னு சொல்லிட்டாங்க”, என்றாள் மணிமேகலை.

     செழியனையும் நந்தினியையும் அழைத்து அவர்கள் விருப்பத்தைக் கேட்க உள்ளுக்குள் எழுந்த சந்தோஷத்தை மறைத்துக் கொண்டு “எனக்கு சம்மதம் பா”, என்றாள் நந்தினி.

     “அஞ்சனாவோட கல்யாணமா?”, என்று ஒரு நொடி ஜெர்க் ஆனாலும் உள்ளுக்குள் ஒரு சிரிப்பலை எழ “அண்ணன் சொன்னா சரியா தான் பா இருக்கும். எனக்கு சம்மதம்”, என்றான் செழியன்.

     இரண்டு திருமணங்களையும் ஒரே நாளில் வைத்துக் கொள்ளலாம் என்று பேச்சு அடி பட்டது. அதுவும் வர முகூர்த்ததிலே. அனைவரும் சம்மதம் என்றார்கள்.

     “ஆதி, நாளைக்கே போய் மதியை இங்க கூட்டிட்டு வா. அவ ஒரு நாள் இல்லாததே வீடு வெறிச்சோடி இருக்கு. பரமசிவத்தை வேணும்னா நாம இங்கயே கூட்டிட்டு வந்துறலாம்? வயசான காலத்துல அவர் தனியா என்ன பண்ணப் போறார்? மதி இந்த வீட்டோட மகாலட்சுமி. அவ இங்க தான் இருக்கணும்”, என்று ராயர் சொல்ல என்ன சொல்ல என்று தெரியாமல் “சரிப்பா”,  என்றான்.

     எல்லாம் பேசி விட்டு அனைவரும் கலைந்ததும் அறைக்குள் வந்த ஆதி தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான். அவனுக்கும் மதி இல்லாதது கஷ்டமாக தான் இருந்தது. அவளை அழைத்து வர ஆசையாகவும் இருந்தது. ஆனால் அதற்கு அவனது தன்மானம் இடம் கொடுக்க வில்லை.

     அந்த அறைக்குள் இருவரும் அவ்வளவு சந்தோஷமாக கூடி குலாவி காதலாக சேர்ந்து காமமாக சோர்ந்து தூக்கம் துறந்து வாழ்ந்த நினைவுகள் அவன் மனக்கண்ணில் வந்தது. அப்படி வாழ்ந்து விட்டு டைவர்ஸ் என்று சொல்லியது அவனுக்கு பெரிய அடியாக இருந்தது. அனைவரின் முன்னிலையில் தங்களின் அழகான தாம்பத்தியத்தையே அசிங்கப் படுத்தி விட்டாளே என்று இருந்தது.

     அவள் பாட்டி சொன்னதும் கோபத்தில் தான் பேசினாள் என்று புரிந்தது. அதில் சந்தேகம் எல்லாம் இல்லை. அதை தனிமையில் சொல்லி இருந்தால் அவள் இதழ்களைக் கடித்து அவளுக்கு தண்டனை கொடுத்திருப்பான்.

     “நான் என்னோட காதலை அவ கிட்ட சொல்லலை தான். ஆனா என்னோட காதல் அவளுக்கு தெரிஞ்சிருக்கு தானே? ஒண்ணா வாழும் போது என் காதலை நான் அவளுக்கு உணர்த்தலையா? இத்தனை நாள் என்னோட அன்பு அவளுக்கு புரியலையா? என்னை டைவர்ஸ் பண்ணிருவேன்னு ஈஸியா சொல்றா. அவளை விட்டுட்டு என்னால இன்னொருத்தி கூட வாழ முடியும்னு அவ எப்படிச் சொல்லலாம்?”, என்று எண்ணினான்.

     “அது எப்பவும் உங்க பாட்டி அவளை இந்த வீட்டுக்கு சமம் இல்லைன்னு பேசுறதுனால அந்த கோபத்துல பேசிருப்பா. அதையே பெருசா எடுத்துக்கிட்டு தொங்குவியா?”, என்று மனசாட்சி கேள்வி கேட்க ஆனாலும் முறுக்கினான்.

     “ஏன் ஆதி, அவ எல்லார் முன்னாடியும் அப்படி பேசினதுனால தானே உனக்கு கோபம்? ஆனா இத்தனை நாள் உன் குடும்பமே அவளை எவ்வளவு கஷ்டப் படுத்திருக்கு? ஆனா அதுக்கு ஒரு நாள் கூட அவ கோபப் பட்டதே இல்லையே? உங்க பாட்டி இப்படி பேசுறாங்க, உங்க அம்மா பேசாம இன்சல்ட் பண்ணுறாங்கன்னு எல்லாம் உன் கிட்ட சொன்னாளா? நந்தினி அவளை நோகடிக்கிற மாதிரி பேசினாலும் அவளுக்காக கடைசி வரை போராடினாளே? அதையும் விட உன் அப்பா அந்த ரிஷி வீட்ல போய் மன்னிப்பு கேக்கச் சொன்னாரே? அதை எல்லாம் செஞ்சதுக்கு ஒரு நாளாவது அவ கோபப் பட்டுருக்காளா? இப்ப போறதுக்கு முன்னாடி கூட கோபத்துல பேசினதுன்னு உன் கிட்ட இறங்கி தானே பேசினா? அப்படி விட்டுக் கொடுத்து போற பொண்ணு கிட்ட உனக்கு என்ன கோபம்?”, என்று கேட்க அது அவனுக்கு நன்கு புரிந்தது.

     “ஆமா, அவ மேல கோபப் பட எனக்கு எந்த உரிமையும் இல்லை. அவளை விட்டுக் கொடுத்தா நான் தான் முட்டாள். எனக்கு அவ வேணும். பேசாம இப்பவே கிளம்பி அவ கிட்ட போயிருவோமா? ஆமா போகணும். அவளை இங்க கூட்டிட்டு வந்துறலாம். ஆனா அவளுக்கு என் காதல் புரியுற வரைக்கும் அவ கிட்டயே போக கூடாது. ஆனா அவ இந்த ரூமுல இருக்கணும். அப்ப தான் என்னால நிம்மதியா இருக்க முடியும்”, என்று எண்ணியவன் மணியைப் பார்த்தான். மணி இரவு ஒன்பது என்று காட்டியது. .

     “ஒன்பது தான் ஆகுது? இப்பவே தூங்கிருக்க மாட்டா. இங்க இருந்து அவ வீட்டுக்கு போக அரை மணி நேரம், வர அரை மணி நேரம். அங்க கொஞ்சம் நேரம் இருந்துட்டு பதினொரு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துறலாம்”, என்று எண்ணும் போதே அவனது போன் அடித்தது.

     ‘பரமு மாமா’ என்று வர “மாமா எதுக்கு கூப்பிடுறார்? மதிக்கு ஏதாவது பிரச்சனையா? இங்க நடந்ததைப் பத்தி அவர் கிட்ட ஏதாவது சொல்லிட்டாளா?”, என்று பதட்டத்துடன் அழைப்பை ஏற்றான்.

     அவர் அவனையும் விட பதட்டமாக “மாப்பிள்ளை எங்க இருக்கீங்க?”, என்று கேட்டார்.

     “வீட்ல தான் மாமா இருக்கேன். என்ன ஆச்சு? ஏன் பதட்டமா இருக்கீங்க?”

     “மாப்ள, நீங்க ஏகே ஹாஸ்பிட்டல்க்கு உடனே வறீங்களா?”

     “ஹாஸ்பிட்டலுக்கா? மதிக்கு என்ன ஆச்சு மாமா? உங்களுக்கு ஒண்ணும் இல்லையே?”, என்று அவன் பதற “எனக்கு ஒண்ணும் இல்லை மாப்பிள்ளை. மதிக்கு தான்”, என்று சொல்ல “அவளுக்கு என்ன மாமா?”, என்று கேட்டவனின் குரலே நடுங்கியது.

     “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாப்பிடக் கூப்பிட்டேன். சாப்பிட வந்தவ மயங்கி விழுந்துட்டா மாப்பிளை. ஆட்டோ பிடிச்சு கூட்டிட்டு வந்தேன். டாக்டர் பாக்குறாங்க. எனக்கு பயமா இருக்கு. நீங்க உடனே வறீங்களா?”

     “பத்து நிமிசத்துல அங்கே இருப்பேன் மாமா. அவளுக்கு ஒண்ணும் ஆகாது. தைரியமா இருங்க”, என்று சொல்லி போனை வைத்தவன் உடனடியாக கிளம்பி விட்டான். வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்ல வில்லை. வீணாக அவர்களை ஏன் பதட்ட பட வைக்க வேண்டும் என்றே எண்ணம் தான். அவன் இப்படி வேலை விஷயமாக வெளியே செல்வது இயல்பு தான் என்பதால் யாரும் அவனை எதுவும் நினைக்க வில்லை.

     அடித்து பிடித்து மருத்துவமனை வந்தவன் “என்ன ஆச்சு மாமா? டாக்டர் ஏதாவது சொன்னாங்களா?”, என்று கலக்கமாக கேட்டான்.

     “தெரியலை மாப்பிளை, டாக்டர் பாக்குறாங்க. ஏன் இப்படின்னு தெரியலையே? அவ இங்க வந்ததுல இருந்து சரியே இல்லை மாப்ள. உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா? நீங்களும் பாரின் போகலை தானே? என் பொண்ணு ஏதாவது தப்பு பண்ணிட்டாளா?”

     “அப்படி எல்லாம் இல்லை மாமா. ஆனா ஒரு சின்ன மனஸ்தாபம் இருக்கு. அது சரியா போகும். நானே அவளை வீட்டுக்கு கூப்பிட தான் கிளம்பிட்டு இருந்தேன்”

     “பெருசா ஒண்ணும் இல்லை தானே மாப்ள?”

     “அவ என்னோட உயிர் மாமா. அவ இல்லாம எனக்கு ஏது வாழ்க்கை? நீங்க கவலைப் படாதீங்க. முதல்ல இப்ப அவளுக்கு என்னன்னு தான் பாக்கணும்”, என்று சொல்லி இருவரும் காத்திருந்தார்கள்.

காதல் தொடரும்……

Advertisement