Advertisement

     “நிஜமாவா அண்ணி?”

     “என் மேல நம்பிக்கை இல்லையா?”

     “இனியும் உங்களை நம்பலைன்னா நான் மனுசியே இல்லை. உங்களை நம்புறேன். எல்லாம் நீங்க பாத்துக்குவீங்கன்னு நம்பிக்கை இருக்கு”

     “குட், இது அஞ்சனாவுக்கு தெரியுமா நந்து?”

     “அவ என்னோட பிரண்டா மட்டும் இருந்திருந்தா சொல்லிருப்பேன். ஆனா அவ அத்தானோட தங்கச்சியாச்சே?”

     “சரி சரி நீ ரெஸ்ட் எடு. எல்லாம் நல்ல படியா நடக்கும். ஆனா கல்யாணம் முடிஞ்சதும் நிரஞ்சன் அண்ணா கிட்ட உன் காதலைச் சொல்றது உன்னோட சாமர்த்தியம். எதுக்கு வேணும்னாலும் தூது போகலாம். காதலுக்கு மட்டும் தூது போகக் கூடாது”

     “சரி அண்ணி, கல்யாணம் முடிஞ்சதும் நான் அத்தான் கிட்ட சொல்லிறேன்”

     “கண்டிப்பா உன் காதலைச் சொல்லணும். அப்ப போல இல்லை அப்பா சொன்னாங்க, அதான் உங்களைக் கல்யாணம் பண்ணினேன்னு உளறி வைக்காத. அப்புறம் ரிஷி மேல உனக்கு எந்த ஈடுபாடும் இல்லைன்னும் சொல்லிரு”, என்று சொல்லி போனை வைத்தாள்.

     போனை வைத்த மதிக்கு நந்தினி சொன்னதைக் கேட்டு கொஞ்சம் நிம்மதி வந்தது. “ஊருக்கே காதலைச் சொல்லுன்னு அட்வைஸ் பண்ணுற? நீ உன் காதலைச் சொன்னியா டி?”, என்று கேள்வி எழுப்பியது மனசாட்சி.

     “அதானே நான் ஏன் சொல்லலை? ஆதி என் மேல உயிரையே வச்சிருக்கார். நானும் அவரை உயிருக்கு உயிரா விரும்புறேன். அப்புறம் ஏன் எங்களுக்குள்ள இந்த பிரிவு வந்துச்சு? மனசு விட்டு காதலைச் சொல்லலைனாலும் நாங்க சந்தோஷமா தானே இருந்தோம். எங்க ரூமுக்கு வெளியே அவன் சரியா பேசாம போனாலும் ரூமுக்குள்ள என்னை உள்ளங்கையில் வச்சு தாங்க தானே செஞ்சான்? அப்புறம் ஏன் பிரிஞ்சோம்? அவன் ஏன் என்னை வீட்டை விட்டு போகச் சொன்னான்? என்ன காரணம்? நான் பேசினது தான் காரணமா?”

     “நான் டைவர்ஸ் கேட்டது தான் காரணமா? நான் கேட்டதும் தப்பு தானே? என் மேல ஆசைப் பட்டு கோல்மால் எல்லாம் செஞ்சு கல்யாணம் பண்ணினா நான் ஈஸியா அவனை டைவர்ஸ் பண்ணுறேன்னு சொன்னா அவனுக்கு கோபம் வரத் தானே செய்யும்? ஆனா அது தான் கோபமா? இல்லை அன்னைக்கு முழுக்க என் கிட்ட பேசலை. அப்புறம் என்ன கோபம்? நான் ரிஷியை தேடி அவன் கெஸ்ட் ஹவுஸ்கு போனதுக்கு கோபமா?”, என்று எண்ணியவளுக்கு அது இல்லை என்று இப்போது தோன்றியது.

     ஏனென்றால் ரிஷியின் கெஸ்ட் ஹவுஸில் வைத்து மதி ஆதியை அணைக்கும் போது அவனும் அல்லவா அவளை இறுக அணைத்தான். அவள் மேல் வெறுப்போ கோபமோ இருந்திருந்தால் அவளை தூர தள்ளி இருக்க மாட்டானா?

     “வேற என்ன தப்பு பண்ணினேன்? அன்னைக்கு காலேஜ்ல வச்சு என்னை விட்டுக் கொடுக்காம பேசினாங்க. அப்படின்னா அவங்க மனசுல என் மேல சில பல கோபம் இருக்க தான் செய்யுது. ஆனா வெறுப்பு கிடையாது? இப்ப நான் சில விஷயங்கள் பண்ணினாலும் அதுக்கு முன்னாடியே அவங்க என்னை விட்டு விலகி தானே இருந்தாங்க? நாங்க கடைசியா என்னைக்கு ஒண்ணா சந்தோஷமா இருந்தோம்?”,. என்று எண்ணியவளுக்கு அன்றைய நாள் நினைவில் வந்தது.

     அதை எண்ணியதும் அவள் முகம் சிவந்தது. அவன் வெட்கத்தை உதறி அவள் காதில் தன்னுடைய ஆசைகளைச் சொல்ல சிறு கூச்சம் வந்தாலும் இயல்பாக அவனுக்கு ஒத்துழைத்ததும் அதுக்கு அவன் அதிக சந்தோஷப் பட்டதும் நினைவில் வந்தது.

     “அவ்வளவு சந்தோஷமா இருந்தோம்? அப்புறம் ஏன் எங்களுக்குள்ள இந்த விரிசல்?”, என்று எண்ணியவளுக்கு அடுத்த நாள் நடந்தது நினைவில் வந்தது. ரிஷி தான் மாப்பிள்ளை என்று தெரிந்ததும் தனக்குள் எழுந்த மன அழுத்தத்தில் அவன் அவளை நெருங்கும் போது அவனை அதிகமாக காயப் படுத்தி விட்டோம் என்று இப்போது புரிந்தது.

     “ஓ காட், என்ன வார்த்தை சொல்லிட்டேன். அதான் கோபமா? அதுக்கு கோபம் வராம இருந்தா தான் அதிசயம்? நான் தான் எல்லா தப்பும் பண்ணிருக்கேன். நான் ஆதியை சரியா புரிஞ்சிக்கலை. எல்லா தப்பும் என்னோடது தான். ஆதியோட காதல் ரொம்ப பிரசியஸ். அதை என்னோட சின்னப் பிள்ளைத் தனமான செய்கையால அவனை நோகடிச்சிட்டு டைவர்ஸ்ன்னு சொல்லி இங்க அப்பா வீட்ல வந்து உக்காந்துருக்கேன்”, என்று எண்ணியவளுக்கு அந்த கோபத்திலும் இரண்டு நாட்கள் அவன் தனக்கு ஊட்டி விட்டது நினைவில் வந்தது.

     அவ்வளவு உயிராக இருப்பவனை தான் அனைவரின் முன்னிலையிலும் விட்டுக் கொடுத்து விட்டோம் என்று புரிந்தது. தனக்கு அரணாக நின்றவனை ஒரெடியாக உடைத்துப் போட்டு விட்டோம் என்று புரிந்தது. இதற்கு பிரதிபலனாக காலம் முழுக்க அவனை காதல் கடலில் மூழ்கடிக்க வேண்டியது தான் என்று எண்ணினாள்.

     உடனே அவனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. ஆனால் அவ்வளவு வீராப்பாக வந்து விட்டு இப்போதே போய் நின்றால் எப்படி என்று இருந்தது. அவனிடத்தில் அவளுக்கு எந்த ஈகோவும் இல்லை தான். அவன் காதலுக்காக அவன் காலுக்கடியில் மண்டியிடக் கூட அவள் தயார் தான். ஆனால் வீட்டினர் முன்னிலையில் அல்லவா அவனை அசிங்க படுத்தி விட்டாள். அதுவும் ஒரு முறை அல்ல. பல முறை. என்ன செய்து அவன் காயத்தை விரட்டுவது என்று குழப்பமாக இருந்தது.

     அதே நேரம் மணிமேகலையும் சுந்தரேஸ்வரரும் ராயரைக் காண வீட்டுக்கு வந்தார்கள். “வாங்க மாப்பிள்ளை, வா மா”, என்று வரவேற்று அமர வைத்தார் ராயர்.

     “அண்ணா நந்தினி விஷயம் கேள்விப் பட்டோம்”

     “ஆமா மா, என் கண்ணுலே அந்த பய மண்ணைத் தூவிருக்கான். இப்ப எல்லாம் சரியாகிருச்சு? இப்ப புத்தி சுவாதீனம் இல்லாம ஆஸ்பத்திரில இருக்கான். உடல் காயம் ஆறின உடனே மெண்டல் ஹஸ்பிட்டல்க்கு போயிருவான் போல? நான் அவங்க அம்மா அப்பாவைப் பார்த்து சும்மா ஆறுதலா பேசிட்டு வந்துட்டேன். அவங்களுக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியாது. போலீசும் இதை ஆக்ஸிடெண்ட் கேஸ்ன்னு கொண்டு போயிருச்சு. ஆனா எனக்கு என்னமோ இதுக்கு ஆதி தான் கரணம்னு தோணுது”

     “ஆமாண்ணா. ஆதியா தான் இருக்கும். பின்ன அவன் பொண்டாட்டியவே ஒருத்தன் மிரட்டிருக்கானா அவனை என் மருமகன் சும்மா விடுவானா?”

     “ஆமா மா, பொண்டாட்டி மேல இந்த பயலுக்கு அவ்வளவு லவ். அவ தான் புரிஞ்சிக்கலை. மதி புரிஞ்சிக்கலையா இல்லை இவன் ஏதாவது பண்ணினான்னு தெரியலை. பாப்போம். ஆனா சீக்கிரம் சேந்துருவாங்க. அவங்க ரெண்டு பேரும் ஒருத்தொருக்கொருத்தர் ரொம்ப அன்பா இருக்காங்க”

     “ஆமாண்ணா. மதிக்கும் ஆதியை ரொம்ப பிடிக்கும். ரொம்ப நாள் அவனை விட்டு இருக்க மாட்டா”

     “சரி நீங்க என்ன இந்த நேரம் வந்துருக்கீங்க? பிள்ளைகளை வேற கூட்டிட்டு வரலை? நிரஞ்சன் மும்பைல இருந்து வந்துட்டானா?”

     “ரஞ்சன் நாளைக்கு வருவான் அண்ணா. அஞ்சு படிக்கணும்னு சொன்னா. நாங்க ஒரு முக்கியமான விஷயமா தான் பேச வந்தோம்”

     “என்ன மா சொல்லு?”

     “நாங்க எங்க பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறோம். முதல்ல நிரஞ்சனுக்கு முடிக்கணும்னு பாத்தேன். ஆனா அவன் அஞ்சனாவுக்கு தான் முதல்ல முடிக்கணும்னு சொல்லிட்டான். அதான் ரெண்டு பேருக்கும் முடிக்கலாம்னு பாக்குறோம்”, என்று சொல்லும் போதே அங்கு வந்து அமர்ந்த ஆதியும் அவர்களை வரவேற்றான்.

     “வா ஆதி, மதியை கூட்டிட்டு வரலையா?”

     “ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு வரட்டும் அத்தை. அவங்க அப்பாவும் கொஞ்சம் சந்தோஷப் படுவாங்கல்ல?”, என்று சொல்லி சமாளித்து விட்டான்.

     “சரி என்ன விஷயமா பேசிட்டு இருந்தீங்க?”, என்று அவன் கேட்க “இல்லை, அஞ்சனாவுக்கு கல்யாணம் பண்ணனும்?”, என்றான்.

     “நான் ஒரு விஷயம் சொல்லட்டா?”

     “என்ன ஆதி?”

     “அப்பா எனக்கு ஒரு யோசனை தோணுது? அஞ்சுவைக் கல்யாணம் பண்ண எனக்கு விருப்பமான்னு கேட்டீங்க. எனக்கு அஞ்சனா வேற நந்தினி வேற இல்லைங்குறதுனால நான் வேண்டாம்னு சொன்னேன். ஆனா என்னை மாதிரியே மத்தவங்களும் யோசிக்கணும்னு இல்லையே? பேசாம அஞ்சனாவுக்கும் நம்ம செழியனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம். நந்துவுக்கும் நிரஞ்சனுக்கும் பண்ணி வைக்கலாம். முதல்ல அவங்க விருப்பத்தை கேக்கலாமே?”, என்று சொல்ல ராயர் யோசனையில் அழ்ந்தார்.

Advertisement