Advertisement

அத்தியாயம் 15

எந்தன் காவியக் காதல் 

கை கூடும் என காத்திருந்தே 

காலம் செல்கிறதே!!!

     மதி வெளியே வந்து நிற்க ஆதி காரை எடுக்கப் போனான். அப்போது அவள் அருகே வந்த பார்வதி “இதுக்கு தான் ஓவரா ஆடக் கூடாதுன்னு சொல்றது? இப்ப பாத்தியா உன் நிலைமை எப்படி ஆகிருச்சுன்னு?”, என்று கேட்டாள்.

     “சும்மா வாய் இருக்குனு பேசக் கூடாது. என் வாழ்க்கையை விடுங்க. அதை நான் பாத்துக்குறேன். நீங்க இங்க இருந்து என்னத்த சாதீச்சீங்க?”, என்று எதிர்த்துக் கேட்டாள் மதி.

     “ஏய் நான் சேதுராமன் பொண்டாட்டி டி”

     “அதை தவிர வேற என்ன இருக்காம்? சும்மா கண்ட படி பேச வேண்டியது. ஆனா பேச வேண்டிய நேரத்துல வாயை மூடிட்டு இருக்க வேண்டியது? எங்க இப்ப தான் மாமா பாத்த சம்பந்தம் நின்னுருச்சே? உங்களால முடிஞ்சா நந்தினி கல்யாணத்தை நடத்துங்க பாப்போம்”, என்று பார்வதியை சீண்டினாள்.

     “நீ மட்டும் இடைல வராம இருந்திருந்தா நான் நடத்திருப்பேன் டி. எங்க நீ தான் என் பேரனை மயக்கிட்டியே? நீ ஆதியை கல்யாண பண்ணாம இருந்திருந்தா நான் என் மக பிள்ளைகளை இந்த வீட்டுக்கு கொண்டு வந்திருப்பேன்”

     “ஏன் பாட்டி பழைசையே புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க? ஆதி மட்டும் தான் உங்க பேரனா? செழியனைப் பாத்தா உங்களுக்கு பேரனா தெரியலையா? உங்க ஆசை படி அஞ்சனாவை செழியனுக்கும் நந்தினியை நிரஞ்சனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தானே?”, என்று கேட்க பாட்டியின் கண்கள் ஒளிர்ந்தது.

     “இது எனக்கு தோணாம போச்சே?”, என்று எண்ணி பார்வதி அமைதியாக இருக்க “என்ன அப்படியே வாய் அடைச்சிருச்சு? ஆதி விசயத்துல நான் வந்து உங்க திட்டத்தை கெடுத்துட்டேன் சரி. இப்ப உங்க திட்டத்தை நிறைவேத்த வேண்டியது தானே? இப்ப யார் வந்து உங்களை தடுப்பாங்களாம்? ஆனா உங்களால முடியாது. எல்லாம் வாய்ச் சவடால் தான். அதுவும் என் கிட்ட மட்டும் தான்”, என்றாள்.

     “ஏய், நான் நடத்தி காட்டுறேன் டி”

     “நீங்க வெறும் வெத்து வேட்டு பாட்டி. உங்களால ராயர் மாமாவை எதிர்த்து ஒண்ணும் செய்ய முடியாது. நீங்க எப்படியும் டம்மி பீஸ் தான். ராயர் மாமா செழியனுக்கும் நந்தினிக்கும் என்னை மாதிரி அசல்ல சம்பந்தம் பண்ணப் போறாங்க. நீங்க அடுத்து வரவங்க கிட்டயும் நீ தான் இதுக்கெல்லாம் காரணம்னு மிரட்டிட்டு திரியப் போறீங்க? அது மட்டும் தான் நடக்கும்”

     “ஏய்’

     “ஹா ஹா உங்களுக்கு மிரட்டல் எல்லாம் சரியே வரலை பாட்டி. சரி சரி என் புருஷன் வந்துட்டார். நான் கிளம்புறேன்”

     “போ போ, இனி இந்த வீட்டுக்கு எப்படி திரும்பி வருவேன்னு பாக்குறேன். என் பேரன் உன்னை ஏத்துக்கவே மாட்டான். இந்த பிரிவு தான் உன் திமிரை அடக்கும்”, என்று சொல்ல கஷ்டமாக இருந்தாலும் அடுத்து என்ன பேச என்று தெரியாமல் கணவன் அருகே காரில் ஏறப் போனாள்.

     அப்போது அங்கே வந்த தமயந்தி “அடிக்கடி மன்னிப்பு கேட்டா அந்த மன்னிப்புக்கே மரியாதை இல்லைன்னு மாமா சொன்னாங்க மதி மா. ஆனா எனக்கு வேற என்ன சொல்லன்னு தெரியலை. என்னை மன்னிச்சிரு மா. என் பொண்ணோட வாழ்க்கையையும் இந்த வீட்டோட கௌரவத்தையும் நீ காப்பாத்திருக்க? ரொம்ப நன்றி மா. உன்னைப் பத்தி தெரியாம உன்னைக் கஷ்டப் படுத்திட்டேன்”, என்றாள்.

     “பரவால்ல அத்தை எல்லாருக்கும் எல்லாமே சரியா தெரியும்னு சொல்ல முடியாதே? நிறைய வருஷங்கள் ஒண்ணா வாழுறவங்களையே புரிஞ்சிக்க முடியுறது இல்லை. நான் இங்க வந்து கொஞ்ச மாசம் தானே ஆகுது? என்னை பத்தி உங்களுக்கு ஒண்ணும் தெரியாது இல்லையா? அதான் தெரியாம பேசிட்டீங்க? அதுவும் நீங்க என்னை திட்டக் கூட இல்லை. பேசாம தானே இருந்தீங்க? பரவால்ல எல்லாரையும் விட நீங்க எனக்கு நல்ல மாமியார் தான்”

     “ஆதி ஏதோ கோபத்துல பேசிட்டான். நீ இங்கயே இருக்கலாம்ல மா?”

     “இல்லை, அத்தை வேண்டாம். நான் போறேன்”, என்று சொன்னவள் அவன் அருகில் ஏறப் போக “என் பக்கத்துல உக்காற என்னோட பொண்டாட்டிக்கு தான் உரிமை இருக்கு. டைவர்ஸ்ன்னு சொன்னவங்களுக்கு என் பக்கத்துல இடம் இல்லை. பின்னாடி உக்காறலாம்”, என்று ஆதி சொல்ல மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள்.

     அவன் பேசுவது அவனுக்குமே கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் அவன் அப்படிப் பேசும் போதாவது அவள் பேசியதற்கு மன்னிப்பு கேட்பாள் என்றும் உரிமையாக சண்டை போடுவாள் என்றும் எதிர் பார்த்தான். ஆனால் அவள் அமைதியாக இருக்க அது தான் அவனுக்கு கடுப்பாக இருந்தது.

     காரில் வரும் போது அமைதியே நிலவியது. வீட்டுக்கு வந்ததும் பரமசிவம் அவர்களை அன்புடன் வரவேற்க “மதி ஒரு வாரம் இங்க இருக்கட்டும் மாமா. நான் வெளிநாடு போறேன்”, என்றான். தந்தையிடம் உண்மையைச் சொல்லாதது அவளுக்கும் ஆறுதலாக இருந்தது. அவனைக் காதலாக பார்க்க அவன் மனதுக்குள் பல்லைக் கடித்தான்.

     “டைவர்ஸ்ன்னு சொல்லிட்டு பாக்குறதைப் பார்”, என்று எண்ணியவன் மாமனாரைப் பார்க்க “சரிங்க மாப்பிள்ளை, நல்ல படியா போயிட்டு வாங்க. இப்ப சாப்பிட்டு போங்க”, என்றார் பரமசிவம்.

     “இல்லை மாமா நேரம் ஆச்சு”, என்று சொல்லி விட்டு அவன் கிளம்ப அவரும் வேறு ஒன்றும் சொல்ல வில்லை. ஆனால் அவளைத் திரும்பிக் கூட பார்க்காமல் அவன் செல்ல அவளுக்கு அவளது உயிரே போவது போல கஷ்டமாக இருந்தது.

     மகளின் கண்ணீரைக் கண்டவருக்கு அவர்களின் நெருக்கம் தெரியும் என்பதால் “ஒரு வாரம் தானே? சீக்கிரம் ஓடிரும் டா. தினமும் மாப்பிள்ளை கிட்ட பேசு”, என்று ஆறுதல் சொன்னார். அவளும் சரி என்று தலையாட்டினாள்.

     அன்றைய இரவில் மதியும் ஆதியும் மற்றவர் நினைவில் தூக்கத்தை தொலைத்தனர். அடுத்த நாள் நந்தினி மதியை போனில் அழைத்தாள்.

     “சொல்லு நந்து”

     “என்னை மன்னிச்சிருங்க அண்ணி”

     “ஏய் எதுக்கு மன்னிப்பு எல்லாம்? அதை விடு. எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான்”

     “என்ன அண்ணி?”

     “இல்லை நீ அந்த ரிஷி தான் உனக்கு மாப்பிள்ளைனு முடிவு பண்ணினதும் அவனை கணவனா நினைச்சுருப்பல்ல? அது உனக்கு கஷ்டமா இருக்கும்ல?”

     “அது விஷயமா தான் நான் உங்களுக்கு கால் பண்ணினேன். நிச்சயம் நான் ரிஷியை அப்படி நினைக்கலை. அப்பா சொன்னதுனால சரின்னு சொன்னேன். ஆனா… ஆனா உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”

     “என்ன நந்து?”

     “இதைச் சொல்ல கொஞ்சம் பயமா தான் இருக்கு. என் அப்பா அம்மா கிட்ட கூட என்னால சொல்ல முடியலை. அண்ணனுங்க கிட்டயும் சொல்ல தோணலை. இன்னும் சொல்ல போனா இதுக்கு காரணமானவங்க கிட்ட கூட சொல்லத் தோணலை. ஆனா உங்க கிட்ட சொல்லணும் போல இருக்கு”

     “இதுல இருந்தே நீ என்னை தோழியா பாக்குறேன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது நந்து. பிரண்ட்ஸ் குள்ள எதுவேனாலும் சேர் பண்ணலாம். என்ன விஷயம் சொல்லு”

     “நான்… என் மனசுல… எனக்கு”

     “என்ன மா? எதுக்கு இப்படி திணருற?”

     “எனக்கு நிரஞ்சன் அத்தானை ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணி’”

     “ஏய் என்ன சொல்ற? இது எப்ப இருந்து?”

     “ஸ்கூல் படிக்கும் போதுல இருந்து ஒரு கிரஷ். நான் சைட் அடிச்ச ஒரே ஆள் அத்தான் தான். இப்பவும் என் மனசுல அவர் மேல இருக்குறது காதலானு தெரியாது. அதனால தான் அப்பா சொன்னதும் சரின்னு சொன்னேன். அப்பா மாப்பிள்ளை பாக்கலைனாலும் எனக்கு நிரஞ்சன் அத்தானை பிடிச்சிருக்குன்னு சொல்ல எனக்கு தைரியம் இல்லை. நிரஞ்சன் அத்தான் கிட்டயே சொல்லிருக்க மாட்டேன். ஆனா இப்ப உங்க தைரியத்தை பாத்து.. உங்க கிட்ட சொல்ற அளவுக்கு தைரியம் வந்திருக்கு. என் லைப் பார்ட்னரா அத்தான் வந்தா நல்லா இருக்கும்னு தோணுது. நான் என்ன செய்யட்டும் அண்ணி? பிளீஸ் என்னை கைட் பண்ணுங்க”

     “நீ ஒண்ணும் செய்ய வேண்டாம். ஒழுங்கா காலேஜ் போ. நல்லா சாப்பிடு. பிரண்ட்ஸ் கிட்ட பேசு”

     “என்ன இப்படிச் சொல்றீங்க?”

     “என் கிட்ட சொல்லிட்டல்ல? நான் பாத்துக்குறேன். என் மேல உனக்கு நம்பிக்கை இருந்தா இந்த விஷயத்தை இதோட விட்டுரு. உனக்கும் நிரஞ்சன் அண்ணாவுக்கும் தான் கல்யாணம் நடக்கும். அதுவும் நீ எதுவும் பேசாமலே நடக்கும். அதுக்கு நான் பொறுப்பு”

Advertisement