Advertisement

     மதிக்கும் அவனைக் கண்டு பயம் தான். ஆனால் வேறு பயம். அவன் ரிஷியைப் பற்றி அனைவரிடமும் சொல்லி திருமணத்தை நிறுத்துவான் என்று எதிர் பார்க்க அவனோ உணவிலே கவனமாக இருந்தான். உணவு முடிந்ததும் பேசலாம் என்று தான் அமைதியாக இருந்தான்.

     “என்ன இவன் இப்படி இருக்கான்? ரிஷி பத்தி ஒண்ணுமே சொல்லலை? இவனே சொல்லாதப்ப நாம எப்படி சொல்றது? அதுவும் நான் அந்த ரிஷியை தனியே சந்திக்க கெஸ்ட் ஹவுஸ் போனேன்னு எப்படிச் சொல்ல? அதைச் சொன்னா பாட்டி என்னை கேவலப் படுத்திரும்”, என்று எண்ணும் போதே “மதி”, என்று அழைத்தார் ராயர்.

     “ஆன் சொல்லுங்க மாமா”

     “நிச்சயதார்த்த வேலை என்ன நிலைமைல இருக்கு மா. ஆதியும் அந்த ரிஷி கெட்டவன்னு சொன்னான். ஆனா இப்ப ஒண்ணும் சொல்லல. அவன் ஆதாரத்தை திரட்டட்டும். நாம நம்ம வேலையைப் பாப்போம். நான் இப்ப லிஸ்ட் தரேன். நீ நாளைல இருந்து எல்லாரையும் அழைக்க ஆரம்பி”, என்று சொல்ல அப்போதும் அவள் கணவனைப் பார்க்க அவன் திரும்பியே பார்க்க வில்லை.

     இதற்கு மேல் அவன் உதவி கிடைக்காது என்று உணர்ந்தவள் “லிஸ்ட் வேண்டாம் மாமா. நான் யாரையும் கூப்பிட மாட்டேன்”, என்றாள். ஆதி விஷயத்தை எப்படி ஆரம்பிக்க என்று யோசித்துக் கொண்டிருக்க அவன் மனைவி ஆரம்பித்தே விட்டாள். சரி அவளே பேசட்டும் என்று எண்ணி அமைதி காத்தான்.

     எல்லாரும் திகைப்பாக அவளைப் பார்க்க “ஏன் மா?”, என்று கேட்டார் ராயர்.

     “நான் முன்னாடியே சொன்னேன். இந்த கல்யாணம் வேண்டாம்னு யாரும் என் பேச்சைக் கேக்கலை. ஆனா என்னோட மனசாட்சி என்னை தடுக்குது. என்னால இதைச் செய்ய முடியாது”, என்று அவ்வளவு தெளிவாக உரைத்தாள்.

     “நீ இந்த வீட்டோட மருமக. நாங்க சொல்றதை தான் நீ கேக்கணும். உன் புருசனும் சம்மதிச்சிட்டான் மா”, என்று அவர் சொல்ல “என்னை மன்னிச்சிருங்க மாமா. உங்க இஷ்டத்துக்கு என்னால ஆட முடியாது. எனக்கு சரின்னு தோணுறதை தான் செய்வேன்”, என்றாள்.

     “அப்புறம் ஏன் டி இந்த வீட்ல இருக்க? இதுக்கு தான் தகுதி தராதரம் பாத்து பொண்ணு பாக்கணும்னு சொல்றது”, என்றாள் பார்வதி.

     ஏற்கனவே ஆதியின் பாராமுகத்தால் வேதனையில் இருந்தவள் பார்வதி அப்படிச் சொல்லவும் “இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை பாட்டி. உங்க பேரனுக்கு உங்க ஸ்டேட்டஸ்க்கு தகுந்த பொண்ணைப் பாத்து கட்டி வைங்க. நான் இப்பவே எங்க வீட்டுக்கு கிளம்புறேன். எப்பனாலும் டைவர்ஸ் பேப்பர்ஸ்ல சைன் பண்ணுறேன். அப்புறம் நான் காலேஜ் ஸ்கூல் பொறுப்புல இருந்தும் விலகிக்கிறேன். அதையும் உங்க புது மருமகளுக்கே கொடுங்க”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கியது. ஆனாலும் அதை அடக்கி பேசி முடித்தாள். அவள் சொன்னதைக் கேட்டு இறுகிப் போய் அமர்ந்திருந்தான் ஆதி. அவள் பேச்சில் அவன் மனம் பெரியதாக அடி பட்டது. ரிஷியைப் பற்றிச் சொல்லுவாள் என்றும் அவனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆனதைப் பற்றிச் சொல்லுவாள் என்றும் அவன் எதிர் பார்த்திருக்க அவளோ தன்னையே வேண்டாம் என்று சொன்னது அவனை அதிர்வுக்கு உள்ளாக்கியது.

     அனைவருமே மதியின் பேச்சைக் கேட்டு விக்கித்துப் போய் அமர்ந்திருந்தார்கள். ஆதியோ இறுகிப் போய் அமர்திருந்தான். மணிமேகலை வீட்டில் வைத்து மதி பேசியது அவனுக்கு அவ்வளவு சந்தோசத்தைக் கொடுத்தது என்றால் இப்போதைய பேச்சு அவனை வெகுவாக காயப் படுத்தியது.

     “அப்படின்னா இவளுக்கு என்னை பிரிஞ்சா ஒண்ணும் இல்லை அப்படி தானே? அதானே இவளுக்கு என் காதல் தானே புரிஞ்சிருக்கு. ஆனா இவ மனசுல தான் என் மேல காதலே இல்லையே? கடமைக்குன்னு வாழ்ந்தா. அவ கடமையை சரிவர செய்ய முடியாததுனால விலகிப் போறா. இனி இவளா வராம நான் இவளைத் தேட மாட்டேன்”, என்று முடிவு எடுத்தான் ஆதி.

     “என்ன ஆதி இதெல்லாம்? உன் பொண்டாட்டி இந்த பேச்சு பேசுறா. நீ வாயை மூடி சாப்பிட்டு இருக்க? உன்னை டைவர்ஸ் பண்ணப் போறாளாம். இது எல்லாம் நம்ம வீட்ல பேச வேண்டிய பேச்சா?”, என்று கேட்டாள் பார்வதி.

     “என்ன பாட்டி பண்ணுறது? நம்ம வீட்ல யாரு தான் சரியா பேசுறா? இத்தனை நாள் நீங்க அவளை என் பொண்டாட்டியா நினைக்காம அந்த பேச்சு பேசுனீங்க? இப்ப அவ என்னை புருசனா பாக்காம பேசுறா. இதுல நான் சொல்ல என்ன இருக்கு?  நான் சொன்ன உடனே நீங்க திருந்திட்டீங்களா என்ன? இப்ப கூட ஸ்டேட்டஸ் பத்தி பேசி அவளை காயப் படுத்தினது நீங்க தானே? அவளுக்கு என்னைப் பிரியுறது தான் விருப்பம்னா நான் ஒண்ணும் செய்ய முடியாது. இந்த வீட்ல அவளுக்கு நிம்மதியும் சந்தோஷமும் ஒரு நாளும் கிடைக்கப் போறது இல்லை. அவ என்னை விட்டு பிரிஞ்சு போயாவது நிம்மதியா இருக்கட்டும்”, என்று விட்டேற்றியாக பேச துடித்துப் போனாள் மதி.

     மருமகள் அதிகமாக பேசி விட்டு அழுவதையும் அவள் பேச்சைக் கேட்டு மகன் இறுகிப் போய் அமர்ந்திருப்பதையும் பார்த்த ராயர் இப்போதைக்கு அவர்கள் பேச்சு தொடர்ந்தால் மனம் இன்னும் காயப் படும் என்று புரிந்து “உங்க பிரச்சனைக்கு அப்புறம் வருவோம். நான் கேக்குறது என் பொண்ணோட கல்யாணம் பத்தி. புருசனும் பொண்டாட்டியும் விளையாடுறீங்களா?”, என்றவர் ஆதி புறம் திரும்பி “யாரும் என் பொண்ணு கல்யாணத்துக்கு எதுவும் செய்ய வேண்டாம். நானே எல்லா ஏற்பாடையும் பாத்துக்குறேன்”, என்றார்.

     “வேண்டாம். யாரும் எந்த ஏற்பாடும் பண்ண வேண்டாம். இந்த கல்யாணம் நடக்காது”, என்றான் ஆதி.

     “என்ன விளையாடுறியா ஆதி? நீ விசாரிக்கிறேன்னு சொன்ன? ஆனா ஒண்ணும் சொல்லலையே?”

     “விளையாடலை பா உண்மையா தான் சொல்றேன். இந்த கல்யாணம் வேண்டாம். நான் விசாரிச்சிட்டேன். மதி சொன்ன மாதிரி அந்த ரிஷி நல்லவன் இல்லை. நான் நல்லாவே விசாரிச்சிட்டேன். அவன் கெட்டவன்னு சொல்றதுக்கு என் கிட்ட ஆதாரமும் இருக்கு”

     “என்ன ஆதி சொல்ற?”

     “ஆமா பா. அவனால ஒரு பொண்ணு செத்தே போயிருச்சு. நம்ம மதியோட பிரண்டு தான் அந்த பொண்ணு. அப்புறம் இப்ப ரிஷிக்கு ஆக்ஸிடெண்ட். அதனால நாம எதுவும் பேசலைன்னாலும் அவங்க சைடே கல்யாணத்தை நிறுத்திருவாங்க”, என்று சொல்ல அனைவரும் திகைத்து தான் போனார்கள்.

     ராயருக்கு மகன் தான் ரிஷியை ஏதோ செய்திருக்கிறான் என்று புரிந்தது. “நல்லதா போச்சு. அவனைப் பத்தி உண்மை தெரிஞ்சது. இல்லைன்னா நந்து வாழ்க்கை என்ன ஆகிருக்கும்?”, என்று சொன்ன ராயர் மதி புறம் திரும்பி “என்னை மன்னிச்சிரு மா, உன்னை நம்பாம போய்ட்டேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றார்.

     இப்போது அனைவரும் மதியை பாராட்டும் பார்வை பார்த்தார்கள். ஆனால் அவளிடம் பேச குற்ற உணர்வாக இருந்தது. ஆனால் அவள் பார்வையோ கணவனிடம் மட்டும் இருந்தது. அவனோ அவள் புறம் திரும்பவே இல்லை. ஆதி எழுந்து செல்ல மதியும் அவனை பின் தொடர்ந்தாள்.

     அறைக்குள் வந்ததும் அவன் கட்டிலில் அமர அவளும் அவனிடம் பேச அவன் அருகே அமர்ந்தாள். அதைக் கண்டவன் “என்ன உக்காந்துட்ட? உன் வீட்டுக்கு போகலையா? கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்”, என்றான்.

     அவள் அதிர்ச்சியாக விழிக்க “என்ன முழிக்கிற? என்னை விட்டு என் வாழ்க்கையை விட்டு இந்த வீட்டை விட்டு போறேன்னு தானே சொன்ன? கிளம்பு. கூடிய சீக்கிரம் டைவர்ஸ் பேப்பர் வரும்”, என்று சொல்ல “அது நான் கோபத்துல சொன்னது”, என்றாள்.

     “இப்ப நான் எதுவும் பேச விரும்பலை. பேசுற மன நிலைமைலயும் இல்லை. ஒண்ணு உன் வீட்டுக்கு கிளம்பி போ. இல்லைன்னா நான் பக்கத்து ரூம்ல தங்கிக்கிறேன்”, என்று சொல்ல அவளுக்கும் கோபம் வந்தது.

     அவனே போகச் சொன்ன பிறகு இங்கே இருந்தால் அவளது தன்மானம் என்ன ஆகும்? “நான் எப்படா போவேன்னு சொல்வேன்னு காத்துட்டு இருந்தீங்க அப்படி தானே? இதுக்கு மேல இங்க இருக்க என்னால முடியாது. நான் போறேன்”, என்றாள்.

     “போன்னு தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்”, என்று அவன் சொல்ல அவனை முறைத்தவள் பையை தூக்கி வைத்து உடைகளை திணிக்க அவன் பார்த்துக் கொண்டே இருந்தான்.

     ஏதாவது சொல்வான் என்று அவள் எதிர் பார்க்க “எல்லாம் எடுத்து வச்சிட்டியா? வா போகலாம்”, என்றான்.

     “நீங்க எங்க வறீங்க? எனக்கு போகத் தெரியும். யாரும் எனக்கு தேவை இல்லை”

     “நாம நிரந்தரமா பிரியுற வரைக்கு உன்னை ஆதியோட பொண்டாட்டின்னும் ராயரோட மருமகள்ன்னும் தான் எல்லாரும் சொல்லுவாங்க. போற வழில உனக்கு ஏதாவது ஆச்சுன்னா எங்க வீட்டு பேர் தான் கெடும். நானே உன்னை வீட்ல விடுறேன்”, என்று சொல்ல அடுத்து அவள் எதுவும் பேச வில்லை. ஆதி கோபமாகவும் மதி பையைத் தூக்கிக் கொண்டும் வர அனைவரும் திகைத்தார்கள்.

     “அப்பா இவளை அவ வீட்ல விட்டுட்டு வரேன்”, என்று ஆதி சொல்ல அவன் குரலில் இருந்த உறுதியில் யாரும் எதுவும் பேச வில்லை.

     ஆனாலும் மனது கேக்காமல் “என்ன ஆதி இது? அவ போறேன்னு சொன்னா நீ போகச் சொல்லுவியா?”, என்று கேட்டாள் தமயந்தி.

     “அவ தானே போகணும்னு சொன்னா? அதனால போகட்டும் மா”

     “அவ உன் பாட்டி மேல உள்ள கோபத்துல சொன்னது டா”

     “மனசுல உள்ளது தான் மா வரும். அவ போகட்டும்”, என்று ஆதி சொல்ல “நான் போறேன் அத்தை. யாரும் எனக்காக யாரு கிட்டயும் கெஞ்ச வேண்டாம். போயிட்டு வரேன் மாமா. வரேன் தாத்தா”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டாள். மற்ற யாருடைய முகத்தையும் அவள் பார்க்க வில்லை. செழியன் குற்ற உணர்வுடன் நின்றான் என்றால் நந்தினியும் விக்கியும் மித்ர துரோகிகளாக தங்களை உணர்ந்தார்கள்.

காதல் தொடரும்….

Advertisement