Advertisement

     உடனே இப்படி செய்வான் என்று அவள் எதிர் பார்க்கவில்லையே? “ஏய் நான் பேச தான் வந்தேன். உன்னால முடிஞ்சா என் வீட்ல வச்சு என் கிட்ட வாலாட்டு டா. என்னமோ கிழிக்க போறேன்னு சொன்ன? அதைச் செய். இப்ப நானா வந்தா நீ அதை அட்வான்டேஜ் எடுத்துக்குவியா?”, என்று பதட்டத்தில் உளறினாள்.

     “அப்படி தான் நினைச்சேன் பேபி, ஆனா இப்ப உன்னைப் பாத்ததும் இந்த தனிமையும் சேந்து என் மனசை மாத்திருச்சு”, என்று சொல்லிக் கொண்டே அவளை நெருங்கியவன் அவள் கையை பிடிக்கப் போக அடுத்த நொடி அங்கே போலீஸ் வந்தது. கூடவே ஆதியும்.

     அவனைக் கண்டு பெருத்த நிம்மதி மதிக்கு. ஓடிச் சென்று அவளை இறுக அணைத்துக் கொண்டாள். அவனும் ஒரு நொடி அவளை அணைத்தவன் பின் அவளை விலக்கி நிறுத்தி ரிஷியை நெருங்கினான். அவன் சட்டையை கொத்தாக பற்றி “எவ்வளவு தைரியம் இருந்தா என் தங்கச்சி வாழ்க்கையை கெடுக்க நினைச்சதும் இல்லாம என் பொண்டாட்டியை மிரட்டுவ?”, என்று கேட்டுக் கொண்டே அவனை அடி பின்னி விட்டான்.

     அதற்கு பின் செந்தில் அவனைத் தடுத்து ரிஷியை அரஸ்ட் செய்து அழைத்துச் சென்றார்கள். மதி ஆதியைப் பார்க்க “என் கூட வா”, என்று சொல்லி தன்னுடைய காரில் அவளை அழைத்துச் சென்றான். அமைதியாக அவனுடன் சென்றாள். அவன் ஒரு வார்த்தையும் பேச வில்லை. இறுக்கமாக அமர்ந்திருந்தான்.

     அவன் எப்படி இந்த நேரம் இங்கு வந்தான் என்ற கேள்வி எழுந்தாலும் அவன் முகத்தில் இருந்த இறுக்கம் அதைக் கேட்க விட வில்லை. தான் ரிஷியை பார்க்க வந்ததை தவறாக எண்ணிக் கொண்டானோ என்ற பயத்தில் அமைதியாக இருந்தாள்.

     காடு மாதிரியான ஒரு இடத்தில் கார் நின்றது. அங்கே பாழடைந்த ஒரு கட்டடம் இருக்க அதற்குள் மதியை அழைத்துச் சென்றான். இங்கே எதற்கு என்று குழப்பத்துடன் அவனுடன் சென்றாள். அந்த கட்டிடத்துக்குள் போன போது ஒரு சேரில் கட்டப் பட்டு வாங்கிய அடியால் சோர்ந்து போய் அமர்ந்திருந்தான் ரிஷி.

     மதி அவனை முறைத்துப் பார்க்க “பொண்ணுங்க வாழ்க்கை எல்லாம் உனக்கு விளையாட்டா போச்சா? இது வரை எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை கெடுத்துருக்க? உண்மையைச் சொல்லு டா””, என்று கோபமாக கேட்டான் ஆதி.

            “ஏன் அதை உங்க பொண்டாட்டி சொல்லலையா?”, என்று நக்கலாக கேட்டான் ரிஷி. தனக்கு எதிரே எந்த ஆரமும் இல்லாத போது இவர்களால் தன்னை என்ன செய்ய முடியும் என்ற ஆனவத்தில் தான் அவன் அப்படிக் கேட்டான்.

            “சொன்னா சொன்னா, ஆனா அதை உன் வாயால கேக்கணும்ல? அதான் கேக்குறேன் சொல்லு. என்ன எல்லாம் பண்ணின?”, என்று கேட்க “சொல்ல மாட்டேன்”, என்றான்.

            “ஆஹான்?”, என்றவன் அவனை அடித்து துவைக்க அடுத்த நொடி எல்லா உண்மையையும் சொல்லி விட்டான். அதை அங்கிருந்த போனில் பதிவு செய்தார்கள் காவலர்கள்.

     அடியால் வலி தாங்க முடியாமல் “தயவு செஞ்சு என்னை மன்னிச்சிருங்க சார். என்னை விட்டுடுங்க. நான் செஞ்சது எல்லாம் தப்பு தான்”, என்று பயத்துடன் அழுத ரிஷியைப் பார்த்து அங்கிருந்த யாருக்கும் ஒரு சதவீதம் கூட இரக்கம் வரவில்லை.

     ஒரு பெண்ணின் சாவுக்கு காரணமாகி இன்னும் பல பெண்களின் வாழ்வை வீணாக்கியவனை அப்படியே விட மனதில்லை. அதே நேரம் அவன் சொன்ன ஒப்புதல் வாக்கு மூலங்களை வைத்து போலீஸ் கம்ப்லைண்ட் கொடுக்கலாம் தான். ஆனால் சாட்சிக்கு என்று தன்னுடைய மனைவி செல்ல வேண்டும். அதில் மீடியா அவளை தவறாக சித்தரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணியவன் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

     “சரி, நான் உன் மேல கேஸ் கொடுக்கல. நீ போ”, என்று சொல்ல அடித்து பிடித்து அங்கிருந்து கிளம்பினான் ரிஷி. “என்ன ஆதி சார் அவனை விட்டுட்டீங்க?”, என்று கேட்டான் செந்தில்.

     “ஆமா சார் கம்ப்லைண்ட் பண்ணினா என் மனைவி பேர் வெளிய வரும். இன்னைக்கு அடிச்சதுல அவன் திருந்திருப்பான். இதை இதோட விட்டுருங்க. இனி ஏதாவது பண்ணினா பாத்துக்கலாம். வாங்க நாம போகலாம்”, என்று சொல்ல முதலில் போலீஸ் கிளம்பிச் சென்றார்கள்.

     மதி அவனையும் இவ்வளவு நேரம் அவன் ஆடிய தாண்டவத்தையும் பார்த்து அதிர்ந்து போய் இருந்தாள். ரிஷியை அப்படியே விட்டது அவளுக்கு பிடிக்க வில்லை. ஆனால் ஆதி அப்படிச் செய்தால் அது சரியாக இருக்கும் என்று எண்ணினாள்.

     ஆனால் ஆதி தன்னை தவறாக நினைத்து விட்டானோ என்று தான் பயமாக இருந்தது. அவள் இந்த விசயத்துக்கு பயந்து தானே அவனிடம் ரிஷியை பற்றி பேச வில்லை. இப்போது அவனைத் தேடி கெஸ்ட் ஹவுஸ் சென்றது அவள் தானே? பார்வதி பேசியது போல ஆதியும் எண்ணி விடுவானோ என்று பயமாக இருந்தது.

     அவள் எண்ணியது போல தான் ஆதி அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இறுக்கமாகவே இருந்தான். இனி பழைய ஆதி தனக்கு இல்லை என்று விரக்தியாக எண்ணினாள்.

     “வா”, என்று சொல்லி விட்டு ஆதி செல்ல அவன் பின்னேயே சென்றாள். போலீஸ் கிளம்பிச் சென்றிருக்க ஆதியின் கார் மட்டும் அங்கே இருந்தது. அவன் டிரைவர் சீட்டில் அமர அவளும் அவன் அருகே அமர்ந்தாள்.

     அங்கிருந்து ஓடி வெளியே வந்த ரிஷியின் கண்ணில் பட்டது காடு தான். ஆனாலும் ஓடினான். இன்னும் கொஞ்ச தூரம் ஓடியதும் ஹைவேஸ் தெரிய அவன் கண்கள் மின்னியது. ஏதாவது வண்டி வருமா என்று பார்த்தான். எதுவும் வரவில்லை என்றதும் ஏதாவது ஊர் வருமா என்று எண்ணி வேகமாக ஓடினான்.

     அப்போது ஆதியின் கார் அங்கே வந்தது. ரிஷியைக் கண்ட மதி ஆதியை ஒரு பார்வை பார்த்தாள். திடீரென்று காரின் வேகத்தைக் கூட்டினான் ஆதி. அதே நேரம் அந்த காரை நிறுத்தி உதவி கேட்க நின்றான் ரிஷி. ஆதி காரின் வேகத்தை இன்னும் கூட்டி அவன் மீதே மோத அந்தரத்தில் தூக்கி எரியப் பட்டான் ரிஷி.

     மதி நெஞ்சில் கை வைத்த படி அப்படியே அமர்ந்திருந்தாள். ஒரு வார்த்தை கூட அவளால் பேச முடிய வில்லை. அந்த அளவுக்கு அதிர்ச்சி அவளுக்கு.

     அவளை ஒரு பார்வை பார்த்தவன் அடுத்த நொடி காரில் இருந்து இறங்கி ரிஷியின் அருகே சென்றான். அவன் ரத்த வெள்ளத்தில் கிடக்க அவனைத் தூக்கி வந்து காரில் போட்டான். அவள் குழப்பமாக அமர்ந்திருக்க அவன் காரைக் கிளப்பிக் கொண்டு மருத்துவமனையை அடைந்தான்.

     அவனை அவசர பிரிவில் சேர்த்தான். உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் கோமாவுக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது என்று மருத்துவர்கள் சொல்ல அதைக் கேட்டு விட்டு ரிஷியின் பெற்றோர்களுக்கும் ஆக்ஸிடெண்ட் பற்றி சொல்லி விட்டு இருவரும் கிளம்பினார்கள். ரிஷிக்கு ஆக்ஸிடெண்ட் என்பது மட்டுமே வெளியே தெரிந்தது. அதைச் செய்தது ஆதி என்று யாருக்கும் தெரிய வில்லை.

     பின் காரை வாட்டர் வாஷ்க்கு கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்தான். இதை எல்லாம் பார்த்து பயந்து போய் அவன் கூடவே தான் இருந்தாள் மதி. ஆனால் அவன் அவளை திரும்பியும் பார்க்க வில்லை. அவளிடம் பேசவும் இல்லை.

     ரிஷி தன்னிடம் நடந்து கொண்ட முறைக்கு ஆதி கொடுத்த தண்டனை இதுவென்றால் அவனை கெஸ்ட் ஹவுஸ்க்கு காணக் சென்றதுக்கு தன்னை என்னவென்று நினைப்பான் என்று பயமாக இருந்தது.

     அருகில் அமர்ந்தவனை அவ்வப்போது பார்த்த படியே இருந்தாள் மதி. அவனைக் கண்டு பயமாக இருந்தாலும் எவ்வளவு பெரிய விசயத்தை செய்திருக்கிறான் என்று பூரிப்பாக இருந்தது. ஆதியும் போலீசும் வரவில்லை என்றால் தன் நிலைமை என்ன ஆகிருக்கும் என்று நினைக்கவே பயமாக இருந்தது. ரிஷி அத்து மீறினால் ஒன்று அவனைக் கொன்றிருப்பாள். இல்லை செத்திருப்பாள்.  ஆனால் ஆதி அதை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டானே. இதற்காகவே அவன் மேல் அன்பு பெருகியது. அவனை அணைத்து தேங்க்ஸ் சொல்ல அவள் மனம் பரபரத்தது. ஆனால் அவனிடம் பேச பயமாக இருந்தது.

     அவன் அமைதி அவளை அதிகம் பாதித்தது. ஏன் அவனைப் பாக்கப் போன என்றாவது அவன் கேப்பான் என்று எதிர் பார்த்தாள். ஆனால் அவன் அமைதியாகவே இருந்தான். எதுவுமே கேட்காமல் இப்படி அமைதியாக இருந்தால் என்ன நினைக்கவாம் என்று எண்ணியவளுக்கு அவனிடம் பேச ஒரு சதவீதம் கூட தைரியம் வரவில்லை.

     அவளை வீட்டில் இறக்கி விட்டவன் திரும்பிக் கூட பார்க்காமல் செல்ல கலங்கிய மனதை அடக்கியவளுக்கு இனி தான் ஆதியுடன் வாழ்வது சத்தியம் இல்லை என்று புரிந்தது. எந்த கணவன் தான் மனைவி இன்னொரு ஆணை திருட்டுத் தனமாக சந்திக்கச் சென்றதை மன்னிப்பான்?

     கலங்கிய கண்களுடன் வீட்டுக்குள் சென்றாள். பார்வதி மட்டும் அங்கே அமர்ந்திருக்க எதுவும் பேசாமல் தங்களின் தளத்துக்கு சென்று விட்டாள்.

     அன்று இரவு எப்போதும் போல் அனைவருக்கும் அமைதியாக உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள் மதி. அங்கே அமைதியே நிலவியது. காலையில் ஆதி பேசிய பேச்சால் எல்லாருமே அமைதியாக தான் இருந்தனர். மதியிடம் மன்னிப்பு கேட்க கூட பயமாக தான் இருந்தது. மொத்தத்தில் அனைவரும் ஆதியை தான் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

Advertisement