Advertisement

     “எங்க அண்ணன் சாகச் சொன்னா கூட என் மருமகன் சாவான் டி”, என்று மணிமேகலை சொல்ல “அது எல்லாம் முன்னாடி. ஆனா இப்ப இருக்குறது என் ஆதி. எனக்காக வாழ்ற ஆதி. அப்பா பேச்சைக் கேப்பார் தான். ஆனா என்னை விட்டுக் கொடுக்க மாட்டார். எனக்காக வாழ்றவர் மாமா சொன்னா கூட சாக மாட்டார். இந்த உலகத்துல யார் சொன்னாலும் ஆதி வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டார். அது ராயர் மாமா சொன்னாலுமே? ஏன்னா நான் ஒண்ணும் உங்க அண்ணன் பாத்த பொண்ணு இல்லை. ஆதி அவருக்காக அவரே பார்த்த பொண்ணு தான் நான்”, என்று சொல்ல இருவரும் அவளை வியப்பாக பார்த்தார்கள்

     “நீ என்ன சொல்ற? தரகர் தான் உன் போட்டோவைக் கொண்டு வந்து கொடுத்தார். அப்புறம் தான் அண்ணன் ஆதி கிட்ட காட்டினார். இல்லை இல்லை. அவன் கிட்ட காட்டக் கூட இல்லை. அவன் நேர்ல தான் உன்னைப் பாத்தான்”, என்றாள் மணிமேகலை.

     “அது தான் இல்லை. என் போட்டோவை தரகர் கிட்ட கொடுத்து உங்க அண்ணன் கிட்ட கொடுக்கச் சொன்னதே ஆதி தான். அந்த அளவுக்கு அவருக்கும் என் மேல அவ்வளவு காதல். எந்த விசயத்துலயும் அப்பா பேச்சை தட்டாத பிள்ளை என் மேல எவ்வளவு அன்பிருந்தா இப்படி ஒரு காரியம் செய்வார்? அது மட்டும் இல்லாம ஆதி தான் என்னோட போட்டோவை தரகர் கிட்ட கொடுத்ததுன்னு ராயர் மாமாவுக்கும் தெரியும்’”, என்று சொல்ல மணிமேகலையின் கண்கள் விரிந்தது.

     “அண்ணனுக்கும் தெரியுமா?”

     “ஆமா தெரியும். நான் ஆதியோட மனைவி. என் மேல அவர் எவ்வளவு அன்பு வச்சிருக்கார்னு ராயர் மாமாவுக்கும் தெரியும். அதனால என் இடத்துல வேற யாரையும் ராயர் மாமாவே கொண்டு வர மாட்டார். அதை ஆதி ஏத்துக்கவும் மாட்டார்”, என்று அவள் பெருமையாக சொல்ல மணிமேகலைக்கு எரிச்சல் வந்தது.

     “இப்ப என்ன அவன் காதல் கதையை சொல்லி எங்களை எரிச்சல் படுத்த தான் இங்க வந்தியா? தயவு செஞ்சு கிளம்பி போ. உன்னைப் பாத்தா எனக்கு கடுப்பா வருது”

     “பெரியம்மா இப்ப எதுக்கு இவ்வளவு கோபம்? உங்களுக்கு உங்க அண்ணன் கூட சம்பந்தம் வச்சிக்கணும். அதுலயும் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கணும். அதானே? அதுக்கு அஞ்சனாவை ஆதிக்கு தான் கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னு இல்லையே? அடுத்து செழியன் இருக்காரே. அவருக்கு அஞ்சனாவைக் கொடுங்க. நிரஞ்சனுக்கு நந்தினியைக் கல்யாணம் பண்ணி வைங்க”, என்று சொல்ல மணிமேகலை கண்கள் விரிந்தது.

     “நீ சொல்றது நடக்குமா?”, என்று எதிர் பார்ப்புடன் கேட்க “நீங்க மனசு வச்சா நடக்கும்”, என்றாள்.

     “ஆனா நான் சம்மதிக்க மாட்டேன். எனக்கு என் பிள்ளைகள் வாழ்க்கை முக்கியம். இவ ஆசைக்கு என் பிள்ளைகளை பலி கொடுக்க மாட்டேன்”, என்றார் சுந்தரேஸ்வரர்.

     “ஏன் பெரியப்பா இப்படிச் சொல்றீங்க? பிள்ளைங்க சந்தோஷம் முக்கியம்னு நினைக்கிறது நல்லது தான். ஆனா உங்க பேச்சைக் கேட்டு நடக்குற பிள்ளைகள் உங்களுக்கு கிடைச்சிருக்குறப்ப அவங்க வாழ்க்கையை நல்ல படியா அமைச்சு கொடுக்க வேண்டியது உங்க பொறுப்பு தானே? நீங்க சொன்னா அஞ்சனாவும் நிரஞ்சனும் கேக்க தான் போறாங்க. அவங்க ரெண்டு பேர் மனசுல வேற யாராவது இருந்தா நாம பயப்படலாம். அப்படி இல்லாதப்ப செழியனையும் நந்தினியையும் ஏத்துக்க வேண்டியது தானே? அஞ்சனாவுக்கும் செழியனுக்கும் பொருத்தம் நல்லா இருக்கும். அதே மாதிரி தான் நந்தினிக்கும் நிரஞ்சனுக்கும்”, என்று சொல்ல அவர் மணிமேகலையைப் பார்த்தார்.

     “எனக்கு அந்த பொண்ணு சொல்ற யோசனை சரியாப் படுதுங்க. பிளீஸ் யோசிங்க”, என்று சொல்ல “இருந்தாலும் பிள்ளைங்க”, என்று இழுத்தார்.

     “நான் ஒரே ஒரு விஷயம் சொல்றேன். அதை மட்டும் கேப்பீங்களா பெரியப்பா?”

     “சொல்லு மா”

     “அஞ்சனா கிட்டயும் நிரஞ்சன் அண்ணா கிட்டயும் ராயர் மாமா தான் கல்யாணம் பத்தி பேசச் சொன்னார்ன்னு சொல்லி சம்மதமான்னு கேளுங்க. அவங்க விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டா நீங்களும் விட்டுருங்க. அவங்க சம்மதம் சொல்லிட்டா நான் மாமா கிட்டயும் ஆதி கிட்டயும் பெர்மிசன் வாங்குறேன்”, என்றாள்.

     “ஒரு நிமிஷம் இரு மா”, என்றவர் ரெக்கார்டிங்கை நிறுத்தி ஆதிக்கு அனுப்பி விட்டு நிரஞ்சனை அழைத்தார்.

     “இப்பவே எதுக்குங்க? வீட்டுக்கு வந்த அப்புறம் பேசலாமே?”, என்று மணி பதறினாள். போனில் மகனை சம்மதிக்க வைக்க முடியாதே என்ற பயம் அவளுக்கு.

     “அமைதியா இரு”, என்று சொன்ன சுந்தரேஸ்வரர் நிரஞ்சன் எடுக்க காத்திருந்தார்.

     “சொல்லுங்கப்பா. என்ன இந்த நேரம் கால் பண்ணிருக்கீங்க?”, என்று கேட்டான் நிரஞ்சன்.

     “வேலை எப்படி போகுது நிரஞ்சா?”

     “குட் பா. இன்னும் நாலு நாள்ல வேலை முடிஞ்சிரும். வந்துருவேன்”

     “நல்லதுப்பா. அப்புறம் உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”

     “சொல்லுங்கப்பா”

     “ராயர் மச்சான் உனக்கு ஒரு பொண்ணு பாத்துருக்கார். எங்களுக்கும் சம்மதம்னு தோணுது. ஆனா உன்  விருப்பம் தான். நீ என்ன சொல்ற? உனக்கு வேற யாரையாவது பிடிச்சிருக்கா?”

     “அப்படி எல்லாம் இல்லைப்பா. நீங்களா பாத்து யாரைச் சொன்னாலும் எனக்கு சம்மதம் தான். மாமா எது சொன்னாலும் சரியா தான் பா இருக்கும். ஆனா ஒரே ஒரு விஷயம். அஞ்சனா கல்யாணம் முடிஞ்சதும் தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன். அதை மட்டும் மாமா கிட்ட சொல்லிருங்க. கொஞ்சம் வேலை இருக்கு பா. அப்புறம் பேசுறேன்”, என்று சொல்லி விட்டு வைத்தான். ஸ்பீக்கரில் கேட்ட மதி மற்றும் மணிமேகலை முகம் ஒளிர்ந்தது.

     அதே போல காலேஜில் இருந்த அஞ்சனாவிடமும் கேட்க அவளும் யார் என்றாலும் தனக்கு சம்மதம் என்று தான் சொன்னாள்.

     “பாத்தீங்களா பெரியப்பா, அவங்களே சரின்னு சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன? பிறந்த வீட்ல சம்மந்தம் பண்ணினா பெரியம்மாவும் சந்தோஷமா இருப்பாங்க. முழு மனசோட சம்மதிங்க”, என்றாள் மதி.

     “எனக்கு சம்மதம் மா. ஆனா நானா எதையும் மச்சான் கிட்ட கேக்க மாட்டேன். நான் கேட்டு அவர் தர மாட்டேன்னு சொல்லிட்டார்னா எனக்கு சங்கடமா போயிரும். அப்புறம் எங்க உறவுக்குள்ள ஒரு விரிசல் வந்துரும்”

     “அதை நீங்க கேக்க வேண்டாம் பெரியப்பா. பெரியம்மா கேப்பாங்க. இவங்களுக்கு அவங்க அண்ணன் கிட்ட கேக்க உரிமை இல்லையா என்ன? ஆனா அவங்க கேக்கும் போது ராயர் மாமா சரின்னு தான் சொல்லுவாங்க. அதுக்கு நான் பொறுப்பு”, என்றாள் மதி.

     “சரி மா”

     “சரி பெரியப்பா நான் கிளம்புறேன். நான் வரேன் பெரியம்மா”

     “ஒரு நிமிஷம் மா”

     “என்ன பெரியம்மா?”

     “உனக்கு எப்படி இப்படி ஒரு விஷயம் தோணுச்சு? இதுனால உனக்கு என்ன லாபம்? ஏன் கேக்குறேன்னா நீ அசல். நாங்க சொந்தத்துல கட்டிக்கிட்டா உன்னை ஒதுக்கிருவோம்னு பயம் தானே வரணும்?”

     “அது அப்படி இல்லை பெரியம்மா. இந்த விசயத்துல என்னோட ஒரே லாபம். நந்தினியோட சந்தோஷம். கொஞ்ச நாள் ஆனாலும் நந்துவும் அஞ்சுவும் எனக்கு நல்ல தோழிகள். அவங்க சந்தோசத்துக்காக யோசிச்சேன். அந்த ரிஷி நல்லவன் இல்லைன்னு தெரிஞ்சதும் எனக்கு நந்துவுக்கு பொருத்தமா நிரஞ்சன் அண்ணா இருப்பாங்கன்னு தோணுச்சு. அதான் கேட்டேன். சரி நான் வரேன்”

     “என்னை மன்னிச்சிரு மதி. நான் உன்னை தப்பா நினைச்சிட்டேன்”

     “அது இயற்கை தான் பெரியம்மா. எப்பனாலும் தாய் வீடுன்னா பொண்ணுங்களுக்கு பெருசு தான். நான் அதை பெருசா எடுத்துக்கலை. ஆனா உங்க அம்மா வாய் தான் என்னை போட்டு பாடாப் படுத்துது. அதை ஒரு நாள் ஊசி நூல் எடுத்து தைக்கிறேன் பாருங்க. ஆனா தாத்தா தான் பாவம்”, என்று சிரிப்புடன் சொன்னாள்.

     “எதுக்கு எங்க அப்பா பாவம்?”

     “ஆமா, பாட்டி வாயை தச்சிட்டா பாட்டி தாத்தாவுக்கு எப்படி முத்தம் கொடுப்பாங்க?”, என்று சிரிப்புடன் கேட்க கணவன் மனைவி இருவரும் சிரித்து விட்டார்கள்.

     “நாங்களும் உனக்கு இனி அம்மா அப்பா தான் சரியா? நீ நல்லா இருக்கணும். ஆதி உன் கிட்ட மயங்கினதுல சந்தேகமே இல்லை. அப்படி தானேங்க?”, என்று மணிமேகலை கேட்க “ஆமா மணி. இனி மதியும் நம்ம பொண்ணு தான்”, என்றார் சுந்தரேஸ்வரர்.

     மீண்டும் இருவரிடமும் விடை பெற்று கிளம்பியவள் காரை ஒரு மரத்தடியில் நிறுத்தினாள். பின் தன்னுடைய போனை எடுத்து ரிஷியை அழைத்தாள்.

காதல் தொடரும்….. 

Advertisement