அவன் இழுத்த இழுப்பிற்குச் செல்ல அவளை அவளது பெர்சனல் அறையில் இருந்த சோபாவில் அமர வைத்தவன் கையில் வாங்கி வந்திருந்த தக்காளி சாதத்தை பிரித்து ஊட்ட ஆரம்பித்தான்.
அவனை வியப்பாக பார்த்தாலும் அவன் தன்னை கண்டு கொள்ளாதது நினைவில் வர “எனக்கு ஒண்ணும் வேணாம்”, என்று சொல்லி முறுக்கி கொண்டாள். “இப்ப நீ வாங்கலைன்னா என் வாயால உனக்கு ஊட்டி விடுவேன்”, என்று சிரிப்புடன் சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டு கிளர்ந்தவள் அவனை நெருங்கி அமர்ந்து ஆ என்று வாயை திறக்க அவன் உணவை ஊட்ட ஆரம்பித்தான். எந்த மறுப்பும் சொல்லாமல் அமைதியாக உண்டவள் காதலோடு அவனைப் பார்க்க அவள் பார்வை புரிந்தவன் திருப்தியோடு அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
“நீ சாப்பிடாம இருப்பேன்னு தான் வந்தேன். சரி வேலையைப் பாரு. நைட் எல்லாம் பேசிக்கலாம்”, என்று சொல்லி விட்டு கிளம்ப அவனை இறுக்கி அணைத்தாள்.
“என்ன அம்மினி?”, என்று அவன் குரல் கரகரப்பாக வர ஒண்ணும் இல்லை என்னும் விதமாக தலையசைத்தவள் அவனை விட்டு விலகி நின்றாள்.
“வேலையைப் பாரு டா”, என்று சொல்லி விட்டு அவன் செல்ல மனமும் வயிறும் நிறைந்த திருப்தியில் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
வெளியே வந்த ஆதி ரிஷியைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் ஆதியோடு அந்தமாக கையில் எடுத்து விட்டான். அவனைப் பற்றி அவனது பெற்றவர்களுக்கே தெரியாத அளவுக்கு அவன் நடிப்பு இருப்பது ஆச்சர்யம் அளித்தது. ஒரு பெண்ணின் உயிர் போனதும் அல்லாமல் பல பெண்களை நாசமாக்கி இருக்கிறான் என்று அறிக்கை சொல்ல உள்ளுக்குள் கொதித்துப் போனான்.
இன்று இரவு வீட்டில் உள்ள அனைவரிடமும் அவனைப் பற்றி எல்லாம் சொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்த ஆதி அடுத்த நாள் அந்த ரிஷியை ஒரு வழி பண்ண வேண்டும் என்றும் முடிவு எடுத்தான். மனைவி மீது ஏற்கனவே இருந்த காதல் இன்னும் அதிகரித்தது.
அவளைப் பற்றி எண்ணியவுடன் அவனது தாபமும் அதிகரித்தது. அவளுடன் சந்தோஷமாக இருந்து எத்தனை நாள் ஆச்சு என்று எண்ணியவனுக்கு அவள் நினைவாவே இருக்க “என்னை வேலை பாக்க விடு டி பட்டு”, என்று செல்லமாக கொஞ்சிக் கொண்டு வேலையை கவனிக்க ஆரம்பித்தான். அவன் ஒரு முடிவில் இருக்க அவனது மனைவியோ வேறு ஒரு முடிவில் இருந்தாள்.
அதுவும் அவளது வாழ்க்கையை பணையம் வைத்து நந்தினியை காப்பாற்ற முடிவு எடுத்தாள். அவளுக்கு எப்படியாவது நந்தினியை காப்பாற்றி ஆக வேண்டும். அதற்கு அவள் உயிரைக் கூட கொடுப்பாள் தான். ஆனால் அவள் இறந்து விட்டால் அந்த ரிஷியைப் பற்றி எப்படி புரிய வைக்க முடியும்?
எவ்வளவோ போராடி விட்டாள். ஆனால் ரிஷி பேசிய ஆதாரத்தை தவிர அவள் கையில் ஒன்றுமே இல்லை. போன் ஆதாரத்தைக் கொடுத்தால் நம்புவார்களா என்ற குழப்பம் வந்தது. அதனால் முக்கிய ஆதாரத்தை அவள் உருவாக்க வேண்டும் என்று எண்ணியவள் நந்தினிக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் என்று எண்ணி வேறு ஒரு பிளான் செய்தாள்.
அப்போது மணிமேகலையின் நினைவு வந்தது. மணிமேகலைக்கு அண்ணன் வீட்டில் சம்பந்தம் பண்ண அவ்வளவு ஆசை என்று மதிக்கு தெரியுமே? அதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க வேண்டும் என்று எண்ணினாள். நந்தினிக்கும் நிரஞ்சனுக்கும் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணமிட்டவள் உடனே மணிமேகலையை தேடி அவளது வீட்டுக்கே சென்று விட்டாள். யாருக்கும் தெரியாமல் தான் இதைச் செய்ய முடிவு எடுத்தாள். ஆனால் ரிஷியால் அவளுக்கு ஆபத்து வரலாம் என்று எண்ணி அவளை பின் தொடர ஒரு ஆளைப் போட்டிருந்தான் ஆதி.
அவளை பாலோ செய்த பாடிகார்ட் உடனே ஆதியை அழைத்தான். “சொல்லுங்க முத்துவேல்”
“சார் மேடம் உங்க அத்தை வீட்டுக்கு வந்திருக்காங்க. கேட்ல தான் நிக்குறாங்க”
“வாட்?”
“ஆமா சார்”
“ஓகே பாத்துக்கோங்க”, என்று சொல்லி போனை வைத்தவனுக்கு குழப்பமாக இருந்தது. அவனுக்கு தெரிந்த வகையில் மணிமேகலைக்கு மதியை பிடிக்கவே செய்யாது. இது வரை ஒரே ஒரு நாள் விருந்துக்கு மட்டுமே அங்கே அவனுடன் மதி வந்திருந்தாள். அப்படி இருக்க அவள் ஏன் அங்கே போக வேண்டும் அதுவும் தான் இல்லாமல் என்று குழப்பம் வந்தது.
உடனே சுந்தரேஸ்வரரை அழைத்தான். “சொல்லு மாப்பிள்ளை”, என்றார் அவர்.
“மாமா உங்க வீட்டுக்கு தான் மதி வந்துருக்கா. இப்ப உள்ள வருவா. அங்க வந்து அவ என்ன பேசுறான்னு எனக்கு தெரியணும். கண்டிப்பா அவ உங்களையோ அத்தையையோ தான் தேடி வரா. ஏன்னா நிரஞ்சன் அஞ்சனா ரெண்டு பேரும் வீட்ல இல்லைனு அவளுக்கு தெரியும்”
“சரி மாப்பிளை நான் ரெக்கார்ட் பண்ணி அனுப்புறேன்”, என்று சொல்ல சரி என்று போனை வைத்தான்,.
அழைப்பு மணி அடித்ததும் மணிமேகலை கதவை திறக்க அங்கே நின்ற மதியைக் கண்டு மணிமேகலைக்கே அதிர்ச்சி தான்.
“நீ என்ன இங்க? சரி சரி உள்ள வா. உக்காரு. நான் டீ எடுத்துட்டு வரேன்”, என்றாள். மதியை அவளுக்கு பிடிக்காது என்றாலும் வீட்டுக்கு வந்தவளை கவனிப்பது அவளது கடமையாயிற்றே.
“இல்லை பெரியம்மா, எனக்கு இப்ப எதுவும் வேண்டாம்”, என்று மதி சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த சுந்தரேஸ்வரரும் போனில் ரெக்கார்டை ஆன் செய்து விட்டு “வா மா”, என்று வரவேற்றார்.
“உங்க ரெண்டு பேர் கிட்டயும் நான் கொஞ்சம் பேசணும்”, என்று மதி சொன்னதும் அவர்களும் அவளுக்கு எதிரே அமர்ந்தார்கள்.
“நான் நேரடியா விசயத்துக்கே வரேன். நந்தினிக்கு பாத்துருக்குற மாப்பிள்ளை நல்லவன் கிடையாது. அதனால நான் இந்த கல்யாணத்தை நிறுத்தப் போறேன்”, என்று அவள் சொல்ல “என்னமா சொல்ற?”, என்று அதிர்ந்து போய்க் கேட்டார் சுந்தரேஸ்வரர்.
“ஆமா பெரியப்பா. நான் எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்திருவேன். ஆனா நான் இப்ப பேச வந்தது அதுக்கு அப்புறம் நீங்க செய்ய வேண்டியதைப் பத்தி சொல்ல தான்”
“என்ன மா செய்யணும்?”
“நீங்க நந்தினியை நிரஞ்சனுக்கு பொண்ணு கேக்கணும்”, என்று சொன்னதும் சுந்தரேஸ்வரர் திகைப்பாக அவளைப் பார்க்க மணிமேகலையின் கண்கள் மின்னியது. ஆனால் அதை வெளி காட்டாமல் “ஏய் என்ன விளையாடுறியா? எங்க அண்ணனுக்கே என் பிள்ளைகளை பெருசா தெரியலை. அதான் வெளி இடத்துல சம்மதம் பாக்குறாங்க. இதுல நீ வேற? நாங்க அதெல்லாம் கேக்க மாட்டோம்”, என்றாள்.
“பெரியம்மா பிளீஸ், நான் சொல்றதைக் கேளுங்க”
“முதல்ல நான் சொல்றதை நீ கேளு. உன்னைப் பாத்தாலே எனக்கு பிடிக்கலை. நீ இருக்குறது என் மக அஞ்சனா இருக்க வேண்டிய இடம். உன்னைப் பாத்தாலே எனக்கு பிடிக்கலை. நீ ஆதியை விட்டுப் போயிரு”, என்று சொல்ல அதிர்ந்து போனாள்.
“பெரியம்மா அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”
“சம்பந்தம் இருக்கு. எங்களுக்கு எங்க பொண்ணையும் பையனையும் ஒரே வீட்ல கட்டிக் கொடுக்கணும்னு தான் ஆசை. நீ சொல்ற படி நாங்க நிரஞ்சனுக்கு நந்தினியை பொண்ணு கேக்கணும்னா அஞ்சனாவுக்கு ஆதி கிடைக்கணும். நீ அவன் வாழ்க்கைல இருந்து போயிட்டா நான் என் பிள்ளைகளை எங்க அண்ணன் வீட்ல கொடுத்துருவேன்”, என்றாள்.
“மணி நீ என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா?”, என்று சுந்தரேஸ்வரர் கோபமாக கேட்க “நீங்க சும்மா இருங்க. நான் அவ கிட்ட பேசிக்கிறேன்”, என்றாள்.
“பெரியம்மா நீங்க தப்பா நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? நான் ஆதி வாழ்க்கையை விட்டு போனாக் கூட அவர் உங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டார்”, என்று உறுதியாகச் சொன்னாள்.
“என்ன டி ரொம்ப திமிரா பேசுற? ஆதி உன்னை விட்டுக் கொடுக்க மாட்டாங்குற தைரியமா? நீ எங்க அண்ணன் பாத்து அவனுக்கு கட்டி வச்ச பொண்ணு. அதான் உன் மேல பாசமா இருக்கான். அதனால நீ அவனை வேண்டாம்னு சொல்லிட்டா எங்க அண்ணன் மனசை மாத்தி நான் அஞ்சனாவை ஆதிக்கு கட்டி வைக்க சொல்வேன். அப்பவும் ஆதி அண்ணன் பேச்சைக் கேட்டு அஞ்சனாவைக் கல்யாணம் பண்ணிப்பான். அதனால நீ டைவர்ஸ் கொடுத்துட்டுப் போயிரு”
“ஹா ஹா, நீங்க நினைக்கிறது ஒரு சதவீதம் கூட நடக்காது. என்னைத் தவிர வேற யாரையும் ஆதி ஏத்துக்க மாட்டார். நான் டைவர்ஸ் தந்தாலும் ஆதி சிங்கிலா தான் இருப்பார்”, என்று கர்வமாகவே சொன்னாள். காதல் தந்த கர்வம் அவள் முகத்தில் மின்னியது.