அத்தியாயம் 13

நெஞ்சுக்குள் மாமழை

பொழிகிறதே பெண்ணே 

காதலென்ற மேகத்தால்!!!

     காலையில் முதலில் கண் விழித்த ஆதி மதியை படுக்கையில் படுக்க வைத்து விட்டு தன்னுடைய வேலைகளைக் கவனித்தான். அவன் கிளம்பி முடித்ததும் தான் அவள் எழுந்தாள். எதுவும் பேசாமல் அவன் கிளம்பிக் கொண்டிருக்க அவள் அவனையே பார்த்தாள். அவன் வேறு ஒரு யோசனையில் இருக்க அவளை கண்டு கொள்ள வில்லை. “உங்க கரிசனம் நைட்டோட முடிஞ்சதா?”, என்று எண்ணிக் கொண்டே குளிக்கச் சென்றாள்.

     அவனும் கிளம்பி கீழே வந்தான். “இன்னைக்கு சீக்கிரம் கிளம்பிட்டியா ஆதி? டிபன் எடுத்து வைக்கவா பா?”, என்று கேட்டாள் தமயந்தி.

     “சரி மா”, என்ற படி சாப்பிட அமர்ந்தான். அவனுக்கு தமயந்தி உணவு பரிமாறிக் கொண்டிருக்க அடுத்து செழியன் கிளம்பி வந்தான். “வா செழியா? சாப்பாடு எடுத்து வைக்கவா, இல்லை டீ குடிக்கிறியா?”, என்று கேட்டாள் தமயந்தி. ஆதி புருவம் ஒரு நொடி உயர்ந்து பின் இயல்பாகியது.

     “டிபனே சாப்பிடுறேன் மா”, என்ற படி அமர்ந்த செழியனுக்கும் பரிமாறினாள். அடுத்து ராயர் எழுந்து வர அவரைக் கவனிக்க பார்வதி மற்றும் சேதுராமனையும் தனித்தனியே கவனித்தாள் தமயந்தி. எல்லாவற்றையும் ஆதி கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

     அப்போது குளித்து கிளம்பி புது மலர் போல கீழே இறங்கி வந்தாள் மதி. அவளை ஒரு பார்வை பார்த்த ஆதி தலை குனிந்து கொண்டான். “இவனுக்கு ரூமை விட்டு வெளியே வந்தா என்னைக் கண்ணே தெரியாது”, என்று எண்ணிக் கொண்டு கீழே நடக்க அவள் வருவதைக் கண்ட தமயந்தி சமையல் அறைக்குச் சென்று விட்டாள்.

     அதைக் கண்ட மதி ஒரு விரக்தி புன்னகையை சிந்தி விட்டு வெளியே போவதற்காக செருப்பை மாட்டினாள். “என்ன மா சீக்கிரம் கிளம்பிட்ட?”, என்று கேட்டார் ராயர்.

     “ஸ்கூல்ல ஒரு வேலை இருக்கு மாமா. நான் வரேன்”

     “சாப்பிடலையா?”

     “பசிக்கலை மாமா. நான் கிளம்புறேன்”, என்றவள் யாரையும் பார்க்காமல் சென்றே விட்டாள். போகும் அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த ராயர் மகனை ஒரு பார்வை பார்த்து விட்டு ஏதோ யோசனையில் இருந்தார். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான் ஆதி. ஆனால் வாயை திறக்கவே இல்லை.

     “ஏதாவது பிரச்சனையா ஆதி உனக்கும் மதிக்கும்?”, என்று அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் முணுமுணுத்தார் ராயர்.

     “இல்லையேப்பா?”

     “நம்ப முடியலையே. மதி முன்ன மாதிரி இல்லை”

     “ஆமா பா முன்ன மாதிரி இல்லை. என்னன்னு கண்டு பிடிக்கிறேன். ஆனா எனக்கும் அவளுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை”, என்றான்.

     அப்போது நந்தினியும் விக்கியும் கல்லூரிக்கு கிளம்பி கீழே வர இருவரையும் தனித்தனியே கவனித்தாள் தமயந்தி. மதியைத் தவிர அனைவரும் அங்கே அமர்ந்திருக்க “அப்பா”, என்று அழைத்தான்.

     “என்ன ஆதி?”

     “நாளைல இருந்து மதி இன்ஸ்டிட்டுசனை பாத்துக்க மாட்டா. அவ வெறும் மேக்ஸ் டீச்சரா மட்டும் தான் இருப்பா. அதுக்கான சம்பளம் மட்டுமே அவ வாங்குவா”, என்று அறிவிப்பாக சொன்னான்.

     அனைவரும் அவனைத் திகைப்பாக பார்க்க “என்ன ஆதி சொல்ற? மதி அப்படி சொன்னாளா? அவ பொறுப்பை தட்டிக் கழிக்கிறவ இல்லையேப்பா? அது அவளுக்காக ஆரம்பிச்சது. அப்படி பாதியிலே விட மாட்டாளே?”, என்று கேட்டார் ராயர்.

     “உங்க மருமகளை நீங்க நல்லா புரிஞ்சி வச்சிருக்கீங்க. ஆனா மத்த யாருக்கும் அவ அருமை தெரியலை. அதனால தான் அவளுக்காக நான் முடிவு எடுக்குறேன். அவளுக்கு நாளைல இருந்து நான் எந்த பிரசரும் கொடுக்க விரும்பலை”

     “என்ன நடந்துச்சுன்னு சொல்லுப்பா”

     “அவளை மனுசியா மதிக்க கூட இந்த வீட்ல உள்ளவங்க தயாரா இருக்கலை? அப்ப அவ மட்டும் எல்லாருக்காகவும் வேலை செய்யணுமா? அப்படி என்ன அவசியம்? எனக்கு தேவை அவளோட நிம்மதி. அவ வேலைக்கு போகணும்னு அவ்வளவு ஆசையா கேட்டா. அதை மட்டும் நிறைவேத்திருந்தா சந்தோஷமா இருந்திருப்பாளா இருக்கும். ஆனா இப்ப ரொம்ப பொறுப்பை சுமந்துகிட்டு கவனிக்க கூட ஆள் இல்லாம இருக்கா”

     “என்னப்பா சொல்ற? யார் அவளை கவனிக்கலை? நந்தினி கல்யாண விசயத்துல நான் அவளைக் கோச்சிக்கிட்டாலும் அப்புறம் அவ கிட்ட நல்லா தானே பேசுறேன்? அவ எனக்கு பொண்ணு மாதிரி டா”

     “நான் உங்களைச் சொல்லலை பா”

     “நேரடியா பேசு ஆதி, யார் மதியை கவனிக்கலை?”

     “யாருமே தான் பா கவனிக்கலை. அவ முந்தா நேத்து நைட் சாப்பிடலை. நேத்து காலைலயும் சாப்பிடலை. நேத்து மதியம் அவ வீட்ல போய் சாப்பிட்டுருக்கா. நைட் பாட்டி அவளை சாப்பிட விடலை. நான் அப்புறம் அவளை சாப்பிட வச்சேன். இப்பவும் சாப்பிடாம தான் போறா”

     “நான் சாப்பிட சொன்னேன் ஆதி. அவ பசி இல்லைன்னு சொன்னாளே?”

     “நீங்க சொன்னீங்க தான். ஆனா சொல்ல வேண்டியவங்க சொல்லலையே? முகத்தை திருப்பிட்டு போனா எப்படிப்பா இந்த வீட்ல சாப்பிடுவா?”

     “யாரைச் சொல்ற நீ?”

     “நான் கீழே வந்தப்ப, செழியன் வந்தப்ப, நீங்க வந்தப்ப, பாட்டி தாத்தா வந்தப்ப சாப்பிட சொன்னவங்க மதிக்கிட்ட பேசாம முகத்தை திருப்பி கிட்டாங்க. அப்புறம் நந்து விக்கி வந்தப்ப சாப்பிடச் சொல்றாங்க. மதியை ஒரு வார்த்தை சாப்பிட சொன்னா என்னவாம் பா? அவ இந்த வீட்டு பொண்ணு இல்லையா? இவங்க வயித்துல பிறந்தா தான் சாப்பிடச் சொல்லுவாங்களா?”, என்று கேட்க அனைவரும் அதிர்ந்து விட்டார்கள்.

     அவன் தமயந்தியை குறை சொல்ல, அதுவும் அம்மா என்ற வார்த்தையைக் கூட சொல்லாமல் அவள் முகத்தையும் பார்க்காமல் குற்றம் சாற்ற தமயந்தி துடித்து விட்டாள். எப்போதுமே என்ன நடந்தாலும் அமைதியாக இருப்பவள் மகனின் பேச்சைக் கேட்டு கண்ணீர் சிந்தினாள்.

     அவளை முறைத்துப் பார்த்த ராயர் “என்ன தமயந்தி இதெல்லாம்?”, என்று கோபமாக கேட்டார்.

     ஏற்கனவே மகனின் கோபத்தில் திகைத்து நின்றவள் இப்போது கணவனும் கோபத்தைக் காட்ட “ஆதி நான்…”, என்று தன்னிலை விளக்கம் சொல்ல வந்தாள்.

     அன்னையைக் கை காட்டி பேச விடாமல் நிறுத்தியவன் “எனக்கு தோணினதைச் சொன்னேன். யாரையும் குறை சொல்றது என்னோட நோக்கம் இல்லை. இந்த வீட்ல அவ யாருன்னு பல தடவை எல்லாருக்கும் சொல்லிட்டேன். ஆனா யாருக்குமே அது புரியலை. பாட்டியும் சரி அம்மாவும் சரி மத்தவங்களும் சரி என் பொண்டாட்டிக்கு என்ன மரியாதைக் கொடுக்குறீங்கன்னு பாத்துக்கிட்டு தான் இருக்கேன். இந்த வீட்ல என்னோட சரி பாதியா இருக்குற என்னோட மனைவிக்கே இந்த நிலைமைனா அவ வயித்துல பிறக்க போற பிள்ளைக்கும் இந்த மதிப்பு தானா? இது தான் இந்த ஆதிக்கான மரியாதையா? வெளிய என்னை ஆயிரம் பேர் கும்பிட்டு மரியாதை கொடுக்குறாங்க. ஆனா வீட்டுக்குள்ள என் பொண்டாட்டிக்கு ஒரு வாய் சோறு போட யாரும் இல்லை. நேத்து பசிக்குதுன்னு அவங்க அப்பா வீட்ல போய் நின்னுருக்கா. நம்ம பெரிய இடம்னு கேள்வி கேக்க முடியாம அந்த மனுஷன் எனக்கு இன்னைக்கு காலைல பதறி போன் பண்ணி என் பொண்ணு எதுக்கு சாப்பிடலைன்னு கேக்குறார். நான் என்ன சொல்லட்டும்? என் பொண்டாட்டிக்கு எங்க வீட்ல யாரும் சோறு போடலை. அதான் அங்க வந்து பிச்சை கேட்டான்னு சொல்லட்டுமா?”, என்று கேட்டான்.

     “ஆதி, என்னப்பா பெரிய வார்த்தை இதெல்லாம்? பிச்சை அது இதுன்னுட்டு…”, என்று அதட்டினார் ராயர்.

     “எனக்கு தெரியலைப்பா. எதுக்கு இப்படி எல்லாம் நடக்குதுன்னு எனக்கு தெரியலை. நந்தினிக்கு ரிஷி மாப்பிள்ளையா வரது மதிக்கு பிடிக்கலை. அதை வெளிப்படையா நம்ம கிட்ட சொன்னா. நாம கேக்கலை. அதனால அவங்க வந்தப்ப அவ வெறுப்பை காட்டினா. அதுக்கு தண்டனையா நீங்க அவளை அவ வீட்ல போய் பேசச் சொன்னீங்க. அவளும் உங்க வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து பேசினா. எந்த தப்பும் செய்யாம உங்க பேச்சுக்கு மதிப்பு கொடுத்து மன்னிப்பும் கேட்டா. கல்யாண பொறுப்பை அவ கிட்ட கொடுத்தீங்க. அவ செஞ்சிட்டு தான் இருக்கா. இதுல அவ தப்பு என்ன இருக்கு? நான் இது வரைக்கும் உங்களை எதுத்து பேசலை. ஏன்னா நீங்க இது வரை என் கண் முன்னாடி எந்த தப்பும் செய்யலை. நீங்க எது செஞ்சாலும் சரியா தான் இருக்கும்னு இத்தனை வருஷம் பாத்ததுல நான் நம்புறேன். நேத்து வந்தவ அவளும் நம்பணும்னு என்ன இருக்கு? உங்களை மதிக்கலைன்னா அவ எப்படி உங்க பேச்சைக் கேட்டு நடப்பா. அவ உங்களை மதிக்கிறதுனால தானே நீங்க சொல்றதை அப்படியே கேக்குறா. சமையல் வேலையும் செஞ்சிட்டு தான் இருந்தா. ஆனா இவங்க வேண்டாம்னு சொன்னதுனால தான் அவ சமையல் செய்ய வரது இல்லை. எனக்கு தெரிஞ்சு அவ எனக்கு நல்லா பொண்டாட்டியாவும் இருக்கா. இந்த வீட்டுக்கு நல்ல மருமகளாவும் இருக்கா. அப்படி இருக்க அவளை இப்படி கஷ்டப் படுத்தினா நான் பாத்துட்டு சும்மா இருக்கணுமா பா?”, என்று ஆதி கேட்க அனைவரும் அவன் பேச்சில் திகைத்து அமர்ந்திருந்தார்கள்.