Advertisement

“நீயெல்லாம் அரக்கன். உனக்கு ஒரு உயிர் போனது எல்லாம் பெரிய விஷயம் இல்லை. இங்க பாரு. நான் பழைய விஷயங்கள் எல்லாத்தையும் மறந்துறேன். நீயும் வேற நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ. நந்துவையும் என்னையும் விட்டுரு. தயவு செஞ்சு என் வாழ்க்கைல இருந்து விலகிரு”

“அதுக்கு நீ அப்பவே விலகிருக்கணும் டி”

“நான் என்ன செஞ்சேன்?”

“நான் தான் முன்னாடியே உனக்கு மெஸ்ஸேஜ் அனுப்புனேன்ல, இந்த கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு. நீ ஏன் கேக்கலை?”

“அடப்பாவி, அப்படின்னா ஆதிக்கு லவ்வர் இருக்குன்னு மெஸ்ஸேஜ் அனுப்பினது நீயா?”

“நானே தான். உனக்கும் அனுப்பினேன். நீ வேற ஒருத்தனை லவ் பண்ணுறேன்னு அவனுக்கும் அனுப்பினேன். ஆனா அந்த லூசு கண்டுக்கலை”, என்று சொல்ல கணவனை எண்ணி கண்கள் பனித்தது அவளுக்கு. தான் அவனை நம்ப வில்லையே என்று வருந்தியவள் “உனக்கு என்ன டா பிரச்சனை? ஏன் என் வாழ்க்கைல இப்படி விளையாடுற?”, என்று கேட்டாள்.

“எனக்கு நீ சந்தோஷமா இருக்க கூடாது அவ்வளவு தான். நீ இவ்வளவு பெரிய வீட்ல மகாராணியா இருக்குறது எனக்கு பிடிக்கலை. அதான் உங்க கல்யாணத்தை நிறுத்த நினைச்சேன். முடியலை. இப்ப உன் சந்தோசத்தைக் கெடுக்கணும். அதுக்கு தான் நந்தினியை பிடிச்சேன். வரேன் டி உன் வீட்டுக்கு. அங்க நானும் ஒருத்தனா வந்து உன்னை ஆட்டிப் படைக்கணும். அந்த மெடிக்கல் காலேஜ் அப்புறம் ஆஸ்பத்திரி ரெண்டும் நந்தினிக்காமே? அங்க வரேன். வந்து உனக்கு ஆப்படிக்கிறேன். அந்த ஆதி கிட்ட இருந்து உன்னை பிரிக்கிறேன். ஒரு பாக்கெட் போதைப் பொருளை வச்சு உன்னை கலங்கடிச்ச எனக்கு உன் மானத்தைக் கப்பலேத்த எவ்வளவு நாள் ஆகும்? என்னையே படுக்க கூப்பிட்டேன்னு சொல்லுவேன் டி”

“சீ”, என்று அருவறுத்துப் போனாள். கூடவே அவனை எண்ணி பயமாகவும் இருந்தது.

“என்ன சீ? எனக்கு ஆசையா இருக்கு டி. உன்னை மிஸ் பண்ணிட்டோம்னு நான் வருந்தாத நாளே இல்லை தெரியுமா? நீ அவ்வளவு அழகு டி. இனி அது என் கைக்குள்ள? கூடவே நந்தினியும் சொத்தும் கிடைக்கும்”

“பொறுக்கி நாயே, நீ நினைக்கிறது நடக்கவே நடக்காது டா”

“ஹா ஹா திட்டிக்கோ செல்லம். நீ திட்டினா எனக்கு ரொம்ப பிடிக்குது. ஆனா இனிமே தான் உனக்கு இருக்கு டி. ஒரே வீட்ல உனக்கு கீழ இருக்குற புளோர்ல தான் நாங்க இருக்கணுமாமே? எந்நேரமும் ஆதி வீட்ல இருப்பானா? நீ மட்டும் தானே மாடில இருப்ப. நான் தாராளமா உன்னோட ரூமுக்கே வருவேன். வந்து….”, என்று சொல்ல பட்டென்று போனை வைத்து விட்டாள்.

போனை வைத்தவளுக்கு உடல் எல்லாம் கம்பளி பூச்சு ஊர்வதைப் போல ஒரு உணர்வு எழ அவசரமாக அறைக்குச் சென்று மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள். அவளை அவளுடைய வேகத்தை அவன் செய்கையை கவனித்துக் கொண்டிருந்த ஆதிக்கு வியப்பாக இருந்தது.

“இப்ப தானே டிரஸ் மாத்திட்டு போனா? அதுக்குள்ள திருப்பியும் போறா”, என்று எண்ணியவனுக்கு அவள் உள்ளே வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது.,

என்ன ஆச்சோ என்று கவலை வந்தது. ஆனால் என்ன செய்ய என்று தெரியலை. வாந்தி சத்தம் நின்றதும் அவள் குளிக்கும் சத்தம் கேட்க அவசரமாக கட்டிலில் கிடந்த அவளது போனைக் கையில் எடுத்தான். அவன் தொட்டதும் அவனது புகைப்படம் அதில் விரிய அவன் முகம் மலர்ந்தது,.

அதை ரசிக்கும் முன்னே அவன் கண் முன்னே ரிஷி என்ற அழைப்பின் ரெக்கார்டிங் கண்ணுக்கு தெரிய “ரிஷி கூடவா இவ்வளவு நேரம் பேசினா? அதை எதுக்கு ரெக்கார்ட் பண்ணினா?”, என்று குழம்பியவன் அவசரமாக நெட் ஆன் செய்து வாட்சப் மூலம் அதை தன்னுடைய எண்ணுக்கு அனுப்பி விட்டு அதில் அனுப்பியதையும் அவளுக்கு தெரியாதவாறு டெலீட் செய்து விட்டு போனை எடுத்த இடத்திலே வைத்தான்.

அவள் குளித்து முடித்து வரும் போது அவன் சாதாரணமாக இருக்க “இவனுக்கு எனக்கு என்ன ஆனாலும் கவலை இல்லையா? அப்படின்னா இத்தனை நாள் என் கிட்ட நடந்துக்கிட்டது எல்லாம் சும்மாவா? இல்லை இவன் மனசுல இருந்த காதலை என்னோட செய்கைகள் அழிச்சிருச்சா? இவன் என்னை ஏத்துக்கவே மாட்டானா”, என்று எண்ணி அழுகையாக வந்தது.

கோபத்தையும் அழுகையையும் அவனுக்கு காட்ட மனதில்லாமல் அவனுக்கு முதுகு காட்டி படுத்து விட்டாள். அவள் சாப்பிடாமல் கலங்கி போய் படுத்திருப்பது புரிந்தாலும் அவனுக்கு என்ன செய்ய என்று தெரிய வில்லை. அவளை இறுக அணைத்து உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு அவளுக்கு உணவு ஊட்ட ஆசையாக இருந்தது.

ஆனால் அதைச் செய்ய முடியாமல் தவித்தான். ஆனாலும் மனது கேட்காமல் “எந்திச்சு சாப்பிட்டு படு மதி”, என்றான்.

ஏற்கனவே கோபத்தில் இருந்தவள் அவன் பக்கம் திரும்பி “ரொம்ப தான் அக்கறை. நான் நேத்து நைட்ல இருந்து இந்த வீட்ல சாப்பிடலை. மதியம் அப்பா வீட்ல சாப்பிட்டது. இப்ப உங்க பாட்டி பேசின பேச்சுல வயிறு நிறைஞ்சிருச்சு. நீங்க ஒண்ணும் அக்கறை இருக்குற மாதிரி நடிக்க வேண்டாம். எப்பவும் போல உங்க வேலையைப் பாருங்க. நான் சாப்பிட்டா உங்களுக்கு என்ன? சாப்பிடாட்டி உங்களுக்கு என்ன?”, என்று கோபமாக கண்ணீருடன் கேட்டவள் மீண்டும் படுத்து விட்டாள்.

“நேத்து நைட்டும் இன்னைக்கு காலைலயும் சாப்பிடலையா? அம்மா இவளை சாப்பிடச் சொல்லலையா? இதோ இப்ப கூட யாரும் அவளைச் சாப்பிட சொல்லலையே? அம்மா எனக்கு தானே சாப்பாடு கொடுத்து விட்டுருக்காங்க? இது தான் நான் என் மனைவிக்கு செய்யுற மரியாதையா? இவளை இப்படி கஷ்டப் படுத்தவா இவளை என் வீட்டுக்கு கொண்டு வந்தேன். நான் தப்பு பண்ணுறேன். பெரிய தப்பு பண்ணுறேன். என் மதி பொய் சொல்ல மாட்டா. அவ சொல்றதுல ஏதோ விஷயம் இருக்கு. என்னமோ இருக்கு. இதைக் கண்டு பிடிக்கணும். கண்டு பிடிச்சே தீரனும். இதுல அசால்ட்டா இருந்தா மதியும் சந்தோஷமா இருக்க மாட்டா. நந்தினி வாழ்க்கையும் எப்படி இருக்குமோன்னு பயமா இருக்கு. நான் ஒரு நல்ல அண்ணனா இதைச் செய்யனும். மதி எதையும் சொல்ல மாட்டிக்கா. அப்படின்னா அவளால சொல்ல முடியாத விஷயத்தை அந்த ரிஷி பண்ணிருக்கணும்”, என்று எண்ணமிட்டவன் எழுந்து சென்று உணவை எடுத்தான்.

மனைவியிடம் ஈகோ பார்க்கும் ரகம் அவன் இல்லையே? படிக்கும் பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டாம் என்றும் ரிஷியுடன் காலேஜில் வைத்து சண்டை போட்டிருப்பாள் என்பதால் தான் அவள் திருமணத்தை தடுக்கிறாள் என்று இது வரை எண்ணியவன் இப்போது அதில் வேறு எதுவோ இருக்கிறது என்று உணர்ந்து அவளை சமாதானப் படுத்த எண்ணினான். உணவுத் தட்டை எடுத்துக் கொண்டு கட்டிலில் அவள் அருகே அமர அவள் கண்களைத் திறந்து அவனைப் பார்த்தாள்.

“எந்திரி மதி வா சாப்பிடு”, என்று சொல்லிக் கொண்டே அவன் இட்லியை பிய்க்க “எனக்கு ஒண்ணும் வேண்டாம். அது உங்களுக்கு உங்க அம்மா கொடுத்தது”, என்றாள்.

“நான் கீழயே மூணு சப்பாத்தி சாப்பிட்டேன். இது உனக்காக அம்மா கொடுத்தது. வா சாப்பிடு”

“பொய், அதான் வேலைக்காரி சொன்னாளே நீங்க சரியா சாப்பிடலைன்னு”

“இல்லை மதி, எனக்கு மட்டும்னா எதுக்கு ஏழு இட்லி கொடுத்து விடுறாங்க? இது உனக்கு தான். எழுந்து உக்காரு நான் ஊட்டுறேன்”, என்று சொல்ல எழுந்து அமர்ந்தவள் அவனையே வியப்பாக பார்த்தாள்.

அவன் உணவை அவளுக்கு ஊட்ட கண்கள் கலங்க அதை வாங்கிக் கொண்டாள். “ப்ச் இப்ப எதுக்கு இப்படி ஒரு அழுகை. பாத்ரூம்ல வாமிட் சத்தமும் கேட்டுச்சு. உடம்புக்கு ஏதாவது பண்ணுதா?”, என்று அக்கறையாக கேட்டவன் மேலும் ஊட்ட அவள் அழுகை கூடியது.

“என் மதி எப்பவும் போல்டா தானே இருப்பா? இப்ப என்ன பலவீனமா அழுத்துட்டு இருக்க”, என்று கேட்ட படி அடுத்த வாயை ஊட்டினான்.

அமைதியாக சிறு குழந்தை போல அவள் சாப்பிட இவளா தன் தந்தையிடம் அப்படி தைரியமாக பேசுவது? அவ்வளவு பெரிய கல்விக் குழுமத்தையே நிர்வகிப்பது என்று வியப்பாக இருந்தது அவனுக்கு.

“மதி”

“ஆன்”

“உனக்கு என்ன பிரச்சனை? என் கிட்ட சொல்லக் கூடாதா?”

“எனக்கு என்ன பிரச்சனை? எனக்கு ஒண்ணும் இல்லை. நீங்க தான் என்னை விட்டு விலகி விலகி போறீங்க?”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கியது.

“என்ன டா இதெல்லாம்? ஏன் எதுக்கு எடுத்தாலும் அழுற? நான் உன்னை விட்டு எங்க போவேன் சொல்லு? முதல்ல அழுறதை நிறுத்து. எனக்கு கஷ்டமா இருக்கு”

“எனக்கும் நான் ஏன் அழுறேன்னு தெரியலை. ஆனா அழனும் போல இருக்கு”, என்று அவள் சொல்லும் போதே கடைசி வாயை அவளுக்கு ஊட்டி முடித்திருந்தவன் எழுந்து கை கழுவி விட்டு தட்டையும் கழுவி விட்டு வந்தான்.

அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க “என்ன மா?”, என்ற படி அவள் அருகே அமர்ந்தான். அடுத்த நொடி அவன் மடியில் தலை வைத்து படுத்தாள். வியப்பாக அவளைப் பார்த்தவன் அவள் தலையை வருடி விட்டான்.

“நீங்க என்ன தான் என் மேல கோபப் பட்டாலும் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் தெரியுமா?”, என்று கேட்டவளின் கை அவனை இடையோடு கட்டிக் கொண்டது.

அவளது நெருக்கத்தில் அவன் கொஞ்சம் தடுமாறினாலும் சற்று நேரத்தில் சமாளித்தவன் “எதையும் யோசிக்காத தூங்கு. எப்பவும் நான் உன் கூட தான் இருப்பேன்”, என்ற படி அவள் தலையை கோதிக் கொடுத்தான்.

சில நாட்களாக வராத தூக்கம் இன்று அவளுக்கு இயல்பாகவே வந்தது. அரைத் தூக்கத்தில் அவள் இருக்க தூங்கி விட்டாள் என்று எண்ணி “எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும் டி”, என்றான்.

“எனக்கு தெரியும்”, என்று அவள் தூக்கத்தில் உளற அவன் உதடுகள் மலர்ந்தது. அவள் நல்ல உறக்கத்தில் இருக்க அவன் சிரிப்புடன் மனைவியை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

நேரம் ஆக ஆக கால் வலி எடுத்தாலும் எங்கே தான் அசைந்தால் அவள் விழித்து விடுவாளோ என்று எண்ணி அசையாமல் அமர்ந்திருந்தவன் அப்படியே கட்டிலில் சாய்ந்து அமர்ந்த படி தூங்க ஆரம்பித்தான். அவள் அருகாமையில் அவனுக்கும் நன்றாக தூக்கம் வந்தது.

காதல் தொடரும்…. 

Advertisement