Advertisement

அனைவரும் திகைத்து விழிக்க ஆதி “ப்ச்”, என்ற சலிப்புடன் பாட்டியை முறைக்க பார்வதியை உக்கிரமாக முறைத்த மதி “பாட்டி வார்த்தையை கொஞ்சம் யோசிச்சு பேசுங்க. யாரும் எனக்கு பிரண்டு கிடையாது. அப்படி புதுப்பிக்கிற அளவுக்கு அவன் கூட பிரண்ட்ஷிப் எனக்கு அவசியமும் கிடையாது. நிச்சயதார்த்த மோதிரம் வாங்குறது பத்தி கேக்க தான் அவன் நம்பர் கேட்டேன்”, என்று பட்டென்று சொன்னாள். ஏனென்றால் பேஸ்புக்கில் இருந்து எடுத்த எண்ணுக்கு அவள் அழைத்த போது அது உபயோகத்தில் இல்லை என்று வந்தது.

“நான் ரிஷி நம்பரையும் உனக்கு அனுப்புறேன் மா”, என்றார் ராயர்.

“வேண்டாம் மாமா, நான் கோமளா அம்மா கிட்ட கேட்டுக்குறேன். அவங்க நம்பர் மட்டும் அனுப்புங்க”, என்றவள் தமயந்தி புறம் திரும்பி “சாரி அத்தை, பிளீஸ் நீங்க பாத்துக்கோங்க. எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது”, என்று சொன்னவள் யார் முகத்தையும் பார்க்காமல் அங்கிருந்து சென்று விட்டாள்.

“அம்மா நீங்க பேசுறது கொஞ்சம் கூட சரியில்லை. மதியைப் பத்தி இப்படி பேசுறது ஆதியை எவ்வளவு கஷ்டப் படுத்தும்னு உங்களுக்கு புரியுதா?”, என்று கேட்டார் ராயர்.

“எல்லாரும் அவளுக்கே சப்போர்ட் பண்ணி பேசுங்க. அவ சரியான திமிர் பிடிச்சவ. இப்ப கூட எப்படி போறா பாரு. என் பேத்தி கல்யாணத்தை வேற நிறுத்த பாக்குறா. எனக்கு எப்படி அவ மேல நல்ல அபிப்ராயம் வரும்?”, என்று கேட்டாள் பார்வதி.

“அதுக்கு இப்படி பேசுவீங்களா? மதிக்கு ஏனோ ரிஷியை பிடிக்கலை. காலேஜ் படிக்கிறப்ப நல்ல சண்டை போட்டுருக்காங்க போல? அதான் அவ அப்படி பேசுறா. அவ மாப்பிள்ளையை பிடிக்கலைன்னு சொல்லிக்கிட்டு இருக்கா. நீங்க எப்படி ரிஷி கூட பிரண்ட்ஷிப்பை புதுப்பிக்க போறான்னு பேசுறீங்க? அது அவ கேரெக்டரை குறைச்சு பேசுறதுன்னு உங்களுக்கு புரியலையா? அதுவும் அவ புருஷன் முன்னாடியே? அவளைக் காயப் படுத்துறதா நினைச்சு நீங்க ஆதியைக் காயப் படுத்துறீங்க”, என்று சொல்ல அனைவரும் ஆதியைப் பர்த்கார்கள்.

“விடுங்கப்பா. சில பேருக்கு என்ன சொன்னாலும் புரியாது. வயசு ஆக ஆக அறிவும் தெளிவும் வரும்னு தான் கேள்விப் பட்டிருக்கேன். இங்க தான் உல்டாவா இருக்கு”, என்று பாட்டியை ஜாடை மாடையாக திட்டி விட்டு சாப்பிடாமலே எழுந்து சென்று விட்டான் ஆதி. பேரனின் பேச்சில் பார்வதி விக்கித்துப் போய் அமர்ந்திருந்தாள்.

“அத்தை அவளை பிடிக்கலைன்னா பேசாம இருங்க. ஆனா ஏதாவது சொல்லி எல்லாரையும் கஷ்டப் படுத்தாதீங்க. பாருங்க ஆதி சாப்பிடாமலே போய்ட்டான். மதியும் சாப்பிடலை”, என்றாள் தமயந்தி.

“விடு தமா. எங்க அம்மாவுக்கு இன்னும் என் மகன் மருமகளோட மதிப்பு தெரியலை. நீ அவங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடை அவங்க புளோர்க்கு கொடுத்து அனுப்பு”, என்று சொல்லி விட்டுச் சென்றார் ராயர்.

அதற்கு பின் உணவு வேளை அமைதியாகவே கடந்தது.  ஆதி அறைக்குள் சென்ற போது தலையை பிடித்த படி அமர்ந்திருந்தாள் மதி. அவன் சென்று ஏதாவது சமாதானப் படுத்துவான் என்று எதிர் பார்த்தாள் போலும். அவன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு போனை பார்க்க ஆரம்பித்து விட்டான்.

“அடப்பாவிகளா ஒருத்தருக்கும் என்னைப் பத்தி அக்கறை இல்லையா?”, என்று எண்ணி அவள் கண்கள் கூட கலங்கியது. அப்போது கதவை தட்டிய வேலைக்காரி “ஐயா பெரியம்மா சாப்பாடு கொடுத்து விட்டாங்க. நீங்க பாதியில் வந்துட்டீங்களாம்? சாப்பிடுங்க”, என்றாள்.

“அங்க வச்சிட்டு போங்க”, என்றான்.

“அதானே இவனுக்கு தான் கொடுத்துருக்காங்களா? நான் கூட ஒரு நிமிஷம் எனக்கோன்னு நினைச்சிட்டேன்”, என்று வேதனையாக எண்ணிக் கொண்டாள். ஆனால் தமயந்தி இருவருக்கும் தான் கொடுத்து விட்டிருந்தாள்.

அவனாவது தன்னை சாப்பிடச் சொல்வான் என்று பார்க்க அவனோ அவள் புறம் திரும்பவே இல்லை. அப்போது அவளது போன் வாட்சப் சத்தம் கொடுக்க அதில் ரிஷியின் வீட்டில் உள்ள அனைவரின் நம்பரையும் அனுப்பி இருந்தார் ராயர். அதில் ரிஷியின் நம்பரும் இருக்க அதை கண்கள் மின்னப் பார்த்தாள். இன்னைக்கு இவன் கிட்ட பேசணும் என்று முடிவு எடுத்தாள்.

பின் நைட்டியை எடுத்துக் கொண்டு பாத்ரூம் சென்று உடை மாற்றி வந்தவள் போனை எடுத்துக் கொண்டு நீச்சல் குளத்துக்கு வந்தாள். அந்த இடத்தைப் பார்த்ததும் கணவனை எண்ணி கண்கள் கலங்கியது. இந்த இடத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த தருணங்கள் அனைத்தும் நினைவில் வந்தது.

அப்படி கொஞ்சியவனுக்கு இப்போது என்ன ஆனது? அவங்க அப்பாவை எதிர்த்து பேசினதுக்கு இப்படி எல்லாம் கஷ்டப் படுத்துவானா என்று குழம்பியவள் கால்களை மட்டும் நீருக்குள் விட்டு அமர்ந்தாள்.

பின் போனில் ரிஷியின் எண்ணுக்கு அழைக்க நினைக்கும் போது அவனது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. ஒரு நொடி திகைத்தாலும் அவன் அழைப்பை ஏற்றவள் அப்படியே ரெக்கார்டிங் கால் ஆப்ஸனையும் கொடுத்து விட்டு “ஹலோ யாரு?”, என்று தெரியாதது போலவே கேட்டாள்.

“என்ன மேடம் யாருன்னு கேக்குறீங்க? என் நம்பர் உன் கிட்ட இல்லையா? சோ சேட். உன்னோட எவ்வளவு பெரிய வில்லன் நான்? என்னோட நம்பர் உன் கிட்ட இல்லையா?”, என்று நக்கலாக கேட்டான் ரிஷி.

“நீயெல்லாம் வில்லனா? உன்னை வில்லன்னு சொல்லி வில்லனைக் கேவலப் படுத்தாதே. என்ன விஷயமா கால் பண்ணின? அதைச் சொல்லு”, என்று எரிச்சலுடன் சொன்னாள்.

“அடுத்தவங்களைப் பொறுத்த வரை நிச்சயதார்த்த மோதிரம் வாங்கப் போறதைப் பத்தி பேசுறதுக்கு. ஆனா நான் கால் பண்ணினது நம்மளை பத்தி பேசுறதுக்கு?”

“நானே உன் கிட்ட பேசணும்னு நினைச்சேன். உன்னை தனியா சந்திக்கணும். எங்க வரணும்னு சொல்லு”, என்று கேட்டாள் மதி.

“ஏய் என்ன என்னை தனியா மீட் பண்ணி என்னை சிக்க வைக்க ஏதாவது பிளான் பண்ணுறியா? நந்தினி கூட கல்யாணம் முடியுற வரைக்கும் நான் அடக்கி தான் வாசிக்க போறேன். இதை நீ ரெக்கார்ட் பண்ணினாலும் இது என் குரல் இல்லைன்னு சொல்லிருவேன். நாம போன்லே நம்மளைப் பத்தி பேசலாமா?”, என்று கேட்டவன் சிரித்தான்.

அவள் போட்ட பிளான் எல்லாம் சொதப்பியதால் எரிச்சலுடன் “நம்மளை பத்தி பேசுறதுக்கு என்ன டா இருக்கு இடியட்? நீ என்னோட ஜென்ம எதிரி”, என்றாள்.

“ஹா ஹா இந்த ஜென்ம எதிரியோட கல்யாணத்துக்கு தான் மாங்கு மாங்குன்னு நீ வேலை பாக்குற? எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு டி உன்னை நினைச்சா?”

“எல்லாம் என் தலையெழுத்து. ஆனா ஒரு நாள் மாட்டாமலா போவ?”

“நான் மாட்ட மாட்டேன். ஆனா உன்னை விட மாட்டேன். இனிமே தான் உனக்கு இருக்கு டி. நந்தினியை கல்யாணம் பண்ணிட்டு உன் வீட்டுக்குள்ள வருவேன். உன் புளோர்க்கே வருவேன். அங்க நீச்சல் குளம் இருக்காமே? அங்க நீயும் நானும் குளிச்சா எப்படி இருக்கும்?”

“செருப்பு பிஞ்சிரும். நீ நந்தினியைக் கல்யாணம் பண்ணினா நான் உனக்கு கூட பிறந்தவ முறை வரும் டா அறிவு கெட்டவனே?”

“முறையோட இருக்குறதுக்கு நம்ம காதல் என்ன புனிதமா? கள்ள காதல் டி. அதைச் சொல்லும் போதே எனக்கு கின்னுன்னு இருக்கு”

“அப்படி என் கிட்ட வந்தா உன்னைக் கொல்லுவேன். இல்லன்னா நானே செத்துருவேன் டா. ஆனா உன் ஆசைக்கு எல்லாம் மசிய மாட்டேன்”

“நீ எப்ப வேணும்னாலும் செத்துப் போ. ஆனா அதுக்கு முன்னாடி ஒரு நாளாவது என் கூட வாழ்ந்துட்டு போயிரு”

“நீ ரொம்ப பேசுற ரிஷி. நீ ராயர் மாமாவையும் ஆதியையும் குறைச்சு எடை போடுற? அவங்களுக்கு உன் மேல சந்தேகம் வந்தது உன் உயிருக்கு உத்திரவாதம் இல்லை”

“அவனுங்க என்ன பெரிய இவங்களா? என்னை அவனுங்களால ஒண்ணும் செய்ய முடியாது. நீ தான் என் கிட்ட கேவலமா நடந்துக்குறேன்னு நம்ப வைப்பேன் டி. என்னால முடியும்”, என்று அவன் சொல்ல திக்கென்று இருந்தாலும் “முடியாது. என்னைப் பத்தி தப்பா சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க”, என்றாள்.

“சொல்ற மாதிரி சொல்லணும் டி. இன்னும் உனக்கு என்னைப் பத்தி தெரியலை. அதுவும் இன்னைக்கு நடந்ததைப் பாத்துட்டும் இப்படி என்னை ஈஸியா நினைக்கிற பாத்தியா?”

“இன்னைக்கா? இன்னைக்கு என்ன நடந்தது?”

“இன்னுமா உனக்கு புரியலை அது என் வேலைன்னு? சூப்பரா தான் பிளான் பண்ணினேன். ஆனா ஏதோ சொதப்பிருச்சு. இந்நேரம் நீ கம்பி எண்ணிட்டு இருப்பேன்னு நினைச்சேன். மிஸ் ஆகிருச்சு”, என்று சொல்ல அதிர்ந்து போனாள்.

“ஏய் அது உன் வேலையா?”, என்று அவள் அதிர்ச்சியாக கேட்க

“பின்ன உனக்கு வேற யார் எதிரியா இருக்க போறாங்க? என்னைத் தவிர”, என்று கேட்டான்.

“யு இடியட். அது எவ்வளவு பெரிய இஸ்ஸு தெரியுமா டா? டிரக் கேஸ்ல மாட்டினா என் வாழ்க்கையே போயிருக்கும்”

“எனக்கு சின்ன விஷயம் தான். என்னை சஸ்பென்சன் வாங்க வச்சு கேவலப் பட வச்சியே? அதை விட இது பெரிய விஷயம் இல்லை”

“உனக்கு எது தான் பெரிய விஷயம்? கொலை செஞ்சவனுக்கு இதெல்லாம் சின்ன விஷயம் தான்”, என்று அவள் சொல்ல “ஓ, உனக்கு தெரிஞ்சிருச்சா? ஆனா அவளா சூசைட் பண்ணினா அதுக்கு நானா பொறுப்பு? ஒரு நாள் படுத்துட்டு பிள்ளை வந்துருச்சு, கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னா. முடியாதுன்னு சொன்ன உடனே போய் செத்துட்டா? நான் என்ன செய்ய?”, என்று கடுப்புடன் கேட்டான்.

Advertisement