Advertisement

அத்தியாயம் 12

காதல் ஒரு வதைபடலம் தான் 

வாழ்வென்னும் காப்பியத்தில்!!!

கல்லூரியில் அமர்ந்திருந்த மதிக்கு அன்று நடந்த நிகழ்வுகளே மனதில் ஓடியது. கோர்ட் கேஸ் என்று அலையும் நிலைக்கு ராயரும் ஆதியும் விட மாட்டார்கள் என்றாலும் ராயரின் மருமகள் போதைப் பொருள் வழக்கில் கைது என்றல்லவா வந்திருக்கும்? அதை நினைக்கையில் திக்கென்று இருந்தது.

நந்தினி திருமண விஷயம், ரிஷி என்ன குடைச்சல் கொடுப்பானோ என்ற சிந்தனை, ஆதியின் கோபம், போதைப் பொருள் விஷயம், இன்னும் என்ன ஆகுமோ என்ற பயம் என அனைத்தும் சேர்ந்து அவளை அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாக்கியது. இதற்கு மேல் இங்கே இருந்தால் தலை வலி தான் வரும் என்று எண்ணி அறையை விட்டு வெளியே வந்தாள்.

அப்போது அங்கே வந்த பிரின்சிபால் “அந்த பசங்க கிட்ட விசாரிச்சேன் மேம். அந்த பசங்க ரொம்ப நாளா போதைப் பொருள் பயன்படுத்திருக்காங்க. இன்னைக்கு உங்க பேக்ல போதைப் பொருளை வச்சவங்க கிட்ட தான் அவனுங்க அதை வாங்குவாங்களாம். அவங்க நம்ம காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் இல்லை. இந்த நாலு பசங்களை வச்சு அவங்களை பிடிக்க போலீஸ் பேசிட்டு இருக்காங்க. அவங்க பேரண்ட்ஸ் கிட்ட பேசிட்டேன். அப்புறம் அவங்க தெளிவானதும் அவங்களுக்கு டி. சி கொடுக்கச் சொல்லி ஆதி சார் சொல்லிட்டு போனாங்க. உங்க கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்க சொன்னாங்க”, என்றார்.

“டி சி கொடுத்துருங்க சார். இந்த மாதிரி பசங்க இங்க இருந்தா என்னும் எத்தனை பிரச்சனை வருமோ? ஆனா டி.சில ரிமார்க்ஸ் எதுவும் எழுத வேண்டாம். குட்ன்னு போட்டுருங்க. வேற எங்கயாவது போய் படிச்சிக்கட்டும். இப்படிப் பட்டவங்களை வெளிய அனுப்பினா தான் மத்த பசங்களும் தப்பு பண்ண மாட்டாங்க. அப்புறம் சார், எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது. நான் வீட்டுக்கு கிளம்புறேன். ஏதாவது அர்ஜண்ட்னா எனக்கு கால் பண்ணுங்க. அப்புறம் சரியான நேரத்துல ஆதிக்கு கால் பண்ணிச் சொன்னதுக்கு தேங்க்ஸ். அவங்க இல்லைன்னா நாம திணறிருப்போம்”

“ஆமா மேம், எனக்கும் முதல்ல கையும் ஓடலை காலும் ஓடலை. அப்புறம் ஆதி சார் தான் என்ன பிரச்சனை வந்தாலும் சொல்லச் சொன்னாங்கன்னு நினைவு வந்துச்சு. உடனே சொல்லிட்டேன். சரி மேம். நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க. இங்க நான் பாத்துக்குறேன்”, என்று சொல்ல அவளும் கிளம்பினாள்.

“எனக்கு ஒரு பிரச்சனைன்னா ஆதிக்கு கால் பண்ணணும்னு பிரின்சிபால்க்கு தோணிருக்கு. ஆனா எனக்கு ஏன் தோணலை?”, என்று தன்னை தானே கேள்வி கேட்டவள் “அதிர்ச்சியில் ஒண்ணுமே ஓடலை. இதுல எப்படி அவனுக்கு கால் பண்ணிருப்பேன். இருந்தாலும் என் புருசன் சூப்பர் ஹீரோ தான்”, என்று சிரிப்புடன் எண்ணிக் கொண்டாள்.

அவனைப் பற்றி எண்ணியதும் அவள் தலை வலி கூட தூரம் போனது. அவனது அருகாமைக்காக அவள் மனது ஏங்கியது. மனம் அவன் நினைவில் கொஞ்சம் உல்லாசமாக இருக்க தந்தையைக் காணச் செல்லலாம் என்று எண்ணி அவளது வீட்டுக்குச் சென்றாள்.

தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பரமசிவத்துக்கு காரில் இருந்து மகள் கம்பீரமாக இறங்குவதைப் பார்த்து சந்தோஷமாக இருந்தது. எல்லா பெற்றோர்களும் வேண்டுவது பிள்ளைகளின் இப்படி பட்ட வாழ்க்கையை தானே?

“வா டா பாப்பா. நல்லா இருக்கியா?”

“நல்லா இருக்கேன் பா”

“மாப்பிள்ளை வரலையா?”

“அவர் வேலையா இருக்கார் பா. எனக்கு தான் உங்களைப் பாக்கணும் போல இருந்துச்சு. அதான் வந்தேன்”

“உள்ள வா டா”

“அப்பா, பசிக்குது பா. ஏதாவது இருக்கா?”, என்று அவள் கேட்க திகைத்துப் போனார்.

அடுத்து ஒன்றும் கேட்காமல் “உள்ள வா”, என்று சொல்லி அழைத்துச் சென்றவர் அவளுக்கு சாப்பாடு தர ஆனந்தமாகவே உண்டாள். அவளைக் கனிவுடன் பார்த்தவர் “என்ன டா ஏதாவது பிரச்சனையா?”, என்று கேட்டார்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லைப்பா. சும்மா தலைவலி”

“டீச்சர் வேலை பாத்தாலே தலை வலி வரும். நீ மேனேஜ்மென்ட்டையே பாத்துக்குற? உனக்கு தலைவலி வராம இருந்தா தான் அதிசயம். சரி சாப்பிடு”, என்று சொல்லி அவளை நிறைவாக சாப்பிட வைத்தார்.

தந்தையின் கையினால் உணவு உண்டு விட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள். “மதி நீ நல்லா தானே இருக்க? உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே?”, என்று அவர் கலக்கமாக கேட்க ஒரு நொடி அதிர்ந்தாலும் “நான் நல்லா தான் பா இருக்கேன். கொஞ்சம் வொர்க் டென்ஷன் மட்டும் தான். நீங்க ஏன் அப்படிக் கேக்குறீங்க?”, என்று கேட்டாள்.

“இல்லை, அன்னைக்கும் அழுதியா? இப்ப பசிக்குதுன்னு சொன்னியா? அதான்”

“அப்பா, அன்னைக்கு ரொம்ப நாள் கழிச்சு உங்களைப் பாத்ததும் அப்படி ஆச்சு. இன்னைக்கு உங்க கையால சாப்பிடணும் போல இருந்துச்சு. அதான் வெளிய சாப்பிடாம வந்தேன்”, என்று சொல்லி சமாளித்தாள்.

தந்தைக்கு விஷயத்தைச் சொல்லி அவர் நிம்மதியை ஏன் கெடுக்க வேண்டும் என்று எண்ணி தான் அதை மறைத்தாள். சிறிது நேரம் அவரிடம் பேசி விட்டு தன்னுடைய வீட்டுக்கு வந்தாள். அவள் வந்ததும் ஹாலில் அமர்ந்திருந்த பார்வதி முகத்தை திருப்ப தமயந்தியோ ஒரு வார்த்தை கூட சாப்பிடுறியா என்று கேட்காமல் டி‌வியில் அழ்ந்திருந்தாள். மதி வந்தது தெரிந்தும் அவள் புறம் திரும்பக் கூட இல்லை.

பார்வதியின் செய்கையை விட தமயந்தியின் பாரா முகம் தான் மதிக்கு கஷ்டமாக இருந்தது.

“என்ன இருந்தாலும் மாமியார் அம்மா ஆக முடியாது தானே?”, என்று எண்ணியவள் அவர்களை கண்டு கொள்ளாமல் லிஃப்டுக்குள் புகுந்தாள்.

“பாத்தியா ரெண்டு பேரையும் கண்டுக்காம எப்படி திமிரா போறான்னு? உடம்பு முழுக்க திமிர். எல்லாம் நீயும் உன் புருசனும் கொடுக்குற செல்லம்”, என்று பார்வதி சொல்ல தமயந்தி எதுவும் சொல்ல வில்லை.

மதி திமிர் பிடித்தவள் எல்லாம் இல்லை. ஆனால் யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரியாத முந்திரி கொட்டை என்ற எண்ணம் தான் தமயந்திக்கு. கணவனை எதிர்த்து பேசி மகளின் திருமணத்துக்கு தடை விதிக்கிறாளே என்ற கோபம் தானே ஒழிய அவள் மேல் தமயந்திக்கு வெறுப்பு எதுவும் இல்லை.

“என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்? நீ அமைதியா இருக்க?”,. என்று கேட்டாள் பார்வதி.

“பொண்ணுங்களுக்கு திமிர் அழகு தான் அத்தை. என் மருமக அழகும் கம்பீரமும் நிறைஞ்சவ. ஆதிக்கு பக்கத்துல நிக்குறதுக்கு இவளை விட்டா வேற யார் சரியா இருப்பா? என்ன இருந்தாலும் உங்க மகனுக்கு ரசனை அதிகம் தான். எப்பேற்பட்ட மருமகளை மகனுக்கு பாத்திருக்கார்”, என்று பெருமையாக சொல்ல கழுத்தை நொடித்துக் கொண்டாள் பார்வதி.

அன்று இரவு வந்தது. எப்போதும் போல் அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தார்கள். மதியும் தமயந்தியும் அமைதியாக பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.

மதி இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து இப்படி ஒரு அமைதி இருக்காது. “மாமா சப்பாத்தி வேணுமா? நந்து இன்னும் ஒண்ணு வச்சிக்கோ. செழியன் உங்களுக்கு ஒண்ணு வைக்கிறேன். டேய் விக்கி நல்லா மென்னு சாப்பிடு. தாத்தா உங்களுக்கு வெண்ணி ஆர வச்சிருக்கேன். பாட்டி உங்களுக்கு என்ன வேணும்?”, என்று எல்லாரிடமும் ஏதாவது கேட்ட படி பரிமாறுவாள். ஆதியிடம் ஒன்றும் கேட்காமல் போனாலும் அவன் தட்டைப் பார்த்து பார்த்து பரிமாறுவாள். ராயர் ஏதாவது கேட்டால் பதில் சொல்லுவாள். அதனால் சாப்பிட்டு முடிக்கும் வரை அங்கே அவள் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கும். அவள் சத்தம் கேட்டாலே ஒரு உயிர்ப்பு அந்த இடத்தில் இருக்கும்.

இப்போது மற்றவர்கள் என்ன கேட்கிறார்களோ அதை மட்டும் எடுத்துக் கொடுத்துக் கொண்டு அமைதியாக இருந்தாள். அவள் அமைதியில் ஏனோ வீடே களை இழந்தது போல இருந்தது ராயருக்கு.

“அம்மாடி மதி”, என்று அழைத்தார் ராயர்.

“மாமா”

“ஏதாவது பிரச்சனையா?”

“இல்லையே மாமா?”

“அப்புறம் ஏன் டல்லா இருக்க?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை மாமா. நான் நல்லா தான் இருக்கேன்”

“சரி மா, நிச்சயதார்த்த வேலை எப்படி போகுது?”

“நல்லா போகுது மாமா. கேட்டேரிங்க்கு சொல்லிட்டேன். அட்வான்ஸ் கொடுத்துட்டேன். நீங்க யார் யாரைக் கூப்பிடணும்னு லிஸ்ட் கொடுத்தா நான் அவங்க கூட போய் அழைச்சிருவேன். அப்புறம் நந்தினிக்கு தேவையான எல்லா ஏற்பாட்டையும் அத்தையும் அஞ்சுவும் பாத்துக்குறேன்னு சொல்லிட்டாங்க”, என்று இயந்திர தனமாய் பதில் சொன்னாள்.

அதை ஆதி கவனித்துக் கொண்டு தான் இருந்தான். ஆனால் எதுவும் பேச வில்லை. “சரி மா, ரொம்ப சந்தோஷம். அப்புறம் ஏதாவது தேவையா, இல்லைன்னா ஏதாவது செய்யனுமான்னு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட கேட்டுக்கோ. நான் சம்பந்தி அம்மா நம்பரையும் உனக்கு அனுப்புறேன்”, என்றார்.

“ரிஷி நம்பரையும் அனுப்புங்க மாமா”, என்று அவள் சொல்ல “மாப்பிளை நம்பர் உனக்கு எதுக்கு? பழைய பிரண்ட்ஷிப்பை புதுப்பிக்க போறியா?”, என்று பட்டென்று கேட்டாள் பார்வதி.

Advertisement