Advertisement

     “அவன் தான் ஏதோ செஞ்சிருக்கணும். அந்த பையன் எந்த கிளாஸ்? எந்த இயர்? எந்த டிப்பர்ட்மெண்ட்? சொல்லு வான்மதி உடனே விசாரிக்கணும்”

     “நான் வேற ஒரு டென்ஷன்ல இருந்ததுனால அவனைப் பத்தி கேக்கலை?”, என்று அவள் சொல்ல “உங்களுக்கு என்ன டென்ஷன் மேம்?”, என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

     “அது என் பெர்சனல்”, என்று மதி சொல்ல “சார் எனக்கு என்னமோ உங்க மனைவி மேல தான் சந்தேகமா இருக்கு. எல்லா ஆதாரமும் இவங்களுக்கு எதிரா தான் இருக்குது? பிடிபட்ட நாலு பேர் கிட்ட கேட்டா எல்லாம் தெளிவாகிரும்”, என்றார் இன்ஸ்பெக்டர்.

     “சார் இதை யாரோ வேணும்னு பண்ணிருக்காங்க. இப்ப நீங்க அவனுங்களை விசாரிச்சா கூட மதி பேரைத் தான் சொல்லுவாங்க. அது வேஸ்ட். ஆனா இதை மதி பண்ணலை. இதுக்கு பின்னாடி யாரோ இருக்காங்க. ஒரு நிமிஷம் இருங்க. இதை நான் கிளியர் பண்ணுறேன்”, என்றவன் மதி புறம் திரும்பி “உன்னோட கார் சரியா எந்த இடத்துல நின்னுச்சுன்னு சொல்லு, வா”, என்று அழைத்துச் சென்றான். அவர்கள் பின்னே பிரின்சிபால், போலீஸ் அனைவரும் சென்றார்கள்.

     ஒரு மரத்தடியை அவள் கை காட்ட அந்த இடத்தில் சிசிடிவி வேறு இல்லை. வேண்டும் என்றே இங்கே நிறுத்தி இருக்கிறான் என்று புரிந்தது. ஆனால் அதை நிரூபிக்க ஆதாரம் வேண்டுமே என்று எண்ணியவன் அந்த இடத்தையே சுற்றி முற்றி ஆராய்ந்தான்.

     அப்போது அவன் கண்கள் பளிச்சிட்டது. கிரவுண்டில் இருந்த சிசிடிவியில் இங்கே நடப்பதையும் பார்க்கலாம் என்று புரிந்தது. “எல்லாரும் என் கூட வாங்க”, என்று சொன்னவன் நேராக சிசிடிவி அறைக்கு தான் அழைத்துச் சென்றான். ஆனால் அவனுக்கே அங்கே பதிவு இருக்குமா என்று பதட்டமாக தான் இருந்தது.

     அங்கிருந்த இன்சார்ஜ் “சார்”, என்று வரவேற்க “நீங்க கொஞ்சம் சீட்ல இருந்து எந்திரிங்க”, என்றான்.

     அவன் எழுந்ததும் அந்த சீட்டில் அமர்ந்த ஆதி ஒரு கேமராவைச் சொல்லி அதற்கான பதிவை அவனிடம் கேட்டு ஓப்பன் செய்தான். மதிக்கோ அப்படி ஒரு கலக்கமாக இருந்தது.  அவளுக்கு இதில் இருந்து வெளியே வர முடியும் என்று நம்பிக்கையே இல்லை. அவளுக்கு இருந்த ஒரே ஒரு ஆறுதல் ஆதி அவளுக்காக பேசியது தான். இந்த நிமிடம் அவனை இறுக்கி அணைத்து ஆறுதல் பெற மனம் தவியாக தவித்தது.

     சிறிது நேரம் கம்ப்யூட்டரை ஆராய்ந்த ஆதி அந்த பதிவை அனைவரும் பார்க்கும் படி ஓட விட அதில் ஒரு இடத்தில் நிறுத்தி ஜும் செய்து மீண்டும் ஓட விட்டான். அப்போது அவன் தேடிய பதிவு ஓடியது.

     மதி ஒரு மாணவனிடம் பேசிக் கொண்டிருக்க அப்போது மற்றொரு மாணவன் கார் கதவைத் திறந்து அவள் பையில் எதையோ வைப்பது தெள்ளத் தெளிவாக இருந்தது.

     அதை பார்த்து அவள் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. “பாத்தீங்களா இன்ஸ்பெக்டர். என்னோட மனைவிக்கே தெரியாம அவ பேக்ல போதை மருந்தை வச்சிருக்காங்க? அந்த பசங்க யாரு என்னன்னு விசாரிங்க. நானே கம்ப்லைண்ட் தரேன். அது எங்க காலேஜ் பசங்களா இருந்தாலும் ஆக்ஷன் எடுங்க. அப்புறம் டிரக்ஸ் யூஸ் பண்ணுற பசங்களையும் விசாரிங்க. ஆனா அவங்க மேல கேஸ் போட வேண்டாம். நான் அவங்க பேரண்ட்ஸ் கிட்ட பேசுறேன்”, என்றான் ஆதி.

     “ஓகே சார், இதை யார் செஞ்சிருப்பாங்கன்னு உங்களுக்கு சந்தேகம் இருக்கா?”

     “எங்க அப்பா பேரைக் கெடுக்க தான் யாரோ பண்ணிருக்காங்க. யார் என்னன்னு தெரியலை. அந்த ரெண்டு பசங்க மாட்டினா தான் தெரியும். அப்புறம் இந்த கேஸ் ரகசியமா இருக்கட்டும். வெளிய தெரிஞ்சா காலேஜ்க்கு கெட்ட பேர்”

     “ஓகே ஆதி சார்,. நான் பாத்துக்குறேன். அப்புறம் இந்த புட்டேஜ் ஒரு காப்பி வாங்கிக்கிறேன்”, என்று சொல்ல “ஓகே, அப்புறம் உங்களுக்கு இன்பார்ம் பண்ணினது யாருன்னு செர்ச் பண்ணுங்க. ஏன்னா அவன் தான் மதியை மாட்டி விடணும்னு எல்லாத்தையும் பண்ணிட்டு உங்களுக்கு காலும் பண்ணிருக்கான்”, என்றான் ஆதி.

     “ஓகே சார், நான் விசாரிக்கிறேன். சாரி மேடம்”, என்று சொல்லி விட்டு இன்ஸ்பெக்டர் வெளியே செல்ல மற்றவர்களும் வெளியே வந்தார்கள். ஆதியும் பிரின்சிபாலும் ஏதோ பேசிய படியே செல்ல மதியும் அவர்கள் பின்னே வந்தாள்.

     “எவ்வளவு பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்திருக்கான்?”, என்று எண்ணி கணவனைக் காதலாக பார்த்தாள்.

     “தேங்க்ஸ் ராமன் சார், நல்ல நேரத்துல போன் பண்ணுனீங்க? இல்லைன்னா மதியை அரஸ்ட் பண்ணிருப்பாங்க. அப்படி நடந்திருந்தா அப்பா பேர் கெட்டுருக்கும்”, என்று ஆதி சொல்ல “இது என் கடமை சார்? நான் இன்னும் கவனமா இருந்துருக்கணும். எப்படி ஸ்டுடன்சை கேர்லசா விட்டேன்னு தெரியலை. நான் அந்த நாலு பேரை பாத்துட்டு வரேன்”, என்று சொல்லிச் சென்றார் பிரின்சிபால்.

     அவர் சென்றதும் மதியை திரும்பிப் பார்த்தான். கண்கள் கலங்கி நெகிழ்வுடன் நின்றிருந்தவளை இழுத்து அணைத்து ஆறுதல் சொல்ல அவன் கைகள் பரபரத்தது. ஆனால் அவளது வார்த்தைகள் அவனைக் காயப் படுத்தி இருக்க அவனால் அதைச் செய்ய முடிய வில்லை.

     “ரொம்ப நன்றிங்க. சத்தியமா இப்படி எல்லாம் பிரச்சனை வரும்னு நான் நினைக்கவே இல்லை. நீங்க இல்லைன்னா என்ன ஆகிருப்பேன்னே தெரியலை. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்”, என்றாள்  மதி.

     அவனை ஓடிச் சென்று கட்டி அனைத்திருந்தால் சந்தோஷப் பட்டிருப்பானோ என்னவோ? ஆனால் அவள் சொன்ன தேங்க்ஸ் அவன் முகத்தை வாட வைத்தது.

     “இப்படி அடுத்தவங்க கிட்ட சொல்ற மாதிரி நீ சொல்ற தேங்க்ஸ் என்னை எப்படி காயப் படுத்துதுன்னு உனக்கு ஏன் டி இன்னும் புரியலை? உண்மையான அன்பும் காதலும் இருந்திருந்தா எனக்கு நீ தேங்க்ஸ் சொல்லுவியா? என்னை அன்னியமா நினைக்கக் போய் தானே தேங்க்ஸ் சொல்ற?”, என்று வேதனையாக எண்ணிக் கொண்டவன் “இது யார் பண்ணுற வேலைன்னு உனக்கு ஏதாவது சந்தேகம் வருதா? ஐ மீன் உனக்கு ஏதாவது போன் மிரட்டல் வந்ததா?”, என்று கேட்டான்.

     “இல்லைங்க. அப்படி ஒண்ணும் வரலை. இதை யார் செஞ்சிருப்பா?”

     “அப்பாவுக்கு வேண்டாதவங்க, இல்லை எனக்கு வேண்டாதவங்க கூட செஞ்சிருக்கலாம். போலீஸ் கண்டு பிடிப்பாங்க. நீ வொரி பண்ணாத. அப்புறம் இந்த விஷயம் அப்பாவுக்கும் வீட்டுக்கும் தெரிய வேண்டாம்”

     “மாமாவுக்கு இந்த விஷயம் தெரிய வராதுன்னு நினைக்கிறீங்களா? நாம சொல்லலைன்னாலும் எப்படியாவது தெரியும்”

     “நாமளா சொன்னா தான தெரியும்? நீ சொல்லிறாத”, என்று அவன் சொல்ல சரி என்று கேட்டுக் கொண்டாள். ஆனால் ராயருக்கு நிச்சயம் விஷயம் தெரிய வரும் என்று மனதில் எண்ணிக் கொண்டாள். அவளுக்குமே இந்த விஷயத்தை யார் செய்திருப்பார்கள் என்று குழப்பம் வந்தது. தனக்கு எதிரி யார் இருக்கிறார்கள்? நிச்சயம் இது அரசியல் சூழ்ச்சி தான் என்று எண்ணியவள் இன்னும் கவனமாக இருக்க முடிவு செய்தாள்.

     “சரி கவனமா இரு. எப்ப வேணும்னாலும் என்ன வேணும்னாலும் நடக்கலாம். நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு அவன் கிளம்ப “ஏங்க”, என்று அழைத்தாள்.

     “என்ன?”, என்ற படி அவன் திரும்பிப் பார்க்க “நந்தினி விஷயத்தை பத்தி யோசிக்க கூடாதா? நான் இவ்வளவு தூரம் சொல்றேன்ல? அந்த ரிஷி வேண்டாமே?”, என்றாள்.

     “இந்த விஷயம் நாம பேசுறது இது தான் கடைசியா இருக்கணும் வான்மதி. ஒவ்வொரு முறையும் சொல்லிக்கிட்டு இருக்க மாட்டேன். அப்பா முடிவு பண்ணிட்டாங்க. இதை யாரும் மாத்த முடியாது. உன் முன்னாடி தான் நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும் தேதி குறிச்சாங்க. மறந்துருச்சா?”

     “நீங்க கூட என்னை நம்ப மாட்டீங்களா?”, என்று வேதனையாக கேட்டாள். அவள் கண்களில் இருந்த வேதனையும் கெஞ்சலும் அவனை ஏதோ செய்ய இவ சொல்றதுல எதுவும் உண்மை இருக்குமோ என்று சரியாக எண்ணினான்.

     “சரி நான் உன்னை நம்புறேன். ஆனா நான் அப்பா கிட்ட பேசணும்னா எனக்கு வலுவான ஆதாரம் வேணும். ரிஷியைப் பத்தி உனக்கு தெரிஞ்சதை சொல்லு. அவன் மேல உனக்கு சந்தேகம் வரக் காரணமாக விசயங்களைச் சொல்லு. நான் அப்பா கிட்ட பேசுறேன்”

     “அதை நான் எப்படிச் சொல்வேன்? அப்படிச் சொன்னாலும் நீங்க என்னை நம்புவீங்களா?”, என்று எண்ணி குழப்பமாக அவனைப் பார்க்க “உனக்கு சொல்ல ஒண்ணும் இல்லை அப்படி தானே? அவன் கூட படிக்கும் போது ஏதாவது பிரச்சனை வந்துருக்கும். அதான் நீ இப்படி சொல்ற? இதை இன்னையோட விட்டுரு. ஏன்னா நீ தான் கல்யாண வேலை எல்லாம் செய்யனும். அதை முழு மனசா செய்யாம இப்படி யோசிச்சிட்டு செஞ்சா நல்லா வராது. சரி நான் வரேன்”, என்றான்.

     “சரி”, என்னும் விதமாய் தலையசைத்தவள் “ஒரு டவுட் கேக்கணும்”, என்றாள்.

     “என்ன?”

     “உங்களுக்கு என் மேல கோபமா?”

     “உன் மேல எனக்கு என்ன கோபம்? அது மட்டுமில்லாம உன் மேல கோபப் பட எனக்கு என்ன உரிமை இருக்கு?”, என்று கேட்டவன் அவள் முகம் கூட பார்க்காமல் அங்கிருந்து சென்றே விட்டான். திகைத்து அசையாமல் நின்றாள் மதி.

     “அடேய் நானே பல பிரச்சனைல இருக்கேன் டா. இதுல நீ வேற? உன்னை என்ன செஞ்சேன்னு தெரியலையே? அந்த தரகர் நீ என்னை அந்த அளவுக்கு லவ் பண்ணுறேன்னு அளந்து விட்டார். நீ என்னடான்னா என்னை மனுசியா கூட மதிக்க மாட்டிக்க. இதுல லவ் எங்க இருக்கு?”, என்று எண்ணிக் கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றாள்.

     அங்கே சென்றதும் அவளால் எந்த வேலையும் செய்ய முடிய வில்லை. ஆதி வரவில்லை என்றால் இந்நேரம் என்ன ஆகி இருக்கும் என்று நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது. ராயருக்கும் அந்த விஷயம் தெரிய வந்தது. ஆதியிடம் பேசி இன்னும் கவனமாக இருக்கச் சொன்னார்.

காதல் தொடரும்….. 

Advertisement