Advertisement

     “சொல்லுங்கண்ணா. நந்து கிட்ட பேசினீங்களா?”

     “நீ முயற்சி பண்ணுறது வேஸ்ட் மா. விட்டுரு. அவ தலையெழுத்து அப்படின்னா அதை அவ அனுபவிச்சு தான் ஆகணும்”

     “அப்படி என்னால விட முடியாது அண்ணா. அவ நல்லா இருக்கணும். அவ நல்லா இருந்தா தான் இந்த குடும்பம் நல்லா இருக்கும். இன்னொரு விஷயம் சொல்லனும்னா அந்த ரிஷி நந்தினியோட கணவனா இந்த வீட்டுக்குள்ள வந்தா என்னோட வாழ்க்கையும் அழிஞ்சிரும். இதுல என்னோட சுயநலமும் இருக்குண்ணா”

     “சாரி மா, என்னால இதுல எந்த உதவியும் செய்ய முடியாது. நந்தினிக்கு அவனை பிடிச்சிருக்கு போல? உனக்கு இதை கண்டிப்பா நிறுத்தியே ஆகணும்னா ஒரே ஒரு வழி தான் இருக்கு”

     “என்ன வழி அண்ணா?”

     “அந்த ரிஷி கெட்டவன்னு ஆதாரம் திரட்டுறது தான் ஒரே வழி. அதை எப்படியாவது செஞ்சு மாமா கிட்ட கொடு. அப்படின்னா மட்டும் தான் இந்த கல்யாணம் நிக்கும். மத்த படி உன் பேச்சை வேற யாருமே கேக்க மாட்டாங்க. ஆதி கூட மாமாவை எதிர்த்து உன் பக்கம் நிக்க மாட்டான். முடிஞ்ச அளவு முயற்சி பண்ணு. இல்லைன்னா விட்டுரு மா”

     “அண்ணா, நந்தினி உங்க முறைப்பொண்ணு தானே? அவளை கட்டிக்கணும்னு உங்களுக்கு ஆசை இருந்தது இல்லையா?”

     “ஆசை எல்லாம் இல்லை. ஆனா பெரியவங்க சொல்லிருந்தா கண்டிப்பா சம்மதம் சொல்லியிருப்பேன். ஆனா அப்படிச் சொல்லலை தானே? அதனால அதைப் பத்தின பேச்சு எதுக்கு? உன்னை மாதிரி எனக்கும் நந்தினி வாழ்க்கை மேல அக்கறை இருக்குனு தான் அவ கிட்ட பேசினேன். ஆனா அவளுக்கு அந்த ரிஷியை ரொம்ப பிடிச்சிருக்கு போல? அதான் நான் வேண்டாம்னு சொன்னதும் கோபமா பேசிட்டா. இனி அவ வாழ்க்கையை அவ தான் பாத்துக்கணும். சரி மா எனக்கு பிளைட்டுக்கு நேரம் ஆச்சு. அப்புறம் பாக்கலாம்”, என்று சொல்லி போனை வைத்தான்.

     “அந்த ரிஷியை எப்படி கெட்டவன்னு காட்டுறது? அவன் எப்படி அவன் வாயாலே உண்மையை சொல்லுவான்? அவன் வாயாலே எப்படி உண்மையை வர வைக்கிறது?”, என்று அவள் யோசிக்க “அவன் உன் கிட்ட தனியா இருக்கும் போது வம்பிழுக்குற மாதிரி தான் பேசுவான். அப்ப ரெக்கார்ட் பண்ணிரு”, என்று சொல்லியது அவள் மனசாட்சி.

     உடனே அவள் போனை எடுத்து அவன் எண்ணைத் தேடினாள். அந்த எண் பேஸ்புக்கில் இருந்து அவள் எடுத்தது தான். அது புதிய எண்ணா பழைய எண்ணா என்று கூட தெரியாது.

     அவள் அந்த எண்ணுக்கு அழைக்க முற்படும் போது அப்போது அங்கே வந்த காலேஜ் பிரின்சிபால் “மே கம்மின் மேம்”, என்றார்.

     “யெஸ் சார் உள்ள வாங்க”, என்று சொன்னவள் அவள் இருக்கையில் அமர்ந்து அவரையும் அமரச் சொன்னாள். அவரோ அமராமல் பதட்டமாக இருந்தார்.

     “சொல்லுங்க சார், ஏதாவது பிரச்சனையா? கொஞ்சம் பதட்டமா இருக்கீங்க?”

     “ஆமா மேம். அது வந்து நம்ம கேம்பஸ்க்கு போலீஸ் வந்துருக்காங்க”

     “வாட்?”

     “ஆமா மேம், நம்ம காலேஜ்ல டிரக்ஸ் சப்ளை நடக்குறதாவும் ஸ்டாப் நாம தான் அதை ஸ்பான்சர் பண்ணுறதாவும் தகவல் வந்துச்சாம். அதனால சோதனை போட வந்திருக்காங்க”

     “ரிடிகுலஸ், யார் காலேஜ்ல வந்து இப்படி சோதனை போடுறது? வாங்க என்னன்னு பாக்கலாம்”, என்று சொல்லி அவள் வெளியே செல்ல முற்படும் போதே உள்ளே வந்தார் இன்ஸ்பெக்டர்.

     “என்ன மேடம், காலேஜ் வாங்கினதும் படிப்பு விசயத்துல மாற்றத்தைக் கொண்டு வருவீங்கன்னு பாத்தா பிள்ளைங்க வாழ்க்கை விசயத்துல விளையாடிட்டு இருக்கீங்க?”, என்று கோபமாக கேட்டார் இன்ஸ்பெக்டர்.

     “சார், நீங்க பேசுறது எனக்கு அதிர்ச்சியா இருக்கு? எங்க காலேஜ்ல ஒழுக்கத்தையும் படிப்பையும் மட்டும் தான் சொல்லித் தறோம். மத்த தப்பான விஷயங்களை இல்லை. உங்களுக்கு ஏதோ தவறான தகவல் வந்தருக்கு”, என்றாள் மதி.

     “எல்லாம் சரியான தகவல் தான். மெக்கானிக்கல் டிப்பார்ட்மெண்ட் பின்னாடி நாலு ஸ்டூடண்ட்ஸை கையும் களவுமா பிடிச்சிட்டு தான் வரேன். முழு போதைல இருக்கானுங்க”, என்று அவர் சொல்ல “சார் உண்மையா?”, என்று அதிர்ந்து கேட்டாள்.

     “என்ன இதுக்கே அதிர்ச்சியாகுறீங்க? அதை அவனுங்களுக்கு வித்ததே நீங்க தான்னு தகவல் வந்துருக்கு. சாரி எங்களுக்கு குவாப்பரேட் பண்ணுங்க. நாங்க உங்க ரூமை சோதனை போடணும்”, என்று சொல்ல அதிர்ந்து தான் போனாள்.

     “சார் அவங்க கரஸ்பாண்டண்ட்”, என்றார் பிரின்சிபால்.

     “யாரா இருந்தா எங்களுக்கு என்ன? எங்க வேலையை எங்களை செய்ய விடுங்க”, என்றவர் அந்த அறையை சோதனை செய்ய அமைதியாக இருந்தாள்.

     அந்த நேரத்தில் வெளியே சென்ற பிரின்சிபால் ஆதியை அழைத்தார். “சொல்லுங்க ராமர் சார்”

     “சார் இன்ஜினியரிங் காலேஜ்ல ஒரு சின்ன பிரச்சனை?”, என்று சொல்லி நடந்ததை விவரிக்க “பத்து நிமிசத்துல அங்க இருப்பேன். போலீஸ் மதி மேல கை வைக்க கூடாது. பாத்துக்கோங்க”, என்று சொல்லி போனைத் துண்டித்தவன் உடனே கிளம்பி விட்டான்.

     அறையை முழுமையாக சோதனை செய்தவர் அவளைப் பார்க்க “என்ன சார் பாத்துட்டீங்களா? இங்க ஒண்ணும் இல்லை தானே? ஆனா கண்டிப்பா யார் டிரக்ஸ் கொண்டு வந்தாங்கன்னு நான் கண்டு பிடிப்பேன்”, என்றாள்.

     “இன்னும் உங்க ஹேன்ட் பேகை செக் பண்ணலை மேடம்”, என்றவர் அதை கையில் எடுக்க அவள் எரிச்சலுடன் நின்றிருந்தாள்.

     ஆனால் அவர் சோதனை செய்து முடித்து அவள் பையில் இருந்து இரண்டு பொட்டலங்களை வெளியே எடுத்து டேபிளில் வைக்க அதிர்ந்து தான் போனாள். பிரின்சிபால் கண்களும் அதிர்ச்சியில் விரிந்தது.

     பயத்தில் மதியின் கண்கள் கூட கலங்கி விட்டது. இவ்வளவு நேரம் அவளை மரியாதையாக பேசிய இன்ஸ்பெக்டர் “என்ன மா இதெல்லாம்? ஏதோ டயலாக் எல்லாம் பேசின? இது தான் உங்க ஒழுக்கமா? நீங்க தான் எல்லா மாணவர்களுக்கும்  கொடுக்குறீங்களா?”, என்று கேட்டார்.

     “சார் இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது எப்படி என் பேக்ல வந்துச்சுன்னு தெரியலை”, என்று அவள் அழுத படி சொல்ல “பிடிபட்டவங்க எல்லாரும் சொல்ற சேம் டயலாக் தான் இது”, என்றார் இன்ஸ்பெக்டர்.

     “சார் மேடம் அப்படி பட்டவங்க இல்லை. நான் இந்த காலேஜ்ல பத்து வருஷமா பிரின்சிபாலா இருக்கேன். எங்க காலேஜ்ல இப்படி ஒரு பிரச்சனை வந்ததே இல்லை. இது யாரோ வேணுக்குன்னு பண்ணுண மாதிரி இருக்கு சார்”, என்றார் பிரின்சிபால்.

     “மேனேஜ்மெண்ட் கை மாறிருக்கு பிரின்சிபால் சார். அதனால இந்த மாதிரி பிரச்சனைகளும் வரத் தான் செய்யும்”, என்று சொல்ல மதிக்கு கஷ்டமாக இருந்தது.

     இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவள் பேர் கெடுவது மட்டுமின்றி ராயரின் மொத்த நல்ல பெயரும் கெட்டு விடுமே. வீட்டில் உள்ளவர்கள் ஏற்கனவே அவள் மேல் கடுங்கோபத்தில் இருக்க இது என்ன புதுப் பிரச்சனை என்று பயமாக இருந்தது. பதட்டத்தில் யாரிடம் உதவி கேட்க என்று கூட அவளுக்கு தெரிய வில்லை. இது வரை அவளிடம் இருந்த கம்பீரம் கூட காணாமல் போயிருந்தது.

     “சாரி மேடம், சந்தேகத்தின் பேர்ல நாங்க இப்ப உங்களை அரஸ்ட் பண்ணுறோம். பிளீஸ் குவாப்பரேட் பண்ணுங்க. மத்தது எல்லாம் ஸ்டேஷன்ல போய் பேசிக்கலாம்”,  என்று சொன்ன இன்ஸ்பெக்டர் லேடி போலீசை கண்ணைக் காட்ட அவள் மதியை நோக்கிச் சென்றாள்.

     “போச்சு எல்லாம் போச்சு”, என்று விரக்தி மனநிலைக்கே சென்று விட்டாள் மதி. அவள் கையில் விலங்கு போடப் போகும் போது “இன்ஸ்பெக்டர் ஒரு நிமிஷம்”, என்ற குரல் கேட்டு அனைவரும் திரும்பி பார்த்தார்கள்.

     அங்கே ஆதி நின்றிருந்தான். அவனைக் கண்டதும் மதிக்கு ஆயிரம் யானை பலம் வந்தது போல இருந்தது. அவசரமாக அவனை நெருங்கிச் சென்றவள் “என்னங்க நிஜமாவே அது எப்படி என் பேக்ல வந்துச்சுன்னு தெரியலை. பிளீஸ் என்னை நம்புங்க”, என்றாள்.

     அவளை விலக்கி நிறுத்தியவன் ஒரு வார்த்தை கூட பேசாமல் “இன்ஸ்பெக்டர் இது எங்க அப்பா பேருக்கு களங்கம் உண்டாக்க எதிர் கட்சி செய்த சதி. இதுக்கும் என் மனைவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”, என்றான்.

     “இல்லை ஆதி சார், நாங்க கையும் களவுமா பிடிச்சிருக்கோம்”

     “முதல்ல உங்களுக்கு யாரு இன்பார்ம் பண்ணினது”

     “ஒரு கால் வந்துச்சு?”, என்று அவர் சொல்ல “வான்மதி, இன்னைக்கு காலைல இருந்து நடந்ததைச் சொல்லு. யாராவது புதுசா வந்து உன் கிட்ட பேசினாங்களா? உன் பேகை யார்க் கிட்டயாவது கொடுத்தியா?”, என்று கேட்டான் ஆதி.

     “நான் காலேஜ் கேம்பஸ்குள்ள வரப்ப ஒரு ஸ்டூடண்ட் என் காரை நிறுத்தினான். நான் இறங்கி என்னன்னு கேக்கும் போது அவன் இந்த மாசம் பீஸ் கட்ட லேட் ஆகிருச்சுன்னும் அதை கட்ட ரெண்டு நாள் டைம் வேணும்னு கேட்டான். அது மட்டுமில்லாம பீஸ் கட்டாததுனால கிளாஸ் ரூம்ல வச்சு ஸ்டாப் ஒரு மாதிரி பேசுறாங்கன்னும் சொன்னான். நான் அதைக் கேட்டுட்டு அப்புறமா ஆபீஸ் ரூம் வந்து ஒரு லட்டர் எழுதிக் கொடு. பீஸ் குறைக்க முடியுமான்னு பாக்குறேன். அப்புறம் அடுத்த மீட்டிங்ல ஸ்டாப் கிட்ட பேசுறேன்னு சொல்லிட்டு திருப்பியும் கார்ல ஏறி வந்து பார்க்கிங்ல விட்டுட்டு என்னோட ரூமுக்கு வந்துட்டேன். இடைல என்ன நடந்துச்சுன்னு தெரியலை”, என்றாள்.

Advertisement