Advertisement

            “இங்க பாருங்க சம்பந்தி. மதி இப்ப உங்க பொண்ணு மட்டும் இல்லை. இந்த வீட்டோட மூத்த மருமக. அவளுக்குன்னு சில பொறுப்புகள் இருக்கு. என் பொண்ணோட கல்யாணத்தையே அவ தான் முன்ன நின்னு நடத்தப் போறா. இப்ப கூட மாப்பிள்ளை வீட்ல பேச தான் போயிட்டு வரா. அவளுக்கு இங்க நிறைய வேலைகள் இருக்கு. இப்ப போல அங்க வந்து இருந்தா இங்க நாங்க எல்லாம் தவிச்சு போயிற மாட்டோமா? கல்யாணம் முடிஞ்சதும் உங்க பொண்ணையும் மருமகனையும் ஒரு மாசம் கூட உங்க வீட்ல வச்சிக்கோங்க”, என்று சொல்ல பரமசிவத்துக்கு அவர் சொல்வது சரி என்று பட்டது. இந்த வீட்டில் மகளின் பொறுப்பு புரிந்தது. மகளுக்காகவே பள்ளியை வாங்கிக் கொடுத்து அழகு பார்த்தவர்கள் ஆயிற்றே.

            “ஐயா சொல்றதும் சரி தானே கண்ணு? நீ உன் வேலையை சரியா செய்யணும் டா. அது தான் இந்த அப்பனுக்கு மரியாதை”, என்று அவர் சொல்ல மானசீகமாக தலையில் கை வைத்துக் கொண்டவள் சரி என்னும் விதமாக தலையசைத்தாள். வேறு என்ன செய்ய முடியும் அவளால்.

     பரமசிவம் சிறிது நேரம் இருந்து விட்டுச் சென்றதும் “அவங்க கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டாங்க மாமா”, என்றாள் மதி.

     “சரி மா, கல்யாண வேலை எல்லாம் நீயே பாத்துக்கோ. என்னன்னாலும் ஆதி கிட்ட கேட்டுக்கோ. நான் இப்பவும் உன்னை நம்புறேன்”, என்று சொல்லிச் செல்ல மதிக்கு தலை வேதனையாக இருந்தது.

     அன்று அறைக்குள் வந்ததும் அவள் உம்மென்று இருக்க “மதி”, என்று அழைத்தான் ஆதி.

     “ஆன் சொல்லுங்க”

     “வா வந்து படு. ரொம்ப சோர்வா தெரியுற?”, என்று அழைக்க அவளும் வந்து படுத்துக் கொண்டாள்.

     அவள் படுத்ததும் எப்போதும் போல அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் ஆதி. அது வரை எல்லாம் சரியாக தான் போனது.

     ஆனால் அவன் கணவனாக தன்னுடைய தேடலை அவளிடம் துவங்க இருந்த மன அழுத்தத்தில் அவன் செய்கைகள் பிடிக்காமல் போக “ச்சீ, கையை எடுங்க. உங்களுக்கு இதை விட்டா வேற என்ன தெரியும்?”, என்று கத்தி விட்டாள்.

     அதைக் கேட்டு அதிர்ந்து போனான் ஆதி. அவளிடம் இருந்து விலகி எழுந்து அமர்ந்தவன் “இப்ப என்ன சொன்ன?”, என்று அடக்கப் பட்ட கோபத்தில் கேட்டான். அவள் ச்சீ என்று சொன்னது அவனை அதிகம் பாதித்தது.

            அவன் உணர்வுகள் புரியாதவளோ “என்ன சொன்னேன்? இங்க பாருங்க. நானே பயங்கர டென்ஷன்ல இருக்கேன். இப்ப போல நீங்க வேற?”, என்று எரிச்சலுடன் சொன்னவளுக்கு ஒரு நொடி கூட அவள் வார்த்தைகளால் அவனுக்கு உண்டான காயம் புரியவே இல்லை. அடுத்து அவனால் எதுவுமே பேச முடிய வில்லை. பேசத் தோன்ற வில்லை என்று சொல்லலாம்.

     ஒரு மாதிரி அவமானமாக உணர்ந்தான். இருவரும் அவரவர் யோசனையில் இருக்க அங்கே அமைதியே நிலவியது. அவளோ எங்கோ வெறித்து பார்த்த படி அமர்ந்திருந்தாள். சிறிது நேரம் பார்த்தவன் அதற்கு மேல் எதுவும் செய்ய தோன்றாமல் படுத்து விட்டான்.

     அவன் படுத்ததும் அதைக் கண்டவளுக்கு “ஒரு வார்த்தையாவது என்ன பிரச்சனைன்னு கேக்குறானான்னு பாரு. வந்தான் தொட்டான் தடுத்ததும் படுத்துட்டான். இவனுக்கு என்ன பிரச்சனை? இவன் தங்கச்சி வாழ்க்கையை காப்பாத்த நான் இங்க போராடிட்டு இருக்கேன். பேசாம எனக்கு என்னன்னு இருந்துறலாமா?”, என்று எண்ணினாள்.

     ஆனால் அவள் மனசாட்சி அதற்கு இடம் கொடுக்க வில்லை. என்ன இருந்தாலும் நந்தினி அவளது தோழியாயிற்றே. அவள் வாழ்வைக் காப்பாற்றுவது அவளது கடமை தானே? அவளும் அவன் அருகே படுத்து விட்டாள்.

     அடுத்த நாள் காலை விடிந்தது. எதுவும் பேசாமல் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அமைதியாக அலுவலகம் கிளம்ப ஆரம்பித்தான் ஆதி. அவளும் விழித்திருந்தாள் தான். ஆனால் போனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். பேஸ்புக்கில் ரிஷியின் பேரைத் தேடி அவனது அக்கவுண்டை ஓப்பன் செய்து ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

     அவனைப் பற்றி ஏதாவது ஒரு தவறான விஷயம் கண்ணில் மாட்டாதா என்று கண்ணில் விளக்கெண்ணை போட்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.

     காலை எழுந்ததும் தன்னைக் கூட ஏறெடுத்து பார்க்காமல் போனை நொண்டிக் கொண்டிருப்பவளைக் கண்டு வேதனையாக இருந்தது ஆதிக்கு. “என்னோட காதலும் என்னோட மனசும் உனக்கு புரியவே புரியாதா டி?”, என்று மானசீகமாக கேட்டவன் அவளிடம் சொல்லிக் கொள்ளாமலே கிளம்பி விட்டான்.

     தினமும் கட்டி அணைத்து முத்தம் கொடுத்து விட்டுச் செல்பவன் இன்று பேசாமல் செல்ல அதைக் கூட உணரும் நிலையில் அவள் இல்லை.

     சிறிது நேரம் போனை ஆராய்ந்தவள் அங்கிருந்து எந்த தகவலும் இல்லாததால் போனை வைத்து விட்டு எழுந்தாள்.

     “இவரை எங்க காணும்? அதுக்குள்ள கிளம்பிட்டாரா? சொல்லவே இல்லை. சரி அவருக்கு என்ன அவசரமோ?”, என்று எண்ணிக் கொண்டே குளித்து கிளம்பி கீழே வந்தாள்.

     தமயந்தி சமையல் அறையில் இருக்க “சாரி அத்தை எந்திக்க கொஞ்சம் நேரம் ஆகிருச்சு”, என்று சொல்ல “ம்ம்”, என்று முடித்துக் கொண்டாள் தமயந்தி.

     அப்போது தான் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தன் மீது கோபமாக இருப்பது நினைவில் வந்தது. ராயரை எதிர்த்து பேசியதால் தான் ஆதியும் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கோபத்தில் சென்று விட்டான் என்று எண்ணிக் கொண்டவள் உணவு உண்ணாமலே வேலைக்கு கிளம்பினாள். அவளை சாப்பிட்டு போ மா என்று சொல்ல கூட அங்கே ஆள் இல்லை.

     வெளியே வந்தவள் காரை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வந்தாள். மனது ஒரு நிலையில் இல்லாமல் இருந்தது. பேசாமல் அந்த ரிஷிக்கே அழைத்து மிரட்டினால் என்ன என்ற எண்ணம் வந்தது? ஆனால் அவன் அதை ரெக்கார்ட் செய்து வைத்து வீட்டில் காட்டினால் என்ன செய்ய என்று கவலையாக இருந்தது.

     கடைசி முயற்சியாக ரஞ்சன் அண்ணாவிடம் கேட்கலாம் என்று எண்ணி நிரஞ்சனை போனில் அழைத்தாள்.

     அதை எடுத்து “சொல்லு மா மதி. எப்படி இருக்க?”, என்று கேட்டான் நிரஞ்சன்.

     “எப்படி இருக்கீங்க அண்ணா?”

     “நல்லா இருக்கேன் மா. நீ எப்படி இருக்க?”

     “நான் நல்லாவே இல்லைண்ணா. நீங்க பிசியா இருக்கீங்களா? உங்க கிட்ட கொஞ்சம் பேசனுமே”

     “நான் இப்ப மும்பை கிளம்பிட்டு இருக்கேன் மா. வர நாலு நாள் ஆகுமே? என்ன விஷயம்?”

     “அது வந்துண்ணா.. நந்தினிக்கு பாத்துருக்குற மாப்பிள்ளை விஷயமா பேசணும்”

     “அதை பத்தி பேச என்ன இருக்கு மா? மாமாவும் ஆதியும் பாத்துக்குவாங்க”

     “இல்லைன்னா இந்த கல்யாணம் நடக்க கூடாது. அவன் அவ்வளவு நல்லவன் இல்லை. அது எப்படி என்னன்னு என்னால விளக்கமுடியாத இடத்துல இருக்கேன். அவனைக் கல்யாணம் பண்ணினா நந்தினி சந்தோஷமா இருக்க மாட்டா. இதை எப்படியாவது தடுத்து நிறுத்தணும்

     “இங்க பாரு மதி, கலிங்கராயர் மாமா என்ன செஞ்சாலும் அதுல யாரும் தலையிட முடியாது. அதுவும் நான் ஏதாவது சொன்னா குடும்பத்துல பிரிவு தான் வரும். எங்க அப்பாவே என்னை இதைப் பத்தி பேச விட மாட்டார் மா”

     “எனக்கு புரியுதுண்ணா. இங்க யாருமே என்னை நம்பலை. அது மட்டுமில்லாம நானே இந்த கல்யாணத்தை முன்னே நின்னு நடத்தனுமாம். என் கண்ணு முன்னாலே நந்து வாழ்க்கை பாழா போறதை எப்படி பாத்துட்டு இருக்க?”

     “நீ நந்து கிட்ட பேசினியா மதி?”

     “பேசினேன் அண்ணா. அவ என்னையே வில்லியா பாக்குறா”

     “நான் பேசிப் பாக்கவா? என்னை வில்லனா பாத்தா பரவாயில்லை. நான் அவளுக்கு புரிய வைக்க டிரை பண்ணுறேன்”

     “நிஜமாவா அண்ணா? பிளீஸ் பேசுங்க அண்ணா”, என்று அவள் சொன்னதும் “சரி மா”, என்றவன் நந்தினியை அழைத்தான்.

     நிரஞ்சனிடம் இருந்து வந்த அழைப்பு என்றதும் மனதுக்கு ஒரு மாதிரி இருந்தது நந்தினிக்கு. அவசரமாக எடுத்து காதில் வைத்து “சொல்லுங்க அத்தான்”, என்றாள்.

     “எப்படி இருக்க நந்து?”, என்று அவன் சாதாரணமாக தான் கேட்டான். ஆனால் அவள் கண்கள் கலங்கியது. அதை மறைத்து “நல்லா இருக்கேன்”, என்றாள்.

     “மாப்பிள்ளையை உனக்கு பிடிச்சிருக்கா?”

     “பிடிச்சிருக்கு அத்தான்”

     “அது வந்து மா. மதி எனக்கு கால் பண்ணினா. எனக்கு என்னமோ மதி பொய் சொல்ல மாட்டான்னு தோணுது. பேசாம இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிறேன். நான் உனக்கு வேற நல்ல மாப்பிள்ளை பாக்குறேன்”, என்று சொல்ல அவள் கண்கள் கண்ணீரைச் சொறிந்தது.

     “வேண்டாம் அத்தான். இந்த கல்யாணம் நிக்கவும் வேண்டாம். நீங்க எனக்கு வேற மாப்பிள்ளை பாத்து கஷ்டப் படவும் வேண்டாம். நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க”, என்று எரிச்சலுடன் சொல்லி விட்டு வைத்து விட்டாள். அவள் கோபம் நிரஞ்சன் தனக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்ப்பதாலா என்று அவளுக்கே தெரிய வில்லை.

     அவள் பேசியதைக் கேட்டு முகத்தில் அடி வாங்கிய உணர்வை அடைந்த நிரஞ்சன் மதியை அழைத்தான்.

Advertisement