Advertisement

அத்தியாயம் 11

கதை பேசிச் செல்லும் 

இதழ்களைத் தீண்ட ஆசை 

கொண்டேனடி பெண்ணே!!!

     மதி அப்படிச் சொன்னதும் அனைவரும் அவளை முறைக்க ரிஷியோ தாய் சொதப்பி விடக் கூடாதே என்ற கவலையில் நின்றான். “எனக்கு ஏதோ சரியா படலை. நாங்க ஜோசியர் கிட்ட பேசிட்டு சொல்றோம்”, என்று சொன்ன கோமளா செல்ல அவள் பின்னேயே ரிஷியும் கிரியும் சென்றார்கள். அவர்கள் சென்றதும்  அனைவரும் கோபமாக மதியை முறைத்தார்கள். அனைவரின் பார்வையைக் கண்டு மதிக்கே பயமாக தான் இருந்தது.

     “என்னமோ இவளுக்கு சப்போர்ட் பண்ணின? பாத்தியா இவ பண்ணினதை? என் மூத்த மருமகன்னு தாங்கின? இந்த ஆதி பொண்டாட்டின்னு அந்த குதி குதிச்சான்? இப்ப நந்தினி வாழ்க்கைக்கு வேட்டு வச்சிருக்கா. இப்ப என்ன சொல்லப் போறீங்க?”, என்று கேட்டாள் பார்வதி.

     ராயர் முறைத்துப் பார்க்க “மாமா அது வந்து…. நான் தெரியாம… கை தவறி….”, என்று இழுத்தாள் மதி.

     “உன் கிட்ட இருந்து இப்படி ஒரு செய்கையை நான் எதிர் பாக்கலை மதி. உன்னை நம்பினதுக்கு எனக்கு நல்ல பதிலடி கொடுத்துட்ட? இவ்வளவு மோசமானவளையா நான் என் வீட்டுக்கு மருமகளா கொண்டு வந்தேன்னு எனக்கே என் மேல வெறுப்பு தான் வருது. ஆனா நான் ராயர். உன் விளையாட்டை என் கிட்டவே காட்டுறியா? இந்த கல்யாணம் நடந்தே ஆகணும். அதுவும் நீ தான் அதை நடத்தணும். இது தான் நான் உனக்கு கொடுக்குற தண்டனை. இப்பவே போய் அவங்க வீட்ல பேசு. பேசி நாள் குறிச்சிட்டு வா”

     “நானா?”, என்று அதிர்ந்து போய்க் கேட்டாள்.

     “ஏன் டா அவளே கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறா. நீ அவ கிட்டயே பொறுப்பைக் கொடுக்குற?”, என்று கேட்டாள் பார்வதி.

     `“தப்பு பண்ணினவங்களுக்கு தான மா தண்டனை கொடுக்கணும்? மதி தான் அவங்க வீட்ல போய் பேசணும். காபி ஊத்தினது, குங்குமம் கொட்டினதுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டு கல்யாணத்தை நடத்தணும்”, என்று ராயர் சொல்ல அதிர்ந்து போன மதி “மன்னிப்பு கேக்கணுமா?”, என்று திகைப்பாக கேட்டாள்.

     “ஆமா, மன்னிப்பு கேக்கணும். எல்லா விசயத்தையும் வேணுக்குனு செஞ்சேன்னு சொல்லி மன்னிப்பு கேளு”

     “நான் போக மாட்டேன் மாமா”

     “நீ போய்த் தான் ஆகணும். நீ தான் அவங்க வீட்ல போய் பேசணும். நீ செஞ்ச காரியத்துக்கு மன்னிப்பு கேட்டு இந்த சம்பந்தத்தை முடிக்கணும். இது தான் என்னோட முடிவு”, என்றார் காலிங்கராயர்.

            “மாமா அது வந்து…. நான்… வேண்டாமே”

            “நான் சொல்றது தான் இறுதி முடிவு. இந்த சம்பந்தம் அமைஞ்சு கல்யாண வேலையையும் நீ தான் செய்யணும். இப்ப உடனே அவங்க வீட்டுக்கு கிளம்பு”, என்று அவர் சொல்ல அவள் தன்னுடைய கணவனைப் பார்த்தாள்.

            அவன் அமைதியாக இருக்க “அவனை என்ன பாக்குற? நீ தைரியமான பொண்ணு தானே? தனியாவே போய் பேசு. நீ இந்த வீட்டோட மூத்த மருமக. உனக்குன்னு சில பொறுப்புகளும் கடமைகளும் இருக்கு. அதனால தைரியமா இருக்கணும். அதனால நீ மட்டும் போ”, என்று சொல்ல “இவர் பாராட்டுறாரா இல்லை என்னை வாறுறாரா? கடவுளே நான் எப்படி இந்த சம்பந்ததை முடிப்பேன்? அந்த ரிஷி பத்தின உண்மையை எப்படிச் சொல்வேன்?”, என்று கலங்கினாள்.

            “என்ன யோசிச்சிட்டு இருக்க மதி? உடனே கிளம்பு. டிரைவரை வண்டியை எடுக்கச் சொல்லவா?”, என்று ராயர் கேட்க “போகாம இவர் விட மாட்டார்”, என்று எண்ணியவள் “நானே டிரைவ் பண்ணிக்கிறேன்”, என்றாள்.

            “நல்லது, நான் உன் நம்பருக்கு அவங்க வீட்டு அட்ரஸ் அனுப்புறேன்”, என்று அவர் சொன்னதும் அடுத்த நொடி கேங்கரில் தொங்கிய கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள். யாரையும் திரும்பிக் கூட பார்க்க வில்லை. மற்றவர்கள் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றனர். ஆதி போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இப்போதும் இவளுக்கு இதெல்லாம் தேவையா என்ற எண்ணம் தான் அவனுக்கு வந்தது.

            சிறிது நேரம் கழித்து ரிஷியின் வீட்டுக்கு சென்றதும் அவளை வாவென்று கூட யாரும் அழைக்க வில்லை. அதை அவள் எதிர் பார்க்கவும் இல்லை என்று சொல்லலாம். ரிஷி ஏற்கனவே தாய் தந்தையிடம் சொல்லி இருந்தான். அவள் வேண்டும் என்று தான் எல்லாம் செய்ததாக சொல்ல மகனின் திருமணத்தை நிறுத்த நினைக்கும் பெண்ணை அவர்கள் வரவேற்பார்களா என்ன?

            ரிஷி, கோமளா, கிரி மூவரும் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தார்கள். “உள்ளே வரலாமா?”, என்று மதி கேட்டும் அவர்கள் வாயைத் திறக்கவே இல்லை.

     என்ன செய்ய என்று தெரியாமல் அவள் எரிச்சலுடன் நிற்க “ராயரோட மருமகளுக்கு மரியாதை கொடுக்கணும்னு தான் உன்னை உள்ள விட்டுருக்கோம். வா உக்காரு”, என்றாள் கோமளா.

     அவர்களுக்கு எதிரே அமர்ந்தவள் அமைதியாக இருக்க “என்ன விஷயம் சொல்லு?”, என்றார் கிரி.

            “கல்யாண விஷயம் பேச வந்தேன். மாமா உங்க கிட்ட பேசச் சொல்லி அனுப்பினாங்க”

            “சும்மா அனுப்பினாங்களா? இல்ல நீ வேணும்னு செஞ்சதுக்கு மன்னிப்பு கேக்கச் சொன்னாங்களா?”, என்று ரிஷி கேட்க அவனை முறைத்துக் கொண்டே “மன்னிப்பு கேக்கச் சொன்னாங்க”, என்றாள்.

            “சரியா தான் சொல்லிருக்காங்க. இந்த கல்யாணம் நடக்கணும்னா எங்க கிட்ட மரியாதை இல்லாம நடந்துக்கிட்டதுக்கு நீ மன்னிப்பு கேக்கணும்?”, என்றான் ரிஷி.

            அவனை முறைத்துப் பார்த்தவள் “நான் ஒண்ணும் மன்னிப்பு கேக்க இங்க வரலை. இங்க பாருங்க உங்க குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் ஒத்து வராது. அதனால நீங்களே இந்த சம்பந்தத்தை நிறுத்திருங்க”, என்று சொல்ல அவளது போன் இசைத்தது.

            அதை எடுத்து பார்த்தவள் அழைப்பது ராயர் என்றதும் போனைக் காதில் வைத்து “சொல்லுங்க மாமா”, என்றாள்.

            “உன்னை என்ன பேசச் சொன்னா நீ என்ன பேசுற? கல்யாண பேச்சை முடிவு பண்ண சொன்னேன். நீ என்னடான்னா கல்யாணத்தை நடத்தக் கூடாதுன்னு பேசுற? திருந்த மாட்டியா மா நீ?”

            “மாமா”

            “அங்க நடக்குறதை ரிஷி தம்பி வீடியோல காட்டிட்டு தான் இருக்கார்”, என்று சொல்ல அவனை அதிர்ச்சியாக திரும்பிப் பார்த்தாள். நக்கலாக சிரித்தவனின் கையில் மொபைல் இருந்தது.

            “ஒழுங்கா கல்யாண விஷயம் பேசி முடி. நல்ல செய்தியோட தான் வீட்டுக்கு வரணும். ஏடா கூடமா ஏதாவது பண்ணாத”, என்று சொல்லி அழைப்பைத் தூண்டித்தார் ராயர்.

            ஒரு வித எரிச்சலுடன் மதி அமர்ந்திருக்க “என்ன அமைதியா இருக்க? மன்னிப்பு கேளு”, என்றாள் கோமளா.

            “என்னை மன்னிச்சிருங்க. நான் செஞ்சது தப்பு தான். நான் செஞ்சதை மன்னிச்சு நீங்க எங்க வீட்டுப் பொண்ணை ஏத்துக்கணும். இந்த கல்யாணம் நடக்கணும்”, என்றாள் மதி. உண்மையிலே இந்த நிமிடம் இது எனக்கு தேவையா என்ற எண்ணம் தான் வந்தது.

            “அப்படி வா வழிக்கு. சரி நாங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குறோம். மத்த விவரம் எல்லா நான் ராயர் கிட்ட பேசிக்கிறேன். இப்ப நீ கிளம்பலாம்”, என்றார் கிரி.

     அவமானத்துடன் வெளியே வந்து காரில் அமர்ந்தாள் மதி. மனதுக்கு அவ்வளவு பாரமாக இருந்தது. நல்லது செய்ய நினைத்தால் இது தான் கதியா என்று எண்ணியவளுக்கு காரைக் கிளப்பவே மனம் வர வில்லை. வீட்டுக்குச் செல்லவும் மனதில்லை.

     இப்போதும் அவர்களிடம் பட்ட அவமானத்தை விட நந்தினியின் வாழ்க்கையை எப்படிக் காப்பாற்ற என்று தான் குழப்பமாக இருந்தது. உண்மையைச் சொல்லவும் பயமாக இருந்தது.

            வேறு வழி இல்லாமல் காரைக் கிளப்பினாள். அழுகையாக வந்தது. ‘ஏன் பா இப்படி பண்ணுனீங்க? ஒரு சாதாரண குடும்பத்துல என்னைக் கட்டிக் கொடுத்துருக்கலாம்ல? காலைல வேலைக்கு போனோமா சாயங்காலம் வீட்டுக்கு வந்தோமான்னு சந்தோஷமா இருந்திருப்பேனே? இப்ப எனக்கு நிம்மதியே இல்லைப்பா. ஆதியே என்னோட பேச்சை நம்ப மாட்டிக்கார். கண்ணு முன்னாடியே ஒரு பிள்ளை வாழ்க்கை பாழாப் போறதை பாக்குறது கஷ்டமா இருக்கு பா. எனக்கு உங்களைப் பாக்கணும் போல இருக்கு பா”, என்று எண்ணிக் கொண்டாள்.

     தந்தையைக் காண ஆசை வந்தாலும் ராயரிடம் தகவல் சொல்ல வேண்டுமே என்று எண்ணி அவள் வீட்டுக்கேச் செல்ல அங்கே ராயர் ஹாலில் அமர்ந்திருக்க அவருக்கு எதிரே பரமசிவமும் அமர்ந்திருந்தார்.

     தந்தையைக் கண்டதும் “அப்பா”, என்ற படி அவரை நெருங்கியவள் வேகமாக அவரை அணைத்துக் கொண்டாள். அவள் கண்கள் கண்ணீரைப் பொழிந்தது. இதை அங்கே இருந்த யாருமே எதிர் பார்க்க வில்லை. பரமசிவத்துக்கு தான் தர்ம சங்கடமாக இருந்தது. அனைவரும் தங்களையே பார்க்க “பாப்பா, என்ன டா?”, என்று கேட்டார்.

     அவரிடம் இருந்து விலகியவள் “அப்பா நான் ரெண்டு நாள் நம்ம வீட்டுக்கு வரட்டா?”, என்று கேட்டாள்.

            மகளுக்கு என்ன ஆச்சு என்று குழப்பம் வந்தாலும் “சரி மா”, என்றவர் ராயர் புறம் திரும்பி “ஒரு ரெண்டு நாள் பிள்ளையைக் கூட்டிட்டு போகட்டுமா ஐயா?”, என்று கேட்டார்.

Advertisement