Advertisement

     மீண்டும் தனியாகிப் போன உணர்வு மதிக்கு. அனைவரும் தன்னை வெறுத்து விட்டார்கள் என்று புரிந்தது. இது வரை விக்கி அவளை எதுவும் கேக்க வில்லை என்றாலும் அவனும் முறைத்ததை பார்த்துக் கொண்டு தானே இருந்தாள்?

     “நான் நல்லது நினைச்சு தான் பண்ணுறேன். நீங்க தான் யாருமே என்னை புரிஞ்சிக்க மாட்டுக்கீங்க?”, என்று வேதனையாக எண்ணியவள் நந்தினியிடம் பேசலாம் என்று முடிவு எடுத்து அவள் அறைக்குச் சென்றாள்.

            “வாங்க அண்ணி”, என்று வரவேற்றாலும் அதில் எப்போதும் இருக்கும் சந்தோஷம் இல்லை என்று புரிந்து கொண்டாள்.

     அவள் அருகே சென்று அமர்ந்து “நந்து நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத மா. அந்த ரிஷி உனக்கு வேண்டாம். உண்மையிலே அவன் நல்லவன் இல்லை நந்து”, என்றாள்.

            “இந்த விஷய பேச வேண்டாம் அண்ணி. பிளீஸ்”

     “நான் சொல்றதை கேளு நந்து”

     “ஏன் அண்ணி நான் நல்லா இருக்க கூடாதுன்னு நினைக்கிறீங்க?”, என்று கேட்க “நந்தினி”, என்று அதிர்ந்து போய் அழைத்தாள்.

     “ஏன் எனக்கு நடக்க போற நல்லதைக் கெடுக்குறீங்க? நான் உங்களை ரொம்ப உயர்வா நினைச்சேன்? ஆனா நீங்க இப்படி இருப்பீங்கன்னு நான் எதிர் பாக்கலை. நீங்க எப்பவும் எங்க அப்பாவை கீழ இறக்கியே பேசுறீங்க? இது ரெண்டாவது முறை. முதல் தடவை உங்களுக்காக பேசினீங்க? ஆனா இப்ப எனக்காக அப்பாவை எதிர்த்து பேசுறீங்க? நான் சொன்னேனா எனக்காக பேசுங்கன்னு. நானே சம்மதம் சொன்ன அப்புறம் உங்களுக்கு என்ன பிரச்சனை? நீங்க ஏன் என் வாழ்க்கை விசயத்துல தலையிடுறீங்க? இதுக்கு மேல என் விசயத்துல தலையிட்டீங்கன்னா மரியாதை இருக்காது”, என்று சொல்ல முகத்தில் அடி வாங்கியது போல உணர்ந்தாள் மதி. அவள் மேல் இருந்த நட்பு என்ற உணர்வும் செத்துப் போனது போல இருந்தது மதிக்கு.

     நட்பு என்றால் நம்பிக்கை என்பது தானே பொருள். அதுவே பொய்த்துப் போன பிறகு வேறு என்ன இருக்கிறதாம்? “சாரி நந்து… சாரி நந்தினி. இனி நான் உன் விசயத்துல தலையிட மாட்டேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள். இப்போதும் நந்தினி மீது கோபம் வருகிறது தான். ஆனால் வெறுப்பு வந்து விட்டதா என தெரிய வில்லை. ராயர் மேல் உள்ள பாசமும் நம்பிக்கையும் தான் அவர்களை இப்படி பேச வைக்கிறது என்று புரிந்தது.

     இனி அவள் விஷயத்தில் தலையிட மாட்டேன் என்று சொன்னாலும் அவளுக்கு இந்த குடும்பத்தின் மீது அக்கறை இருக்கிறதே? பார்வதி பேசியதையும் நினைத்து பார்த்தாள். இதற்கு மேல் இதில் மூக்கை நுழைத்தால் அனைவருமே அவள் ரிஷியை லவ் பண்ணி இருக்கிறாள் என்று தான் நினைப்பார்கள் என்று புரிந்தது. இப்போது நம்பிய கணவனும் தன்னை தவறாக நினைக்க வாய்ப்பிருக்கிறது என்று புரிந்தது. ஆனாலும் நந்தினியை காப்பாற்ற வேண்டும் என்று மட்டும் தோன்றிக் கொண்டே இருந்தது.

     விக்கியிடம் பேசிப் பார்க்கலாமா என்று அவனது அறைக்குச் சென்று அவள் பேச ஆரம்பிக்கும் முன்னே “ஏன் அண்ணி இப்படி பண்ணுறீங்க? நீங்க ஏன் எப்பவும் அப்பாவை இன்சல்ட் பண்ணுறீங்க? பிளீஸ் இனி இப்படி பண்ணாதீங்க. எனக்கு சுத்தமா பிடிக்கலை”, என்று பொரிந்து விட்டான்.

     “உங்க அப்பா பாசத்துல இடி விழ”, என்று எண்ணிக் கொண்டு அதற்கு மேல் அவனிடம் எதுவும் பேசாமல் அங்கிருந்து வந்தவள் அவளது அறைக்குள் வந்தாள். அங்கே கோபத்துடன் அமர்ந்திருந்தான் ஆதி.

     அவனிடம் பேசலாம் என்று அவள் வாயைத் திறக்க அவளை ஒரு கையால் நிறுத்தி பேச விடாமல் செய்தவன் “ரெண்டாவது முறையா நீ என்னை அசிங்கப் படுத்துற மதி? நிச்சயம் உன் மனசுல என் மேல காதல் இல்லைன்னு தெரியும். ஆனா அதுக்காக என்னை புருசனா கூட மதிக்க மாட்டேனா நான் இங்க எதுக்கு இருக்கேன்? பேசாதே பேசாதேன்னு சொல்றேன்? ஆனா நீ என்னை மதிக்காம பேசிட்டு இருக்க? கடைசில உன்னை பாட்டி என்ன சொன்னாங்கன்னு கேட்ட தானே? இதெல்லாம் உனக்கு தேவையா?”, என்று கேட்டான்.

     “அப்படி எல்லாம் இல்லைங்க… அது வந்து”

     “எது எப்படியோ? இனி நந்தினி கல்யாண விசயத்துல நீ தலையிடக் கூடாது. இப்பவாது என் பேச்சைக் கேப்பேன்னு நினைக்கிறேன்”, என்றவன் கோபத்தில் அவளுக்கு முதுகு காட்டி படுத்து விட்டான்.

     உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா என்ற நிலைமை தான் மதிக்கு. இன்று அவனிடம் அவ்வளவு ஆசையாக பேசக் காத்திருந்தாள். அவனது காதலைப் பற்றி விசாரிக்க வேண்டும், தன் மனதில் அவனுக்கான இடத்தையும் சொல்ல வேண்டும் என்று அவ்வளவு ஆசையில் இருந்தாள். கடைசியில் நிலைமையே வேறு மாதிரி அல்லவா ஆகி விட்டது.

     இப்போது அவளுக்கு ஆதியை சமாதானம் செய்வதை விட இந்த திருமண ஏற்பாட்டை எப்படி தடுத்து நிறுத்த என்ற சிந்தனையே ஓடியது. யார் என்ன சொன்னாலும் ஆதியே சொன்னாலும் அவளுக்கு நியாயம் என்று பட்டதைச் செய்ய வேண்டுமே? நந்தினி அவளுக்கு நாத்தனார். அவள் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டியது அவளது கடமை அல்லவா?

     கணவன் அருகே சென்று படுத்தவளுக்கு தூக்கமே வரவில்லை. அவன் கைகளுக்குள் புகுந்திருந்தால் ஆறுதல் கிடைத்திருக்குமோ என்னவோ? ஆனால் அவன் திரும்பிக் கொண்டானே?

     மனதின் அழுத்தம் தாங்க முடியாமல் கண்களில் கண்ணீர் வடிந்தது மதிக்கு. அவள் லேசாக விசும்ப அதில் விழித்த ஆதி திரும்பி அவள் பக்கமாக படுத்து அவளைப் பார்த்தான். அவளும் கலங்கிய கண்களுடன் அவனைப் பார்க்க அடுத்த நொடி என்ன நினைத்தானோ அவளை இழுத்து அனைத்துக் கொண்டவன் அவள் காதில் “நீ என்ன பண்ணினாலும் என்னால உன்னை வெறுக்க முடியலை. ரொம்ப யோசிக்காத டி. இந்த விஷயத்தை அப்படியே விட்டுரு. அப்பா பாத்துக்குவாங்க. நீ தேவையில்லாம மூக்கை நுழைச்சா பாட்டி பேசின மாதிரி உன்னை தான் தப்பா சொல்லுவாங்க. இதை இதோட விட்டுரு பேபி. பிளீஸ் தூங்கு”, என்றவன் அவள் முகத்தை தன்னுடைய மார்பில் வைத்து அழுத்தி கொண்டான்.

     பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வில்லை என்றாலும் அவனது இந்த அரவணைப்பே போதுமானதாக இருந்தது மதிக்கு. ஆனாலும் இதை எப்படி தடுப்பது என்பதே அவளது யோசனையாக இருந்தது.

     ஒரு வழியாக ரிஷியின் வீட்டினர் பெண் பார்க்க வரும் நேரமும் வந்தது. அவர்கள் வீட்டில் இருந்து ரிஷி, அவனது தந்தை கிரி, தாய் கோமளா மூன்று பேரும் தான் வந்திருந்தார்கள்.

     அனைவரும் அவர்களை வரவேற்று அமர வைத்து பேசிக் கொண்டிருக்க “மதி எல்லாருக்கும் டீ எடுத்துட்டு வா மா”, என்றார் ராயர். ரிஷியின் கண்கள் ஒளிர்ந்தது. அவளைக் காண தானே இந்த அளவுக்கு பிளான் செய்து வந்திருந்தான்.

     “முதல்ல பொண்ணைப் பாக்குறோம்”, என்று கோமளா சொல்ல தமயந்தி நந்தினியை அழைத்து வந்து அமர வைத்தாள். சமையல் அறையில் நின்ற மதிக்கு இருப்பே கொள்ள வில்லை. அவளுக்கு ரிஷியைக் காணக் கூட பிடிக்க வில்லை. அங்கே சென்றால் தன்னை மீறி ஏதாவது செய்து விடுவோமோ என்று பயமாக இருந்தது.

     “எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு”, என்று கிரி சொல்ல “ரொம்ப சந்தோஷம் சம்பந்தி. இப்ப டீ குடிக்கலாம் தானே?”, என்று கேட்ட ராயர் மதியை அழைத்தார்.

     அதற்கு மேல் மறுக்க முடியாமல் அங்கே டீ எடுத்துக் கொண்டு வந்தாள் மதி. ரிஷி அவளை நக்கலாக பார்க்க அவன் பார்வையிலே புரிந்தது அவன் இன்னும் திருந்த வில்லை என்று.

     இதை எப்படியாவது தடுத்து நிறுத்தணும் என்று எண்ணி அவனுக்கு வேண்டா வெறுப்பாக டீயைக் கொடுத்த மதி சரியாக அதை அவன் காலிலே ஊற்றி விட்டாள்.

     அனைவரும் பதற ரிஷியோ சூடு தாங்க முடியாமல் ஆ என்று அலற “சாரி சாரி தெரியாம கொட்டிருச்சு”, என்றாள் மதி. ஆனால் அவள் வேண்டும் என்றே செய்ததாக தான் வீட்டினர் எண்ணினார்கள்.

     அதிலும் “பரவால்ல மதி. எங்க ரெஸ்ட் ரூம் இருக்கு?”, என்று ரிஷி நல்லவனாக கேட்க அனைவரும் அவன் தான் நந்தினிக்கு மாப்பிள்ளை என்று முடிவே கட்டி விட்டார்கள்.

     “நான் கூட்டிட்டு போறேன்”, என்று சொல்லி அவனை உள்ளே அழைத்துச் சென்றாள் மதி.

     போகும் போதே “என்ன டி என்னை நினைவு இருக்கு போல? வேணும்னு தானே காலிலே டீ ஊத்தின?”, என்று கேட்டான் ரிஷி.

     “பரவால்லயே, கண்டு பிடிச்சிட்டியே? இங்க பாரு, ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து ஓடிப் போயிரு. இல்லை நான் உன்னைச் சும்மா விட மாட்டேன்”, என்றாள்.

     “என்னது ஓடிப் போகணுமா? உன்னை வளைச்சு பிடிக்க தான் நான் இங்கயே வந்துருக்கேன். நீ இப்படி சொல்ற?”, என்று அவன் நக்கலாக கேட்க “என்னது?”, என்று அதிர்வாக கேட்டாள்.

     “உன் அழகை எப்படி டி மிஸ் பண்ண? எனக்கு நீ வேணும்? உன்னை மிஸ் பண்ணின அப்புறம் தான் உன்னை ஏன் விட்டோம்னு தோணுச்சு. உன்னை அடைய தான் இந்த புரப்போசலே?”, என்ற படி காலைக் கழுவினான்.

     “சி பொறுக்கி, நீ நினைக்கிறது ஒருநாளும் நடக்காது டா. நான் இந்த கல்யாணத்த நிறுத்துறேன்”

     “முடிஞ்சா பண்ணு டி”, என்று தெனாவெட்டாக சொல்லி விட்டுச் செல்ல அவனை முறைத்த படி அவளும் பின்னே வந்தாள்.

     இருவரும் வருவதைக் கண்டு மாப்பிள்ளையை மரியாதைக் குறைவாக நடத்தி இருப்பாளோ என்று அனைவரும் பதற ரிஷி சாதாரணமாக வந்து அமரவும் தான் அனைவரும் இயல்பானார்கள்.

     அடுத்து அனைவரும் திருமணம் விஷயங்கள் பேச மதிக்கு உள்ளுக்குள் எரிந்தது. “நாள் குறிச்சிட்டு சொல்லுங்க சம்பந்தி”, என்று ராயர் சொல்ல அவர்களும் எழுந்து விடை பெற்றார்கள்.

     “மதி, குங்குமம் எடுத்துட்டு வா”, என்று தமயந்தி சொல்ல மதி ஓடிச் சென்று எடுத்து வந்து கோமளாவிடம் “இந்தாங்கம்மா குங்குமம் எடுத்துக் கோங்க”, என்று சொல்லி நீட்டினாள். கோமளா எடுக்கும் போது கீழே விழுந்தது.

     “குங்குமம் கொட்டிருச்சு, அபசகுணமா இருக்கே?”, என்று கோமளா சொல்ல “ஆமாங்க நேரமே சரியில்லை. இந்த கல்யாணம் நடக்கணுமா? நல்லா யோசிச்சிக்கோங்க”, என்றாள் மதி.

     அவள் சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்து நின்றார்கள். மதி இவ்வளவு கீழ்தனமாக நடந்து கொள்வாள் என்று யாருமே எதிர் பார்க்க வில்லை. ராயருக்கே அவள் மேல் கோபமாக வந்தது.

காதல் தொடரும்….

Advertisement