Advertisement

     ராயரை எதிர்த்து ஆதி எதுவும் செய்ய மாட்டான் என்பதால் ராயரிடம் சொல்லலாம். ஆனால் அவருக்கு சாட்சி வேண்டும். சாட்சியே அவள் தானே? அவளே எப்படி பேச முடியும் என்று  கவலையாக இருந்தது.

     அவள் ஒரு மாதிரி யோசனையில் அமர்ந்திருக்க அறைக்குள் வந்த ஆதியைக் கூட அவள் கவனிக்க வில்லை. மதி என்று இரண்டு முறை அழைத்தவன் அவள் புறம் சத்தம் இல்லை என்றதும் குளிக்கச் சென்றான். அவன் குளித்து முடித்து வந்த பின்னரும் கூட அவள் அப்படியே தான் இருந்தாள்.

     உடை மாற்றி விட்டு அவள் அருகே சென்றவன் அவள் தோள் தொட்டு “மதி”, என்று அழைத்தான்.

     “ஆன்”, என்றவள் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.

     “என்ன ஆச்சு? இத்தனை தடவை கூப்பிடுறேன். நீ ஏதோ யோசிச்சிட்டே இருக்க? என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா?”

     “அது வந்து,….”, என்றவள் விஷயத்தை சொல்லலாமா வேண்டாமா என்று எண்ணினாள்.

     “சரி வா சாப்பிட போகலாம். சாப்பிட்டு வந்து பேசலாம்”, என்று சொல்ல அவளால் வேறு ஒன்றும் பேச முடிய வில்லை.

     அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க அங்கே சென்றாள் மதி. தமயந்தியுடன் சேர்த்து பரிமாறினாலும் அவள் கவனம் முழுக்க ரிஷி பற்றியே இருந்தது.

     ராயரிடமே பேசி விடலாம் என்று அவள் எண்ணும் போதே “என்ன ஆச்சு மதி ஒரு மாதிரி இருக்க?”, என்று கேட்டார் காலிங்கராயர்.

     என்ன சொல்ல என்று தெரியாமல் கணவரை திரும்பி பார்க்க அவன் தட்டை விட்டு தலையை நிமிர்த்த வில்லை. இந்த விஷயத்தில் அவனிடம் உதவி கிடைக்காது என்று எண்ணியவள் “அது வந்து மாமா நாளைக்கு நந்தினியை பொண்ணு பாக்க வராங்கல்ல? அதை யோசிச்சிட்டு இருந்தேன்”, என்றாள்.

     “இதுல யோசிக்க என்ன மா இருக்கு? உன் அத்தை கிட்டயும் பாட்டி கிட்டயும் கேட்டு எல்லா ஏற்பாட்டையும் பண்ணிரு. நாளைக்கு ஒரு நாள் லீவ் போட்டுரு. சரி தானே?”

     “அது இல்லை மாமா. நம்ம நந்தினிக்கு….”

     “நந்தினிக்கு என்ன?”

     “இல்லை…. அவ படிச்சு முடிச்சு கல்யாணம் பண்ணி வைக்கலாமே?”, என்று அவள் கேட்க அவள் ராயருடன் சரிக்கு சரி பேசுவது உண்மையிலே மற்றவர்களுக்கு எரிச்சலாக வந்தது. என்ன தான் ராயர் அவளுக்காக பரிந்து பேசினாலும் அதையே இவள் திருப்பி திருப்பி செய்ய கூடாதே என்பது தான் அவர்களது எண்ணம்.

     “அண்ணி, கல்யாணம் முடிஞ்சதும் படிக்க தானே போறேன். நானே சரின்னு சொல்லிட்டேன். அப்புறம் என்ன?”, என்று கேட்டாள் நந்தினி. ஏனென்றால் அவளுக்கு மதி ராயரிடம் கேள்வி கேட்பது பிடிக்க வில்லை. தமயந்தியும் அதே எண்ணத்தில் தான் இருந்தாள். ஆனால் அவள் மதியை ஏதாவது சொன்னால் அது ஆதி தவறாக எடுத்துக் கொள்வானோ என்று பயமாக இருந்தது. ஆனாலும் மதி மேல் கோபம் வந்தது மட்டும் நிஜம்.

     “இல்லை நந்தினி. அவசரப் பட வேண்டாம்னு தான் மாமா கிட்ட சொல்றேன்”, என்றாள் மதி.

     “அண்ணி நீங்க பேசினதை அப்பா ரசிக்கிறாங்க தான். அதுக்குன்னு அவர் பண்ணுற எல்லா விசயத்திலயும் மூக்கை நுழைக்க வேண்டாமே?”, என்று கேட்டான் இளஞ்செழியன்.

     “இல்லை தம்பி, மாமாவை மீறி ஏதாவது தப்பா நடக்கலாம் தானே? நாம நல்லா விசாரிச்சு….”, என்று அவள் இழுக்க “அப்பா விசாரிக்காம எந்த முடிவும் எடுக்க மாட்டாங்க. ஏன் உன் கைல அப்பா காலேஜ் பொறுப்பை கொடுத்தப்ப கூட உன்னால முடியாதுன்னு தான் சொன்ன. ஆனா இப்ப மெடிக்கல் காலேஜையும் சேத்து நீ திறமையா பாத்துக்கலையா? அப்பா எது செஞ்சாலும் ஒரு அர்த்தம் இருக்கும். இதுக்கு மேல எதுவும் பேசாத. நீ என்னோட மனைவி தான். நான் ஏதாவது செஞ்சா அதை தப்பு சொல்ல உனக்கு அதிகாரம் கொடுப்பேன். அப்பாவைச் சொன்னா என்னால பொறுமையா இருக்க முடியாது”, என்றான் ஆதி.

     அவனுக்கு மனைவியை மற்றவர்கள் தவறாக பார்ப்பது பிடிக்க வில்லை. அதனால் தான் அவளை தடுக்க அப்படிப் பேசினான். உண்மையிலே அவள் பேசுவதில் உண்மை இருக்கும் என்று அவன் எண்ணவே இல்லை. படிக்கும் பெண்ணுக்கு திருமணம் நடப்பதை தடுக்க நினைக்கிறாள் என்று மட்டுமே எண்ணினான்.

     ஆதியே அப்படிச் சொல்லவும் மனம் சோர்ந்து போனது மதிக்கு. ஆனாலும் விட்டுக் கொடுக்க முடியாமல் “இல்லைங்க. நான் என்ன சொல்றேன்னா?”, என்று ஆரம்பிக்க “என்ன சொல்லப் போற? நாங்க எல்லாம் விசாரிச்சிட்டோம். மாப்பிள்ளை பத்தியும் விசாரிச்சிட்டோம். இந்த கல்யாணம் நடக்கும். நீ எதுவும் குழப்பாத”, என்றான்.

     அப்படியும் அமைதியாக இருக்காமல் “மாமா நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க. நீங்க எது செஞ்சாலும் அது சரியா தான் இருக்கும்னு நானும் நம்புறேன். ஆனா இந்த விசயத்துல பிளீஸ் அவசரப் படாதீங்க”, என்று மீண்டும் ராயரிடமே பேசினாள். ஆதிக்கே அவள் பேச்சு எரிச்சலைக் கொடுத்தது. ஆனால் எதுவும் சொல்ல வில்லை. அவளே வழிய வந்து கெட்ட பெயர் வாங்கினால் அவனால் என்ன செய்ய முடியும்?

     “எப்படி நான் ஒரு விஷயம் செஞ்சா சரியா இருக்கும்னு எல்லாரும் நம்புறாங்களோ அதே மாதிரி நீ ஒரு விஷயத்தை தடுத்து நிறுத்துறேன்னா அதுல ஒரு காரணம் இருக்கும்னு நானும் நம்புறேன் மா. என்ன விசயம்னு தெளிவா சொல்லு. இந்த சம்பந்தம் வேண்டாம்னு சொல்றதுக்கு ஒரு காரணம் சொல்லு. நான் நிறுத்துறேன்”, என்றார் ராயர்.

     அவர் சொன்னதைக் கேட்டு மனம் நெகிழ்ந்தாலும் உண்மையை எப்படி உடைத்துச் சொல்வது? அது தனக்கே ஆப்பாக திரும்பினால் என்ன செய்வது என்று குழம்பி “அது வந்து மாபிள்ளையை பத்தி… அவன் நல்லவன் இல்லை மாமா”, என்று சொன்னாள்.

     “அவரை உனக்கு முன்னாடியே தெரியுமா?”, என்று அவர் கூர்மையாக கேட்க “இவர் இவ்வளவு அறிவாளியாக இருக்க வேண்டாம்”, என்றே தோன்றியது.

     “ஆமா என்னோட காலேஜ் தான்”, என்றாள்.

     “ஓஹோ, அப்படின்னா காலேஜ் படிக்கிறப்ப ரொம்ப சேட்டை பண்ணினாரா? அதைச் சொல்ல தான் தயங்குறியா? இதுல என்ன மா இருக்கு? காலேஜ் டேஸ்ல அதெல்லாம் சகஜம் மா. நீ ரொம்ப யோசிக்காத. நான் நல்லா விசாரிச்சிட்டேன். உன்னோட கிளாஸ் மேட் வேற. எனக்கு சந்தோஷம் மா”, என்று சொல்லி விட்டுச் செல்ல மதிக்கு என்ன சொல்ல என்றே தெரிய வில்லை.

     “ஏன் டி இத்தனை பேர் சொல்றாங்க ராயரை எதிர்த்து பேசாதேன்னு. ஆனா நீ உன் இஷ்டத்துக்கு பேசிக்கிட்டே இருக்க? அப்படின்னா எங்களுக்கு என்ன மரியாதை? இல்லை உன் புருசனுக்கு தான் என்ன மரியாதை? அவன் நிறுத்துன்னு சொல்லியும் பேசுற?”, என்று ஏற்றி விட்டாள் பார்வதி.

     அதே கோபத்தில் தான் அவனும் இருந்தான். இரண்டாவது முறையாக தன்னை அசிங்க படுத்துகிறாள் என்று கோபம் கணன்றது ஆதிக்கு. கணவனைத் திரும்பிப் பார்த்த மதி அவன் முகத்தில் இருந்த கோபத்தைக் கண்டு மானசீகமாக தலையில் கை வைத்துக் கொண்டாள்.

     ஆதியின் கோபத்தை விரட்டுவது முக்கியம் என்று புரிய “அப்படி எல்லாம் இல்லை பாட்டி. நான் நல்லது நினைச்சு தான் சொன்னேன்”, என்றாள் மதி.

     “எது நல்லது? ஒரு நல்ல காரியத்தை நிறுத்த நினைக்கிறது நல்லதா? நந்தினிக்கு நல்ல காரியம் நடந்தா உனக்கு ஏன் டி மனசு அரிக்குது? எங்க வீட்டுப் பொண்ணு நல்லா வாழ வேண்டாமா? நீயேன் அதைக் கெடுக்குற?”

     “அத்தை பாருங்க, பாட்டி எப்படி பேசுறாங்கன்னு. நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்க. நான் நந்தினி வாழ்க்கையை கெடுப்பேனா?”

     “இங்க பாரு மா மதி. உன்னை ஏதாவது சொன்னா ஆதி மனசு கஷ்டப் படுமோன்னு தான் அமைதியா இருக்கேன். ஆனா என் கணவரை நீ இப்படி பேசுறது எனக்கு பயங்கர கோபத்தை தான் மா கொடுக்குது? என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பாத்துருக்குறது அவளோட அப்பா. அவரை விடவா என் பொண்ணு நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க இருக்காங்க? அவர் எதுவும் விசாரிக்காம செய்ய மாட்டார். என் மகளுக்கு நல்லது நடக்கப் போகுது? நீ ஏன் அதை தடுக்குற? இப்படி அபசகுணமா பேசலாமா? எனக்கு உன் மேல கோபப் படவா? இல்லை என்ன செய்யன்னே தெரியலை”, என்று கேட்க மதிக்கு என்ன சொல்ல என்றே தெரிய வில்லை. மீண்டும் அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்து விட்டோம் என்று மட்டும் புரிந்தது.

     “எனக்கு என்னமோ இவ மேல சந்தேகமா இருக்கு. ஒரு வேளை ஒண்ணா படிக்கும் போது மாப்பிளை பையன் கிட்ட இவ காதலைச் சொல்லிருப்பாளோ? அவன் இங்க வந்தா இவ குட்டு வெளியே வந்துருமோன்னு பயப்படுறாளா?”, என்று பார்வதி கேட்க “பாட்டி”, என்று இரண்டு குரல் காட்டமாக வந்தது.

     ஒரு குரலுக்கு சொந்தக்காரன் ஆதி. மற்றொன்று மதி தான். “நீங்க பேசுறது என்னோட பொண்டாட்டியைப் பத்தி. இனி இப்படி பேசினீங்கன்னா நான் சும்மா இருக்க மாட்டேன். அவ மனசுல முதலும் கடைசியுமா வந்த ஆம்பளை நான் மட்டும் தான். அவளை நான் நம்பினா போதும். வேற யாரும் அவளை தப்பா சொன்னா அவங்களை நான் மன்னிக்கவே மாட்டேன்”, என்று பாட்டி புறம் திரும்பிச் சொன்னவன் “ரூமுக்கு வா டி உனக்கு இருக்கு”, என்று மனைவிக்கு மட்டும் கேட்குமாறு முணுமுணுத்து விட்டு சென்று விட்டான்.

     ஆதி தனக்காக பேசியது சந்தோசமாக இருந்தாலும் இப்போது அதை அனுபவிக்க முடியாமல் “இங்க பாருங்க பாட்டி உங்களுக்கு என்னைப் பிடிக்காது தான். இது வரை என்னை நிறைய குறை சொல்லிருக்கீங்க? எங்க அப்பாவைச் சொல்லிருக்கீங்க? அதெல்லாம் பெரியவங்கன்னு பொறுத்துகிட்டேன். ஆனா என்னோட கேரெக்ட்டரை தப்பு சொன்னீங்க நான் உங்க வயசுக்கு கூட மரியாதை கொடுக்க மாட்டேன். என்னைத் தப்பா பேசுறது இது தான் கடைசியா இருக்கணும்”, என்று சொன்னவள் வீட்டுக்கு வெளியே சென்று தோட்டத்தில் அமர்ந்து கொண்டாள்.

     வெகு நேரம் அங்கேயே அமர்ந்திருந்தாள். இருந்த கோபத்தில் யாரும் அவளைத் தேடி வரவில்லை. சாப்பிட கூட அவளை அழைக்க வில்லை. ஒரு மணி நேரம் அங்கேயே அமர்ந்திருந்தவள் தலை வலிக்கவும் மீண்டும் வீட்டுக்குள் வந்தாள். அவரவர் அறைக்குள் சென்று அடைந்திருந்தனர்.

Advertisement