Advertisement

அத்தியாயம் 10

நேசம் கொண்ட நெஞ்சினில் 

என்னவளின் பிம்பம் 

மட்டுமே காவியமாய்!!!

     “இவனா? இவனா நந்துவுக்கு மாப்பிள்ளை? கடவுளே தரகர் இவனையா காலைல காட்ட வந்தார்? நான் அப்பவே பாத்திருந்தா எல்லாம் நிறுத்திருப்பேனே? இப்ப நான் சொல்ல வரதை யார் கேப்பா? சொல்லணும். கேக்க வைக்கணும். ஆனா நாம இவனைப் பத்தி என்னன்னு சொல்றது? என்ன சொல்ல முடியும்? இவனுக்கு எப்படி நந்தினியைக் கட்டி வைக்க முடியும்? கூடாது கூடாது. நந்தினி நல்ல பொண்ணு. இந்த குடும்பம் நல்ல குடும்பம். என் குடும்பமும் கூட. இவன் உள்ள வந்தா யாரும் நல்லா இருக்க முடியாது. கடவுளே நான் இப்ப என்ன பண்ணுவேன்? ஒரு வேளை திருந்திருப்பானோ? சேசே பாம்போட குணம் எப்பவுமே மாறாது. இவனும் மாறிருக்க மாட்டான். இவன் நந்தினிக்கு கூடவே கூடாது”, என்று எண்ணினாள் மதி.

     “என்ன அண்ணி போட்டோவை அப்படி பாத்துட்டு இருக்கீங்க?”, என்ற நந்தினியின் குரலில் நடப்புக்கு வந்தவள் “உனக்கு உண்மையிலே மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா நந்து?”, என்று கேட்டாள்.

     “பிடிச்சிருக்கு அண்ணி. அழகா தானே இருக்கார்? உங்க கண்ணுக்கு நல்லா தெரியலையா? உங்களுக்கு அண்ணன் மட்டும் தான் அழகா தெரிவார். எனக்கு உண்மையிலே பிடிச்சிருக்கு அண்ணி. அதுவும் அப்பா சொன்னா சரியா தான் இருக்கும். நாளைக்கு பொண்ணு பாக்க வராங்க. நீங்க தான் நான் ரெடியாக ஹெல்ப் பண்ணனும். அஞ்சனாவையும் கூப்பிட்டேன். அவ அவளோட காலேஜ் டூர் போறதா சொல்லிட்டா”

     “சரி நந்து, நான் ஹெல்ப் பண்ணுறேன். சரி நீ படி. நாம அப்புறம் மீட் பண்ணலாம்”, என்று சொல்லி விட்டு அறைக்குள் வந்தவளுக்கு கோபமும் அழுகையும் சேர்ந்தே வந்தது. இதை எப்படி தடுக்க என்று கவலையாக இருந்தது.

     ரிஷியைப் பற்றி நினைக்கும் போதே உள்ளம் எல்லாம் எரிந்தது. பழைய விஷயங்கள் நினைவுக்கு வந்தது. ராயர் குடும்பம் அளவுக்கு இல்லாவிட்டாலும் கொஞ்சம் பணக்காரன் தான். அந்த பணத் திமிர் அவன் கண்களிலே தெரியும். திமிர் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அவன் ஒரு காமகொடூரன். பெண்களை போதைப் பொருளாக பார்ப்பவன்.

     அவன் மதியுடன் தான் காலேஜ் படித்தான். முதலில் அவளுக்கு அவனைப் பற்றி தெரியாது. அவனும் அவளது கிளாஸ் அவ்வளவு தான் அவனைப் பற்றி அவளுக்கு தெரியும். ஆனால் அவனுக்கு மதியின் மேல் அளவு கடந்த ஆசை இருந்தது. அவளைக் கண்டதும் அவனுக்கு காதல் தோன்றுவதற்கு முன்னமே காமம் தோன்றியது தான் கொடுமை.

     அவளை அடைய என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்து அவளிடம் ரோசை நீட்டியவன் “ஐ லவ் யு வான்மதி”, என்றான்.

     அவன் பேச்சில் ஒரு நொடி திகைத்தாலும் “சாரி ரிஷி எனக்கு இந்த காதல் கத்திரிக்காய் மேல எல்லாம் நம்பிக்கை இல்லை. வேணும்னா உங்க அப்பா அம்மாவை எங்க அப்பா கிட்ட பேசச் சொல்லுங்க. நான் எங்க அப்பா நம்பர் வேணும்னா தரேன்”, என்று சொல்லி செல்ல அவன் திகைத்து விழித்தான். அவள் மறுக்கவும் இல்லை. அதே நேரம் அவனை அவள் ஆதரிக்கவும் இல்லை என்பது அவனுக்கு புரிந்தது.

     வீட்டில் பேசினால் அவள் தனக்கு கிடைப்பாள் என்று அவனுக்கு தெரியும். ஆனால் இந்த வயதிலே எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று அவன் வீட்டில் எப்படிச் சொல்வான்?  திருமணம் செய்யும் வயதா இது? அதனால் அடுத்த நாளே அவளை தனியே சந்தித்தவன் “இங்க பாரு மதி, எங்க வீட்ல அப்படி எல்லாம் பேச முடியாது. ஏன்னா நமக்கு இன்னும் படிப்பே முடியலை. இப்போதைக்கு நீ என் காதலை மட்டும் ஏத்துக்கோ. நாம படிச்சு முடிக்கிற வரை லவ் பண்ணுவோம். அப்புறம் கல்யாணம் பண்ணலாம்”, என்றான்.

     அவனை முறைத்துப் பார்த்தவள் “அதான் சொன்னேனே எனக்கு லவ்ல எல்லாம் விருப்பம் இல்லைன்னு. நாம படிச்சு முடிக்கிற வரை நல்ல பிரண்டா இருப்போம்”, என்றாள்.

            “அதெல்லாம் முடியாது நான் பிக்ஸ் பண்ணிட்டேன். நீ தான் என் லவ்வர்”

     “என்ன விளையாடுறியா? அதெல்லாம் முடியாது. உன் பேச்சே சரி இல்லை. உன் கிட்ட பிரண்டா இருக்க கூட நான் விரும்பலை.  இனி என்னை டிஷ்டப் பண்ணாத”

     “அப்ப என் கூட ஒரு நாள் கம்பெனி கொடு. அப்புறம் கண்டிப்பா டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்”, என்று ஏளன சிரிப்புடன் சொல்ல அவனுடைய வக்கிர புத்தியே அப்போது தான் அவளுக்கு புரிந்தது.

            “இன்னொரு தடவை என் கிட்ட இப்படி வந்து பேசின நேரா உங்க வீட்ல உன் அம்மா அப்பா கிட்ட வந்து சொல்வேன் நீ பேசினதை. நான் மத்த பொண்ணுங்க மாதிரி சாஃப்ட் கிடையாது. போ இங்க இருந்து”, என்று சொல்ல அதற்கு பிறகு அவன் அவளை தொல்லை செய்ய வில்லை. இருவரும் முறைப்புடனே கடந்து சென்று விடுவார்கள்.

     சில நாட்கள் அமைதியாக இருந்தவன் அவளது தோழியான நிகாவிடம் வேலையைக் காட்டினான். அவன் அழகில் மயங்கி அவன் பேச்சை நம்பி அவன் மீது காதல் கொண்டாள் நிகா. அவளை எச்சரித்த மதி கூட அவளுக்கு துரோகியாக தான் தெரிந்தாள். “நான் அவனை லவ் பண்ணுறேன். உனக்கு இப்படி ஒரு அழகன் கிடைக்கலைன்னு பொறாமை. என் விசயத்துல நீ தலையிடாதே. இன்னையோட நம்ம பிரண்ட்ஷிப் கட்”, என்று சொல்ல மதிக்கு என்ன சொல்ல என்று தெரிய வில்லை. பட்டு தெளியட்டும் என்று விட்டுவிட்டாள்.

     கடைசியில் ஒரு நாள் நிகா கல்லூரிக்கு வரவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் அவள் தற்கொலை செய்த செய்தி வந்தது தான் மிச்சம். அதுவும் வயிற்றில் குழந்தையோடு. அதை போலீஸ் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் பார்த்து சொல்லி யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என்று கேட்க இல்லை என்று சொன்ன அவளது பெற்றோர்கள் இதை வெளியே சொல்ல வேண்டாம் என்றும் வயிற்று வலியால் செத்து விட்டாள் என்றும் சொல்லச் சொன்னார்கள். கேஸ் கொடுக்கவும் மறுத்து விட்டார்கள்.

     ஆனால் இந்த விஷயத்தை நிகாவின் தந்தை மதியிடம் சொல்ல மதிக்கு அது யார் குழந்தை என்று தெரிந்தது. அதை அவளது பெற்றோரிடம் சொல்லி போலீசில் சொல்ல சொல்ல “வேண்டாம் மா, செத்தவ செத்தது தான். வயிறு வலி தாங்க முடியாம தற்கொலை பண்ணிக்கிட்டான்னு தான் எல்லார்க் கிட்டயும் சொல்லிருக்கோம். இப்ப கேஸ் போட்டா என் மகள் பெயர் நாரிரும். செத்துப் போன அவளை நாங்க கேவலப் படுத்த விரும்பலை. அவ பண்ணின தப்புக்கான தண்டனையை அவளே தேர்ந்தெடுத்துக்கிட்டா. இதை இப்படியே விட்டுரு”, என்று சொல்லி விட்டார்கள்.

     அவர்களே சொன்ன பிறகு என்ன செய்ய என்று தெரியாமல் மதி அமைதியாகி விட்டாள். ஆனால் ரிஷி அதே கிளாசில் இருந்த பனிமலர் என்ற பெண்ணைக் குறி வைக்க அதைக் கண்ட மதி ரிஷி தன்னிடம் காதலைச் சொல்லி தகராறு செய்கிறான் என்று சொல்லி காலேஜில் கம்ப்லைண்ட் செய்ய ரிஷிக்கு சஸ்பென்சன் கிடைத்தது.

     அதற்கு பின் இருவரும் எதிரும் புதிரும் தான். மதியின் முன் வந்து நின்றவன் “ஏன் இப்படி பண்ணின? நான் தான் இப்ப உன் வழில வரலைல்ல? ஏன் அப்படி கம்ப்லைண்ட் பண்ணின?”, என்று கேட்டான்.

     நிகா இறந்தது இவனால் தான் என்று தனக்கு தெரியும் என்று இவனுக்கு தெரிந்தால் இவன் தன்னை ஏதாவது செய்ய வாய்ப்பிருக்கிறது என்று எண்ணியவள் “நீ பனிமலர் கிட்ட காதலைச் சொல்லிருக்க? அதான் கம்ப்லைண்ட் பண்ணினேன்”, என்றாள்.

     “நான் அவ கிட்ட காதலைச் சொன்னா உனக்கு என்ன டி?”

     “இந்த வாடி போடி எல்லாம் என் கிட்ட வச்சிக்காத. நீ நம்ம கிளாஸ்ல இருக்குற எல்லா பொண்ணுங்க கிட்டயும் லவ்வை சொல்லுவ. நான் வேடிக்கை பாக்கணுமா? இனி யாருக் கிட்டயாவது வச்சிக்கிட்ட உனக்கு இருக்கு”, என்றாள்.

     “நான் என்ன பண்ணினா உனக்கு என்ன? தேவையில்லாம என்னை சீண்டி சஸ்பென்சன் வாங்க வச்சிட்டல்ல? இதுக்கு நான் உன்னை பழி வாங்காம விட மாட்டேன் டி”, என்று சொல்லி விட்டுச் சென்றான். ஆனால் அடுத்து அவன் ஒன்றும் செய்ய வில்லை. கல்லூரி முடிந்த பிறகு அவள் அவனைப் பார்க்கவும் இல்லை. இது தான் அவள் வாழ்வில் நடந்தது.

            இதை எப்படி அவள் வீட்டில் சொல்வாள்?  என்னை லவ் பண்ண சொன்னான், தப்பா கூப்பிட்டான் என்று சொன்னால் இவர்கள் நம்புவார்களா? இல்லை இவனால் ஒரு பெண் இறந்து விட்டாள் என்று சொன்னால் நம்புவார்களா? அதற்கு சாட்சி ஏது தன்னைத் தவிர? அது மட்டுமில்லாமல் இந்த இரண்டு விஷயம் வெளிய தெரிந்தாலும் மானக்கேடு தான்.

     முதல் விசயம் வெளியே தெரிந்தால் தானும் அவனை லவ் செய்தது போலவும் அவன் கெட்டவன் என்று தெரிந்து தான் விலகி விட்டதாகவும் வீட்டினர் எண்ணிக் கொள்ளலாம். பார்வதி பாட்டி நிச்சயம் அப்படி தான் புரளியைக் கிளழப்பும். அது அவளது மானத்துக்கு கேடு தரும். அதை காலிங்கராயர் எப்படி பொறுத்துக் கொள்வார்? அதை விட ஆதி அவன் எப்படி இதை பொறுத்துக் கொள்வான்? ஆதி அவளை தவறாக நினைத்தால் அதை அவளால் தாங்க முடியாதே?

     அவனிடம் சொன்னால் அவன் நம்புவானா? நிச்சயம் மாட்டான். அறைக்கு வெளியே ஒரு மாதிரியும் அறைக்கு உள்ளே ஒரு மாதிரியும் இருப்பவன் எப்படி தன் பேச்சை நம்புவான்? அப்படியே நம்பினாலும் ராயர் பேச்சுக்கு எதிர் பேச்சு பேச மாட்டான் என்று அவளாகவே முடிவு செய்தாள்.

     அவள் இந்த விஷயத்தை வெளியே சொல்ல தயங்க இரண்டாவது காரணம் இறந்து போன நிகாவுக்கு கெட்ட பெயர் கிடைக்கும். மதி ரிஷியை பற்றி நிகாவைப் பற்றிச் சொன்னால் நிச்சயம் ராயர் அப்படி ஒரு கோணத்தில் விசாரிப்பார். நிகா வீட்டில் சென்று விசாரித்தால் அவர்கள் உண்மையைச் சொல்ல மாட்டார்கள். பின் மதி சொன்னது பொய் என்று ஆகி விடும். மதி பக்கம் யார் சாட்சி சொல்வார்கள்? அதனால் இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் எப்படி நந்தினியை காப்பாற்ற என்று குழப்பமாக இருந்தது அவளுக்கு.

     அதை விட இந்த வீட்டுக்கு அவன் மருமகனாக வந்து விட்டால் தன்னுடைய நிலைமை என்ன ஆகும் என்று எண்ணும் போதே திக்கென்று இருந்தது. அவள் மேல் கை வைக்கவும் அவன் தயங்க மாட்டான் என்று அவளுக்கு தெரியும். அவள் தான் அவனை அறைக்கு அழைத்தாள் என்று பழியைக் கூட போடுவான். ஆதி கூட அந்த நேரம் அவன் பக்கம் தான் நிப்பார் என்று எண்ணி அவளுக்கு தலைவேதனையாக இருந்தது.

Advertisement