Advertisement

“என் அப்பா அவனை நினைச்சு அவ்வளவு வேதனைபடுவார், எனக்கும் அவன் நல்ல அண்ணனா ஒரு நாள் கூட இருந்ததில்லை, ஒரு உதவி, ஒரு அக்கறை, ஒரு பாசம் எதுவும் இருக்காது, உன் அண்ணா எல்லாம் பார்த்தா எனக்கு மட்டும் ஏன் இப்படின்னு.. இப்போ.. அப்பா இல்லாம அவர் தொழிலை நாம விட்டுட கூடாதுன்னு எனக்கு பிடிச்ச வேலையை விட்டு அதை எடுத்தேன்.. இவன்.. இவன் அதை.. என்னால இவன்கிட்ட சண்டை போட்டு வாங்க முடியல, கோவப்பட்டா கூட அமைதியா போறான்..”

“நான்.. நான் இப்போ எல்லாம் என்ன பேசினாலும் கண்டுக்க மாட்டேங்குறான், என்கிட்ட பேசுறதே இல்லை, என்னை பார்க்கிறது கூட இல்லை. நான்.. ஆதிரா விஷயம்.. அது தெரிஞ்சா என்ன ஆகுமோன்னு வேற பதைக்குது, அவன் மேல அவ்வளவு கோவம் வைச்சு, நான் கல்யாணம் பண்ணி, என்னால வாழவே முடியாம, ஆதிராவும்.. அவ என்னை பேச,  என்னால முடியல காவ்யா, எனக்கே என்னை நினைச்சா சில சமயம் வெறுப்பா இருக்கு, என் அப்பாக்கு பார்க்கிறேன்னு நான்.. நான் இப்போ அவர் மகனா.. அந்த தகுதி இழந்துட்டுனோன்னு..”

“இவன் ஆடுறது எல்லாம் ஆடிட்டு இப்போ என் அப்பா இல்லாதப்போ நல்லவனா,  நான் கெட்டவனா..? இவன் எனக்கு நல்ல அண்ணனா இருந்திருக்கலாம் இல்லை காவ்யா, என்னை ஏன் இப்படி, நான் அவன்கிட்ட என்ன கேட்கிறேன், எனக்கு நல்ல அண்ணனா.. என் அப்பாவும் இல்லை, நான் யாருகிட்ட போவேன், என்னை.. என்னை என் அப்பா தாங்கி செல்லம் கொடுத்து, இப்போ நான் தனியா.. தப்பா நிக்கிறேன். இவன் என்னை..” அதற்கு மேல் அவனுக்கு முடியவில்லை. அப்படியே டேபிளில் கவிழ்ந்துவிட்டான். அழுகிறான் என்பது நன்றாக தெரிந்தது.

ஏதோ செய்ய நினைத்து ஏதோ செய்து நிக்கிறான்.

அப்பா இல்லா இடத்தில் அண்ணன் அரவணைப்பை எதிர்பார்க்கிறான்.. காவ்யாவிற்கு இரண்டும் மிக தெளிவாக புரிந்தது.

என்னதான் சூர்யா அவளுக்கு நெருங்கிய நண்பன் என்றாலும் அவன் செய்துவிட்ட செயலை அவளால் ஆதரிக்க முடியாது. இத்தனை வருட தோழமை சூர்யாவிடம். அவன் செயல் அவளுக்கு அதிர்ச்சி, கோவம்.

எல்லோருக்குள்ளும் ஒரு டெவில் இருக்கும் என்பது எவ்வளவு சரியாக போய்விட்டது. நிரூபித்துவிட்டானே நண்பன். அந்த டெவிலை கட்டுப்படுத்தாமல் கட்டவிழ்த்துவிட்டானே..? அண்ணா இதுவரை செய்ததுக்கு இவன் சமயம் பார்த்து செய்துவிட்டான். ஒரே நிம்மதி. கொண்டாடாமல் குறுகுகிறான். வேதனை படுகிறான்.

உணர்ந்து துக்கப்படுபவனை அப்படியே விட அவள் தோழமை ஒத்துக்கொள்ளவில்லை. தேற்றி கூட்டி கொண்டு சென்றாள். அதன் பிறகும் அது பற்றி அவனிடம் பேசவில்லை. ஆபிஸ் விஷயங்கள் மட்டும். முன் போல அந்த நெருக்கமும் இல்லை. நண்பனின் செயலை ஏற்கா விலகல்.

அவளின் விலகல்.. அதுவும் சூர்யாவை வேதனைப்படுத்தியது. என்னதான் அவனுக்கு நான்கு நண்பர்கள் என்றாலும் அதில் காவ்யா தான் நெருங்கிய தோழமை, அவளிடம் அவன் மறைத்தது எல்லாம் ஆதிரா விஷயம் மட்டுமே. சொல்ல முகம் இல்லை. நிச்சயம் இதை அவள் ஏற்க மாட்டாள் என்று நண்பனுக்கு தெரியுமே..? இப்போது அண்ணா இடையில் வரும் போது சொல்லிவிட்டான்.

ஏன் சொன்னான் அவனுக்குள்ளும் காவ்யா அவனுக்கு அண்ணியாக வந்தால் நன்றாக இருக்குமே என்று ஆசை. அப்போதும் அண்ணனுக்கு மனைவியாக காவ்யா  வேண்டாம். ஆனால் அவனுக்கு அண்ணியாக காவ்யா என்றால் அது பிடித்தம். வேண்டும். ம்ஹ்ம்.. விசித்திர மனநிலை.. இல்லை.. தன்னார்ந்த மனநிலை. அண்ணனின் பாசம் கிடைக்கா, ஏமாற்றம் கொண்ட தம்பியின் தன்னார்ந்த கோவம். அண்ணனிடம் கிடைக்கா உறவு அண்ணியிடம் தனக்கு வேண்டும் என்ற தன்னார்ந்த ஏக்கம்.

ஆனால் அந்த ஏக்கம் தீர காவ்யா இடம் கொடுப்பதாக இல்லை. அவள் அவளுடைய வேலையை பார்த்து கொண்டிருந்தாள். வீட்டிலும் அவளுக்கு வரன் தேடுவது தீவிரமாக சென்று கொண்டிருந்தது.

வயது ஆகிறது. எப்போது மகள் சொல்வாள் என்று காத்திருந்தவர்கள் அந்த மாத இறுதிக்குள் வரனை ரெடி செய்துவிட்டனர். முடிவு காவ்யா கையில் தான். அவளிடம் தகவல்களை கொடுத்துவிட்டனர். பார்த்து சொல்கிறேன் என்றாள் மகள். நேரம் கொடுத்தனர்.

வாசுதேவனுக்கும் மகள் திருமணத்திற்கு நேரம் தேவைப்பட்டது. உடனே வைக்க முடியாத நிலை. எடுத்த முக்கியமான வேலை அவரை போட்டு அழுத்தியது. சூர்யா திருமண பார்ட்டியில் வைத்து எடுத்த ரகசிய பிரமாணம். அதை செயல்படுத்தும் முனைப்பில் அனைவரும்.

முன்பே.. ஐந்து  வருடங்களுக்கு முன்பே செய்த வேலை. அதற்கான பலன் நல்லது, கெட்டது இரண்டில் வந்தது. இந்த முறை நல்லது மட்டுமே நடக்க நினைத்து போராட்டம்.. ஓட்டம். கம்பன் வீரய்யன் முதல் கொண்டு..! அப்போது இருந்த பதட்டத்தை விட இப்போது இன்னும் அதிகம் இருந்தது.

இதோ அடுத்த கூட்டம் மற்றொரு திருமண வரவேற்பில். இவர்கள் வட்டத்திலே ஒரு திருமணம். பிரம்மாண்ட திருமணம்.  ராம்தாஸ் செல்கிறார். அவரின் ரகசிய கூட்டத்தின் ஆட்களும் வருகின்றனர். அவர்களில் பலரின் பாதுகாப்பும் கம்பன் கையில் தான் வாசுதேவன் உட்பட.

தொழில் முறை பழக்கம் என்பதால் குடும்பத்தினரும் வருகின்றனர்.  சூர்யா, ஆதிரா. அங்கு வாசுதேவன் வீட்டில் சுதா தவிர மூவர். காவ்யாவிற்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையும் வருவதாக பேச்சு.

இரவு  ஒன்பது மணிக்கு மேல் தான் ஒவ்வொருவராக வரவேற்பிற்கு சென்றனர். சூர்யா, ஆதிரா முதலில் வந்தனர். அடுத்து காவ்யா குடும்பத்துடன் வர, சூர்யா எழுந்தான். ஆதிரா பார்த்தும் முகம் திருப்பி கொண்டாள். சூர்யா பார்த்தவன் மனைவியை விட்டு தான் மட்டும் காவ்யா குடும்பத்திடம் பேசினான். காவ்யா தானே சென்று ஆதிராவிடம் பேச, ஆதிரா எதிர்பார்க்காமல் எழுந்து நின்று பேசினாள்.

அடுத்து ராம்தாஸ் மனைவியுடன் வந்தார். பின்னால் கம்பன் வீரய்யன். அவர்கள்  நேரே மேடைக்கு சென்று கிப்ட் கொடுத்து வந்தனர். சூர்யா, ஆதிராவிடம் பேசிய ராம்தாஸ், வாசுதேவன் குடும்பத்திடம் பேசினார். ஒரு மாதம் கடந்து இன்று தான் திரும்ப கம்பன் முன் காவ்யா. ராம்தாஸ் பார்வை காவ்யா மேல் ஒரு நொடி பதிந்து, கம்பனிடம் சென்றது. அவன் கருப்பு கண்ணாடியில் எங்கு பார்க்கிறான், யாரை பார்க்கிறான் என்று என்ன தெரியும்..?

ராம்தாஸ் மற்றவரிடம் பேச சென்றார். இவர்கள் ஒன்றாக மேடையேறினர். ஒன்றாக போட்டோ எடுத்தனர். ஒன்றாக உணவுக்கு சென்றனர். கம்பன் கண்கள் அவர்கள் மேல் படிந்தது. அழுத்தமாக காவ்யா மேல்.

ராம்தாஸும் மனைவியுடன் உணவுக்கு சென்றார். கம்பன் முதலில் சென்று உணவு பாதுகாப்பு குறித்து அவன் டீம் ஆட்களிடம் கேட்டறிந்து, அழைத்து சென்றான். அவர்கள் உணவு எடுக்க, இவன் தள்ளி நின்றான். இவர் சாப்பிட மாட்டாரா..? காவ்யா மனதில் கேள்வி எழுந்தது.

“சார்..” பாலா வந்தான். கம்பனிடம் ஏதோ சொன்னான். கம்பன் வீரய்யன் முக இறுக்கம் நொடி குறைந்து இறுக்கம் கண்டது.

இங்கு சஞ்சய் போன் ஒலித்தது. “மாப்பிள்ளை  வர முடியலையாம், ஏதோ முக்கியமான மீட்டிங்காம்..” பேசி வைத்து சொன்னான். காவ்யா கண்கள் அதிர்ந்து கம்பன் பக்கம் சென்றது. அவன் இவளை, இவள் அதிர்வை தான் பார்த்திருந்தான்.

என்னை வைச்சே நீ மாப்பிள்ளை பார்ப்பியா..?

கூட்டம் ஓரளவு அடங்கியதும், இந்த பத்து பேர் யார் கவனத்தையும் கவராமல் ரகசிய ரூம் சென்றனர். கம்பன் அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்து வெளியே வந்தான். மணமகன் நண்பர்கள், உறவினர்கள் என்று ஆட்டம் களை கட்டி கொண்டிருந்தது. கம்பன் பாதுகாப்பில் தன் முழு கவனத்தை வைத்தான். ட்ரோன் அங்கங்கு பறந்து கொண்டிருக்க, கம்பன் மொபைலில் அதை பார்த்திருந்தான். நேரம் சென்று கொண்டிருந்தது.

வரவேற்பில் விருந்தினர்கள் குறைய ஆரம்பிக்க, சஞ்சய் “மீட்டிங் லேட் ஆகுமா..? நாங்க கிளம்பலாமா..?” என்றான் கம்பனிடம். நேரம் பார்க்க அதிக நேரம் தான். இன்னும் இவர்கள் கார் கிளம்பவில்லை என்றால் தேவையில்லாத பேச்சு. வெளியே ஆட்கள் நோட்டம் விட்டு கொண்டிருப்பார்கள்.

உள்ளே சென்று ராம்தாஸிடம் பேசினான். அவரும் “அனுப்பிவிட்டுடு..” என்றார். கம்பன் வெளியே வந்தவன் முதலில் ராம்தாஸ் மனைவியை அனுப்பி வைத்தான். “விண்டோ ஸ்க்ரீன் இழுத்து விடுங்க மேடம்..” அவரிடம் சொன்னவன், பாலாவை உடன் அனுப்பி வைத்தான்.

அடுத்து ஓவ்வொருவராக அனுப்பி வைத்தான். பேமிலி வராதவர்கள் காரை மட்டும் கூட அனுப்பிவிட்டான். வாசுதேவன் குடும்பம் காத்திருந்தது. அவர்களுக்காக சூர்யா, ஆதிராவும். “கேட்டது நான், நம்மளை அனுப்புறானா பாரு..” சஞ்சய்  முணுமுணுத்தான்.

மணமக்கள், அவர்கள் குடும்பம் கூட கிளம்பிவிட்டது. “இவன் வேணும்ன்னு பண்றான்..” கடுப்பான சஞ்சய்,  “நாம கிளம்பலாம்..” என்றான்.

“ஜி.. அது முடியாது..” என்றான் சூர்யா.

“பார்க்கிறேன்..” என்றவன் கார் டிரைவருக்கு அழைக்க, எடுத்தது கம்பன் டீம். “கார் எடுத்துட்டு வர சொல்லு..” சஞ்சய் சொல்ல,

“எங்க சார் சொன்னாதான் கார் வரும் சார்..” என்று வைத்தான் அவன்.

சஞ்சய் காண்டாகி கம்பனிடம் சென்றவன், “எங்களை அனுப்புற ஐடியா இல்லையா..?” என்றான்.  கம்பன் பதில் சொல்லாமல் சென்றுவிட்டான்.

“சார்.. நீங்க கிளம்புங்க..” சூர்யாவிடம் ஆள் வந்தது. காரும் வந்துவிட்டது. இனி விட மாட்டார்கள் என்று புரிந்து சூர்யா, மனைவியுடன் கிளம்பினான். சஞ்சய், காவ்யா மட்டும் நின்றனர். கம்பன் டீம் ஆட்கள் அவ்வளவு தான்.

இருவருக்கும் காபி வந்தது. “எனக்கு வேண்டாம்..” சஞ்சய் மறுத்துவிட்டான். காவ்யாவிற்கு வேண்டும் போல இருக்க எடுத்து கொண்டாள்.

கம்பன் வந்தான். வெகு இயல்பாக, உரிமையாக காவ்யாவின் மற்றொரு பக்கம் உள்ள சேரில் அமர்ந்தான். அவனுக்கும் காபி வந்தது. எடுத்து குடித்தான்.  காவ்யா காபி குடித்து முடிக்க, அவளிடம் இருந்து கப் வாங்கி தன் காலி கப்புடன் இணைத்து போட்டு வந்தான்.

‘கல்யாணம் பேசிட்டிருக்கிற நேரம் இதென்ன..?’ பல்லை கடித்தான் சஞ்சய்.

காவ்யா ஆராய்ச்சியாக பார்த்திருந்தவள், “முன்னாடி எல்லாம் என்னை நிமிர்ந்தே பார்க்க மாட்டீங்க, இப்போ பக்கத்துல உட்காருறீங்க..?” அவள் சந்தேகத்தை கேட்டுவிட்டாள். சஞ்சய் அப்படியா என்று பார்த்தான்.

“கல்யாணம் பண்ணவும் தான் கேட்டேன்..”  என்றான் கம்பன்.

“அதுவும் தான்.. என்ன திடீர்ன்னு, எனக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது சொன்னீங்க..? இப்போ ஏன் இப்படி எல்லாம்..?” காவ்யா மேலும் கேட்டாள்.

கம்பன் அவள் பக்கம் நன்றாக திரும்பி அமர்ந்தவன், “என்னை கல்யாணம் பண்ணிக்கோ, எல்லாத்துக்கும் பதில் சொல்றேன்..” என்றான்.

“நான் சம்மந்தப்பட்ட விஷயத்தை சொல்ல கல்யாணம் பண்ணனும்ன்னு இல்லை..” காவ்யா சொல்ல,

“அதுல நானும் சம்மந்தப்பட்டிருக்கேன், என்னை பத்தி தெரிஞ்சுக்கணும்ன்னா என் பொண்டாட்டியா இருந்தா மட்டும் தான் முடியும்..” என்றான் அழுத்தமாக.

“அவளுக்கு வரன் கிட்டத்தட்ட முடிவான மாதிரி தான் வீரா.. இதை விடுங்க..” சஞ்சய் கண்டிப்புடன் சொன்னான்.

“அப்படியா..?” கம்பன் மெல்ல சிரித்தான்.

“எனக்கு ஒரு வாய்ப்பை கொடுக்காம மறுக்கிறது நல்லா இல்லை காவியமே..” கம்பன் அதே சிரிப்புடன் தன் முகம் பார்த்திருந்த காவ்யாவிடம் சொன்னான்.

‘காவியம்..’ கடைசியாக அவளை  எப்போது இப்படி கூப்பிட்டான். காவ்யாவிற்கு நினைவே இல்லை.

“என்ன வாய்ப்பு..?” காவ்யா பொறுமையாக கேட்டாள். சூர்யா செய்தது அவளின் மனதில் ஓடி கொண்டிருந்ததால் வந்த பொறுமை இது.

“கல்யாணம் தான்..” கம்பன் சொன்னான்.

“வாய்ப்பா வாழ்க்கையை கேட்பாங்களா..?” காவ்யா கேட்க,

“நான் கேட்கிறேன் தானே.. கொடுங்க காவியமே..” என்றான் கம்பன்வீரய்யன்.

Advertisement