Advertisement

கம்பன் காதல் கொண்டு 9

“இந்த வீடு தானா..? பரசுராம் சார்  பேமிலி நம்ம ஏரியா பக்கம் தான் இருக்கிறாங்கன்னு இப்போ தான் தெரியுது..” சோமசுந்தரம் சொன்னவர், காரை கேட்டின் முன் நிறுத்தினார். செக்கியூரிட்டி யார் என்ன என்று விசாரித்து கேட்டை திறக்க, சோமசுந்தரம் கார் வீட்டிற்குள் சென்றது.

“யாரையும் காணோம் உள்ள போலாமா..?” சோமசுந்தரம் வாசலுக்கருகில் தயங்கி நிற்க,

“போலாம் சார்..” என்றார் உடன் வந்த கணேசன். இவர் பரசுராமின் நண்பர். இருவரும் முன் ஹாலில் இருந்த சோபாவில் அமர, கணேசன் உள் நோக்கி, “இந்திராணி.. அம்மா இந்திராணி..” என்று குரல் கொடுத்தார்.

“என்னப்பா வீடே ரொம்ப அமைதியா இருக்கு, ஒருவேளை எல்லாம் வெளியே போயிட்டாங்களோ..?” சோமசுந்தரம் கேட்க,

“இல்லையே.. அப்படி இருந்தா செக்கியூரிட்டி சொல்லியிருப்பானே..” கணேசன் சொன்னவர், திரும்ப குரல் கொடுத்தார்.

“யாரு..?” என்று வந்தான் சூர்யா.

“சின்னவர்..” சோமசுந்தரத்துக்கு சொன்ன  கணேசன், “அம்மா இல்லையாப்பா..” சூர்யாவிடம் கேட்டார்.

“வருவாங்க அங்கிள், நீங்க எப்படி இருக்கீங்க..?” கணேசனை நலம் விசாரித்த சூர்யா, சோமசுந்தரத்தை யார் என்பது போல் பார்த்தான்.

“இவர் சோமசுந்தரம்.. *** செயின்ஸ் ஆப் ஹோட்டல் இவரோடது தான், உங்க அப்பாக்கு இவரை தெரியும்..” என்றார் கணேசன்.

அப்பாவிற்கு தெரியும் என்றதும் சூர்யா அவரை நலம் விசாரித்தவன், சாப்பிட கேட்டான். அவர்கள் மறுக்கவும் காபி வர வைத்து கொடுத்தான்.  “நீங்க என்ன பண்றீங்க..?” சோமசுந்தரம் விசாரிக்க, சூர்யா அவருடன் அமர்ந்து பொறுமையாக, மரியாதையாக  அவனை பற்றி சொன்னான்.

“நல்லது தம்பி.. வேலை தெரிஞ்சவங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து பண்ணுறீங்க, கண்டிப்பா மேல வருவீங்க..? நமக்கும் மெயின் பிரான்ச் ஹோட்டல் ஒன்னு நல்லா பெருசா கட்டுற ஐடியா இருக்கு, எல்லாம் கூடி வந்தா உங்களுக்கு தான் அது..” என்றார் சோமசுந்தரம்.

“இன்னும் என்ன கூடி வந்தா சோமசுந்தரம் சார், கண்டிப்பா உங்க பொண்ணு பரசுராம் பெரிய மகனுக்கு தான்..” என்றார் கணேசன் அடித்து.

“எனக்கும் அந்த ஆசை இருக்கு கணேசன், பரசுராம் மகன்’னு சொன்னதும் வேறெதுவும் நான் யோசிக்கலை, தங்கச்சியை பார்த்து நாமளே பேசிடலாம்னு வந்துட்டேன்..” என்றார் சோமசுந்தரம்.

சூர்யா முகம் சுருங்க, “தம்பிக்கு புரியல..” என்ற சோமசுந்தரம், “உங்க அண்ணாக்கு என் பொண்ணை  பேச வந்திருக்கோம் தம்பி, கணேசன்கிட்ட தங்கச்சி சொல்லியிருப்பாங்க போல பொண்ணு இருந்த சொல்ல சொல்லி, கணேசன் நம்ம பங்காளி, அவர் உங்க அண்ணனை கை காட்டவும் எனக்கு வேறெதுவும் யோசிக்கவே இல்லை, பரசுராம் சாரோட டிசிபிளின், நேர்மை எங்க எல்லோருக்கும் தெரியும், பணம், சொத்து பத்து விட, இன்னார் பையன்’னு ஒன்னு இருக்கே, அதுலே எனக்கு திருப்தி, அதான் தங்கச்சிகிட்ட பேச வந்திருக்கோம்..”  என்றார் சோமசுந்தரம்.

‘இன்னார் பையன்..’ அந்த வார்த்தை சூர்யாவிடம் துக்கத்தை கொடுத்ததோடு, கோபத்தையும் கொடுத்தது.

‘என் அப்பாவை அப்படி படுத்தினவனுக்கு, அவரை வைச்சே பொண்ணா..? என் அப்பாவோட  மகன்’னு  சொல்ல இவனுக்கு என்ன தகுதி இருக்கு..?’  இளையவனுக்கு, அப்பாவின் செல்ல மகனுக்கு தாங்கவே முடியவில்லை.

‘அவரோட தொழிலை தான் என்கிட்ட இருந்து பிடிங்கிட்டான், இப்போ பொண்ணும் என் அப்பாவை வைச்சா..? இன்னைக்கு என் அப்பாவை பார்த்து பெண் கொடுத்து, நாளை இவன் திரும்பவும் அடங்காமல் ஆடினால் என் அப்பா பேர் தானே கெடும், இந்த உலகத்தில் இல்லாமல் போயும் இவனால் என் அப்பாவிற்கு கெட்ட பெயர் வருவதா..? வர விடுவதா நான்..? தொழிலை தான் விட்டேன், இதை விட மாட்டேன்..’ சூர்யா நேரே சோமசுந்தரத்தை பார்த்தவன்,

“என் அண்ணா பத்தி எல்லாம் விசாரிச்சீங்களா சார்..?” என்றான்.

“இப்போ அவர் தான் உங்க பிஸினஸை பார்க்கிறார்ன்னு..”

“சார்.. இப்போ ஓகே, முன்ன, அவன்  காலேஜ், ஸ்கூல் படிச்சப்போ..”

“அது.. அப்போ ஏதோ விளையாட்டு பிள்ளையா இருந்திருப்பார் போல..”

“விளையாட்டு பிள்ளையா..” கணேசனை பார்த்தான் சூர்யா. அவர் அப்படி தான் சொல்லியிருந்தார்.

“போலீஸ் ஸ்டேஷன் வரை போய்ட்டு வந்திருக்கான் சார், காலேஜ் சஸ்பெண்ட் வரை நடந்திருக்கு, நிறைய அடிதடி கலாட்டா..”  என்றான் சூர்யா.

சோமசுந்தரம் விழிக்க, ‘இவன் ஏன் அதை எல்லாம் இப்போ சொல்றான்..’ கணேசன் சூர்யாவை பேசாத என்று கண் காட்டினார். அது சோமசுந்தரம் பார்வைக்கு விழ, அவரின் முகம் யோசனைக்கு சென்றது.

“சார்.. நீங்க என் அப்பாவை வைச்சு கண்மூடித்தனமா  முடிவெடுக்கவும், சொல்ல வேண்டியது என்னோட கடமை, நீங்க நல்லா விசாரிச்சே உங்க பொண்ணு கொடுங்க, என் அப்பா.. என் அப்பா இதுல அவனுக்கு, அவனோட கனெக்ட் பண்ணாதீங்க..” என்றுவிட்டான்.

“சூர்யா.. தம்பி..  என்னப்பா  இது..?” கணேசன் பேச,

“அங்கிள்.. என் அப்பாவை பார்த்து இவர் பொண்ணு கொடுக்கிறேன் சொல்லும் போது, என் அண்ணாவை பத்தி நானே சொல்றது தான் சரி, அப்புறம் நாளைக்கு வேற ஏதாவதுன்னா என் அப்பா பேர் அடிபடுறதை நான் விரும்பல, இவர் பொண்ணு கொடுக்கிறதா இருந்தா என் அண்ணாவை பார்த்து, விசாரிச்சு கொடுக்கட்டும், அவ்வளவு தான்.. நீங்க இருங்க நான் அம்மாவை அனுப்புறேன்..” சூர்யா உள்ளே சென்றுவிட்டான்.

“அது சார்..  படிக்கிற வயசுல, வாலிபத்துல பசங்க பண்றது தான், இப்போ தொழிலை கையில எடுத்தப்புறம் பையன்கிட்ட ஒரு குறையும் கண்டுபிடிக்க முடியாது.. நீங்க விசாரிச்சு கூட..” கணேசன் பேசி கொண்டிருக்க, இந்திராணி வந்தார். அவர் குளித்து ஆபிஸ் போக கிளம்பி வர, சூர்யா சொல்லி அனுப்பினான்.

“வாங்கண்ணா.. வாங்க சார்..” இந்திராணி இருவரையும் வரவேற்று அமர, நலம் விசாரித்த சோமசுந்தரம், அடுத்து பேசாமல் இருந்தார். வந்த விஷயத்தை பேசவில்லை. கணேசன் அவர் முகம் பார்த்து தானும் பேச முடியாமல் இருக்க, சோமசுந்தரம் கிளம்பியும்விட்டார்.

“ஏன் வந்தாங்க..?” இந்திராணி கேள்வியுடன் ஆபிஸ் கிளம்பி சென்றார். ஒரு வாரம் கழித்து திரும்ப சோமசுந்தரம் வந்தார். மாப்பிள்ளை பற்றி பேசினார். ஆனால் மாப்பிள்ளை கம்பன் வீரய்யன் இல்லை. சூர்யா. பொண்ணு ஆதிரா..

“அவர் கேட்டாருன்னு நீயும் பண்ணிகிட்ட இல்லை..” காவ்யா அளவில்லா கோவத்தில் வெடித்தாள்.

“ஷ்ஷ்.. காவ்யா ரிலாக்ஸ் ப்ளீஸ்..” சூர்யா அக்கம் பக்கம் பார்த்தான். இருவரும் ஒரு காபி ஷாப்பில் அமர்ந்திருந்தனர்.

அன்று காலை தான் காவ்யா அண்ணனை மறுத்து, வேறு இடம் பார்க்க சொல்லிவிட்டால் என்று தெரிந்தது. இந்திராணிக்கு சுதாவே அழைத்து இப்படி என்று சொல்லிவிட்டார். “சரி சுதா..” இந்திராணி வேறெதுவும் பேசாமல் வைத்துவிட்டார். அவ்வளவு ஏமாற்றம். மிகவும் எதிர்பார்த்துவிட்டார் போல. சோர்ந்து போய் அமர்ந்துவிட்டார். சூர்யா விசாரிக்க தெரிந்தது.

இப்படி ஒரு முடிவை தான் காவ்யா எடுப்பாள் என்பது சூர்யாவிற்கு நன்றாகவே தெரியும். சாதாரணமாகவே அவளுக்கு கம்பன் என்றால் செட் ஆகாது. இதில் திருமணத்திற்கு என்றால்..? வாய்ப்பே இல்லை.

ஆனாலும் தம்பிக்கு எங்கோ ஒரு ஆசை. ஒரு உறுத்தல், குத்தல்.

என்னால் தானோ..? நான் அவளிடம் அண்ணனை பற்றி பேசி பேசி தான் அவளுக்கு அவனை பிடிக்காமல் போய்விட்டதோ..?

முன்னமே அவனுக்காக வந்த வரனை தான் கலைத்து, அது தன் தலையிலே பாரமாக அமர்ந்து, சுமக்க முடியாமல்.. மூச்சு முட்டி திணறும் நிலை தான்.

அதனாலே அண்ணன் முன், இவனுக்கு காவ்யா மாதிரி பொண்ணு வேணுமா..? என்று கோவமாக பேசிவிட்டாலும், தோழியிடம் பேச முயற்சி எடுத்தான். ஆனால் அவள் அதற்கான இடம் சிறிதும் கொடுக்கவில்லை.

வேண்டாம் என்று முடிவும் எடுத்து வேறு மாப்பிள்ளையும்  பார்க்க சொல்விட்டாள் என்று தெரிந்த பிறகு அவனுக்கு அப்படியே விட முடியவில்லை. “என் பிரச்சனை பத்தி பேசணும் வா..” என்று காபி ஷாப் இழுத்து வந்தவன், நடந்ததை சொன்னான். தன் திருமணம், ஆதிரா.. அவன் மனைவி வரன் பற்றி எல்லாம் சொன்னான்.

காவ்யாவிற்கு கேட்டதும் ஆறவே இல்லை. “நீயாடா இப்படி..?” சூர்யா முகம் கருத்து போனது.

“உன் அண்ணாக்கு வந்த வரனை கலைச்சு நீ மாப்பிள்ளையாகிட்ட இல்லை..” என்றாள் சினத்தோடு.

“காவ்யா.. ப்ளீஸ்.. நான் எவ்வளுவோ மறுத்தேன், அவர்.. என் மாமனார் என்னை விடவே இல்லை.  என் அம்மாக்கும் அண்ணாவை விட்டு எனக்கு பண்ண பிடிக்கலை, அவன்.. என் அண்ணாவும்  என் கல்யாணம் பத்தி கனவு காணாம இவனுக்கு முடிச்சிடுங்கன்னு உறுதியா சொல்லிட்டான், என் அம்மா ரொம்ப போராடி பார்த்தாங்க, ஒரு பொண்ணு போட்டோ கூட பார்க்க மாட்டேன்னுட்டான்..”

“இங்க ஆதிரா வீட்ல அவங்க  குடும்ப ஜோசியர் மூணு மாசத்துக்குள்ள கல்யாணம் முடிச்சிடணும்ன்னு சொல்லிட்டார், என்னால, அம்மாவால ஓர் அளவுக்கு மேல மறுக்க முடியல, அதோட ஆதிரா.. ஆதிராவை எனக்கும் பிடிச்சு.. கோவப்படாத காவ்யா ப்ளீஸ்.. அப்போ ஏதோ.. என்ன நினைச்சு பண்ணேன்னு தெரியல, கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா.. இப்போ..” சூர்யா கண்களில் கண்ணீரே தேங்கிவிட்டது.

“பண்றதையும் பண்ணிட்டு கண்ணுல தண்ணீ வைக்காத, இது போர்க் எடுத்து கண்ணையே நொண்டிடுவேன்..” காவ்யா கோவத்தில் மிரட்டினாள். “உனக்காக நான் அவருகிட்ட சண்டை போட்டேன்டா, கோவப்பட்டேன், நீ..” காவ்யாவிற்கு ரத்த அழுத்தம் எகிறியது.

“இப்போவும் அவர் காலேஜ் டேஸ்ல அடங்காம, ஓர்ஸ்ட் ஸ்டூடண்டா இருந்தது,  உன் அப்பாவை படுத்தினது, உனக்கு நல்லா அண்ணாவா இல்லாமல் போனதுன்னு எனக்கு அவர் பிடிக்கலை தான், ஆனா.. நீ செஞ்சு வைச்சுருக்கிறது.. ஓஹ் காட்.. என்னடா நீ..? தம்பியா எப்படிடா அவர் முகத்தை பார்க்கிற..? நாளைக்கு இது எல்லாம் உன் அண்ணாக்கு தெரிஞ்சா..”

“ப்ளீஸ்.. அது மட்டும் சொல்லாத..” சூர்யாவிடம் அப்படி ஒரு பரிதவிப்பு. குன்றல்.

காவ்யா தண்ணீரை எடுத்து குடித்தாள். தன்னை நிதானப்படுத்தினாள். “இப்போ எதுக்கு இது எல்லாம் என்கிட்ட சொல்ற..?” என்றாள் கூர்மையாக.

“எனக்கும் தெரியல.. நான்.. நான்..” தொண்டையடைக்க திணறினான்.

“ம்ப்ச்.. தண்ணீர் குடி..” காவ்யா நீட்டினாள். சூர்யா மறுக்காமல் வாங்கி குடித்தான்.

Advertisement