Advertisement

கம்பன் காதல் கொண்டு 8

‘இவன் என்ன பேசிட்டு இருக்கான்..? என் தங்கச்சி அவன் பேமிலி விஷயத்தை பேசியிருக்க கூடாது தான். அதுக்காக எங்க கண் முன்னாடியே, அண்ணியா வா, நாள் குறிப்போமா’ன்னு  கேட்கிறான்.

உண்மையாவே கேட்கிறான்.. அடப்பாவி..!

‘உன் தம்பியை  நீ பார்த்துக்கலை கேட்டா இவளை அண்ணியா வந்து பார்த்துக்க சொல்வியா..? எவ்வளவு நேக்கா கேட்டுட்டான்.. காவ்யாவை கவுக்க பார்க்கிறானே.. உங்க பேமிலி பிரச்சனையில என் தங்கச்சி என்ன தேங்காயாடா. இவனை..’ சஞ்சய் கோவமாக நின்றான்.

சுதா என்ன நடக்கிறது என்று முழித்து தான் மற்றவரை பார்த்தார். புடவை எடுக்க வந்த இடத்தில் திடீரென இப்படி ஒரு பேச்சு கிளம்பும் என்று அவர் நினைத்தாரா..? அம்மா, அண்ணா உடன் இருக்கும் போது கம்பன் நேரடியாக பெண்ணிடம் கேட்கிறான். என்ன இது..? என்று அவர் இந்திராணியை பார்த்தார்.

இந்திராணிக்கு சொல்லவே வேண்டாம். அதிர்ச்சி. இன்ப அதிர்ச்சியா என்று அவருக்கே தெரியவில்லை. சூர்யா திருமணம் முடிவான நேரம் அவர் பெரிய மகனிடம் கெஞ்சாத கெஞ்சல் இல்லை. ‘உன்னை விட்டு அவனுக்கு பண்ண கூடாது, தேவையில்லாத பேச்சு வரும், நான் பொண்ணு பார்க்கிறேன், ஏதாவது சொல்லு’ என்று அவ்வளவு போராட்டம்.

ஏன் இரு பெண்களையும் முடிவு செய்து போட்டோ காட்டினால், அந்த பக்கம் முகம் திருப்பி சென்றான். இவர் அதட்டி,   மிரட்டி கூட பார்க்க, தூசியாய் தட்டி சென்ற மகன் இன்று தானே திருமணத்திற்கு கேட்கிறான். அதுவும் பெண்ணிடமே..?

காவ்யா தான் பெண் என்றால்..? நினைக்கவே அவருக்கு தித்தித்தது. இது நடந்தால்..? அம்மாவாக இவருக்கு ஆசை முளைவிட்டது.  சுதாவின் பார்வையை தயங்காமல் எதிர்கொண்டார். பார்வையாலே அவரின் விருப்பத்தை அவர் வெளியிட்டார்.

சுதாவிற்கு முழுதும் அடைத்த உணர்வு. திரும்பி அதிர்ந்து நின்றிருந்த மகளையும், கம்பனையும் பார்த்தார்.

கம்பன் பார்வை முழுதும் காவ்யாவிடமே குவிந்திருந்தது. விறைப்பாக நின்றிருந்தான். ஆனால் அந்த விறைப்புக்குள் அப்படி ஒரு தடதடப்பு. காட்டி கொள்ளவே கூடாது என்ற போராட்டம் அவன் கட்டிய கைகளிலும், வலுவாக ஊன்றிய கால்களின் இறுக்கத்திலும் தெரிந்தது.

எதை அவளிடம் எந்த ஜென்மத்திலும் கேட்க கூடாது என்று நினைத்தானோ இன்று அதை அவளிடம் கேட்டு நிற்கிறான்..? ஏன் கேட்டான்..? அவளின் அம்மா அவள் திருமணம் பற்றி பேசியதற்கா..? ஆஹ்ஹ்ஹ.. சொன்னதற்கேவா..? புரிந்த அவனுக்கே இன்னும் இன்னும் தான் அவளிடம் சிக்கும் இறுக்கம் தான்.

அவள் பக்கமே திரும்ப கூடாது என்று ஓடினவன், என்னடா செஞ்சு வைச்சிருக்க..? அப்படியாடா இவ உனக்கு வேணும்..?  இல்லை.. சும்மா கேட்டேன்னு சொல்லிட்டு ஓடிடு, போடா.. உள்ளுக்குள் ஒரு குரல் சொல்ல சொல்ல, அப்படியே தான் நின்றான்.

‘கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்திகிட்ட..? பேசுறேன்னு ஆரம்பிச்சு, பொண்ணு கேட்டுட்ட இல்லை..’ மனசாட்சி அவனை கேள்வி கேட்டது.

பின்னால் எல்லாம் தெரிந்து.. பரவாயில்லை  அவமானம் பட்டாலும் பரவாயில்லை, இவளை தன்னால் விட முடியாது. தான் வீழ்ந்தாலும், தோற்றாலும் விட முடியாது.

‘ஏதாவது சொல்லு.. நான் இங்கிருந்து ஓடறதுக்குள்ள ஏதாவது சொல்லு..’ அவளின் அமைதி வேறு குடைந்தது. தன்னுடனான போராட்டத்தை மறைத்து அவளையே பார்த்து நின்றான்.

இத்தனைக்கும்  ஓரிரு நிமிடம் தான் அவன் கேட்டு. அதற்குள் என்னென்னவோ எல்லோரின் மனதிலும். கம்பன் நிச்சயமாக தான் கேட்கிறான் என்று புரிந்த நொடி இவ்வளவும்.

கம்பனின் இடைவிடா பார்வையில், அவன் கேட்டதில் காவ்யா அப்படியே  நின்றிருந்தவள், சட்டென தன்னை  மீட்டு கொண்டாள். தன் முகம் திருப்பினாள். இந்திராணி அவளை ஆவலாக பார்த்து கொண்டிருந்தார்.

‘ஆன்ட்டி இது நடக்கணும்ன்னு ஆசைப்படுறாங்களா..? ஓஹ் காட்..’ அண்ணனை பார்த்தாள். சஞ்சய் இதற்கு மேல் இதை விட முடியாமல் தங்கை பக்கம் சென்று அவள் கை பிடித்தான்.

“வீரா.. காவ்யா உங்க பேமிலி விஷயத்தை பேசினது தப்பு தான், இதோட இதை முடிச்சுக்கலாம்..” சஞ்சய் சொல்ல, கம்பன் சிரித்தான். நன்றாக இதழ் விரிய ஒரு சிரிப்பு. கேட்டுவிட்டு எப்படி விடுவான்..?

“அவ எங்க பேமிலி விஷயத்தை பேசினது தப்புன்னு நான் எப்போ சொன்னேன் சஞ்சய், அவ எங்க பேமிலுக்குள்ள வரணும்ன்னு தான் நான் கேட்கிறேன்..” என்றான் கம்பன்.

“வீரா.. இது.. இதெல்லாம் இங்க வச்சு இப்படி பேசுற விஷயம் இல்லை..” சுதா சொல்ல,

“ஓகே ஆன்ட்டி.. அங்கிள்கிட்ட பேசிட்டு நாள் சொல்லுங்க, அம்மாவை உங்க வீட்டுக்கு அனுப்புறேன்.. பேசிட்டு முடிவு பண்ணுலாம்,  இப்போ கிளம்பலாம்மா..?”  என்றான் அம்மாவிடம்.

“போலாம்.. போலாம் வீரா..” இந்திராணி சொன்னவர், “வரேன் சுதா.. போன் பண்றேன்..” என்று சஞ்சய் எடுத்த உடைகளுடன் கிளம்பினார். கம்பன் பார்வை காவ்யா மேல் அழுத்தமாக பதிந்து சென்றது. அவள் புரிந்தும் அவனை பார்க்கவில்லை.

எடுத்த உடைகளுக்கு பணம் கட்டிவிட்டு, காருக்கு செல்ல, இந்திராணிக்கு மகனிடம் கேட்க பரபரத்தது. வீடு வந்துவிட, வீரா இவரை வாசலில் விட்டு அப்படியே போக முனைய, “வீரா.. நீ கேட்டது உண்மை தானே..?” என்றார்.

“அவங்க நாள் சொல்லும்போது நீங்க அவங்க வீட்டுக்கு போய் முறையா பேசுங்கம்மா..” மகன் சொல்லி கிளம்பிவிட்டான். இந்திராணி மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள் செல்ல, சூர்யா இருந்தான்.

“நீ என்னடா இங்க இருக்க..? ஆதிராவோட அம்மா வீட்டுக்கு தானே போன..?” இந்திராணி கேட்க,

“இப்போ என்னம்மா.. வந்துட்டேன்..” என்றான் அவன்.

“ஆதிரா..?” இந்திராணி கேட்க,

“அவ ஒரு வாரம் அங்க இருந்துட்டு வருவா..” என்றான் மகன்.

“சரி சாப்பிட்டியா..?” இந்திராணி அவன் சோர்ந்த முகம் பார்த்து கேட்க,

“எடுத்து வைம்மா..” என்றான் மகன். கம்பன் டியூட்டிக்கு செல்ல போனவன், வீட்டிலே கன்’னை விட்டது நினைவிற்கு வர, வீட்டிற்கு காரை திருப்பி வந்தான்.

இந்திராணி சின்ன மகனுக்கு உணவு பரிமாறியவர், “சூர்யா.. உனக்கு விஷயம் தெரியுமா..? இன்னைக்கு துணி கடையில காவ்யா பேமிலிய பார்த்தோம்.. அப்போ..” என்று ஆரம்பித்து, அங்கு  நடந்ததை முழுதும் சொன்னவர்,

“நான் நினைக்கவே இல்லைடா உன் அண்ணா திடீர்ன்னு இப்படி கேட்பான்னு, எனக்கே அவ்வளவு அதிர்ச்சியா இருந்துச்சு, காவ்யா, அவளோட அண்ணா, அம்மா என்ன சொல்லுவாங்க..? ஆனா இது மட்டும் நடந்துட்டா ரொம்ப நல்லா இருக்கும், என்ன சொல்வாங்களோ தெரியல, நீ காவ்யாகிட்ட கொஞ்சம் பேசி பாரேன்..” என்றார்.

சூர்யா உடனே சாப்பிடுவதை நிறுத்தி போன் எடுத்து காவ்யாவிற்கும் அழைக்க அவள் எடுக்கவே இல்லை. இங்கு கம்பன் வீட்டுக்குள் வர, பார்த்த சூர்யா,  “உங்க மகனுக்கு காவ்யா வேணுமா..? என்ன திடீர்ன்னு அவளை பொண்ணு கேட்கிறான்.. என்னவாம் அவனுக்கு..?” என்றான் சத்தமாக.

“என்னடா.. ஏன் இப்படி பேசுற..? காவ்யாவை  கேட்டா என்ன இப்போ..?” இந்திராணி கேட்டார்.

“போலிஷ் ஸ்டேஷன் வரை போய்ட்டு வருவான், என் அப்பாவை கொஞ்சம் கொஞ்சமா கொன்றிருப்பான், அவனுக்கு காவ்யா மாதிரி பொண்ணு வேணுமா..?”

“சூர்யா.. இது அதிகம்..” இந்திராணி பெரிய மகனை பார்த்துவிட, அவன் தம்பி பேசுவதை கண்டு கொள்ளாமல் மேலேற ஆரம்பித்தான்.

“ம்மா.. நீங்க எப்போவும் அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவீங்க..? உங்க மகன் அவன், ஆனா காவ்யாவை பொறுத்தவரை அவன் ஆகாதவன் தான், அவனை கட்டிக்க கனவுல கூட அவ சம்மதம் சொல்ல மாட்டா, உங்க மகனை பகல் கனவு காணாம பொழைப்பை பார்க்க சொல்லுங்க..” என்று அண்ணனை பார்த்து கத்தி சொல்லிவிட்டு, சாப்பிடாமல் ரூம் சென்றுவிட்டான்.

கம்பன் லாக்கரில் இருந்த கன்’னை எடுத்து பேக்கெட்டில் வைத்தவன், வாசலுக்கு நடக்க ஆரம்பித்து, இடையிலே நின்றுவிட்டான். தொண்டை குழி வேகமாக மேலேறி கீழிறங்கி கொண்டிருந்தது. கண்களை மூடி சில நொடி நின்று தன்னை சமன் செய்தவன் ஹாலில்  நின்றிருந்த அம்மாவை பார்க்காமல் கிளம்பிவிட்டான்.

காவ்யா வீட்டில் வாசுதேவன்  வரவும் கம்பன் கேட்டதை சுதா சொன்னார். அவருக்கும் கம்பன் வீரய்யன் பெண்  கேட்டது ஆச்சரியம் தான். “நீ என்ன நினைக்கிற..?” மனைவியிடம் கேட்டார் அவர்.

“ப்பா.. வீரா நேரா காவ்யாகிட்ட கேட்டிருக்கார், அது எனக்கு பிடிக்கலை..” என்றான் சஞ்சய் இடையிட்டு.

“சஞ்சய்.. வீரா தனியா கேட்கலையே, உங்க முன்னாடி தானே கேட்டிருக்கார், அதோட இப்போ எல்லாம் பொண்ணும், பையனும் பேசி ஓகே சொல்றது தானே சரி..” என்றார் அவர்.

“ப்பா.. அப்படி பார்த்தாலும் காவ்யாக்கு வீராவை பிடிக்கணும் இல்லை, அவளுக்கு பிடிச்ச மாதிரி எனக்கு தெரியல..” என்றான் அண்ணன்.

“சஞ்சய்.. வீராகிட்ட உனக்கு என்ன பிரச்சனை..? ஏதாவது குறை போல உனக்கு தெரிஞ்சா சொல்லு விசாரிப்போம், அதைவிட்டு இப்படி எடுத்ததும் பிளைண்டா நோ சொல்ல கூடாது..” என்றார் தந்தை கண்டிப்புடன்.

சஞ்சய்யும் யோசித்து பார்க்க அப்படி ஒன்றும் மறுக்க காரணம் இல்லை தான். ஆனாலும் அவனின் பழைய நாட்கள்.. அது அவனுக்கும் செட் ஆகாத ஒன்று தான்.. அதை அப்பாவிடம் சொல்லவும் செய்தான்.

“சஞ்சய்.. காலேஜ் படிக்கும் போது வீரா நடவடிக்கை எனக்கும் பிடிக்காது தான், ஆனா இப்போ வீரா முழுசும் மாறிட்டார், அப்பாவோட தொழிலை அவரை விட ரொம்ப சக்ஸஸ்புல்லா ரன் பண்றார், நாம தான் அவரை பார்த்துட்டு இருக்கோமே..?”

“ஏங்க அவரோட தொழில், வீராவோட அப்பா எப்படி இறந்தார்ன்னு மறந்துட்டீங்களா..?” சுதா கேட்டார்.

“அது நிச்சயம் பார்க்கணும் சுதா, ஆனா பரசுராமை விட வீரா தெளிவா தான் இருக்கார், அவங்க அப்பா தவறினதும் அவர் பண்ண முதல் வேலை ராம்தாஸ் பேமிலியை விட்டு வெளியே வந்தது தான்..” என்றார் வாசுதேவன்.

“இப்போவும் ராம்தாஸ்க்கு வீரா தான் பெர்சனல் கார்ட்ப்பா..” என்றான் சஞ்சய்.

“நானும் இப்போ ரிஸ்கியான வேலையில தான் இருக்கேன் சஞ்சய், எனக்கும் சேர்த்து தான் ராம்தாஸ் சொன்னதால வீரா பாதுகாப்பு கொடுத்திட்டு இருக்கார், நம்மை பாதுகாக்க தெரிஞ்சவருக்கு, அவரை பாதுகாக்க முடியாதா..? நம்பிக்கை ரொம்ப அவசியம் சஞ்சய்..” என்றார் தந்தை.

“காவ்யா அவளோட வேலையில் கவனம் வைக்கணும், ஆபிஸ் ஒரு நிலைக்கு வரட்டும்ன்னு கேட்டதால தான், நாமும் இத்தனை நாள் அமைதியா இருந்தோம், இப்போ அவளே நமக்கு சரி சொன்ன நேரம்,  வீரா தானே கேட்கிறார். என்னை பொறுத்தவரை வீரா நல்ல வரன் தான், நீங்க யோசிச்சு சொல்லுங்க, முக்கியமா காவ்யாகிட்ட பேசிட்டு சொல்லுங்க..” என்று சென்றார். வீட்டில் எல்லோரின் சம்மதமும் அவருக்கு அவசியம்.

சூர்யா மறுநாள் காவ்யா ஆபிஸ் வரவும் அவளை தனியே பிடித்தான். “கடைல வைச்சு என் அண்ணா..” என்று ஆரம்பிக்க,

“சூர்யா ப்ளீஸ்.. அதை பத்தி என்கிட்ட பேசாத..” என்றாள் காவ்யா இடையிட்டு.

“காவ்யா நான்..”

“சூர்யா.. பேசாதன்னா பேசாத..” உறுதியாக முடித்துவிட்டாள்.

சூர்யாவிடம் மட்டுமில்லை வீட்டிலும் அது பற்றி பேச அவள் இடம் கொடுக்கவில்லை. சுதா பலமுறை முயற்சித்து விட்டுவிட்டார். இந்திராணி தகவல் வர காத்திருக்க, நாட்கள் தான் சென்றது.

“நீயாவது உன் தங்கச்சிகிட்ட பேசு, வீர வேணான்னா பிரச்சனையில்லை, வெளியே வரன் பார்ப்போம்ன்னு கேளு..” சஞ்சயிடம் சொன்னார் சுதா.

சஞ்சய் அந்த வார இறுதியில் தங்கையை அழைத்து கொண்டு வெளியே சென்றான். சிறிது நேரம் சுற்றி கொண்டிருந்துவிட்டு, திருமணம் பற்றி பேசினான்.

“வீராக்கு சரி சொல்லணும்ன்னு நாங்க கேட்கல காவ்யா, உனக்கு கல்யாணம் பண்றதை தான் பார்க்கிறோம், இத்தனை நாள் நீ கேட்டேன்னு தான் லேட், என்ன சொல்ற, வீரா வேண்டாம்ன்னா வெளியே பார்ப்போமா..?” என்றான்.

காவ்யா சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், “வெளியே வேற பாருங்கண்ணா..” என்றாள்.

“காவ்யா நீ.. நீ யோசிச்சு கூட..”

“ண்ணா.. நான் என்னோட முடிவை சொல்லிட்டேன்..” அதோடு அதற்கு முற்றுப் புள்ளி வைத்தாள்  காவ்யா.

Advertisement