Advertisement

இவர் அவசரமாக கார்ட்ஸ் ஒருவரை அழைத்து மகன் பின்னே போக சொன்னார்.  வீடு பக்கம் தான் செல்கிறான் என தகவல் வர, உடனே மனைவிக்கு அழைத்தார். “எங்க இருந்தாலும் உடனே வீட்டுக்கு போ, தம்பி.. பெரியவன் அங்க, வீட்டுக்கு தான் போறான், ஓடு..” என்றார்.

இந்திராணியும் கணவன் பதட்டத்தில், உடனே ஆட்டோ பிடித்து வீடு சென்றுவிட்டார். மகன் அதற்குள் வந்திருந்தான். சோபாவில் தலையை பின் சாய்த்து கண் மூடி அமர்ந்திருந்தான்.

“வீரா.. எப்போடா வந்த..? குடிக்க ஜுஸ், இல்லை சாப்பிட நேரம் ஆச்சு, எடுத்து வைக்கிறேன் சாப்பிட வா..” என்றார் மகன் தோள் தட்டி.

“ம்ம்ம்..” மகன் சொன்னவன், அப்படியே இருந்தான்.

“வீரா.. என்னடா.. ஏதாவது பிரச்சனையா..? போலீஸ் ஸ்டேஷன்ல ஏதும்.. பயந்துட்டியா..? ம்ப்ச்.. வீரா.. என்னடா இது..? என்ன பண்ணிட்டு இருக்க நீ..? வாய் திறந்து சொல்லு, இவ்வளவு நடந்தும் அப்பா உனக்காக அங்க அப்படி பதறிட்டு இருக்கார், பாவம்டா அவர்,  இன்னும் அவரை  எவ்வளவு தான் படுத்துவ..? இதுவரைக்கும் பண்ணது பத்தாதுன்னு இப்போ போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய்ட்டு வந்தாச்சு, போதுமா இந்த வயசுக்கே இது எல்லாம்..? அப்படியென்ன உன் வாழ்க்கை உன் இஷ்டம், நாங்க எல்லாம் வேண்டாமா உனக்கு..? உன்கிட்ட இது பத்தி எல்லாம் பேசவே கூடாதுன்னு  இருந்தேன், எப்படியோ போ’ன்னு வெறுத்து ஒதுங்கிட்டேன், ஆனா இப்போ உன் அப்பா,  அவர் உனக்காக தவிக்கிறது பார்த்தா உன்னை கேட்காம  விட முடியல,  சொல்லுடா, என்னடா பண்ணிட்டு இருக்க..?” இந்திராணி இதற்கு மேலும் பொறுக்கவே முடியாது எனும் நிலையில் மகனை கேட்டு நின்றார்.

மகன் தான் கேட்டதுக்கு நிச்சயம் கோவப்படுவான், கத்துவான்  தெரியும். கத்தட்டும், இன்று அவனை விட கூடாது, விட முடியாது, இதுவரை அவனை விட்டதே மாபெரும் தப்பு, போராட முடியாமல் எப்படியோ போடா என்று வெறுத்து ஒதுங்கி நின்றது எங்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டது..? அவனை சொல்வதை விட, அம்மாவாக நான் தான் முதல் தப்பு, தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைன்னு பார்த்திருக்க கூடாது, கம்பு எடுத்து விளாசியிருக்கணும், இப்போ கூட ஒன்னும் இல்லை. ஏதாவது பேசட்டும்.. விளாசிடுறேன், என்ன பண்ணிடுவான் என்னை பார்க்கிறேன்.. அம்மா முடிவோடு நிற்க, மகன்  கண்களை திறந்து அம்மாவை பார்த்தான்.

கோவம் பொங்க  நின்றிருக்கும் அம்மா.. எழுந்தான்.  அமைதியாக அவரை கடந்து ரூம் சென்றான். “வீரா..” இந்திராணி குரல் உயர்ந்தே வந்தது. “எனக்கு பதில் சொல்லாம மேல போக கூடாது, சொல்ல முடியாதுன்னா உன் அப்பா வர வரை இங்கேயே நில்லு..” என்றார்.

“ம்மா.. ப்ளீஸ் ம்மா..” மகன்  நின்று சொல்ல, இந்திராணி திகைத்து தான் விட்டார். அவன் ரூம் சென்றுவிட்டான்.

அவ்வளவு தான்.. அன்றுடன் எல்லாம் மாறியது. அதுவும் பரசுராம் தவறிய பிறகு மகன் மாற்றம். இந்திராணிக்கு இப்போது நினைத்தாலும்  சில சமயம் கனவோ என்று கூட இருக்கும்.

அப்படி ஆடி இப்படி அடங்க முடியுமா..?

திடீரென.. ஒருவேளை ஸ்டேஷன் சென்று வந்தது என்றால்.. இல்லை.. வேறு எதுவோ இருக்கிறது. என்னவோ நடந்திருக்கிறது..? என்ன அது..? ஏதும் பெண்.. காதல்.. காதல் போல.. தோற்றிருப்பானா..? ஆனால் காதல்.. அவனிடம் அதற்கான அறிகுறி எதுவும்  தென்பட்டிருக்கிறதா..? அப்படியே இருந்தாலும் இத்தனை வருடமா இப்படி இருப்பான்..? வெகுவாக தனித்து போய்விட்டான்.

சுள்ளென்று கோவம் வந்து எகிறும் மகன், சில வருடங்களாய் கோவப்பட்டதை கூட பார்க்கவில்லையே..?

இதோ இப்போதும் துணி கடையில் காவ்யா அவன் முன்  நின்று, அவனை பற்றி பேசுகிறாள்..? சூர்யாவை வைத்து கேள்வி கேட்கிறாள், சூர்யா இவளின் நண்பன் என்றாலும் இது அதிகம் தானே..?  மகன் பதிலுக்கு  ஏதும் பேசிவிட்டால் தேவையில்லாத சங்கடம், வருடங்களாய் பழகும் குடும்பம்.. இந்திராணி மகனை பார்க்க, அவனோ அமைதியாக இருந்தான்.

இங்கு காவ்யாவோ மேலும், “அப்பா இருந்தும்ன்னா கூட ஓகே. அப்பா இல்லாம இருக்கும் போது தான் தொழிலை கூட பிடிங்கிக்கிறாங்க, அப்படியும் தம்பிய பார்த்துப்போம்ன்னு கூட நினைக்கிறதில்லை, அம்போன்னு விட்டுடுறாங்க. சுயநலவாத்தின் மொத்த உருவமா இருக்காங்க..”  மேலும் பேசிவிட, கம்பன் வீரய்யன் இப்போது நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான். நேரே பார்த்தான்.

‘அவளுக்கு எதுவும் தெரியாது, நிமிர்ந்து நில்லுடா.. பார்த்துக்கலாம்.. பேசுடா..’ தனக்கு தானே சொல்லி கொண்டு, நன்றாகவே நிமிர்ந்தான். காவ்யாவை பார்த்தான்.

அவன் நேர் பார்வையில் காவ்யா ஒன்றும் அசந்துவிடவில்லை. அவளுக்கு அவள் நண்பன் முக்கியம். அவன் அழுதது முக்கியம். அதற்கான பதில் அவன் அண்ணனிடம் இருந்து வாங்கியே ஆக வேண்டும்.. அவ்வளவு தான். இவளும் அவனை நேரே பார்த்தாள்.

இருவரின் பார்வை மோதலும் பெரியவர்களுக்கு உவப்பாக இல்லை. “காவ்யா மேரேஜ் பத்தின விஷயம் நம்ம முடிவு, என் முடிவு, இதுக்கு ஏன் தேவையில்லாத பேச்சு..?” சஞ்சய் கண்டித்தான்.

தங்கை பேசிவிட்ட மற்ற விஷயங்களை ஒதுக்க நினைத்தான். புரிந்த கம்பன் வீரய்யனிடம் ஒரு புன்னகை. அமைதியான புன்னகை. ஆனால் சஞ்சய்க்கு அது ஒப்பவில்லை.

“மேரேஜ் பத்தி உங்க தங்கச்சி சொன்னது ரொம்ப சரி சஞ்சய் சார்..” என்ற கம்பன், காலியான காபி கப்பை பக்கத்தில் இருந்த பின்னில் போட்டு வந்து கை கட்டி நின்றான்.

‘என்ன சரி சொல்றான்..?” மூவரும் புரியாமல் நின்றனர்.

“தங்கச்சிக்கு கல்யாணம் ஆகாம அண்ணா பண்ணிக்கிறது இல்லை தான்.. அதே மாதிரி அண்ணா பண்ணிக்காம தம்பியும் கல்யாணம் பண்ணிக்கிறது இல்லை தானே..” என்றான் புருவம் தூக்கி. கேள்வி காவ்யாக்கு என்பதாய் அவன் பார்வை அவள் மேலே இருக்க,

“அது.. அது நீங்க செஞ்சுக்கலை.. அவன்.. அவன் கல்யாணம்.. பண்ணிகிட்டான், அதுக்கு என்ன இப்போ..?” காவ்யா பேச,

“இப்போ எனக்கு யார் பொண்ணு கொடுப்பா..?” என்றான் கம்பன்.

“எதே..?” காவ்யா முழித்தாள்.

‘நான் பேசுறது சூர்யா பத்தி, அவன் தொழில் பத்தி, அவனை பார்த்துக்கறது பத்தி, இவர் என்ன அவர் கல்யாணம் பத்தி கேட்கிறார்..?’

“நான் உங்ககிட்ட கேட்டது சூர்யா, சூர்யாவுக்காக தான், அவன் ஏதோ கஷ்டத்துல இருக்கான், அவனை பாருங்கன்னு தான்..” என்றாள்.

“அவனை நான் பார்க்கணும், என்னை அவன் பார்க்க கூடாதா..?” கம்பன் கேட்க,

“வீரா.. அவ சூர்யாக்காக எதோ பேசிட்டா..” சஞ்சய் பேச,  கம்பன் அவன் பேச்சை கேட்டதாக கூட இல்லை.

அழுத்தமாக காவ்யாவை பார்த்து நின்றவன், “அண்ணா இருக்கும் போது தம்பி பண்ணிக்கிட்டா, அண்ணனுக்கு யார் பொண்ணு கொடுப்பா..?” என்று கேட்டான். காவ்யாவிற்கு ஏனோ துடிப்பு எகிறியது.

“என்னை யார் கல்யாணம் பண்ணிப்பா..?  எந்த பொண்ணு பண்ணிப்பா..? ம்ஹ்ம்.. ஏன் இந்த பொண்ணு என்னை பண்ணிப்பாங்களா..? நீ.. நீ என்னை கல்யாணம் பண்ணிப்பியா..?” அவள் முகம் பார்த்து, கண் பார்த்து தீர்க்கமாக கேட்டான்.

காவ்யா கண்கள் விரிந்துவிட்டது.

“வீரா..” சஞ்சய்க்கு கோவம்.

“ஏன் சஞ்சய் உங்க வீட்டு பொண்ணை எனக்கு கொடுக்க மாட்டிங்களா..? சூர்யாக்காக அவ்வளவு பேசுற உங்க தங்கச்சியவே  அண்ணியா வந்து அவனை பார்த்துக்க சொல்லுங்க, நான் தான் பொறுப்பில்லாத அண்ணனா போயிட்டேன், நீ பொறுப்பான அண்ணியா வா.. நாள் குறிப்போமா..?” காவ்யாவுடன் காவியம் படைக்க கேட்டான் கம்பன் வீரய்யன்.

Advertisement