Advertisement

கம்பன் காதல் கொண்டு 7

“என்ன யோசனை பரசு சார்..?” கேள்வியுடன் ராம்தாஸ் வந்தார்.

பரசுராம் கையில் டீயுடன் அமர்ந்திருந்தவர், இவர் வரவும் எழுந்து நின்றார். “ம்ப்ச்.. இதான் வேண்டாங்கிறது..” ராம்தாஸ் அவர் கை பிடித்து அமர வைத்தார்.

“எனக்கும் டீ சொல்லுங்க சார்..” என்றார் ராம்தாஸ். பரசுராம் உடனே கொண்டு வர செய்ய, “இப்போ சொல்லுங்க என்ன யோசனை..?” டீ குடித்தபடி கேட்டார் ராம்தாஸ். இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது தான்.

பரசுராம் பெரியவருக்கு பாதுகாப்பிற்கென வந்த நாள் முதல் பழக்கம். மரியாதையுடன் கூடிய பழக்கம். பரசுராமின் நேர்மை, உயிரை முன்னின்று கொடுக்கும் விசுவாசமே பெரியவர், ராம்தாஸ்க்கு அவர் மேல் தனிப்பட்ட பற்றுதல் வைக்க காரணம்.

பரசுராம் மட்டுமில்லை, அவர் கார்ட் சர்வீஸில் இருக்கும் அத்தனை ஆட்களும் விசுவாசத்தின் உச்சமே. கோடிகளை அள்ளி கொடுத்தாலும் விலைக்கு போகாத ஆட்கள் இவர்கள். பணம் இங்கு விஷயமே இல்லை. யாரும் நினைத்து கூட பார்க்க  முடியா பணம் பரசுராமின் செக்கியூரிட்டி சர்வீஸுக்கு மாதாமாதம் சென்றுவிடும்.

பெரியவரை தவிர்த்து பரசுராம் வேறெங்கும் சர்வீஸ் செய்வதில்லை. மிகவும் வேண்டப்பட்டவர் என்றால் மட்டுமே. நேர்மையான ஆட்கள் கிடைத்தால் பரசுராம் ட்ரைனிங் கொடுத்து வைத்து கொள்வார். ஆட்களுக்கு பிரச்சனையில்லை. செக்கியூரிட்டி ஆபிஸ் அவரின் மனைவி இந்திராணி பொறுப்பு. இவருக்கு நிர்வாகத்தின் சுமை இல்லை.

மனைவி துணை இவரை ஆசுவாசம் கொள்ள வைக்க, அதற்கும் சேர்த்து மகன் இவரை படுத்தி வைக்கிறான். இளைய மகன்  சூர்யா தான் இவரின் இளைப்பாறல். இப்போது ராம்தாஸ் கேட்கவும், “பெரியவன் கவலை தான் சார்..” பரசுராம் வருத்தத்துடன் சொன்னார்.

“உடம்பு சரியாகிடுச்சு தானே..? வேறெதுவும் பிரச்சனை இருக்கா, டாக்டர்ஸ் எதுவும் சொல்லலையே..?” ராம்தாஸ் கேட்க,

“உடம்பு முழுசா குணமாகி காலேஜ் போக ஆரம்பிச்சுட்டான் சார், ஹெல்த் வைஸ் பிரச்சனையில்லை, ஆனா என்னமோ ரொம்ப அமைதியா இருக்கான், என்ன செய்ய யோசிக்கிறான் தெரியல..” என்றார் பரசுராம்.

“இவனை அடிச்ச பசங்களை திரும்ப அடிப்பான்னு நினைக்கிறீங்களா..?” ராம்தாஸ் கேட்டார்.

“இவனை சொல்ல முடியாது சார், எப்போ என்ன செஞ்சு வைப்பான்னு கண்டே பிடிக்க முடியாது..” பெருமூச்சுடன் சொன்னார்.

“ஷேடோ போட்டுடலாமா சார்..?” ராம்தாஸ் கேட்டார். அவர் குடும்பத்தில் எல்லோருக்கும் ஷேடோ இருக்கும். நிழல் போல ஆட்கள் தொடருவர்.

“நானே இப்போ நம்ம கார்ட்ஸ்கிட்ட சொல்லி தான் வைச்சிருக்கேன் சார்.. கார்ட்ஸும் பாலோ பண்ணிட்டு தான் இருக்காங்க..” என்றார்.

“அப்பறமென்ன விடுங்க பரசு சார், பார்த்துக்கலாம்..” என்றார் ராம்தாஸ்.

‘சரி’யென தலையாட்டிய பரசுராமிற்கு என்னமோ உறுத்தல் மறையவே இல்லை. மகனை தொடரும் ஆட்கள் நல்ல விதமாக தான் சொல்கின்றனர். ஆனால் அந்த நல்ல விதம் தான் அங்கு வம்பே.

‘இவ்வளவு அடி வாங்கி மகன் அமைதியாக இருக்கின்றான் என்றால் எங்கோ ஏதோ நடக்க போகிறது, நடத்த போகிறான் என்று தான் அர்த்தம். என்ன செய்வான்..?’ யோசித்தே இருக்க, அதற்கான பதிலும் அடுத்த வாரமே கிடைத்துவிட்டது.

அவரின் பெரிய மகன் கம்பன் வீரய்யன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்தான். பெற்றவரை வர சொல்லி கூப்பிடுகின்றனர். பரசுராம் முன் போல் அடித்து பிடித்து ஓடவில்லை. அமர்ந்துவிட்டார். இத்தனை நாள் சந்தேகத்திற்கு பதில் கிடைத்துவிட்டது. தண்ணீர் குடித்தவர், இந்திராணிக்கு அழைத்து சொன்னார்.

“காலேஜ் தானே கிளம்பி போனான்..?” இந்திராணி பதறி போய் கேட்க,

“அங்க வைச்சு தான் கலாட்டா, ஒரு பையனை கிரிக்கெட் பேட் உடைய உடைய அடிச்சிருக்கான், அந்த பையனோட பேரண்ட்ஸ் போலீஸ்கிட்ட போயிட்டாங்க..” என்றார்.

“ஏன் தான் இப்படி பண்றானோ..? அப்படியென்ன பிரச்சனை இவனுக்கு, கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறானே..” இந்திராணி புலம்ப,

“பரசு ஸ்டேஷன் போகல..” ராம்தாஸ் வந்தார்.

“நான் கூப்பிடுறேன்..” மனைவிக்கு சொல்லி வைத்த பரசுராம், “இல்லை சார்..” என்றார்.

“என்ன பரசு நீங்க..” ராம்தாஸ் உள்ளே சென்றார். பெரியவர்க்கு இப்படி என்று சொல்ல,

“என்ன பன்றான் அந்த பையன், அவனை வெளியே எடுத்து என்கிட்ட கூட்டிட்டு வா..” என்றார் மகனிடம்.

“இல்லை வேண்டாம் அய்யா, அவன் கொஞ்ச நாள் ஸ்டேஷன்ல இருக்கட்டும்..” பின்னால் வந்த பரசுராம் சொன்னார்.

“ஏன்..?” பெரியவர் கேட்க,

“அவனை என்னால சமாளிக்க முடியலங்க அய்யா, எப்போ என்ன பண்ணுவான்னு தெரியல..” பரசுராம் சொல்ல,

“நான் பார்த்துகிறேன்.. அவன் வெளியே வரட்டும், பேசுவோம்..” முடிவாக சொல்லிவிட்ட பெரியவர் மகனை பார்த்தார். ராம்தாஸ் உடனே அந்த குறிப்பிட்ட ஸ்டேஷனுக்கு பேசினார்.

அந்த பையனின் பெற்றோர்களிடம் சமரசம் பேச, அவர்கள் பிஸ்னஸ் டீல் பேசினர். பெரியவரின் குறிப்பிட்ட தொழிலில் டீலர்ஷிப் கேட்டனர். ராம்தாஸ் யாரென்று விசாரிக்க பணத்தில் கொஞ்சம் பெரும்புள்ளி தான். இதுபோல டீலர்ஷிப் செய்யும் ஆள்.

பெரியவருக்கு விஷயம் செல்ல, “ஆள் யாருன்னு தெரிஞ்சு தான் ஸ்டேஷன் போயிருக்கான், கழுத்தை பிடிச்சு பிஸ்னஸ் கேட்கிறான், கொடுத்துடு, பின்னாடி அவனை பார்த்துக்கலாம்..” என்றுவிட்டார்.

ராம்தாஸும் அதன்படி டீல் முடித்துவிட, அடுத்த ஒரு மணி நேரத்தில் கம்பன் வீரய்யன் பெரியவர் முன் நின்றான். பரசுராம் எதிலும் தலையிடவில்லை. தள்ளி  நின்று கொண்டார்.

பெரியவர் முன் நின்ற கம்பன் கண்கள் அப்பா பக்கம் சென்றது. அவரும் அவனை தான் ஆதங்கத்துடன் பார்த்திருந்தார். காலை டிப் டாப்பாக காலேஜ் கிளம்பி சென்ற மகன், இப்படி தலை கலைந்து, உடை எல்லாம் கசங்கி, டக் இன் செய்திருந்த சட்டை பாதி வெளியே வந்து, முழங்கை சட்டை மடித்து, சோர்ந்து போய் நின்றிருந்தான். அதுவும் இவரை நேரே பார்த்தபடி இருந்தான்.

என்னை பாக்கிறானா..? என் மகனா..?  முகம் திருப்பி செல்லும் மகன் தான் அவருக்கு பழகியிருந்தான்.

இவன்..? என்னாச்சு..?

ஸ்டேஷன் போய்ட்டு வந்தது ஏதும் பயந்துட்டானா..? அவன் முகம், அந்த கண்கள். இவரை பார்த்திருக்கும் மகன் கண்களில் தெரிவது என்ன..? உயர்ந்து வளர்ந்து கண்ணை நிறைக்கும் மகனின் தோற்றத்தில்  பரசுராம் தந்தையாய் கலங்கி போனார்.

அதுவரை தள்ளி  நிற்க முடிந்தவரால் அதற்கு மேல் முடியவில்லை. அவர் மகனை நெருங்க நினைக்கும் முன் மகன் அவர் அருகில் வந்திருந்தான்.

‘என்னடா ஆச்சு..?’ கேட்க வாய் திறக்க, அதற்குள் மகன் இவரை வேகமாக அணைத்திருந்தான்.

‘என் மகனா..?’ பரசுராம் அதிர்ந்துவிட்டார்.  மகன் அணைத்து நிற்கிறான், தன்னை நெருங்கி இருக்கிறான், அப்பாவாக மகிழ முடியவில்லை. என்னை நெருங்கும் அளவு, என்னிடம் வரும் அளவு என் மகனுக்கு என்ன பிரச்சனை..? தந்தை தவித்தார்.

“வீ.. வீரா.. என்ன.. என்ன, என்னடா..?” அவன் தோள் தட்டி கேட்க, மகனிடம் பதிலில்லை. அவரின் தலைக்கு மேல் ஒரு அடி  வளர்ந்திருந்த மகன், வளைந்து, குனிந்து தன்னை அணைத்து நிற்பது, அப்பாவின் மனதை பிசைந்தது.

என்னமோ தொண்டை வேறு அடைத்து மகனிடம் கேட்க முடியாமல் செய்தது. இவர் தொண்டையை செருமி கேட்க வர, மகன் அவரை விட்டு விலகி பெரியவரிடம் சென்றுவிட்டான். தன்னை பார்க்காமல் செல்லும் மகன், பரசுராம் தானும் பெரியவரிடம் சென்றார்.

அவர் கம்பனை மட்டும் தனியே அழைத்து சென்றார். “அய்யா நானும்..” பரசுராம் அவர் பின்னே செல்ல போக்க, பெரியவர் அவரை மறுத்துவிட்டார்.

இதற்கு முன் பெரியவர் பல சந்தர்பங்களில் கம்பன் வீரய்யனோடு பேசி  இருக்கிறார். ஆனாலும் இப்போது மகன் இருப்பது.. பரசுராம் வெளியவே நிற்க,  பெரியவர்  கம்பனுடன் அவர் அறைக்கு சென்றார். உடன் யாருமில்லை. இருவர் மட்டுமே.

“ஏன் இவ்வளவு டென்ஷன் பரசு சார்.. பார்த்துக்கலாம்..” ராம்தாஸ் சொல்ல, பரசுராம் தலை மட்டுமே அசைத்தார்.

அவருக்கு மகன் தன்னை அணைத்து நின்றதே  இன்னும் ஏதோ செய்தது. எத்தனை வருடங்கள் கழித்து அவன் ஸ்பரிசம். நினைவிலே இல்லை. இவர் எதிரில் வந்தால் வேறு பக்கம் செல்லும் மகன், முகம் பார்க்க கூட மறுக்கும் மகன், அணைத்து நின்றான்.

ம்ஹூம்.. அதில் அவருக்கு இம்மியும் சந்தோஷம்  இல்லை. அவ்வளவு கலக்கம். எதிலும் சிக்கி கொண்டானா..? யாரும் அவனை தொந்தரவு செய்கின்றனரா..?

நொடிகள் மணி நேரமாக நகர, ஒரு வழியாக பெரியவர் அறை கதவு திறந்தது. மகன் வெளியே வந்தான். உடன் பெரியவரும். தந்தை மகன் முகத்தை ஆராய்ந்தார். சிவந்திருந்தது. அழுதானா..?

“காலேஜ் முடிச்சுட்டு என்கிட்ட தான் வரணும்..” பெரியவர் அவன் தோள் தட்டி சொன்னார்.

“தூக்கிட்டு வந்துடுவீங்கன்னு தெரியும் அய்யா..” கம்பன் வீரய்யன் சொல்ல,

“தெரியுது இல்லை.. வந்து சேரு..” என, தலையசைத்த கம்பன் வீரய்யன் கிளம்ப ஒரு அடி எடுத்து வைத்து, அப்பாவை பார்த்தான்.

அவரின் கலக்கம் அப்படியே தெரிந்தது. மகன் முகம் கசங்கி பின் இயல்பானது. லேசாக ஒரு உதடு விரிப்பு.

‘சிரிக்கிறானா..? என்னை பார்த்தா..?’

‘இல்லை, அந்த சிரிப்பு அவன் கண்ணை கொஞ்சம் கூட எட்டலை. எதுக்கோ ரொம்ப வேதனைபடுறான். ஆமா.. வலிக்கிற மாதிரி நிக்கிறான். எங்கேயோ, எதுவோ, அடிபட்ட மாதிரி..’ பரசுராம் மகனை பார்த்தே நிற்க, மகன் கிளம்பிவிட்டான்.

Advertisement