Advertisement

அன்று மட்டுமில்ல மருத்துவமனையில் இருந்த இரண்டு வாரமும், அதன் பின் அடையாளம் காட்ட சொன்ன போதும் கூட. அவ்வளவு உறுதியாக இருந்தான். ஆனால் அடுத்து ஒன்று நடந்து தெரிய வந்தது. இருந்தாலும் அந்த நாட்களில்  அண்ணனின் அந்த பிடிவாதம், உறுதி தம்பிக்கு இப்போதும் பெரிய ஆச்சரியம் கேள்விக்குறி.

எப்படி இவன் மட்டும் இப்படி..? இதோ இதே பெட்டில் அன்று அவன் படுத்திருக்க, இங்கு அப்பா அமர்ந்து அவ்வளவு கேட்டாரே..? கடைசி வரை சொல்லாமல் அவரை அப்படி படுத்தினானே..? அவ்வளவு கல் மனதா இவனுக்கு..? என் அப்பாவை பத்தி அவன் யோசிக்கவே மாட்டானா..?

சூர்யா  இருந்த மருத்துவமனை அறை அவனுக்கு பழைய நினைவுகளை கிளறி விட்டிருந்தது. வீரா அடிபட்டு சிகிச்சை பெற்ற அதே மருத்துவமனையில் தான் இன்று காவ்யா அம்மா இருக்கிறார்.  பக்கத்து அறையில் அவர் இருக்க, வீரா இருந்த  அறையை வாடகைக்கு எடுத்திருந்தனர்.

இந்திராணி காவ்யா அம்மாவை பார்க்க வந்து சென்றிருக்க, சூர்யா வேலைக்காக நின்றுவிட்டான். காவ்யா, இவனும் வேலை பற்றி டிஸ்கஸ் செய்ய இங்கு வந்தனர். சூர்யா அந்த ரூமை கண்டுகொண்டான். மனம் பின்னோக்கி சென்றுவிட்டது.

‘அப்போ தான் அவனுக்கு அப்பா ஆகாதுன்னா, அவர் எங்களை விட்டு போனப்போ கூட இவன் கல்லு மாதிரி இருந்தான், இன்னமும் இருக்கான், இவன் அழுது நான் பார்த்ததே இல்லை. அப்படியா என் அப்பா இவனுக்கு..? அவர் வேண்டாம், அவருக்காக துளி கண்ணீர் சிந்த மாட்டான். ஆனால் அவரின் தொழில் மட்டும் வேண்டும், நான் விட்டிருக்க கூடாது..” சூர்யாவின்  முகத்தில் ஆதங்கம், வருத்தம் வெளிப்படையாக தெரிந்தது.

“என்ன ஆச்சு சூர்யா..?” காவ்யா கவனித்து கேட்டாள்.

“டூ மினிட்ஸ்..” சொன்னவன் எழுந்து பாத்ரூம் சென்றான். தயங்காமல் கண்ணீர் சிந்தினான். அண்ணன் மேல் கோவம், அப்பாவை  ஞாபகபடுத்திவிட்டது.

‘அவர் இருந்திருந்தா நான் இன்னைக்கு இப்படி எனக்குள் அழுவேனா..? என்னை ஒரு பார்வையிலே கண்டுபிடிச்சிடுவாரே..? இப்போ அம்மா, அண்ணா இருந்தும் நான்..’ என்னமோ இன்று அதிகம் அவர் ஏக்கம் அழுகை.

தானே அழுது, தேற்றி வெளியே வந்தான். அவன் சிவந்த கண்கள் காவ்யாவிற்கு காட்டி கொடுக்காமல் இருக்குமா..? உடனே வெளியே உதவிக்கென இருக்கும் ஆளை அனுப்பி காபி வாங்கி வர செய்து கொடுத்தாள். சூர்யா மறுக்கவில்லை. இன்னும் ஒரு கப் எடுத்து கொண்டான். வேலை பற்றி பேச ஆரம்பித்துவிட்டான்.

காவ்யாவும் கேட்டு கொள்ளவில்லை. என்னதான் நண்பன் என்றாலும், அவளாலும் அவன் அழுதது பற்றி நேரே  கேட்க  முடியவில்லை. உள்ளுக்குள் அழுகும் அளவுக்கு என்ன என்று அரிக்க ஆரம்பித்தது. அங்கிள் ஞாபகமா..? சூர்யா பேசிவிட்டு கிளம்பிவிட்டான். ஆறவில்லை அவளுக்கு.

இவளின் அம்மாவும் மேலும் இரண்டு நாள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவருக்கு உடல் பூரணமாக குணம் ஆன பின் காவ்யா ஆபிஸ் செல்ல ஆரம்பித்தாள். வேலை பார்த்தாள் என்பதை விட சூர்யாவை அதிகம் கவனித்தாள்.

பதினொன்றாம் வகுப்பில் இருந்து தொடரும் நட்பு. நல்ல நெருங்கிய தோழமையும் கூட. இருவருக்குள்ளும் ரகசியம் என்று எதுவும் இருந்ததில்லை ஆதிராவுடன் திருமணம் நடக்கும் வரை. அதன் பின் இவளும் முன் போல இல்லை. நண்பனுக்கு ஸ்பேஸ் கொடுத்து விலகி நின்றாள்.

அதுவும் சில மாதங்களே. அதற்குள் இவ்வளவு உடைந்திருக்கிறான் என்றால், தோழியாய் அவளுக்கு உள்ளம் பதைத்தது. முன்பு சந்தேகம் போல வந்தே கம்பனிடம் சென்று நின்றாள். ஆனால் அவன் காதில் கூட போட்டு கொண்டதாக தெரியவில்லை.

“ம்ப்ச்..” செய்யும் வேலையை மூடி வைத்து வெளியே வந்தாள். அன்று விடுமுறை நாள். வீட்டில் இருக்க, ஒரு கட்டிடத்திற்கான வரைபடம் வரைய எடுத்து, சூர்யா உறுத்தலில் மூடி வைத்துவிட்டாள். அப்பா, அண்ணா ஹால் சோபவில் ஏதோ பேசி கொண்டிருக்க, இவளும் அவர்களுடன் அமர்ந்தாள்.

“என்ன ஆச்சு வேலை இருக்குன்னு போன..?” அவளின் அம்மா சுதா வந்தார்.

“செய்யலம்மா..” காவ்யா சொல்ல,

“அப்போ என்னோட ஷாப்பிங் வா காவ்யா..” என்றார்.

“போலாம்..” மாற்றத்திற்காக காவ்யாவும் அம்மாவுடன் கிளம்பிவிட்டாள். சஞ்சய்யும் இவர்களுடன் வந்தான். இவர்கள் எப்போதும் எடுக்கும் கடைக்கு சென்றனர்.

சுதா அவருக்கு புடவைகள் வாங்க, சஞ்சய் அம்மாவிடம் “இந்த கலர் உங்ககிட்ட இருக்கு, இது நல்லா இல்லை, இது எடுங்க..”  என்றான்.

“டேய் என்னை எடுக்க விடுடா.. உன்னோட செல்கஷன் எல்லாம் உன் சாதனாகிட்ட வச்சுக்கோ, என்னை விட்டுடு..” என்றார் நொந்து.

சஞ்சயின் காதலி சாதனா. இவர்கள் குடும்ப நண்பரின் மகள். மறுக்க ஏதுமில்லை. இரு வீட்டிலும் பேசியும் முடித்துவிட்டனர்.

“அவ என் பேச்சை கேட்டா நான் ஏன் உங்கிட்ட சொல்ல போறேன், நீங்களாவது என் பேச்சை கேளுங்கம்மா..” என்றான் சஞ்சயும்.

“இது நல்லா இருக்கே, போடா நான் உன் அப்பா செலெக்ஷனே வாங்க மாட்டேன். வந்துட்டான்..” சுதா அவருக்கு அவரே எடுக்க,

“ஹாய் சிஸ்டர்..” என்றான் காவ்யாவிடம்.

“வெரி சாரி பிரதர்.. நான் துணியே எடுக்கல, உங்க சர்வீஸ் எனக்கு வேணாம்..” என்றாள் காவ்யா கேலியாக.

“டூ பேட்.. பேமஸ் லாயர்ரோட செலக்ஷன் போட உங்களுக்கு கொடுத்து வைக்கல..” சஞ்சய் சொல்ல,

“இப்படி சொல்லி மனசை தேத்திக்கோ பிரதர்..” காவ்யா சிரிப்புடன் வாரினாள்.

“அவங்களுக்கு வேணான்னு இருந்துட்டு போகுது, சஞ்சய் நீ எனக்கு செலக்ட் பண்ணு..” இந்திராணி வந்தார்.

“ஹாய் ஆன்ட்டி.. சொல்லிட்டீங்க இல்லை.. பாருங்க..” சஞ்சய் அவரின் விருப்பத்தை கேட்டு செல்ல, இந்திராணி காவ்யா, சுதாவிடம் பேசினார். “என்னாச்சு ரொம்ப டயர்டா இருக்கீங்க..” சுதா கேட்டார்.

“இந்த வாரம் வேலை கொஞ்சம் கூட சுதா, அதான் சஞ்சய் எடுக்க சொல்லிட்டேன்..” என்றார்.

“நல்ல வேலை பண்ணீங்க, நான் தப்பிச்சேன்.. தனியாவா வந்தீங்க..?” சுதா கேட்க,

“வீரா வந்திருக்கான், கார் பார்க் பண்ணிட்டு வர போயிருக்கான்..” என்றார்.

கம்பன் வீரய்யனும் வந்துவிட்டான். காவ்யாவை பார்த்ததும் அவன் முகம் திரும்பி கொண்டது. ‘அப்படியென்ன என்னை பார்த்தா எப்போவும் முகத்தை திருப்பிக்கிறது..?’ காவ்யா அவனையே பார்த்தாள்.

சுதா அவனிடம் இரண்டொரு வார்த்தை பேசினார். இவன் மொபைல் எடுத்து நின்றுவிட்டான். ‘இன்னும் எடுக்கலையேன்னு நினைச்சேன்..  என்னை தவிர்க்க தான் இப்படியா..?’ காவ்யாவிற்கு இருந்த சந்தேகங்கள் கூடியது.

சஞ்சய் வந்தவன், கம்பன் வீரய்யனுக்கு  “ஹாய்” சொல்லிவிட்டு, இந்திராணிக்கு புடவை காட்டினான். தொழில் வட்டம் என்பதோடு சூர்யா, காவ்யா, மற்ற மூன்று நண்பர்கள் குடும்பமும் நல்ல பழக்கமே.

கம்பன் வீரய்யனை தவிர்த்து நால்வரும் ஏதேதோ பேசி சிரித்தனர். இவன் எப்போதும்  எல்லோருக்கும் தூரமே..? யாரிடமும் நெருங்குவதில்லை. மற்றவர்கள் நெருங்க வழியும் விடுவதில்லை.

இவன் எடுத்து கொண்ட தொழிலும் இன்னும் தொலைவை எடுத்து கொண்டது. கம்பன் வீரய்யனுக்கும் இது தான் வேண்டும். இப்போதும் தான் மட்டும் தனித்து நிற்கிறோம் என்றெல்லாம் அவனுக்கு எதுவும் இல்லை. என்னை இப்படியே விட்டுடுங்க என்பது தான்.

மற்றவர்களுக்கும் அவனின் இந்த குணம் பழக்கம் என்பதால் இவனை விட்டு ஷாப்பிங் முடித்தனர். கடை முதலாளி நல்ல பழக்கம் என்பதால் காபி வந்தது. “எப்போ சஞ்சய் கல்யாணம்..?” இந்திராணி கேட்டார்.

“எப்போ வைச்சாலும் பிரச்சனையில்லை, இவன்  தான் காவ்யா கல்யாணம் முடிஞ்சு தான் நிக்கிறான்..” என்றார் சுதா.

“அண்ணனுங்கன்னாலே அப்படி தானே..?” இந்திராணி சொல்ல,

“எல்லா அண்ணனும் அப்படி இருக்கிறதில்லை ஆன்ட்டி..” என்றுவிட்டாள் காவ்யா. கம்பன் விரல்கள் காபி கப்பையும், மொபைலையும் இறுக பிடித்தது.

காவ்யாவின் பார்வை மொத்தமும் கம்பன் மேல் இருக்க, அவள் யாரை சொல்கிறாள் என்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. சஞ்சய் தங்கையை பார்த்து பேசாத என்று கண் காட்டினான். இவளுக்குதான் சூர்யா அழுத முகமே மனதில் நிற்க விடுவாளா..?

“நம்ம கூட பிறந்தவங்க எவ்வளவு கஷ்டப்பட்டா எனக்கென்ன நான் மட்டும் தனி காட்டு ராஜாவா சந்தோஷமா இருந்தா போதும்ன்னு வாழுறவங்களும் இருக்கதான் செய்றாங்க  ஆன்ட்டி..” என்றாள்.

‘காவ்யா ஏன் புதுசா இப்படி எல்லாம் பேசுறா..?’ இந்திராணி பெரிய மகனை பார்த்தார்.  ஏதும் பேசிவிடுவானோ, தேவையில்லாத சங்கடம்.

ஆனால் மகனோ  மொபைலில்  குனிந்தே இருக்க, அவர் குழம்பினார். அதேதான் சுதா, சஞ்சய்க்கும் கூட. கழுத்தோர நரம்புகள் அவன் நிலைய சொல்ல, அவனின் மௌனம் மூவரையும் முகம் பார்க்க வைத்தது.

“அப்பா இருந்தும்ன்னா கூட ஓகே. அப்பா இல்லாம இருக்கும் போது தான் தொழிலை கூட பிடிங்கிக்கிறாங்க, அப்படியும் தம்பிய பார்த்துப்போம்ன்னு கூட நினைக்கிறதில்லை, அம்போன்னு விட்டுடுறாங்க. சுயநலத்தின் மொத்த உருவமா இருக்காங்க..” காவ்யா மேலும் பேசிவிட, கம்பன் வீரய்யன் இப்போது நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான். நேரே பார்த்தான்.

Advertisement