Advertisement

கம்பன் காதல் கொண்டு 6

அன்றய இரவு மணி பத்தானது. முதலாளி வீட்டில் பார்ட்டி இன்னும் நடந்து கொண்டே இருந்தது. பரசுராம் ஓரிடத்தில் நிற்காமல் மொத்த பங்களாவையும் சுற்றி வந்து கொண்டே இருந்தார். அங்கங்கு பாதுகாப்பிற்கு இருந்த அவரின் ஆட்களையும் எச்சரித்து சென்றார்.

உணவு முடிந்து ட்ரிங்ஸ் பார்ட்டி ஆரம்பித்திருக்க, ஆண்கள் அதிகம் இருக்க,  பெண்களும் கண்ணுக்கு பட்டனர். பரசுராமின் முதலாளி அவ்வீட்டின் ‘பெரியவர்’ எல்லாம் பார்த்தபடி இருந்தார். ட்ரிங்ஸ் அவர் தொடுவதில்லை. பரசுராமை வர சொன்னவர், “சாப்பிட்டியா..?”  என்று கேட்டார்.

“பார்ட்டி  முடிஞ்சதும்..” பரசுராம் சொல்ல வர, அவர் உடனே உணவு பொறுப்பாளரிடம் உணவு எடுத்து வர சொல்லிவிட்டார்.

“அய்யா.. நான் அப்புறம்..”

“மூச்.. பேச கூடாது..”  உணவு வரவும், அவர் முன்னே சாப்பிட சொன்னார். பரசுராம் நிற்க, கண்ணால் முறைத்து சேரை காட்டினார். “விடமாட்டீங்க..” பரசுராம் அமர்ந்து உண்டார்.

“மெதுவா சாப்பிடுடா..” அதட்டல் வந்தது. பரசுராம் தட்டில் உணவு குறைய, அவர் கண்கள் உணவு பொறுப்பாளரிடம் சென்றது. அடுத்த நொடி பிளேட் நிரம்பியது. கடைசி ஸ்வீட் வரை சாப்பிட்ட பிறகே விட்டவர், அவரிடம் பேச காத்திருந்த விருந்தினரை வர சொன்னார்.

பரசுராம் அங்கிருந்து நகர போக, பெரியவர் பார்வை இவர் மேல் நொடி பதிந்து விலகியது. பரசுராம் அதில்  அங்கேயே அவர் பக்கம் நின்று கொண்டார். பேச்சு நீண்டு சென்று முடிய, அந்த விருந்தினர் எழுந்து சென்றார். இருவர் மட்டும் இருக்க “அவனை நம்பலாமா..?” பெரியவர் பரசுராமிடம்  கேட்டார்.

“நம்ப முடியாதுன்னு உங்களுக்கே தெரியும் அய்யா..” பரசுராம் சொல்ல, பெரியவர் சிரித்தவர்,

“ராமதாஸை கவனிச்சுக்க சொல்லி சொல்லிட்டு வா, நாம ரூம் போலாம்..” என்றார். பரசுராம் சென்று சொல்லி வர, உடன் ராம்தாஸும் வந்துவிட்டார்.

“இந்த மீட்டிங்ல நடந்த பேச்சு ரொம்ப பெருசு, எச்சரிக்கை அதிகம் தேவை. யார்கிட்டேயும் இது பத்தி மேல பேசாத, நாம கால் வச்சிருக்கிற இடம் சரியில்லை, நான் போனதும் ட்ரிங்ஸ் எடுக்காத..” என்றார் மகனிடம்.

“புரியுதுங்க  அய்யா..” ராம்தாஸ் மிகுந்த மரியாதையுடன் அப்பாவிடம்  சொல்ல, பெரியவர் வீட்டுக்குள் சென்றார். உடன் பரசுராமும். பெரியவரின் மனைவி சில வருடங்கள் முன் தவறியிருந்தார்.

பெரியவர் சென்று கட்டிலில் அமர்ந்தவர், “எனக்கு ஒரு விஷயம் செய்யணும் பரசு, நான் சொல்றவங்களை எல்லாம் பாலோ பண்ணனும், அவங்க என் பின்னால குத்த வாய்ப்பு அதிகம்..” என்றவர், யார் யார் என்று சொன்னார்.

நடந்து கொண்டிருக்கும் விஷயம் பரசுராமிற்கு தெரியும் என்பதால், “நமக்கு இந்த ரிஸ்க் தேவையாங்க அய்யா, நீங்க இந்த எலெக்ஷன் விஷயத்துல  முன்னால நிக்கிறது எனக்கு உறுத்துது..” என்றுவிட்டார். முதல் முறை அவர் சம்மந்தப்பட்ட விஷயங்களை பேசுகிறார்.

அதில் பெரியவருக்கான அக்கறை மட்டுமே இருக்க, புரிந்த சிரித்த பெரியவர், “இனி எனக்கு என்ன இருக்கு பரசு..? யார் நம்மளை என்ன பண்ணிட முடியும் இந்த உயிரை எடுக்கிறதை தவிர..” என்றார்.

“அய்யா.. என்னை மீறி யார் உங்ககிட்ட வந்திட முடியும்..?” பரசுராம் நெஞ்சை நிமிர்த்து சொன்னார்.

“அதான் என் பிரச்சனை, அப்படி ஒரு சூழ்நிலை வந்தா நீ என்னைவிட்டு விலகி போறதை தான் நான் உத்தரவா சொல்வேன், கேட்டுக்கோ, மறந்துடாத..” என்றார்.

“அப்படி நடக்கவே வாய்ப்பில்லைன்னும் போது இந்த பேச்சு தேவையில்லை அய்யா.. ஆனா அந்த கட்சி முன்ன மாதிரி இல்லை, எதுக்கும் இறங்குறாங்க..” என்றார்.

“அது எனக்கும் தெரியும் பரசு, ஆனா அவனுங்க ஆட்சிக்கு வந்து அவனோட ஆட்களை வளர்த்துவிட என்னை காலி பண்ண பார்ப்பானே..? இத்தனை தலைமுறையா தொழில்ல முன்ன நிக்கிற எங்களை இவனுங்க வந்து கீழே தள்ள விட்டுட்டா,  அப்புறம் நான் உயிரோட இருந்து மட்டும் என்ன பிரயோஜனம்..? அதுக்கு நானே போனாலும் பரவாயில்லை, அந்த கட்சி ஆட்சிக்கு வர கூடாது.  அவ்வளவு தான், பார்த்துக்கலாம் விடு..” என்று உறுதியாக சொல்லி கொண்டிருக்க, பரசுராமின் போன் ஒலித்தது.

இந்த நேரத்துக்கு இந்திராணி அழைக்க மாட்டாரே..? எடுக்காமல் விட முடியாமல் நிற்க, “எடுத்து பேசுடா..” என்றார் பெரியவர். பரசுராம் உடனே எடுக்க, அந்த பக்கம் இந்திராணி “பெரிய மகன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை..” என்றார்.

மணி பதினொன்றை நெருங்கி கொண்டிருந்தது. “இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டிருந்த இப்போ சொல்ற..?” மனைவியை பல்லை கடித்து கேட்டார்.

“எப்போவும் போல லேட்டா வருவான்னு இருந்தேங்க, ஆனா அவன் பிரண்ட்ஸுக்கு போன் பண்ணா வீரா எட்டு மணிக்கே வீட்டுக்கு கிளம்பிட்டான் சொல்றாங்க, இவனுக்கு பண்ணா போன் சுவிட்ச் ஆப், என்னமோ பயமா இருக்குங்க..”

“நீ டென்சன் ஆகாத வை, நான் பார்க்கிறேன்..” பரசுராம் வைக்க, பெரியவர் புரிந்து கொண்டுவிட்டார். உடனே அவர் போன் எடுத்து போலீசுக்கு அழைத்து சொன்னார். பரசுராமும் அவர் ஆட்களை வைத்து அவர் ஏரியாவில், மகன் செல்லுமிடம் எல்லாம் பார்க்க சொன்னார்.

“நீங்க தூங்குங்க அய்யா.. நான் பார்த்துகிறேன்..” என்றார் பரசுராம்.

“ஒரு நாள் லேட்டா தூங்கினா ஒன்னுமில்ல.  நீ போய் வீராவை தேடு..” என்றார்.

“இல்லைங்க அய்யா.. இங்க முடியாம நான் நகர மாட்டேன், இவங்க விசாரிக்கட்டும்..”  பரசுராம் சொன்னவர், பார்ட்டியை பார்த்து கொண்டே மகனையும் பிடிக்க முயன்று கொண்டிருந்தார்.

ஒரு மணி நேரம் சென்று போலீஸ் தரப்பில் இருந்து தகவல் வந்தது. அவர்கள் ஏரியா செல்லும் வழியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இருந்தான் வீரா. ஆனால் நல்ல காயங்களுடன், மயங்கி. பெரியவர் உடனே அவனை மருத்துவமனை சேர்க்க ஏற்பாடு செய்தார்.

இங்கு பார்ட்டியும் முடிவுக்கு வந்திருக்க, “இப்போவாது கிளம்பு.. போ..” பெரியவர் பரசுவை அதட்டி அனுப்பி வைத்தார். இந்திராணி கணவர் வருவதற்குள் சூர்யாவுடன் மருத்துமனையில் இருந்தார். உள்ளே சிகிச்சை நடைபெற்று கொண்டிருந்தது.

இப்போது தான்  சஸ்பெண்ட் முடிந்து கல்லூரிக்கு நல்ல படியாக சென்று கொண்டிருந்தான். அதற்குள் இப்படி..? என்ன நடக்குது இவன்  வாழ்க்கையில்..? என்ன பண்றான் என் மகன்..? ஓய்ந்து அமர்ந்தார் தந்தை. உடல் சோர்வு அவருக்கு எப்போதும் பெரிதாக பட்டதில்லை. மகனால் அனுபவிக்கும் மனவுளைச்சல் அவரை அதிகம் வருந்த வைத்தது.

ஒன்று இவன் தவறுகிறான், இல்லை இவனுக்கு  நடக்கிறது..? தலை பிடித்து அமர்ந்துவிட, இவரின் ஆட்கள் சிலரும் இருந்தனர். போலீசும் வீராவிடம் விசாரிக்க காத்திருந்தனர். மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்து வந்தனர். பரசுராம் ஓய்ந்திருக்க, அவரின் கார்ட்ஸ், இந்திராணி மருத்துவரிடம் செல்ல,

“நல்ல காயம். ஹெவியா போட்டு அடிச்சிருக்காங்க, கட்டை, ராடு வைச்சு, பிளட் லாஸ் அதிகம். ஒரு மாசமாவது ஆகும் அவர் கம்ப்ளீட் குணமாக. எதுக்கும் ஒரு முழு செக் அப் போறது பெஸ்ட்..” என்ற மருத்துவர்.  “பேஷண்ட் கண் முழிக்க நேரம் எடுக்கும்..” என்று சென்றார்.

இந்திராணி கண்ணீர் விட,  ஆறுதல் சொன்ன சூர்யாவுக்கும் அழுகை. அப்படியென்ன என் மகன் மேல விரோதம், யார் அது..? அந்த கிரிக்கெட் மேட்ச் வைச்சா..? அதே பசங்களா..? பரசுராம் மனதில் பல கேள்விகள். கண்டுபிடிக்கவும் ஆட்களை உடனே நியதமித்தவர், கர்ட்ஸை போக சொல்லிவிட்டார்.

போலீசும் “கண் முழிச்சதும் போன் பண்ணுங்க..” என்று முன்னமே சென்றிருந்தனர்.  இந்திராணி, சூர்யாவையும்  வீட்டுக்கு அனுப்பி வைத்தவர்,  மகன் கண் விழிக்க அங்கேயே காத்திருந்தார். பின் காலை போல தான் வீரா கண் முழித்தான். அதற்குள் இங்கு ஓரளவு ஆட்களும் யார் என்று தெரிந்து விட்டிருந்தது.

சூர்யாவை  கல்லூரி போக சொல்லிவிட்டு இந்திராணியும் உணவுடன் வந்துவிட்டிருந்தார். மருத்துவர் திரும்ப அவனை செக் அப் செய்து செல்ல, இந்திராணி மகன் கையை பிடித்து நலம் விசாரித்தார். “ஓகேம்மா..” என்றான் கரகர குரலில் மெலிதாக.

உடலில் பல இடங்களில் கட்டுகள். வலி மிக அதிகமே. காட்டி கொள்ளாமல் படுத்திருந்தவனை தான் தந்தை பார்த்திருந்தார். ஏதாவது சொல்வானா மகன்..? ம்ஹூம்.. எனக்கு அந்த எண்ணமே இல்லை என்பது போல மகன்.

போலீஸ் அவர்களின் கடமையை செய்ய வந்தனர். “எனக்கு இருட்டுல யார்ன்னு தெரியல, பைக்ல போகும் போது வழி மறைச்சு அடிச்சுட்டாங்க..” என்றான்.

“காலேஜ்ல உன்னோட வம்பு பண்ண பசங்கன்னு தான் சொல்றாங்க..” போலிஸ் இது வரையிலான விசாரணை வைத்து கேட்க,

“அப்படி இருக்கிற மாதிரி எனக்கு தெரியல.. நான் யாரையும் பார்க்கல..” என்றான் இவன். அப்பட்டமா பொய் சொல்றான்.. பரசுராம் பல்லை கடித்தார்.

“தம்பி நீ கோஆப்ரேட் பண்ணா தான் உன்னை அடிச்சவங்களை எங்களால கண்டுபிடிக்க முடியும்..? இப்போ விட்டா நாளைபின்ன உனக்கு தான் ஆபத்து..” போலீஸ் சொல்ல,

வீராவோ, “எனக்கு தெரிஞ்சா தானே சார் சொல்ல முடியும்..” என்றான். போலீசும் விடாமல் கேட்க, அவன் தெரியாது, பார்க்கல என்பதை தவிர வேறு சொல்லவில்லை.

“சரி நாங்களே  விசாரிச்சுகிறோம்..” போலிஸ் பரசுராமிடம் வந்தவர்,  “இன்னும் யாருன்னு கண்டுபிடிக்காம  என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு பெரியவர் பிரஷர் கொடுக்கிறார், உங்க மகன் எனக்கு தெரியாதுன்னு சாதிக்கிறான், என்ன பண்ண நாங்க, கொஞ்சம்  உங்க மகன்கிட்ட கேட்டு சொல்லுங்க சார், இவன் பாதுகாப்புக்கு நாங்க கெஞ்ச  வேண்டியிருக்கு..” என்று சென்றனர்.

‘அய்யாகிட்ட பேசணும்..’ பரசுராம் நினைத்து மகனை பார்த்தார். போலீஸ் பேச்சு அவனுக்கும் கேட்டிருக்க, அதற்கான பிரதிபலிப்பு இல்லாமல் படுத்திருந்தான். மாலை வரை பொறுத்த பரசுராம், “என்ன நடந்துச்சுன்னு சொல்லு..” மகன் பக்கத்தில் அமர்ந்து பொறுமையாக கேட்டார்.

அவனோ அவருக்கு மேல் பொறுமையாக, “போலீசுக்கு சொன்னது தான்..” என்றான்.

“ரொம்ப வெறி கொண்டு அடிச்சிருக்காங்க, பெருசா ஏதாவது ஆகியிருந்தா..?”

“அதான் ஆகலை இல்லை, இதை விடுங்க..”

“ஏன் நீயே பார்த்துக்க போறியா..? ரவுடிஸ் யாரும் வேணுமா..?”

“இல்லை வேணாம்..”

“பொறுப்பா பேசு, அப்பாவா என் நெஞ்சு எவ்வளவு பதைக்குதுனு  யோசிச்சு பேசு..”

இப்போது மகனிடம் அமைதி.

“உனக்கு அவங்க மேல ஆக்ஷன் எதுவும் எடுக்க வேணாமன்னா பிரச்சனை இல்லை, விட்டுடலாம். ஆனா எனக்கு அவங்க யாரு, என்ன காரணம்ன்னு கண்டிப்பா தெரியணும்..” என்றார் தந்தையாய்.

வீராவின் அமைதி தொடர்ந்தது. அடுத்து பரசுராம் என்ன பேசியும், கேட்டும், அதட்டியும் வீரா வாய் திறக்கவில்லை. சூர்யா அண்ணனை பார்க்க ஹாஸ்பிடல் வந்தவன், அப்பா, அண்ணா பேச்சில் அம்மாவை போல ஒதுங்கி நின்று பார்த்திருந்தான். கடைசி வரை அண்ணன் அப்பா கேட்டதற்கு பதில் சொல்லவில்லை.

Advertisement