Advertisement

கம்பன் காதல் கொண்டு 5

“கம்பன்’ண்ணா.. உங்களை உள்ள கூப்பிடுறாங்க..” அவனின் பின்னிருந்து குரல் ஒலிக்க, போன் பேசி கொண்டிருந்தவன்,

“நான்  கூப்பிடுறேன் மச்சி..” என்று வைத்து திரும்பினான். பள்ளிக்கூட வயதில் சிறு பெண் ஒருத்தி நின்றிருந்தாள்.

“எப்படி கூப்பிட்ட என்னை..?” என்றான் இவன்.

“கம்பன்’ண்ணா..” அவள் மீண்டும் சொல்ல,

“என்னோட பேர் கம்பன் வீரய்யன்.. கால் மீ வீரா..” என்றான்.

“எனக்கு கம்பன் பேர் பிடிச்சிருக்கு, அப்படியே கூப்பிடுறேன்..” என்றாள் பெண் ஆசையுடன்.

“உனக்கு பிடிக்கிறதுக்காக கம்பு, குச்சின்னு எல்லாம் கூப்பிடுவியா..? சவுண்ட்ஸ் பேட், வீரா கூப்பிடு..” என்றான் அழுத்தமாக.

“நோ.. நான் கம்பன்’ண்ணா தான் கூப்பிடுவேன்..” என்றாள்  இவளும்.

“பார்றா.. யார் நீ..? சூர்யா பிரண்டா..” என்றான் கேள்வியாக.

“ஆமா.. இன்னைக்கு அவன் பார்த்டே செலிபிரேஷனுக்காக வந்திருக்கோம்..” என்றாள்.

“பேர் யார் சொல்வா..?” என்றான் கேள்வியாக.

“காவ்யா..” என்றாள்.

“யாரோட காவியம் நீ..?”  அவன் சிரிப்புடன் கேட்டான்.

“ஆஹ்ன்..” பெண் முழித்தாள்.

“உன்னை படைச்சவங்களை கேட்டேன், ஆமா சூர்யாக்கு புது பிரண்டா..? உன்னை இப்போ தான் பார்க்கிறேன்..” மேலும் கேட்க,

“ஆமா.. இந்த வருஷம் லெவன்த்ல தான் இந்த ஸ்கூல்ல ஜாயின் பண்ணேன்..” என்றவள், “உள்ள கேக் கட்டிங்குக்கு வாங்க, ஆண்ட்டி கூப்பிட்டாங்க..” என்றாள்.

“இப்போ என்ன, ஹாப்பி பர்த் டே டூ யூ’ன்னு கை தட்டி பாட்டு பாடினா தான் உன் ப்ரண்ட் கேக் கட் பண்ணுவானா..?” கேலியாக கேட்க,

“ஏன் பாடினா என்ன..? அவன் உங்க தம்பி தானே..?” என்றாள் பெண் புரியாமல்.

“சின்ன பொண்ணு’ன்னு ப்ரூப் பண்ற, நீங்களே போய்  ஆடி பாடி கேக் கட் பண்ணிட்டு, எனக்கு ஒரு பீஸ் மட்டும் எடுத்துட்டு வா போதும்..” என்று மொபைல் எடுத்து கொண்டான்.

“கம்பன்’ண்ணா.. ஆன்ட்டி..”

“ஷ்ஷ்.. படுத்துறாளே..” நெற்றியை நீவியவன், “கம்பன் தான் கூப்பிடுவன்னா, அட்லீஸ்ட் அந்த அண்ணாவையாவது கட் பண்ணு தாயே..” என்றான்.

“நீங்க என்னை விட பெரியவங்க, வேற எப்படி கூப்பிட..?” காவ்யா கேட்டாள்.

“கம்பனை விட்டு நகர மாட்ட..? ஹ்ம்ம்.. கம்பன் சார் கூப்பிடு, இப்போ ஓடு, கேக் பைவ் மினிட்ஸ்ல வந்து சேரணும்..” மொபைல் எடுத்து பேச ஆரம்பித்து விட்டான்.

‘என்ன இவர்..? சொந்த தம்பி பர்த் டே செலிபிரேஷன்க்கு  வர மாட்டேங்குறார், சூர்யா அதனால தான் அவன் அண்ணாவை பத்தி பேசுறதே இல்லையோ..?’ காவ்யா முணுமுணுத்து கேட்டில் நின்ற கார்ட்ஸ்க்கும், தோட்டம் பொறுப்பாளரிடமும் சொல்லிவிட்டு, உள்ளே சென்றாள்.

“எல்லோருக்கும் சொல்லிட்டியாம்மா..?” இந்திராணி கேட்க,

“சொல்லிட்டேன் ஆன்ட்டி.. சூர்யாவோட அண்ணா மட்டும் வர மாட்டேன் சொல்லிட்டார், கார்ட்ஸ், கார்ட்னர் வரேன் சொல்லியிருக்காங்க..” என்று கேண்டிலை எடுத்து வைத்தாள்.

“சூர்யா.. சீக்கிரம் வா.. எவ்வளவு நேரம் ரெடியாகுற..?” இந்திராணி குரல் கொடுக்க, நண்பர்களுடன் அவன் அறையில் இருந்து வெளியே வந்தான்.

“பர்த் டே பாய்.. கலக்குற.. சூட் சூப்பர் உனக்கு..?” காவ்யா சொல்ல, சூர்யா முகத்தில் மகிழ்ச்சி. கேக் கட்டிங் எல்லாம் அந்த வீட்டில் சமீப காலமாக நடப்பதே இல்லை.

சில வருடங்கள் கழித்து இப்போது, அதுவும் நண்பர்கள் கேட்டதால், அம்மாவிடம் சொல்லி, வீட்டளவில் ஏற்பாடு செய்தது. அப்பா வெளியே சென்றிருக்க, இவர்கள் மட்டுமே. பரசுராமை இது போல கொண்டாட்டங்களில், பங்க்ஷனில், எதிலும் எதிர்பார்க்க முடியாது.

இந்திராணியும் ஆபிஸ் செல்பவர், கம்பன் அவன் நண்பர்களுடன் தனி உலகத்தில் வாழ, சூர்யாவின் மற்ற பிறந்தநாள் எல்லாம் புது துணி, கோயில், இரவு வெளியே டின்னர் என்று அம்மாவுடனே முடிந்துவிடும். இந்த பிறந்த நாள் நண்பர்களால் கொண்டாட்டத்தை கொண்டு வந்துள்ளது.

“அண்ணா எங்கம்மா..?” சூர்யா கேட்க,

“வெளியே போன் பேசிட்டு இருக்கான் சூர்யா, நீ கட் பண்ணு வா..” என்றார் இந்திராணி. சூர்யா முகம் ஒரு நொடி சுருங்கி, பின் தோளை குலுக்கி கொண்டான்.

காவ்யாவிற்கு அந்த ஒரு நொடி சுருக்கமே, அண்ணன்காரன் மேல் ஒரு கோபத்தை கொடுத்தது. ‘நல்லவேளை என் அண்ணா எல்லாம் இப்படி இல்லை..’ உள்ளுக்குள் பெண் ஆசுவாசமும் பட்டு கொண்டாள்.

கேக் கட்டிங் முடிய, நண்பர்களுடன் அரட்டை சென்றது. “ஒய் காவியம்.. என் கேக் எங்க..?” கம்பன் குரல் ஒலிக்க, காவ்யாவிற்கு அப்போது தான் அவன் கேக் எடுத்துட்டு வர சொன்னதே நினைவிற்கு வந்தது.

“உள்ள இருக்குண்ணா..” சூர்யா எடுத்து வந்து அண்ணனுக்கு கொடுத்தான்.

“மறந்துட்ட..” காவ்யாவிடம் கேட்டவன், தம்பி எடுத்து வந்த கேக்கை அவன் கையிலே வைத்து ஸ்பூனில் சாப்பிட்டு மேலேறிவிட்டான். சூர்யா காலியான பிளேட்டை கிட்சன் சென்று வைத்து வர, அரட்டை தொடர்ந்தது.

இரவு உணவும் அவர்களுக்கு அங்கயே முடிய, இந்திராணி கொடுத்த ஸ்வீட்டுடன் மற்ற மூன்று நண்பர்கள் சைக்கிளில் கிளம்பிவிட்டனர். வீடு அருகருகே தான். காவ்யாவிற்கு அவள் அண்ணா வருவதாக சொல்லியிருக்க, அங்கேயே காத்திருந்தாள்.

“வீரா.. சாப்பிட வா..” இந்திராணி பெரிய மகனுக்கு குரல் கொடுத்தார்.

“வரேன்..”  என்றவன், சில நிமிடங்கள் சென்றே வந்தான். சூர்யா, காவ்யா, இந்திராணி  மூவரும்  சோபாவில் அமர்ந்து பேசி கொண்டிருக்க, கம்பன் உணவு பிளேட்டுடன் டிவி போட்டு அமர்ந்தான். காவ்யா பேச்சிலே வீட்டில், அம்மாவுடன் நல்ல பழக்கம் என்று புரிந்தது. அவள் பலமுறை வந்து சென்றுவிட்டாள். கம்பன் இருக்க இது தான் முதல் முறை.

“காவ்யா.. டிரஸ் மாத்திட்டு வந்துடறேன்..” சூர்யா அவன் ரூம் செல்ல, இந்திராணி இவளுடன் பொதுவாக பேசி கொண்டிருந்தார்.

“காவியம்.. சட்னி எடுத்துட்டு வா..” என்றான் கம்பன்.

“நானா..?” காவ்யா பார்த்தாள். முதல் நாள் பார்த்துட்டு வேலை சொல்றது பாரேன்..

“நான் எடுத்துட்டு வரேன்..” இந்திராணி எழுந்து சென்றார்.

“அம்மாவுக்கு கால் வலி, நீ எடுத்துட்டு வந்திருக்கலாம் இல்லை..” கம்பன் கேட்க,

“இது நல்லா இருக்கே..? ஏன் நீங்க போய் எடுத்துக்க வேண்டியது தானே..?” காவ்யா கேட்டுவிட்டாள்.

“அண்ணா மட்டும் கூப்பிட்ட, அண்ணனுக்கு செய்ய மாட்டியா..?” இவன் கேட்க,

“அதான் அண்ணா கூப்பிட வேண்டாம் சொல்லிட்டீங்க இல்லை.. நான் ஏன் உங்களுக்கு செய்யணும்..? அதோட உங்களை அண்ணா கூப்பிட்டது, வேற எப்படி உங்களை கூப்பிடன்னு தெரியாம தான். என்னோட அண்ணா தி பெஸ்ட்..” என்றாள் இவள்.

“ஓஹ்.. ஓஹோ.. பார்த்தியாம்மா காவியத்தை..” சட்னி ஊற்றிய இந்திராணிக்கு சொல்ல, அவர் சிரித்தார். உடை மாற்றி வந்து விட்ட சூர்யா தோழியை பார்வையால் ‘பேசாத’ என்றான்.

‘நீ பேச சொன்னாலும் இவர்கிட்ட நான் பேச மாட்டேன்..’ காவ்யா முகம் திருப்பி கொண்டாள். ஒரு விஷ் கூட இல்லை.. கேக் மட்டும் சாப்பிட்டாகிவிட்டது. அவள் அண்ணா, அப்பா எல்லாம் வேறு மாதிரி. ஒற்றை பெண் என்று வீட்டில் அதிக செல்லம். அண்ணா இப்படி எல்லாம் இருப்பாங்களா என்பதே அவளுக்கு புதிதாக இருந்தது.

“எப்படிடா இவரோட இருக்க..?” சூர்யா அருகில் அமரவும் கிசுகிசுப்பாக கேட்டாள். தன்னை பற்றி தான் ஏதோ பேசுகிறாள் என்று புரிய,  கம்பன் பார்வை அவள் மேல் சுவாரஸ்யமாக படிந்தது.

“ஷ்ஷ்.. சும்மா இரு காவ்யா, அண்ணா பார்க்கிறான்..” சூர்யா எச்சரித்தான்.

“நீ பயப்படு, வொய் மீ டா..?” காவ்யா சொல்ல,

“காவியம் என்ன சொல்லுது..?” என்றான் தம்பியிடம்.

சூர்யா என்ன  சொல்லுவான், “சும்மா தான்ண்ணா..” என்று அண்ணனை பார்த்து சிரித்து வைத்தான்.

“தோசை எடுத்துட்டு வரவாடா..” இந்திராணி கேட்க,

“நீங்க உட்காருங்கம்மா.. சூர்யா..” என்றான்.

“இதோண்ணா..” என்று எழுந்து சென்று சமையல் அண்ணா ஊற்றி வைத்திருந்த தோசை எடுத்து வந்தான் தம்பி. அடுத்து அவனுக்கு தண்ணீர், சட்னி, சாம்பார் என்று சூர்யா ஹாலுக்கு, கிட்சனுக்கும் நடந்து கொண்டே இருந்தான்.

‘ஓவர் அதிகாரம்..’ காவ்யாவின் எரிச்சல் முகத்திலே தெரிந்துவிட,  இன்னும் சூர்யாவை வேலை வாங்கினான் கம்பன். இந்திராணியே மகன் ஏன் இப்படி செய்கிறான் என்று பார்த்தார்.

“போதும்..” என்றவன், “கேக் இன்னும் இருக்கா..?” என்றான் தம்பியிடம்.

“இருக்குண்ணா..” சூர்யா எடுத்து வர,

“வேணுமா காவியம்..” என்றான்.

“நோ.. தேங்க்ஸ்..” என்றுவிட்டவள், “விஷ் கூட பண்ணாம இரண்டாவது டைம் கேக்..” உள்ளுக்குள் முணுமுணுத்து கொண்டாள்.

வெளியே சஞ்சய்யின் பைக் ஹார்ன் கேட்டது. “அண்ணா வந்துட்டான்..” காவ்யா வேகமாக எழ,

“ஒரு நிமிஷம் காவ்யா.. வீட்டுக்கு ஸ்வீட் எடுத்துட்டு போ, அவங்க அண்ணாக்கு சொல்லு சூர்யா..” என்று இந்திராணி கிட்சன் சென்றார். சூர்யா சொல்ல வாசல் சென்றான்.

ஹாலில் இருவர் மட்டும் இருக்க, “அண்ணா, தம்பி விஷயத்துல எல்லாம் தலையிட கூடாது காவ்யா..” என்றான் கம்பன் அழுத்தமாக.

“உங்க ப்ரண்ட்ஷிப் உங்களோட, என்கிட்ட அவனுக்காக  வர கூடாது சரியா..? எல்லா இடத்திலும் லிமிட் மெயின்டைன் பண்ணனும். புரியுது தானே..?” என்று சிறு பிள்ளைக்கு சொல்வது போல்  சொல்லி அவளை தள்ளி வைத்தவன், இன்று அவள் குடித்த தண்ணீரை இயல்பாய் குடித்திருக்க, பெண் அதிர மாட்டாளா..?

‘அத்தனை வருஷத்துக்கு முன்னமே என்னை லிமிட்ல இருன்னு சொன்னவர், இன்னைக்கு நான் குடிச்ச தண்ணீரை குடிச்சா..?’

 உண்மையை சொல்ல போனால் இது எல்லாம் காவ்யாவிற்கு பெரிது இல்லை தான். நண்பர்களுக்குள் நடந்திருக்கிறது தான். ஆனால் கம்பன் என்பது தான் உதைத்தது. இதற்கு என்ன அர்த்தம்..? என்று அவனை நேரே பார்த்தாள்.

கம்பனும் தான் செய்துவிட்ட செயலில் திகைத்து நின்றுவிட்டவன், போன் பேசுவதையே மறந்துவிட்டான். எதிர்பக்கம், “சார்.. சார்..” என்ற குரல் காதை நிறைக்க,

“ஆஹ்.. எஸ்.. நான் சொன்னதை செக் பண்ணுங்க, உடனே..” என்றான். காவ்யா பார்வை தன்னை ஆராய, கம்பன் தன்னை சமாளித்து கொண்டவன், “ஹாஸ்பிடல் தானே போற..?” என்றான்.

“மரியாதை தொலைஞ்சிடுச்சு போலயே..?” என்றாள் காவ்யா.

ஆபிசில் வைத்து வாங்க, போங்க என்று பேசியதை சொல்கிறாள்..? தலையை கோதி கொண்டவன், “உன்னை யாரோ பாலோ பண்றாங்களாம், உன் அண்ணா உன்னை இங்கேயே இருக்க சொல்றாங்க..” என்றான் மொபைல் பார்த்து கொண்டே.

“நான் பார்த்துகிறேன்.. நீங்க தான் முதல்ல நான் கேட்டதுக்கு முடியாதுன்னு சொல்லிட்டீங்க இல்லை..” என்றுவிட்டவள், லேப் பேக் எடுத்து கொண்டு கிளம்பினாள்.

“ம்ப்ச்.. இரு, என்னன்னு பார்த்துட்டு கிளம்பு..” என்றான்.

“நீங்க சொல்லி நான் கேட்கணும்ன்னு இல்லை..” காவ்யா அவள் ஸ்கூட்டியை கிளப்பி கொண்டு சென்றாள்.

“கார்ட்ஸ்..” கம்பன் குரல் உயர்ந்து ஒலிக்க, கேட் நொடியில் மூடிவிட்டது. காவ்யா கேட்டுக்கருகில் பிரேக் பிடித்து திரும்பி கம்பனை முறைத்தாள்.

“உன் அண்ணா கல்ப்ரிட் கிடைக்கிற வரை உன்னை பார்த்துக்க சொல்லி கேட்டிருக்காங்க..  என்னோட டியூட்டி இது, நீ எங்களோட ஆர்டரை ஒபே பண்ணி தான் ஆகணும்..” என்றான் ஒரு பாதுகாப்பாளனாக  கண்டிப்பான குரலில்.

காவ்யா போன் லேப் பேக்கில் இருந்து ஒலிக்க, எடுத்தாள். “காவ்யா நீ சூர்யா வீட்லே இரு.. நாம அவங்களை நெருங்கிட்டோம்..”  சஞ்சய் அவசரமாக சொல்லி வைத்தான்.

“மேடம் உள்ளே இருங்க..” கார்ட் சொல்ல, இவள் மறுத்து ஸ்கூட்டியிலே கால் ஊன்றி அமர்ந்திருந்தாள்.

அவளை நெருங்காமல் வீட்டு வாசலில் நின்றுவிட்ட கம்பன் பார்வை அவள் முதுகை துளைத்தது. இவளை பார்க்கவே கூடாதுன்னு ஓடி ஒளியும் போது தான் அதிகம் கண்ணுல படுறா..?

காவ்யாவிற்கு அவன் பார்வை உணர, முன் கண்ணாடியை கம்பன் பக்கம் திருப்பினாள். கம்பன் நொடியில் தன் பார்வையை மொபைலுக்கு மாற்றி கொண்டான்.

“இப்போ மட்டும் நான் உன்னை பார்க்கிறது உனக்கு புரியுதா..?” உள்ளே ஏதோ ஒன்று கனன்றது. இப்போதும். இத்தனை வருடம் கழித்தும்.

அப்படியே இருவரும் நின்றிருக்க, நிமிடங்கள் கடந்து கம்பன் போன் ஒலித்தது. ஆட்களை பிடித்தாகிவிட்டது என்று சஞ்சய் சொன்னான். அடுத்து அவன் காவ்யாவிற்கும் அழைத்து, “நீ கிளம்பு..” என, காவ்யாவும் கிளம்பிவிட்டாள். ஆனால் உள்ளே பல கேள்விகள், சந்தேகங்களுடன்.

கம்பனுக்கோ, அவள் கண்ணில் இருந்து மறையவும் ஆசுவாச மூச்சு. நன்றாக நிமிர்ந்து நின்றான். இனி அவளை பார்க்கும் நிலையே வர கூடாது..?

Advertisement