Advertisement

கம்பன் காதல் கொண்டு 25  FINAL 1

கம்பன் உள்ளுக்குள் வெடிக்கும் பரபரப்பை காட்டி கொள்ளாமல் கை கட்டி அமைதியாக நின்றிருந்தான். கண்கள் டிவியில் இருக்க, பேச்சுக்குரல்கள் காதை நிறைத்தது. ராம்தாஸ் வீடு. அந்த பத்து பேரும் குவிந்திருந்தனர். நேரம் எப்போதும் போல இரவெல்லாம் இல்லை. காலை மணி எட்டு.

ராம்தாஸ் அவரின் மகனிடம் ஏதோ சொல்லி அனுப்ப, அவன் கம்பனிடம் வந்தவன், “உங்களை ஐயா அவர்கிட்ட உட்கார சொல்றார்..” என்றான். கம்பன் திரும்பி ராம்தாஸை பார்க்க, அவர் எங்கோ பார்த்தார்.

“இல்லை.. இருக்கட்டும்..” கம்பன் சொல்லி அனுப்பிவிட,

‘திமிர் பிடிச்சவன்..’ ராம்தாஸ் முணுமுணுத்து கொண்டார்.

சஞ்சய் இதை கவனித்திருந்தவன், பக்கத்தில் பேசி கொண்டிருந்தவரிடம் சொல்லி கொண்டு கம்பனிடம் வந்து நின்றான். துணைக்கு. கம்பனுக்கு புரிந்தாலும் அவன் கண்கள் அந்த டிவியை விட்டு நகரவில்லை. ராம்தாஸ் நேரம் பார்த்து யாருக்கோ போன் செய்து பேசி வைத்தார். டிவி சத்தத்தை கூட்டி வைத்தார்.

பிரேக்கிங் நியூஸ் என்று சேனல்கள் கதற ஆரம்பித்தனர். “எலெக்ஷனில் ஜெயித்த கட்சி இன்னும் சில நிமிடங்களில் பதவியேற்க தயாராக இருக்கும் நிலையில், நான்கு MLA க்கள் திடீரென எதிர் கட்சியுடன் இணைந்துள்ளதாக செய்தி வெளியானது..”

“இதனால் அந்த கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளதால், இன்று அவர்கள் பதவியேற்க முடியாது என்றும் ஹாட் நியூஸ்..”

“உடனே அந்த கட்சி அவர்களின்  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் என்றும் சொன்னார்கள்..”

பதவியேற்கும் மேடை கண் முன் இருக்க, நான்கு கூட்டணி கட்சி MLAக்கள் வாரததில் என்னவோ ஏதொன்று பயந்து, ஆளுநர் வருகைக்காக காத்திருந்த அந்த கட்சி தலைமை திக்கு தெரியாமல் முழித்து கொண்டிருக்கும் புகைப்படம் பெரிதாக வெளியானது.

“எஸ்.. வீ டிட் இட்.. செஞ்சுட்டோம்.. சாதிச்சுட்டோம்..” ராம்தாஸ் வீடு ஆரவாரத்துடன் அவர்களின் வெற்றியை கொண்டாட, கம்பன் வீரய்யன், ராம்தாஸ் கண்கள் மட்டும் அந்த கட்சி தலைமை புகைப்படத்தை வெறித்து கொண்டிருந்தது. அவர்களுக்குள் அவர்களின் அப்பா முகம் தான். அதுவும் கடைசியாக பார்த்த அவர்களின் முகம்..

அப்பாவின் இறுதி நொடியில் அவர் கை பிடித்த கம்பனின் கை இப்போதும் நடுங்கியது. ராம்தாஸ் தெளிந்து எழுந்தவர், கம்பனிடம் வந்தார். அவன் முன் நின்று அவன் தோள் தட்ட, அந்த கையை இப்போதும் இறுக்கமாக பிடித்து கொண்டான்.

இருவரின் கண்களும் சிவக்க, ராம்தாஸ் அவனை அணைத்து கொண்டார். ஒவ்வொரு செங்கலாக நகர்த்துவது போல் நகர்த்தி அந்த கட்சியின் வெற்றியை உடைத்திருந்தனர். சஞ்சய் போட்ட கேஸால் மூன்று இடம் தோற்றிருக்க, கம்பன் தூக்கிய அந்த கட்சியின் பெரிய தலையால் கூட்டணி கட்சியின் MLAக்கள் கைக்கு கிடைத்தனர். அவரின் சமூகம் அந்த MLAக்கள்.

‘இவர்கள்  சொல்வதை கேளுங்க..’ என்று அவர் சொல்லியிருக்க, இவர்களும் கோடிகளை அவர்களுக்கு கொட்டி கொடுத்து காரியத்தை சாதித்திருந்தனர். இடையில் ராம்தாஸ் முடியுமா என்று யோசிக்க, கம்பன் கொதித்துவிட்டான். விடவே இல்லை அவரை.

“என்னவும் செய்ங்க.. நான் பண்றேன்..” என்று நின்றான். அந்த கட்சியின் பெரிய தலையை தானே முன் நின்று தூக்கி, செய்து கொடுத்தான். கடைசி நேரம் வரை பரபரப்பு தான். டென்ஷன் தான். இதோ.. இந்த நொடி.. அந்த கட்சியின் தலைமை.. தோற்று நிற்கும் அவர் முகம். உயிரற்ற முகத்தை விட ஒன்றும் இல்லை தான். ஆனால் அந்த பதவி.. அதற்காக அவர் பறித்த உயிர்கள்.. அவர்களுக்கான நியாயம் இதுவாக தான் இவர்கள் தெரிந்தெடுத்தனர்.

ராம்தாஸ், கம்பன் அணைப்பில் வெற்றியை விட, எங்கள் அப்பாவிற்காக ஏதோ செய்து விட்டோம் என்ற ஆறுதல் அதிகம். இருவரை பார்த்த மொத்த வீடும் அமைதியாகியது. அவர்களின் துக்கம் புரிந்தது. ஒரே நேரத்தில் அப்பாவை பறிகொடுத்த பிள்ளைகள். ஒரே ஆளால். ஒரே காரணத்தால். பதவி.. இன்று அந்த ஆளை கீழே தள்ளி, அந்த பதவியை கண் முன் காட்டி பறித்திருந்தனர்.

“உன் அப்பா என்னை நிச்சயம் மன்னிக்க மாட்டார், அவருக்கு இது புடிக்காது..” என்றார் ராம்தாஸ்.

கம்பன் விலகி முகம் துடைத்தவன், “அவர் நல்லவர்ங்கிறதுக்காக இங்க எல்லோரும் நல்லவங்க ஆகிட மாட்டாங்க அய்யா..” என்றான்.

“ம்ம்..” ராம்தாஸ் அவனை தோளோடு அணைத்து கொண்டவர், அவரின் டீமிடம் திரும்பினார். “உங்க எல்லாராலும் தான் இது சாத்தியம்.. எங்களுக்கான நெருப்பை அணைக்க நீங்களும் கை கொடுத்திருக்கீங்க.. நன்றி மட்டுமே அதுக்கு போதாது, ஆனாலும் நன்றி ப்ரண்ட்ஸ்..” என்றார்.

டீம் ஆட்கள் இருவரையும் அணைத்து ஆறுதலுடன், வெற்றி மகிழ்ச்சியையும் தூவினர். சஞ்சய் கம்பனை அணைத்து கொண்டான். “சாதிச்சுட்டடா..” என்றான் நெகிழ்ச்சியுடன். இது நல்லதா கெட்டதா சஞ்சய்க்கு தெரியவில்லை. ஆனால் அப்பாவை பறிகொடுத்த இருவருக்கான நியாயம் என்று மட்டும் புரிந்தது.

கம்பன் முகம் மிகவும் தெளிந்திருக்க,  “அப்பறம் ட்ரீட் எப்போ..?” சஞ்சய்  கேட்டான்.

“நான் தான் உங்க மேல கோவமா இருக்கேனே..” என்று முகம் திருப்பினான் கம்பன்.

“ட்ரீட் கேட்டதுக்காகவே திடீர்ன்னு கோவம் முளைச்ச மாதிரி இருக்குடா..” சஞ்சய் சொல்ல,

“என்னை பேசினது மறந்திட்டீங்களா..?” என்றான் அவன்.

“டேய் இன்னுமாடா நீ அதை விடலை.. அது அப்போ ஏதோ கோர்ட் போக முடியாத டென்ஷன்ல பேசினது, அதுக்கு போய் கோவிச்சுட்டு போன பொண்டாட்டி மாதிரி மூஞ்சை காட்டுற..?” சஞ்சய் சலித்து கொண்டான்.

கம்பன் சிரிப்பை அடக்கியவன், “நீங்க யாருங்க.. ஏன் என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க..?” என்றான்.

“ஓஹ்.. அவ்வளவு தூரம் வந்தாச்சா..? சரி பார்த்துக்கிறேன்டா, அம்மா ஏதோ கேட்டுட்டு இருந்தாங்க, காவ்யாவை பத்து நாள் வீட்டுக்கு கூப்பிடணும்ன்னு, நான் மீட்டிங் முடியவும்  என் தங்கச்சியை கையோட கூட்டிட்டு போறேன்..” என்றான் சஞ்சய்.

கம்பன் கேலியாக ஒரு பார்வை மட்டுமே பார்க்க, கடுப்பானவன், “நீ பதறிட்டாலும்..” என்று நொடித்து கொண்டான். இருவருக்கும் காபி வர, கம்பன் மறுத்துவிட்டான்.

“ஏண்டா..?” சஞ்சய் கேட்டு எடுக்க,

“நான் என்ன இவரை மாதிரி கல்யாணம் ஆகாதவனா..? அதெல்லாம் என் பொண்டாட்டி காலையிலே காபி கொடுத்து தான் அனுப்பினா..?” காபி  கொடுத்தவரிடம் சொன்ன கம்பன், “இவரை விட ஆறு மாசம் சின்ன பையன், எனக்கே  கல்யாணம் ஆகிடுச்சு, இங்க ஒன்னும் காணோம்..” என்று வேறு சொன்னான்.

மானத்தை வாங்கிட்டான்.. “சார்.. போதும் போங்க..” காபி கொடுப்பவரை அனுப்பி வைத்த சஞ்சய், “தங்கச்சி இருக்கிற அண்ணன்டா.. இதெல்லாம் எங்களுக்கு துப்சு..” என்றான் காலரை தூக்கிவிட்டு கெத்தாக.

“உங்க தங்கச்சிக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு கேள்விப்பட்டேனே..” கம்பன் கேட்க,

“அதுக்குள்ள தான் இதுல சிக்கிட்டேனே,  கம்முன்னு போயிடு.. நானே கடுப்புல இருக்கேன், எப்போ நாள் குறிச்சு, கல்யாணம் பண்ணி..” சஞ்சய் புலம்ப, கம்பன் அடக்க முடியாமல் வெடித்து சிரித்தான்.

ராம்தாஸ் அவன் சிரிப்பு சத்தத்தில் திரும்பி பார்த்து தானும் சிரித்தார். “இவன் என்கிட்ட ரொம்ப அட்டேச் ஆயிட்டான்..” மகனிடமே சொன்னார்.

தொடர்ந்த  நிமிடங்கள் வெற்றி கொண்டாட்டத்தில் முடிய, அனைவரும் திரும்ப ஒன்று கூடினர். அன்றே பெரும்பான்மை நிரூபிக்க நேரம் குறித்து, நிரூபிக்க முடியாமல் அந்த கட்சி தோற்று போனதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நாளை அந்த மற்றொரு ஆட்சி அமைக்க ஆளுநரை அழைத்து வந்தனர். அந்த MLAக்கள் பதவியேற்கும் வரை கம்பன் பொறுப்பு என்பதால், அந்த நாளும் கம்பனுக்கு பிசியாக தான் இருந்தது. தானே முன் நின்று அவர்களை பாதுகாத்தான்.

மறு நாள் அந்த கட்சி பதவியேற்ற பின்னே கம்பன் ஓய்ந்து அமர்ந்தான். எல்லாம் சரியாக, திட்டமிட்டபடி சாதித்து முடித்தனர். ராம்தாஸ் வீட்டில் இறுதியாக ஒரு மீட்டிங். காலை உணவுடன் அனைவரும் விடைபெற்றனர். கம்பன் முன் நின்று எல்லோரையும் பத்திரமாக அனுப்பி வைத்தான்.

சஞ்சய் இருக்க, ராம்தாஸ் வந்தார். “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்டா..” என்றார் கம்பனிடம். “பெரியவர் உனக்காக சிலது சொல்லியிருக்கார்..” என்று ஆரம்பிக்க,

“அய்யா.. இப்போ அது பத்தி பேச்சே வேணாம்.. முதல்ல ரெஸ்ட் எடுங்க.. நான் வரேன்..” என்று முடித்துவிட்டான் கம்பன் வீரய்யன். ராம்தாஸ் பெருமூச்சுடன் அவன் தோள் தட்ட, கம்பன் அவரின் தட்டிய கையை பிடித்து விடைபெற்றான்.

சஞ்சய் கார் எடுக்க, இவன் பக்கத்தில் அமர்ந்தான். வாசுதேவன் தம்பதி கம்பன் வீட்டில் காத்திருந்தனர். மருமகனும், மகனும் வர, வாசுதேவன் கம்பனை அணைத்து வாழ்த்தினார். அவன் மீதான அவரின் கோவம் எல்லாம் எங்கோ சென்றுவிட்டது. சாதாரண காரியம் அல்லவே செய்திருப்பது.

ஆதிரா அம்மா வீடு சென்றிருக்க, சூர்யா மட்டும் இருந்தான். அவனுக்கு அண்ணனை வாழ்த்த வேண்டும். ஆனால் நெருங்க முடியவில்லை. அண்ணனை ஏக்கமாக பார்த்து நிற்க, இந்திராணியிடம் சென்றான் கம்பன் வீரய்யன்.

காவ்யாவை காணவில்லை. எங்க போனா..? கம்பன் கண்கள் தேடி அம்மா பக்கம் அமர, “என்னடா இதெல்லாம்..?” என்றார் அம்மா ஆற்றாமையுடன். அவருக்கு மகன் செயல் ஒப்பவில்லை. “நம்ம குடும்பத்துல.. உன் அப்பா இப்படி எல்லாம் இல்லடா, நீ மட்டும் ஏன் இப்படி..?” என்று வருத்தமாக சொன்னார்.

கம்பனுக்கு இதெல்லாம் புரியாமல் இல்லையே. அவர் கை பிடித்தவன், “ம்மா.. நான் பண்ணது உங்களுக்கு மட்டுமில்லை, அவருக்கும் பிடிக்காதுன்னு எனக்கு தெரியும், ஆனா நான்.. எனக்கு.. ஏதாவது செய்யணும்ன்னு.. இது சரி தப்புன்றதை விட, எனக்கான நியாயம்மா இது, பதவின்ற சுயநலத்துக்காக பெரியவரோட, அவரையும்.. எனக்கு விட முடியலம்மா, கூட இருக்கிற கார்ட்ஸையும் விடாதீங்கன்னு அந்த ஆள் ஆர்டர் போட்டிருக்கான்னு தெரிஞ்ச நேரம்.. எப்படிம்மா விட முடியும், ஒரு சாதாரண மனுஷனோட உயிர் என்ன அவ்வளவு ஈஸியா.. அவருக்காக.. அவரை அவ்வளவு தேடி நா..  நீங்க, சூர்யா எல்லாம் இருக்கும் போது.. நாம யார் மேலயும் கை கூட வைக்கலம்மா.. அந்தாள் பதவி மட்டும் தான் பிடுங்கினோம், நான் பண்ணது தப்பா இருந்தாலும் எனக்கு அது சரி தான்ம்மா..” என்று முடித்துவிட்டான் மகன்.

காவ்யா கணவன் பேசுவதை கேட்டபடி ஜுஸ் எடுத்து வந்தவள் எல்லோருக்கும் கொடுத்தாள். கம்பன் அவளை ஆழ்ந்து பார்த்து எடுத்து கொண்டான். ஒரே மூச்சில் குடித்து வைத்தான்.

சூர்யா தன் தைரியத்தை எல்லாம் திரட்டி, “ண்ணா..” என்று அவன் அருகில் செல்ல பார்க்க, கம்பன் உடல் இறுகிவிட்டது.

Advertisement