Advertisement

கம்பன் காதல் கொண்டு 25 FINAL அண்ட் எபிலாக்

கந்தன் கோயில் மணி அடிக்க கம்பன்  அடித்து பிடித்து எழுந்தான். முகம் வேர்த்து போயிருந்தது. திரும்ப கனவின் தாக்கம். பழைய நாட்கள்.. அவன் வெறுக்கும் நாட்கள் கனவுகளாக அவனை துரத்த ஆரம்பித்திருந்தது. இடையில் நின்று போயிருந்தது இப்போது.. ஒரு பதினைந்து நாட்களாக. காரணம் தெரியும். ஆனால் அதனை ஏற்கும் பக்குவம் தான் அவனுக்கு இன்னும் வரவில்லை.

 வயது மட்டுமே ஒருவரை முதிர்ச்சி அடைய வைத்துவிடுமா என்ன..? இவன் வயது கூடிவிட்டது. முன்பை விட மிகவும் பொறுப்பாகிவிட்டான்.. பொறுமையாகிவிட்டான். ஆனால் அந்த பொறுப்பும், பொறுமையும் அவனுக்கு அமைதியை தந்துவிட்டதா என்றால் இல்லை.  இந்த பதினைந்து நாட்களாக தான் அவனே அதை உணர்கிறான்.

காய்ந்த தொண்டையுடன், குளித்து வந்தான். ஒரு பாட்டில் தண்ணீர் குடித்து அவன் பயிற்சி கூடம் சென்றான். சூரிய உதயத்தை பார்த்து அமர்ந்தான். இன்று அவன் காவியம் அவன் பக்கத்தில் இல்லை. மிகவும் அதிகமாக அவளை தேடுகிறான். தன் சில்லிட்ட கைகளுக்கு வெப்பம் தர அவள் கைகள் வேண்டும். அவள் வேண்டும்.

அவ்வளவு தான். இன்னும் சில மணி நேரங்களில் வந்துவிடுவாள். ஆனால் உடன்..? நினைக்கும் போதே திரும்ப தொண்டை வரள ஆரம்பித்தது. பயிற்சி ஒன்றும் செய்யாமல் கீழிறங்கினான்.

வீடு பரபரப்பாக தயாராகி கொண்டிருந்தது. இந்திராணி சமையலை மேற்பார்வை பார்த்து நிற்க, சூர்யா வீட்டின் அலங்காரத்தில் இருந்தான். ஆதிரா அவள் நான்கு வயது மகளுக்கு இட்லி கொடுத்து கொண்டிருந்தாள்.

கம்பன் நியூஸ் பேப்பருடன் அமர்ந்தான். இந்திராணி பார்த்து காபி எடுத்து வந்து கொடுத்தார். மிகவும் தேவைப்பட பேப்பரை வைத்து குடிக்க, “காவ்யாவை கூட்டிட்டு வர நீ போறியா..?” இந்திராணி மகனிடம் கேட்டார்.

“இல்லைம்மா..” என்றான் மகன்.

“ஏண்டா.. நீ போலாம் இல்லை, மூணு மாசமா வேலை வேலைனு அப்பப்போ அங்க தலை காட்டுறதோட சரி. இப்போவாவது போய் அவளை கூட்டிட்டு வரலாம் இல்லை..” இந்திராணி கேட்க, மகனிடம் பதிலே இல்லை.

“நான் போறேன்ம்மா..” என்றான் சூர்யா. ஆதிரா கழுத்தை வெட்டி கொண்டாள். அவளுக்கு கணவனை தனியே அழைத்து செல்லவே முடியவில்லை என்ற ஆதங்கம். கடந்த வருடங்களில் அவளும் மிகவும் போராடிவிட்டாள். ஏன் மகள் பிறந்து ஒரு வருடம் முழுதும் அம்மா வீட்டிலே இருந்து கூட பார்த்துவிட்டாள். சூர்யா எதற்கும் அசையவில்லை.

அவளின் அப்பா சோமசுந்தரமும் மகளுக்கு புத்தி சொல்லி கொண்டு வந்து விட்டுவிட்டார். கம்பன் மூலம் அவருக்கு  பிஸ்னஸ் கிடைத்திருக்க, இவர்களை  பகைத்து கொள்ள அவர் விரும்பவில்லை. ஆதிரா வேறு வழியில்லாமல் எப்போதும் போல இருக்க, அவள் குணம் புரிந்த குடும்பத்தினர் அவள் போக்கிலே சென்றுவிடுவர்.

காவ்யா அவள் மூட் பொறுத்து சமயங்களில் “சூர்யாவை அண்ணி கூப்பிடு, மரியாதையா பேசு.. நீங்க சொல்ல மாட்டிங்களா உங்க புருஷருக்கு..”  என்று வம்பிழுப்பதும் உண்டு.

கம்பனுக்கு தான் செட் ஆகாது. “சூர்யா வைப் உன்னை ஏதாவது பேசிட்டா நான் டென்சன் ஆகிடுவேன், பார்த்துக்கோ..”  என்று மனைவியை எச்சரித்தே வைத்திருக்கிறான். கம்பன் இருக்கும் நேரம் ஆதிராவும் துணிந்து வம்புக்கு நிற்க மாட்டாள்.

சூர்யா மேல் அவ்வளவு ஆக்ரோஷத்துடன் ஏறி கொண்டு வந்த கம்பன் வீரய்யனை அவள் மறக்க வாய்ப்பே இல்லை. சூர்யாவும் “என் அண்ணா அடிச்சா வாங்கிப்பேன்..” என்றல்லவா நிற்கிறான். உடன் காவ்யா.. நண்பனுக்காக கணவனிடமே நிற்பவள்.

அவர்கள் இறுகும் நட்பு.. என்ன செய்தும்  அந்த  நட்பை ஆதிராவால்  அசைத்து பார்க்க முடியவில்லை. அந்த நட்பு தான் குடும்பம் உடையாமல் இழுத்து பிடிப்பதும். இதோ இப்போதும் கணவன் மனைவியை அழைக்க செல்ல மாட்டான் என்க, நண்பன் தான் உடனே கிளம்பி நிற்கிறான்.

சூர்யா கார் எடுத்து செல்ல, கம்பன் குளித்து தயாரானான். பங்க்ஷன் காலையிலே என்பதால், உறவுகள் வர ஆரம்பித்தனர். கம்பன் பொறுமையாக தான் கீழிறங்கி வந்தான். அடுத்த சில நிமிடத்தில் காவ்யாவும் வந்துவிட்டாள். உடன் அவள் உறவுகள், குடும்பம்.

சஞ்சய் கை பிடித்து காரில் இருந்து இறங்கிய  பெண் குழந்தை, “ப்பா..” என்று கம்பனிடம் ஓடினாள். “நைனிகா..” கம்பன், காவ்யாவின் மூன்று வயது மகள். கம்பன் முகம் முழுக்க சிரிப்புடன் மகளை கையில் அள்ளி கொண்டான்.

காவ்யா அமைதியாக கணவனை பார்த்திருக்க, “நீயும் காவ்யா பக்கத்துல நில்லு..” என்று இந்திராணி பெரிய மகனிடம் சொன்னார். கம்பன் மூச்சை இழுத்துவிட்டு மனைவி பக்கம் நின்றான். ஆர்த்தி எடுக்க, காவ்யா கையில் இருந்த அவர்களின் இரண்டாம் குழந்தையின் கால்கள் கம்பன் கையில் உரசியது. கம்பன் கைகள் நடுங்கி சில்லிட்டுவிட்டது. மகளை இறுக்கமாக பிடித்து கொண்டான்.

காவ்யா குழந்தையுடன் வீட்டுக்குள் நுழைந்தாள். நடு ஹாலில் தொட்டில் அலங்காரம் செய்யப்பட்டு இருக்க, குழந்தையை அதில் படுக்க வைத்தாள். சூர்யா சிறிய மென் பஞ்சு மெத்தை விரித்திருக்க, அதன் மேல் இருந்த பூக்களை சாதனா எடுத்துவிட்டாள்.

இடையில்  ராம்தாஸ்ஸுடன் பாதுகாப்பிற்காக கம்பன் வெளிநாடு சென்றிருக்க, குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா இப்போது தான் வைத்தனர். சடங்குகள் முடிய, “குழந்தை காதுல பேர் சொல்லுங்க..” என்றனர். காவ்யா திரும்பி கணவனை பார்க்க, அவன் அவளை பார்த்தான். காவ்யாவிற்கு கோவம் வரும் போல இருந்தது.

‘பேர் செலக்ட் பண்ணல.. நான் போன் பண்ணி சொல்லியும் பண்ணல..’ சுற்றி எல்லோரும் பார்த்திருக்க, என்ன சொல்வாள்..? சூர்யா தோழியின் அருகில் வந்தவன், ஏதோ பெயர் சொன்னான். காவ்யா ஆச்சரியமாக நண்பனை பார்த்தாள். அவளுக்கு பிடித்திருந்தது.

கம்பனுக்கு சொன்னவள், அவன் அதிர்வை மறுப்பை கவனத்தில் கொள்ளாமல், அந்த பெயரை குழந்தை காதில் மூன்று முறை சொல்லி வைத்து தான் விட்டனர். கம்பன் வேறு வழி இல்லாமல் மனைவியுடன் வாய் அசைத்தான். “ஸ்ரீராம்..” அவன் மகன்..

வந்திருந்த உறவுகள் பெற்றவர்களை வாழ்த்தி, குழந்தையை ஆசீர்வாதம் செய்தனர். பந்தி ஆரம்பிக்கபட, சஞ்சய், சூர்யா தான் கவனித்தனர். உறவுகள் விடைபெற, ராம்தாஸ் வந்தார். குடும்பத்துடன் வந்தார். கம்பன் முன் நின்று அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றான்.

 உடன் பாதுகாப்பில்  பாலா இருக்க, முதலில் அவர்களை உணவுக்கு அனுப்பி வைத்தான். செக்கியூரிட்டி சர்வீஸில் இருக்கும் கார்ட்ஸ் டியூட்டி நேரம் பொறுத்து வந்து கொண்டிருந்தனர். ராம்தாஸ் மனைவி தங்கம் வைக்க, ராம்தாஸ் ஒரு கிப்ட் கவரை கொடுத்தார். கம்பன் மறுக்கும் முன் காவ்யா வாங்கியிருக்க, கம்பன் முகம் இறுகி போனது.

ராம்தாஸ் அவனுடன் தனியே வந்தவர்,  தோள் தட்டி, “என்னடா..” என்றார்.

“நான் வேணா சொன்னதை நீங்க இப்படி கொடுத்திருக்க கூடாது அய்யா..” என்றான் கம்பன் கொஞ்சம் கோவமாகவே.

“இது  உனக்காக இல்லை.. பரசுராம்க்காக.. நீ மறுக்க கூடாது..” என்றார் அவரும் கண்டிப்பாக.

“அவருக்காக செய்றதுன்னா இதை சூர்யாக்கு கொடுங்க.. என்னை விடுங்க..” என்றான்.

“ஏன் சூர்யாக்கு நீ செய்ய மாட்டியா..? இது பெரியவர் உனக்கு கொடுக்க சொன்னது தான், நான் அப்போவே கேட்டேன், நீ முடியாது சொல்லிட்ட, இப்போ உன் மகனுக்கு.. ஸ்ரீராம்.. ம்ஹ்ம்.. பரசுராம் பேரன் ஸ்ரீராம்.. அவனுக்கு சேர்ந்திருக்கு.. சரியான இடம் தான்..” என்றார் ராம்தாஸ் சிலாகிப்பாக.

“என் அப்பா உயிரை கொடுத்தது அவரோட கடமை, விசுவாசம், அன்பு.. அதுக்கு விலை வைக்காதீங்க அய்யா..” கம்பன் சொல்லிவிட,

“பங்க்ஷன் வீடாச்சேன்னு பார்க்கிறேன்.. இல்லை அப்படியே தூக்கிடுவேன்..” ராம்தாஸ் அவன் தோள் தட்டிய கையால் சட்டை காலரை பிடித்து சொன்னார். பின்னால் கை கட்டியிருந்த கம்பன் முகம் திருப்ப, “உன் திமிர்த்தனம் மட்டும் குறையவே குறையாது இல்லை.. எங்க  பரசுராம் பேரனுக்கு பெரியவர் உழைப்பு, அவரோட ஆசீர்வாதமா வந்திருக்கு, மறுத்து என்னை உசுப்பி விடாத, நான் கொடுத்தது கொடுத்தது தான்..” என்றார் ராம்தாஸ். கம்பனுக்கு மனதே ஆறவில்லை.

“பெரியவர் என்ன கண்டார் நீ திடீர்ன்னு இவ்வளவு பொறுப்பா மாறுவேன்னு, உன் வாழ்க்கைக்காக அவர் அந்த காம்ப்ளெக்ஸ்ஸும், வேலைக்கும் பார்க்க சொன்னார். வேலை நீயே ரெடி பண்ணிட்ட, காம்ப்ளெக்ஸ் நான் கொடுத்துட்டேன் அவ்வளவு தான், இதுக்கு மேல இதை பத்தி பேசாத..” என்றுவிட்டார்.

கம்பன் தொண்டை குழி ஏறி இறங்க, “இப்படி நின்னு என்னை வீக் ஆக்காத, எனக்கு உன்னை பிடிக்கவே பிடிக்காது, பரசுராம்க்காக உன்னை என்னோட எடுத்துக்கிட்டேன், ஆனா  நீ ஏதேதோ மாயம் பண்ணி என்னை உன்னை பிடிக்க வைச்சுட்ட, போ.. எனக்கு பிடிக்கலை.. யாரும் என்கிட்ட இவ்வளவு வீம்பு முகம் காட்டுறதில்லை, என் மகன் வரை. நீ என்னை ரொம்ப டென்சன் பண்ற.. போடா..” என்றார் ராம்தாஸ்.

“எனக்கும் தான் நீங்க என்னை ரொம்ப கீழே தள்ளி பேசுறது பிடிக்கலை.. நானும் என் அப்பாக்காக தான் உங்கிட்ட வந்தேன்.. போங்க..” என்றான் கம்பனும்.

“இல்லாதது பேசலை, நீ எங்க பரசுவை அவ்வளவு படுத்தினவன் தானே, இப்போ என்னையும்.. அன்னைக்கு நீயே கேட்டது போல நீ சுயநலவாதி தாண்டா, அந்த வேலை முடிஞ்சதும் என்னை விட்டு வர பார்த்தவன் தானே நீ..?” என்றார் இன்னும் ஆறாத மனதுடன்.

“நான் மொத்த செக்கியூரிட்டி சர்வீஸ்ல இருந்து தான் வெளியே வர பார்த்தேன், நீங்களும் என் தம்பியும் தான் விடல, திரும்ப உங்ககிட்ட வந்துட்டேன் தானே, அப்பறம் என்ன..?” என்றான் இவன்.

“வரலைன்னா.. விட்டுடுவேனா..? நான் இந்த மண்ணுக்குள்ள போற”

“என்ன பேசுறீங்க..?” கம்பன் இடையிட்டான்.

“நான் இந்த மண்ணுக்குள்ள போற வரை நீ தான் எனக்கு பெர்சனல் கார்ட்.. என்னைவிட்டு தப்பிச்சு எல்லாம் ஓட முடியாது..” அவர் சொல்லி முடித்தவர், வலுவாக கம்பன் தோள் தட்டினார். கம்பன் அவர் தோள் தட்டிய கையை பிடித்தான்.

மிக மிக வித்தியாசமான உறவு இது,  அப்பா எனும் புள்ளியில் இணைந்த இவர்களுக்குள் ஒரு பந்தம். உணர்வுகளின் வழி சங்கமித்து விடும் பெயர் தெரியாத உறவுகள் பல. அவற்றுள் இவர்களும் அடங்குவர்.

உணவு முடித்து ராம்தாஸ் குடும்பத்துடன் கிளம்பினார். கம்பன் அவரின் செல்லும் காரை நின்று பார்த்து வீட்டுக்குள் வந்தான். “போய் சாப்பிடுப்பா..” இந்திராணி  சொல்ல, டேபிளில் அமர்ந்தான். சாதனா தான் பரிமாறினாள். உடன் சஞ்சய். அவர்களுக்கு இரண்டு வயதில் மகன் உண்டு.

அந்த கட்சி ஆட்கள் மேல் கேஸ் பைல் செய்ததில் இருந்து சஞ்சய் இன்னும் அதிகமாக வெளி உலகத்திற்கு தெரிந்தான். கேஸ் நிலுவையில் இருக்க, ராம்தாஸ் தேவைப்படும் என்று வைத்திருந்தார். வாசுதேவன் இன்னும் ராம்தாஸ் கம்பெனிகளுக்கு லீகல் அட்வைசர் தான்.

சுதா பேர குழந்தைகளுக்காக வாலண்டையரி ரிட்டயர்மெண்ட் வாங்கி கொண்டார். மகளும், மருமகளும் வேலை பார்க்க, அவர்களுக்கான அடையாளத்துடன் இருக்க வேண்டும் என்பது தான் பெரியவர்களின் ஆசை.

“சாப்பிட்டு காபி வேணும்..” கம்பன் சொல்ல, சாதனா போட  போனாள். “நீ இல்லம்மா.. இவர் போடுவார்..” என்றான் சஞ்சய் கை காட்டி.

“இது யார் வீடுனு உனக்கு அடிக்கடி மறந்து போயிடுதுடா..” சஞ்சய் பல்லை கடிக்க,

“ஆமா.. உங்க தங்கச்சி வீடுன்னு உங்களுக்கு அடிக்கடி மறந்து தான் போயிடுது, பல்லை உடைக்காம காபி போட்டு எடுத்துட்டு வாங்க, கொஞ்சம் டென்க்ஷனா இருக்கேன்..” என்றான் கம்பன்.

“நீ டென்ஷனா இருந்தா நீ போட்டு காபி குடிடா, ஒய் மீ ஆல்வேஸ்..” சஞ்சய் சொல்ல, சாதனாவை பார்த்த கம்பன்,

“லாஸ்ட் வீக் இவர் மீட்டிங்ன்னு..”

“டேய் டேய்.. சர்க்கரை எத்தனை ஸ்பூன் சொல்லு..” என்றான் சஞ்சய் வேகமாக.

கம்பன் சிரிப்பை அடக்கி, “எப்போவும் போல தான்..” என்றான்.

சாதனா புரியாமல் பார்த்தவள், “என்னங்கண்ணா..?” என்று கம்பனிடம் கேட்டாள்.

“அந்த மீட்டிங்ல முக்கியமான கேஸ் கிடைச்சதுன்னு சொல்றான், அவ்வளவு தான், நீ போய் பையனை பாரும்மா, அம்மா கஷ்டப்படுறாங்க பாரு..” என்று மனைவியை அனுப்பி வைத்தவன், “ஒத்தை காபிக்காக குடும்பத்தை பிரிக்க பார்க்கிறியே மனுஷனா நீ..?” என்று பொங்கினான்.

“அவ்வளவு பயம் இருக்கிறவர் எதுக்கு பப்க்கு போகணும், அதுவும் பார்ட்டி டென்சர் ஆடினதை முன்னாடி நின்னு வெறிச்சு வெறிச்சு பார்க்கணும்..” என்று கேட்டான்.

“என் ப்ரண்ட் பார்ட்டி சொல்லி அங்க கூட்டிட்டு போவான்னு எனக்கு என்ன தெரியும், சரி வந்ததும் வந்துட்டோம், அப்படி என்னன்னு ஜஸ்ட் பார்த்தேன் அவ்வளவு தான்..” சஞ்சய் தோள் குலுக்க, கம்பன் சிரித்தான்.

‘நம்பலைன்னா சிரிச்சு காட்டுறான்.. எனக்குன்னு வந்து வச்சிருக்கான் பாரு..’ சஞ்சய் கடுப்புடன் காபி போட சென்றான். கம்பன் உணவு முடிக்க, சஞ்சய் கையில் காபி வைத்தான். காவ்யா அறையில் இருப்பாள் போல.. மேலே பார்த்து குடித்தவன், மகள் அவனிடம் வர தூக்கி கொண்டான்.

வாசுதேவன் குடும்பம் மாலை வரை இருந்து  கிளம்பினர். காவ்யா இங்கே தான்.  கம்பன் மனைவியை பார்க்க, அவள் இவன் பக்கமே திரும்பாமல் கிட்சன் சென்றாள். ‘காவியம் கோவ அதிகாரம் காட்டுறாங்க..’ மனைவியை ஏக்கமாக பார்த்தான்.

Advertisement