Advertisement

கம்பன் போன் ஒலிக்க பாலா. கம்பன் பேசி கொண்டே வெளியே செல்ல, சூர்யா கண்கள் அண்ணனை தொடர்ந்தது. காவ்யா இரவு உணவுக்கு சமையல் அம்மாவிடம் சொல்லி வெளியே வந்தவள் கணவனை காணாமல் பார்க்க, வெளியே இருந்தான். அவன் முன் சூர்யா. காவ்யா வேக நடையுடன் அவர்களிடம் சென்றாள்.

கம்பன் வீரய்யன் அப்பாவிற்காக என்று செய்த வேலை முடிந்ததும் செக்கியூரிட்டி ஆபிஸை தம்பிக்கே திரும்ப கொடுக்க சூர்யா வாங்கவே இல்லை. கம்பன் உறுதியாக மறுக்க, சூர்யா ஒரு கட்டத்தில் அண்ணன் கை பிடித்துவிட்டான்.

“அப்போ.. அப்போ என்ன தெரியாம கோவத்துல பேசினது, மத்தபடி எனக்கு.. எனக்கு அது வேண்டாம்ண்ணா, ப்ளீஸ்.. நீங்களே செய்ங்க, அப்பா ரொம்ப சந்தோஷப்படுவார்.. ப்ளீஸ்ண்ணா..” என,  வீட்டினரும், ராம்தாஸும் அவனை ஒத்துகொள்ள வைத்திருந்தனர்.

“எனக்கும் அதை விட்டா வேற தொழில் இல்லை, நீ எடுத்து செய், நான் அங்கேயே வேலை போல..” கம்பன் சொல்ல, யாரும் அதை ஏற்கவில்லை. கம்பன் கைக்கே அந்த சர்வீஸ் வந்தது. தம்பிக்கு ஷேர் எப்போதும் போல சென்றுவிடும் என்பதால் ஆதிரா அதில் தலை கொடுக்கவில்லை.

அந்த பேச்சுக்கு பின் இப்போது தான் திரும்ப அண்ணனும், தம்பியும் ஒன்றாக நிற்க, காவ்யாவிற்கு என்னவோ ஏதோன்ற பதட்டம். இவள் செல்லும் நேரம், “ண்ணா.. சாரி ண்ணா..” சூர்யா கேட்டு கொண்டிருக்க,

“என்ன.. எதுக்கு சாரி..?” காவ்யா கேட்டாள்.

“குட்டி பையன் பேர்.. ஸ்ரீராம்.. அந்த பேர் உங்களுக்கு பிடிக்கலையாண்ணா.. சாரி..” என்றான் சூர்யா.

“என்னடா.. இப்போ என்ன..? அப்படியெல்லாம் ஒன்னுமில்லை.. நீ உள்ள போ..” என்றான் கம்பன்.

“நான் உங்களை பார்த்தேன், பிடிக்கலை, தெரியும்.. எனக்கு அப்பா பெயர் வைக்கணும்ன்னு, ஆதிரா இரண்டாவது குழந்தை வேணாம்ன்னு, அதான் குட்டிக்கு..”

“சூர்யா என்ன பண்ணிட்டிருக்க நீ, அவனுக்கு நீ சித்தப்பா, உனக்கு எல்லா உரிமையும் இருக்கு, இவருக்கு எதுக்கு விளக்கம் கொடுத்திட்டிருக்க..?” காவ்யா கோவமாக பேசினாள்.

‘இவ மட்டும் எப்போவும் ப்ரண்டை விட்டு கொடுக்கவே மாட்டா..’ கம்பன் மனைவியை உர்ரென்று பார்த்தான்.

“இல்லை காவ்யா.. நான்.. சரி விடு..” என்று வீட்டுக்குள் செல்ல போனவன், என்ன நினைத்தானோ திரும்ப வந்தான். கம்பன், காவ்யா கேள்வியாக பார்க்க,

“ண்ணா.. நான்.. ஆதிரா அப்பாகிட்ட  உன்னை..”

“இப்போ எதுக்கு அது..?” கம்பனும், காவ்யாவும் உடனே இடையிட்டனர்.

“ப்ளீஸ்.. என்னை இன்னைக்கு பேச விடுங்க.. குட்டி தம்பி என் கையில் வந்தப்போ எனக்கு அப்பா மாதிரி.. இன்னும் கஷ்டமா இருக்குண்ணா, நான் அது அப்படி பண்ணியிருக்க கூடாது, அப்பா.. அப்பா என்னை வளர்த்தது.. அதுக்கு நான் ரொம்ப பெரிய களங்கம் போல பண்ணிட்டேன்.. உன்னை.. உன்மேல எனக்கு இருக்கிற ஏமாற்றம், கோவம்.. அதை காரணமா வைச்சு அவருகிட்ட உன்னை பத்தி பேசி.. நான் அப்படி பண்ணியிருக்க கூடாது, பண்ணிட்டு எனக்கு ரொம்ப அசிங்கமா.. அசிங்கமா தான் இருக்குண்ணா..”

“நீ கேட்டது போல நான் உன்கிட்ட நேரா பேசி, சண்டை போட்டு இருந்திருக்கலாம், இது ரொம்ப பெரிய தப்பு. நான் ரொம்ப ஒரு சாதராண பையன், எனக்கு அப்பா, அம்மா, அண்ணான்னு எதிர்பார்ப்பு அதிகம், அது கிடைக்காத கோவத்துல.. எனக்கு தெரியும், நான் என்ன சொன்னாலும் நான் செஞ்சது சரி ஆகிடாது, ஆனா எனக்கு.. என்னை உனக்கு சொல்லணும்ன்னு, சாரி ண்ணா..” என்றான் மறுகலாக.

சூர்யாவிற்கு அந்த கோவம், ஏமாற்றத்தை சரியாக கையாள தெரியவில்லை. கம்பனுக்கு புரிந்தது.

“நீ இவ்வளவு சாரி கேட்கிற அளவு எல்லாம் இல்லை, சொல்ல போனா நான் தான் உன்கிட்ட கேட்கணும், தம்பின்னு இதுவரை உனக்கு ஒன்னுமே செஞ்சதில்லை, அண்ணன் இருந்தும் வேஸ்ட் நான் அவ்வளவு தான், எனக்காக நீ இவ்வளவு கில்ட் நீ எடுத்துக்க வேணாம், என்னோட தப்புக்கு நீ சிலுவை சுமக்காத.. நீ அப்படி செஞ்சதும் என்னால தான், உன்னை அந்தளவு கொண்டு போய் நிறுத்தினதும் நான் தான், ம்ம்ஹ்ம்.. கேட்க கூடாது, கேட்டாலும் நான் செஞ்சது எதுவும் மாறாது, ஆனாலும்  சாரிடா..” என்றுவிட்டான் கம்பன் வீரய்யன்.

“ண்ணா..” சூர்யா அவனை அணைத்து கொண்டான். கம்பனுக்கு இப்போதும் அவன் அணைப்பு, அவன் கண்ணீர் சுடத்தான் செய்தது. காவ்யாவை கெஞ்சலாக பார்த்தான். அவள் கணவனை புரிந்து நண்பனை சமாதானம் செய்தாள்.

இதனால் எதுவும் மாறாது என்றாலும் அண்ணன், தம்பிக்குள் ஒரு ஆசுவாசம், உயிரோட்டம் இருக்கும். நல்லது என்று தான் காவ்யா நினைத்தாள். இந்திராணி இதை தூரத்தில் இருந்து பார்த்து, கண்ணீரை ஒற்றி கொண்டார்.

குடும்பத்துக்காக வாழும் அம்மாக்களில் அவரும் ஒருவர். பல வருட வேதனை மகன்கள் இப்படி இருப்பது. இந்த அணைப்பு அவருக்கு கொஞ்சம் ஆறுதல் தான். பேரக்குழந்தைகளுடன் இன்னும் உற்சாகத்துடன் இருந்தார்.

இப்படியே இரவு உணவு முடித்து அவரவர் அறையில் அடங்கினர். காவ்யா மகனுடன் ரூம் வந்தவள், அவனுக்கு பால் கொடுத்து தொட்டிலில் விட்டாள். நைனிகா தூக்கத்திற்கு சொக்க, கம்பன் மகளை தன் நெஞ்சின் மீது போட்டு தட்டி கொடுத்து தூங்க வைத்தான்.

“நான் ரிப்ரெஷ் பண்ணிட்டு வரேன்.. தம்பியை பாருங்க..” என்று காவ்யா ரெஸ்ட் ரூம் சென்றுவிட, கம்பன் கண்கள் தொட்டில் பக்கம் கண்ணாமூச்சி ஆடியது. மகன் சில நொடியிலே சிணுங்க ஆரம்பித்தான். கம்பனுக்கு எழுந்து செல்ல கால்கள் வரவே இல்லை.

“தம்பிய பாருங்க..” என்று காவ்யா உள்ளிருந்து குரல் கொடுக்க, மகனின் அழுகையும் கூடியது. கம்பன் திடமான மனதுடன் தொட்டிலுக்கு செல்ல, மகன் அவனை பார்த்து அப்படி ஒரு அழுகை. கம்பன் நெஞ்சு குழி தவித்து போக, தன் நடுக்கத்தை மீறி மகனை வேகமாக கையில் தூக்கி கொண்டான். தன்னோடு சேர்த்து பிடித்தான்.

வழுவிய கைகள் வேறு அவனை பதட்டத்தை கூட்ட,  நிற்க முடியமால் மகனை வைத்து அமர்ந்தான். அப்பாவின் அருகாமையில் மகன் அழுகை குறைய,   காலால் லேசாக அவன் நெஞ்சில் உதைக்க, கம்பன் கண்களை மூடி திறந்தான். அந்த கால்.. அதில் உள்ள மச்சம்.. அவனின் அப்பாவின் மச்சம்.. பிறந்த நேரமே பார்த்து கண் இருண்டது அவனுக்கு.

மகன் தூக்கத்திற்கு கண்களை மூடி மூடி திறக்க, மெல்ல தட்டி கொடுத்து தூங்க வைத்தான். தூங்கிய மகன் அவன் கையில் அப்படி கணத்தான். பெட்டில் படுக்க வைத்த கம்பன் கண்கள் நிதானமாக மகனை வருடியது. இப்போது தான் பார்க்கிறான். பொறுமையாக. கண்கள் அந்த மச்சத்திற்கு வர, அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. மகன் காலுக்கடியில் தலை வைத்தான். மௌன கண்ணீர். சத்தமே இல்லை.

காவ்யா முகம் துடைத்து வந்து பார்த்தவள், புரியாமல் கணவன் தோள் மேல் கை வைத்து “என்னங்க..” என்றாள். கம்பன் சில நொடி சென்று முகம் துடைத்து நிமிர, காவ்யா அதிர்ந்துவிட்டாள். அழுறாரா..? “என்.. என்ன ஆச்சு..?” என்று பதற்றமாக கேட்க, கையால் ரெஸ்ட் ரூம் பக்கம் கை காட்டி உள்ளே சென்றுவிட்டான்.

முகம் கழுவி வெளியே வர, காவ்யா அவனையே பார்த்திருந்தவள் தண்ணீர் பாட்டில் எடுத்து கொடுத்தாள். கம்பன் குடித்து திவானில் மனைவி கை பிடித்து அமர்ந்தவன், “பார்த்திட்ட இல்லை.. ஏன் பார்த்த..?” என்று அவன் கண்ணீரை கேட்டான்.

“என்ன சொல்லுங்க..” என்றாள் காவ்யா கவலையாக அவன் கை சில்லிப்பில். கம்பன் அவள் தோள் மேல் இருந்த துண்டு எடுத்து முகம் துடைத்தான். மகன் தொட்டிலுக்கு வந்திருக்க, அவன் கண்கள் அங்கு. காவ்யாவிற்கு ஏதோ புரிதவதாய்.

“நீங்க.. நீங்க அங்கிளை.. மாமாவை தேடுறீங்களா..?” என்று நம்ப முடியா ஆச்சரியத்துடன் கேட்டாள். அவளுக்கு தெரிந்த கம்பன் அப்பாவை எதிர்க்கும் மகன் தான். அவர் மறைவில் கூட துளி கண்ணீர் சிந்தாமல் இருந்தவனை என்ன மகன் இவர் என்று பார்த்தவள் தானே காவ்யா.

“சொல்.. சொல்லுங்க.. நீங்க மாமாவை மிஸ் பண்றீங்களா..?” காவ்யா திரும்ப கேட்க,

“இப்போ இல்லை.. ஸ்டேஷன் போயிட்டு வந்த நாள்ல இருந்து அவரை மிஸ் பண்றேன்..” என்றான் கம்பன். இது இன்னும் அதிர்ச்சி. அந்த ராகுலை அடித்து போலீஸ் ஸ்டேஷன் வரை போய் வந்த கம்பன் அவளுக்கு நினைவில் இருக்க, அப்போதில் இருந்தா..?

“மாமா.. மாமாக்கு அப்போ சொன்னீங்களா..? பேசுனீங்களா..?” என்று ஆர்வமாக கேட்டாள். கம்பனுக்கு இன்று மனைவியிடம் சொல்லிவிட வேண்டும் என்ற உந்துதல். அழுத்தம். சொல்லிவிட்டான். எல்லாம் சொல்லிவிட்டான். அவன் பாதை மாறியதில் இருந்து அவன் அப்பா இறப்பு வரை..  எல்லாம்.

“பேசியிருக்கலாம்.. விட்டுட்டேன்.. கடைசி வரை அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்காமலே போயிடுச்சு.. ஆனா பாரு அவர்.. அவரோட மச்சம்.. நம்ம குட்டிகிட்ட.. நானே ஒரு மோசமான மகன். எனக்கு ஒரு மகன்.. நான் எப்படி என் மகனை வளர்ப்பேன், எனக்கு அந்த தகுதி இருக்கா..? நாளைப்பின்ன அவன் ஏதாவது பண்ணா கூட கண்டிக்க.. ச்சு..” இப்போதே சோர்ந்தான். தளர்ந்தான்.

காவ்யா அவனை  புரிந்தாள். நிதானித்தாள். கணவனின் ஓட்டத்துக்கு, தாடிக்கு பதில் கிடைத்தது. தன் பக்கம் அவனை திருப்பினாள். கன்னத்து தாடியை விரல் கொண்டு வருடியபடி “ஒருத்தர் நம்மளோட இருக்கும்போது இருக்கிறதை விட.. இல்லாதப்போ நாம எப்படி இருக்கிறோங்கிறது.. அது வேறங்க.. அந்த விதத்துல நீங்க உங்க அப்பாவை சந்தோஷ படுத்தாம அவர் நம்மகிட்ட திரும்ப வந்திருக்க மாட்டார்..” என்றாள் ஒவ்வொரு வார்த்தையாக.

 “நான் அவருக்கு செஞ்சது.. அதுக்கு மன்னிப்பு கொடுக்க அவர் இல்லை தானே..?” என்றான்.

“அதுக்காக நீங்க இப்படி வருந்துகிட்டே இருக்கணும்ன்னும் அவர் நினைக்க மாட்டார்ங்க.. நம்ம தப்பை உணர்ந்து நாம சிந்துற கண்ணீரை விட மன்னிப்புன்ற வார்த்தை பெருசு இல்லைங்க..” என்றாள்.

“நம்ம ஸ்ரீ.. அவரான்னு எனக்கு தெரியாது. ஆனா அவர் நமக்கு சாமி தானே, இதை நிச்சயம் விரும்ப மாட்டார், அவரோட ஆசீர்வாதம் இல்லன்னா நம்ம லைப்ல நடந்த எதுவும் சாத்தியமில்லைங்க..” என்றாள்.

“உங்க கனவு எல்லாம் இது சம்மந்தப்பட்டதுன்னா உங்களோட கில்ட் தான் காரணம்.. அதை ப்ளீஸ் ஓவர்கம் பண்ண பாருங்க, மன அமைதி இருக்காது..” என்றவள் எழுந்து சிணுங்கும் மகனிடம் சென்றாள்.

கம்பன் கண் மூடி தலை சாய்த்து கொண்டான். மனைவி வார்த்தைகளை உள்வாங்கினான். என்னென்னமோ யோசனை, வருத்தம், வேதனை. பார்த்திருந்த காவ்யாவிற்கு புரிந்தது. உடனே அவனின் இத்தனை வருட குற்ற உணர்ச்சி, மறுகல் எல்லாம் மாறிவிடாது தான். ஆனால் யோசிப்பதே போதும்.

Advertisement