Advertisement

அறையில்  காவ்யாவிற்கு முழிப்பு வந்து கணவனை தேடினாள் பெண். நேற்று சூர்யா பேச்சில் வெளியே சென்ற கணவன் அவள் தூங்கும் வரை வீட்டிற்கு வரவில்லை. மொபைலும் வீட்டிலே இருக்க, இவள் காத்திருந்து காத்திருந்து எப்போது தூங்கினாள் என்று தெரியவில்லை. இப்போது விழிப்பு வந்ததும் கணவன் வந்துவிட்டதற்கான அடையாளம் தெரிந்தது. அவன் டீ ஷார்ட்.

வேகமாக குளித்து வெளியே வந்தாள். நிச்சயம் மேலே தான் இருப்பார். இதுவரை செல்லாத அவன் பயிற்சி கூடம் சென்றாள். கண்ணாடி கதவு மூடியிருக்க, மொட்டை மாடியில் நீளமான பயிற்சி கூடம். காவ்யா திறந்து உள்ளே சென்றவள் கணவனை தேட, கீழே அமர்ந்தபடி அவன்.

இவள் கதவு மூடி அவனிடம் சென்றாள். கம்பன் மனைவியை திரும்பி பார்த்தான். “நைட் எப்போ வந்தீங்க..?” காவ்யா கேட்டு முன் நின்றாள். கம்பன் பதில் இல்லாமல் மனைவியை பார்க்க,

“இப்படி தான் டக்குன்னு வெளியே கிளம்பி போவீங்களா..? கையில மொபைலும் இல்லை, தகவலும் இல்லை, நைட் வீட்டுக்கு வரவும் இல்லை, என்ன நினைக்க நான்..?” என்று கோபத்துடன் படபடத்தாள்.

கம்பன் மனைவியை பார்த்தே இருக்க, “என்ன..? என்ன பார்வை..? கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..” காவ்யா அதட்ட, கம்பன் நிதானமாக அவள் கை பிடித்து தன் முன் அமர வைத்தான்.

காவ்யா மண்டியிட்டு அமர்ந்தவள், “உட்கார்ந்துட்டேன்.. இப்போ பதில் சொல்லுங்க..” என, கணவன் அவள் இரு கைகளையும் தன் மடிக்கு எடுத்து கொண்டான்.  ஆதரவாக பற்றி கொண்டான்.

அவன் செயலில், அமைதியில், கணவனை ஆராய்ந்து பார்த்தவள், “என்ன.. ஏன் டல்லா இருக்கீங்க..?” என்று கேட்டாள்.

“கனவு..” என்றான்.

“நல்ல கனவு இல்லையா..?” காவ்யா கேட்க, அமைதியே பதில். “உங்களை தான் கேட்கிறேன், என்ன கனவு..?” காவ்யா மீண்டும் கேட்க,

“வேணாம்.. சொல்ல மாட்டேன், உன்கிட்ட சொல்ல மாட்டேன்..” என்றான் அவன்.

“ஏன்..?” காவ்யா புரியாமல் கேட்க,

“நீ என்னை.. என்னை நல்ல விதமா நினைக்க மாட்ட..”  என்றான்.

பழைய நினைவுகளா..?

“எனக்கு தான் எல்லாம் தெரியுமே..?” காவ்யா சொன்னாள்.

“இது.. இது வேற.. வேணாம்..” என்றான்.

“சரி வேண்டாம்.. விடுங்க..” காவ்யா எழ நினைக்க,

“ஏன்..? உட்காரு..” என்றான்.

“காபி எடுத்துட்டு வரேன்..” காவ்யா சொல்ல,

“அப்புறம் குடிச்சுக்கலாம்..” என்றான் கைகளை விடாமல்.

“உங்களுக்கு தான்.. ரொம்ப வாடி போய் இருக்கீங்க..” காவ்யா சொல்ல,

“நீ கூட இரு சரியாகிடுவேன்..” என்றான் கணவன். காவ்யா புருவம் சுருங்க, “நல்லா உட்காரு..” என்றான். காவ்யா சம்மணமிட்டு அமர, அவளை அப்படியே கை கொடுத்து தன்னருகே இழுத்தான். இருவர் சம்மணமிட்ட கால்களும் முட்டியது.

கம்பன் இன்னும் அருகில் இழுக்க, “என்ன பண்றீங்க பாஸ்.. இதுக்கு மேலன்னா உங்க மடியில தான் உட்காரனும்..” காவ்யா சிரிப்புடன் சொன்னாள்.

“சரி உட்காரு..” என்றவன், அவளை அப்படியே தூக்கி தன் மடியில் முகம் பார்க்க இருத்தினான். காவ்யா கண்களை விரித்தவள், பேலன்ஸ்க்காக அவன் கழுத்தில் கை போட்டு கோர்த்து கொண்டாள்.

“வெய்ட்டா இருக்க போறேன், உங்களுக்கு தான் கால் வலிக்கும்..”

“தூக்கும் போதே உன் வெய்ட் தெரியும். எல்லாம் தாங்குற வெய்ட் தான்..” என்றான் கணவன்.

“தூக்கும் போதே தெரியுமா..? இதுக்கெல்லாமா ட்ரைனிங் எடுக்கிறீங்க..?” காவ்யா பயிற்ச்சி கூடத்தை ஆராய்ந்து உண்மையாகவே கேட்க, கம்பன் இறுகிய தசை தளர ஆரம்பித்தது.

“ஆமா.. அட்டேக் பண்றவங்களை தூக்கி அடிக்கணும் இல்லை, அதுக்காக ஸ்பெஷல் ட்ரைனிங்..” என்றான் கணவன்.

“நிஜமா தூக்கி அடிச்சிடுவீங்களா..?”

“உனக்கு எப்படி தோணுது..?”

“இல்லன்னு தான் தோணுது.. ஆனா இந்த சூர்யா தான் ஓவர் பில்ட் அப் கொடுத்துட்டே இருப்பான், என் அண்ணா அப்படி ட்ரைனிங் எடுப்பார், இப்படி ட்ரைனிங் எடுப்பார், வந்து பாரு மேல புல்லா அவ்வளவு எக்கியூப்மென்ட்ஸ் இருக்கு.. அத்தனை பயிற்சின்னு..” என்று உதடு சுளித்தாள்.

“ஏன் அவன் சொன்னது போல இல்லையா..?” கம்பன் கூடத்தை கண்ணால் காட்டி கேட்டான். ஜிம் உபகரணங்கள், துப்பாக்கி சுட, பஞ்சிங் பேக், ஈட்டி எறிய, கத்தி பயிற்ச்சி, கம்பும் அங்கு இருக்க, தியானம் செய்ய, கீழே தனியே ஸ்விமிங் பூல்.. இப்படி பலவற்றுக்கு தனி தனி போர்ஷனாக இருந்தது. பெரிய இடமே.

காவ்யா சுற்றி பார்த்தவள்,  “இது எல்லாம் செய்ய கஷ்டமா..?” என்று கேட்டாள்.

“நீ ட்ரை பண்ணி பாரு..” என்றான்.

“உண்மையாவே..?” காவ்யா கொஞ்சம் ஆசையாகவே கேட்டாள்.

“என்ன ட்ரை பண்ற..?” கம்பன் கேட்க,

“எல்லாம் தான்..” என்று வேகமாக எழுந்துவிட்டவள், “நீங்க கைட் பண்ணுங்க..” என்றாள் நின்று.

கம்பன் மனைவியுடன் சென்றான். “ம்ம்ம்.. பர்ஸ்ட் ஈட்டி எறியலாம்..” என்று எடுக்க, நல்ல கணமே.

“எனக்கானது.. உனக்கு வெய்ட் தான்..” கம்பன் மனைவியுடன் சேர்த்து பொசிஷனில்  நின்று தூக்கி எறிய வைத்தான்.

“அடுத்து.. ம்ம்.. கம்பு..” என்று எடுத்து சுற்ற பார்க்க, கணவன் மேல் தான் அடி விழுந்தது.

“வேணும்ன்னே தானே அடிச்ச..?” கம்பன் கேட்க,

“வேணும்ன்னே அடிச்சா இவ்வளவு ஸ்லோவா எல்லாம் அடிக்கச்சிருக்க மாட்டேன்..” என்றாள் பெண்.

“அதென்னமோ உண்மை தான்.. இப்படி சுத்து..” என்று செய்து காட்டினான்.

இப்படியே அங்கிருக்கும் எல்லாம் செய்தவள் இறுதியாக பஞ்சிங் பேக் அருகில் வந்தாள். “என் அண்ணா ரூம்ல இருக்கும்.. அவன் யூஸ் பண்ணி நான் பார்த்ததே இல்லை, சும்மா ஸீனுக்கு வைச்சிருப்பான்..” என்றாள் சிரிப்புடன்.

“உன் அண்ணா தானே, அப்படி தான் வைச்சிருப்பார்..” கம்பன் சொல்ல,

“அதெப்படி என் அண்ணாவை நீங்க அப்படி சொல்லலாம்..?” என்று சண்டைக்கு வந்துவிட்டாள் மனைவி.

“ஹேய்.. நீ தானே சொன்ன..?” கம்பன் கேட்க,

“நான் சொல்லுவேன்.. நீங்க சொல்ல கூடாது.. காட் இட்..” விரல் நீட்டி அதிகாரமாக எச்சரித்தாள் மனைவி.  அந்த அதிகாரம் கணவனுக்கு பிடித்தது.

கண்கள் மின்ன மனைவியை பார்க்க, அவள் ம்ஹ்ம்.. என்று கழுத்தை வெட்டியவள், கோவமாக பஞ்சிங் பேக்கில் பன்ச் செய்ய, அது மெல்ல நகர்ந்து கணவனை இடித்து நின்றது. கம்பன் சிரிக்க, “நீங்க தள்ளி நின்னிருந்தா அது என்கிட்ட வந்திருக்கும்..” என்றாள் மனைவி.

“அப்படியா.. இந்தா  வைச்சுக்கோ..” என்று அவள் பக்கம் பன்ச் செய்துவிட,

“அம்மா..” என்று கத்தி கீழே குனிந்துவிட்டாள் பெண். ஹாஹா.. கம்பனுக்கு அப்படி ஒரு சிரிப்பு. காவ்யா நிமிர்ந்து கணவனை முறைத்தவள், வேகமாக அவன் பக்கம் பஞ்சிங் பேக்கை தள்ளினாள்.

அவன் சாதாரணமாக பிடித்து நிறுத்தியவன், “இப்போ என் டேர்ன்..” என்றான் புருவம் தூக்கி.

விட்டா அடிச்சிடுவார் போல..

“நான் டையர்டு ஆகிட்டேன்..” என்றாள் மனைவி.

“டையர்ட் தானே.. ஆகும்.. கை, கால் வேலை செஞ்சது விட, வாய் தான் அதிகம் வேலை செஞ்சது..” என்றான் கம்பன்.

“உங்க ட்ரைனிங் அப்படி.. நான் என்ன செய்யட்டும்..” என்றாள் மனைவி.

“சரி தான்.. அப்போ நாளையில இருந்து ட்ரைனிங் ஆரம்பிச்சிடுவோமா..?” கணவன் உண்மையாக கேட்க, அரண்டுவிட்டாள் பெண்.

“ஆஹ்ன்.. முடியாது.. முடியாது..” என்று தள்ளி வந்தவள், சுவற்றுக்கு சாய்ந்து அமர்ந்துவிட்டாள். தண்ணீர் பாட்டில் எடுத்து நீட்டினான் கணவன். குடித்து முடிக்க, அவனும் குடித்து அவள் பக்கம் அமர்ந்தான்.

கணவன் இளகி இருக்க, “இப்போ சொல்வீங்களா..?” என்று கேட்டாள் காவ்யா.  “எத்தனை நாள் உங்களுக்குள்ளே வைச்சு வருத்திப்பீங்க..? எனக்கிட்ட சொல்லுங்க..?” என,

“உன்கிட்ட சொல்லாததுக்கு நான் காரணம் சொல்லிட்டேன் காவ்யா..” என்றான் கணவன்.

“நான் உங்களை நல்லா விதமா நினைக்க மாட்டேன்றதா..? அப்படியென்ன என்கிட்ட தயக்கம்..?”

“தயக்கம் இல்லை பயம்.. எங்க நீ என்னை.. விடு..”

“பயம்ன்னா.. நான் உங்களை விட்டு போயிடுவேன்னா..?”

“காவ்யா..” கம்பன் அதட்டிவிட்டான். முதல் முறை மனைவியிடம் கோவமுகம் காட்டுகிறான்.

“நான் நீங்க சொல்ல வந்து நிறுத்தினதை தான்..”

“நீ என்னை வெறுத்துடுவேன்னு தான் நான் சொல்ல வந்தேன்..” கழுத்து நரம்புகள் துடிக்க, முகம் திருப்பி கொண்டான்.

“ஓகே.. சாரி.. சாரி..”

கம்பன் அவள் முகம் பார்க்க மறுத்தான். “ப்ளீஸ்ங்க..” என்று அவன் கன்னம் பிடித்து தன்னை பார்க்க வைத்தாள்.

“உனக்கு தெரியாதுடி.. இந்த அஞ்சு வருஷம் உன்னை அவ்வளவு தேடியும் உன்னை நேருக்கு நேர் பார்க்க முடியாம ஓடி ஒளிஞ்சிருக்கேன், நீ என்னை காதலிக்கிறியா, இல்லையான்னு கூட புரியாத முட்டாளா உன் பின்னாடி பைத்தியம் மாதிரி அலைஞ்சிருக்கேன், அதை நினைக்கும் போதே அவமானமா இருக்கும். ஆனா அதை பார்த்தா உன்னை மிஸ் பண்ணிடுவேன்ற பயத்துல தான் உன்கிட்ட நேரே என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டேன்..”

“அன்னைக்கு என் மனசில ஓடினதும்  ‘நடந்தது அவளுக்கு எதுவும் தெரியாது, கேளுடா பார்த்துக்கலாம்’ன்ற எண்ணம் தான்.  உன்மேல நான் வைச்ச லவ், அது நீயும் வைச்சிருக்கேன் என்னை நானே ஏமாத்தி, முட்டாளாகி, அதுல இருந்து என்னை நானே அவ்வளவு சமாளிச்சு தேத்தி உன்கிட்ட கேட்டு, ஒன்னுக்கு இரண்டு முறை கேட்டு.. உன்னை என் பொண்டாட்டியா.. கம்பன் வீரய்யன் பொண்டாட்டியா என்னோடே பிடிச்சு வைச்சிருக்கேன். ஆனா நீ.. நீ ரொம்ப சாதாரணமா விட்டு போய்டுவேன் சொல்ற, எப்படி சொல்வ நீ அதை..? என்ன நினைச்சிட்டிருக்க நீ..? முதல்ல பைத்தியமா அலைஞ்சவன் தான், திரும்ப நம்ம பின்னாடி வருவான்னா.. என்ன சொல்லு அப்படி தானே.. சொல்லுடி..” கணவன் அதட்ட,

“ஏன் திரும்ப என் பின்னாடி வர மாட்டிங்களா..?” என்றாள் மனைவி புருவம் தூக்கி.

“திமிர் தானே உனக்கு..?”

“ஆமா.. ஏன் இருக்க கூடாதா..? இந்த கம்பனோட காதல் நான் தான்ற திமிர் எனக்கு இருக்க கூடாதா.. ம்ஹ்ம்.. சொல்லுங்க மிஸ்டர் கம்பன் வீரய்யன்..” என்று கேட்டாள் மனைவி.

கம்பன் மனது ஆறாமல் அதே முறைப்பை கொடுக்க, காவ்யா மண்டியிட்டு அவனை நெருங்கி வந்தவள், கன்னம் பிடித்து நிதானமாக, பொறுமையாக, உரிமையாக தன் இதழை அவன் நெற்றியில் பதித்தாள். கம்பன் கண்கள் மூடி கொள்ள, இதயம் சில்லிட்டு நின்று துடித்தது.

“உங்க காவியத்துக்கு அந்த திமிர் கொடுக்க மாட்டிங்களா..?” திரும்ப கேட்டபடி அவன் கன்னத்தில் இதழ் பதித்தவள், “இந்த தாடியை எடுக்க மாட்டிங்களா..?” என்று கேட்டாள்.

கம்பனுக்கு இப்போதே எடுக்க கை பரபரத்தது. ஆனால் மனைவி அருகில் வேண்டும்.  அவளே கொடுக்கும் முத்தம் வேண்டும். மறுபக்கம் கன்னம் காட்டினான். “மறந்துட்டீங்களா..? நீங்க என்மேல கோவமா இருக்கீங்க..?” என்றாள் மனைவி சிரிப்புடன்.

“அதை குறைக்க தான்..” என்று கணவன் சொல்ல, காவ்யா சிரித்தாலும் மறுகன்னத்திலும் முத்தம் வைத்தாள்.

“இது தான் கடைசி முறையா இருக்கணும், இனி பேச்சுக்கு கூட அப்படி சொல்லாத.. அது என்னை ரொம்ப ஆழமா காயப்படுத்துது..” என்றவன், மண்டியிட்டவளை தன் மடிக்கு எடுத்து கொண்டான்.

அவன் கடந்து வந்திருக்கும் பாதையில் அவனின் இளைப்பாறல், ஆதாரம், பிடிப்பு இவள் தானே..?

காவ்யாவிற்கும் அவன் காதல் புரிந்ததோடு, மிக அதிகமாக பிடிக்கவும் செய்தது. கணவனை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டாள்.

நாளை நிகழ்ந்திடும் காட்சி ஒன்றை

இன்றே எழுதுகோல் தீட்டுமா..?

நேற்றே எழுதிய பாடல் ஒன்றை

காலம் நாளையும் மீட்டுமா..?

Advertisement