Advertisement

கம்பன் காதல் கொண்டு 24 PREFINAL 2

பரசுராம் அன்று வீட்டுக்கு வரும் போதே பரபரத்து தான் வந்தார். நேரம் என்னமோ எப்போதும் போல இரவு பத்துக்கு மேல். இந்திராணி அவருக்காக காத்திருக்க, அவர் மனைவியை பார்க்க கூட செய்யாமல் நேரே பெரிய மகன் அறைக்கு தான் விரைந்தார்.

இந்திராணிக்கு அச்சம். மகன் செய்ததுக்கு அடிக்க போகிறார்.. இந்த நேரத்திலா..? பின்னாலே சென்றார். அங்கு பரசுராம் பெரிய மகன் பக்கம் கை கட்டி நின்றிருந்தார். கம்பன் வீரய்யன் கண் மூடி இருக்க, அவன் தூங்கவில்லை என்பது நன்கு தெரிந்தது. அப்பா இருப்பது தெரிந்து கண் திறந்து பார்க்கவும் இல்லை. இன்னும் அழுத்தமாக கண் மூடியிருந்தான் மகன்.

“ஏங்க.. இப்போ எதுவும் வேண்டாம், காலை.. காலையில பேசிக்கலாம்..” இந்திராணி சென்று கணவரிடம் மென்குரலில் சொல்ல, பரசுராம் அசையும் மகன் இமைகளையே பார்த்திருந்தார்.

பரசுராமுக்கு அவனை அப்படியே விட்டு செல்ல முடியவில்லை. உள்ளே என்னமோ பயம் அவருக்கு. ஸ்டேஷன் சென்று பெரியவர் வீட்டுக்கு வந்த மகன் அவரை அணைத்தல்லவா வந்திருந்தான்.

“இவன்.. இவன் இன்னைக்கு பெரியவர் வீட்ல வைச்சு என்னை  கட்டி பிடிச்சான்டி.. எனக்கு தெரியல, என்ன பண்ணிட்டான் கேட்டு சொல்லு, ஏதாவது பெரிய தப்பா..? மனசு கஷ்டமா..? கேட்டு சொல்லு..” பரசுராம் மகனை கை காட்டி மனைவியிடம் சொன்னார். கம்பன் தொண்டை குழி ஏறி இறங்கியது.

“என்.. என்னது..?” இந்திராணிக்கும் அதிர்ச்சி தான். அப்பா, மகன் உறவு அவரை விட யாருக்கு தெரியும்..? அப்பா என்றாலே எரிந்து விழும் மகன், நேருக்கு நேர் நிற்கும் மகன்.. அவரை அணைத்திருக்கிறான் என்றால் அவருக்கும்  பயம் வந்துவிட்டது.

“நான்.. நான் கேட்டு சொல்றேன்ங்க, இப்போ வேண்டாம், நைட்.. நேரம் கூட அதிகம், வேணாம்.. வாங்க போலாம்..” இந்திராணி கணவன் கை பிடித்து அழைக்க,  பரசுராம் மகனை தான் பார்த்திருந்தார்.

‘ஏன் சொல்ல மாட்டேங்கிறான், நானே தான் விசாரிக்கணுமா..?’ யோசித்து மனைவியின் இழுப்புக்கு சென்றார். அப்போதும் அவர் ரூமுக்கு செல்லவில்லை. மகன் அறைக்கதவு திறந்து வைத்து, ஹாலிலே படுத்துகொண்டார்.

“இங்க ஏங்க..?” இந்திராணி கேட்க,

“சும்மா தான் இருக்கட்டும்.. நீ ரூமுக்கு போ..” என்றுவிட்டார். இந்திராணிக்கு புரியவில்லை. நான் ஏதாவது செய்து கொள்வேன் என்று பயப்படுகிறார் கம்பனுக்கு புரிந்தது. ‘அவ்வளவா நான் உடைந்திருக்கிறேன், இல்லையே..’ தனக்குள் கேட்டு கொண்டான்.

நண்பனின் துரோகம், ஒரு தலை காதல் தோல்வி என்பதை விட அவனை அதிகம் வருத்துவது, நண்பர்களுடன் கூத்தடித்து அப்பாவை எதிரியாய் நடத்தியது தான். இதோ இன்று நான் உடைந்திருக்கிறேன் என்று புரிந்து அப்பா தான் எனக்காக இருக்கிறார், எந்த நண்பனும் இல்லையே..?

அந்த இரவு அப்பா, மகனுக்கு கனத்துடன் நகர, பரசுராம் உடல் வலியில் ஒரு நேரம் கண் அசந்துவிட்டார். அப்பாவிடம் அசைவில்லாததில் அவர் தூங்கிவிட்டார் என்று தெரிந்து கம்பன் எழுந்து வந்தான். அவரை பார்த்தான். பார்த்து கொண்டே இருந்தான்.

எந்த வயது, எந்த நேரத்தில்  அப்பாவின் பாசம் எனக்கு வேம்பாக கசக்க ஆரம்பித்தது.. எங்கு இந்த உறவு திசை மாறியது.. நண்பர்களுடன் சேர்ந்து படிப்பில், பழக்க வழக்கத்தில் நான் தவறும் போதா..? அவர் என்னை கண்டித்த போதா..?  படிக்க சொல்லும் போதா..? வெளியில் சுத்தாமல் வீட்டில் இரு என்றா போதா..?

அப்பா தூக்கத்தில் கால்களை அசைத்து முகம் சுருக்கினார்.  ‘வலிக்குதா..? அம்மா மசாஜ் பண்ணுவாங்களே, இன்னைக்கு ஏன் பண்ணாம போயிட்டாங்க..?’ தொட பயம். விழித்துவிடுவார்..? இவ்வளவு கஷ்டப்பட்டு தான் அந்த பணம்.. உள்ளம் குத்தியது மகனுக்கு.

‘ப்ளஸ் டூவில் படிச்சு மார்க் எடுன்னு அப்பா எவ்வளவு சொன்னார். உங்களுக்கு என்ன மார்க் தானே வேணும், போங்க.. சொன்னவன்,  ஆடிவிட்டு குறைவான மதிப்பெண்கள் தானே எடுத்தேன். அன்று தானே அவர் முதல் முறை தாங்காமல் என்னை அடித்தார். ஆனால் நான் அவ்வளவு அடி வாங்கியும், எனக்கு இந்த காலேஜ் தான் வேணும், பணம் இருக்கு இல்லை, கட்டி சீட் வாங்குங்கன்னு தானே சொன்னேன்..’

‘அதோட மேட்ச் அப்போ குடிச்சு.. இரண்டாம் முறை அடி வாங்கி.. தப்பை உணராமல்.. உங்க முன்னாடி இனி இப்படி நிக்க கூடாதேன்னு நான் இனி குடிக்க மாட்டேன்னு  தானே சொன்னேன், அப்பாவிடம் அவ்வளவு கௌரவம்.. வெட்டி வீணா போன கௌரவம்.. என்ன சாதித்துவிட்டேன்.. ஒன்றும் இல்லை.. அவ்வளவு கசந்தது.

பிடிக்கவில்லை.. எதுவும் பிடிக்கவில்லை. அவனை அந்த துரோகியை ஆத்திரம் தீர அவ்வளவு அடித்தும் போதவில்லை. நான் ஏமாந்ததை அவன்மேல இறக்கிட்டு வந்திருக்கேன், என்னோட ஏமாற்றத்தை என்னால தாங்க முடியல.. என்னை நானே பெருசா நினைச்சுட்டு இருந்திருக்கேன்.. கடைசில நான்.. அடைத்த தொண்டை குழி வலிக்க, பரசுராம் கண் விழித்துவிட்டார்.

சில நிமிட தூக்கம் தான். மகன் பக்கத்தில் நிற்கும் உணர்விலே விழித்துவிட்டார். செக்கியூரிட்டி ஆபிசரின் அலர்ட். பக்கத்தில் நின்ற மகனின் கலங்கிய முகம்.. தந்தைக்கு அந்த நேரத்திலும் புரிய, “என்.. என்னடா..?” என்றார். கம்பன் வீரய்யன் வேகமாக ரூம் சென்றுவிட்டான்.

கட்டிலில் படுக்கும் முன் மகன் திரும்பி பார்க்க, ‘ஏதாவது சொல்லுடா.. என்னை பதற வைக்காத..’ என்று இறைஞ்சியது அப்பாவின் பார்வை.

அடுத்த நாள் மகன் அவர் முன் வரவே இல்லை. பரசுராம் வேலைக்கு செல்லுமுன் பெரிய மகனை பார்க்க அறைக்கு வர, அவன் குளிக்க போறேன் என்று பாத்ரூமில் அடைந்துகொண்டான். நின்று நின்று பார்த்தவர், பெரியவர் போன் செய்துவிட வேறு வழி இல்லாமல் கிளம்பினார்.

கம்பன் வீரய்யன்  எங்கும் செல்லாமல் வீட்டிலே இருந்தான். உடன் இந்திராணி கணவன் சொல்லி சென்றிருந்ததால். அடுத்த இரண்டு நாள் இப்படியே செல்ல, பரசுராம் அன்று வேலைக்கு கிளம்பினார். மனசு அவருக்கு ஏதோ செய்தது. நின்று திரும்பி மனைவி, சின்ன மகனை பார்த்தவர், பெரிய மகனை தேடி கிடைக்காமல் கிளம்பிவிட்டார்.

பெரியவருடன் பாண்டிச்சேரி மீட்டிங். இரவு ஆகிவிட்டது திரும்ப. இன்னும் சில கிலோ மீட்டரில் சென்னை. மூன்று கார்கள். முன், பின் செக்கியூரிட்டி கார்கள். இடையில் இவர்கள் காரில் ட்ரைவருடன் முன் பக்கம்  ஒரு கார்ட், பின்னால்  பரசுராம், பெரியவர் என்று நால்வர்.

டிரக் ஒன்று முன் பொறுமையாக சென்று கொண்டிருந்தது. இவர்கள் கார் அதனை கடக்கவும், திடீரென வேகம் எடுத்தது. இரண்டு பெரிய கார்கள் ஓவர் டேக் செய்வது போல, பெரியவர் காருக்கு முன் பின் கட்டம் கட்டிவிட்டது. செக்கியூரிட்டி கார்கள் துண்டிக்கபட்டுவிட்டது. பரசுராம் புரிந்துகொண்டார். டிரக் வேகம் பின்னால் கேட்டது.

“கிராஸ் பண்ணு இந்த கார்களை..” என்று டிரைவரிடம் கத்தினார். ட்ரைவரும் முயல, முன் சென்ற கார் வழி விடாமல் ஆட்டம் காட்டியது. செக்கியூரிட்டி கார்கள் இவர்களை நெருங்க முடியாமல் திணற, பரசுராம் போலீசுக்கு அழைத்தார்.

பெரியவர் சுற்றிலும் பார்த்து, இனி தாங்கள் தப்பிக்க முடியாது என்று உணர்ந்து கொண்டவர், “ட்ரைவர் காரை ஸ்லோ பண்ணி மூணு பேரும் வெளியே குதிங்க..” என்றார் ஆணையாக. முதலில் மறுத்த டிரைவரும், கார்டும் பின் தங்கள் உயிரை காக்க குதித்துவிட, பரசுராம் மட்டும் முன் பாய்ந்து காரை ஓட்ட ஆரம்பித்தார்.

வழி விடாத காரை இடித்து தள்ளி முன்னே செல்ல முயல, டிரக் வந்துவிட்டது. “பரசு.. என் பேச்சை கேளு, குதி..” பெரியவர் கத்தி, கெஞ்சி, மிரட்டி என்று எதற்கும் பரசுராம் அசையவில்லை. எப்படியாவது பெரியவரை காப்பாத்திவிட வேண்டும் என்பது மட்டுமே.

அவர் குதித்தாலும் நிச்சயம் கொல்வர், அவருக்கு தெரியும். அவருக்கு தான் இறக்க போவதை விட பரசுராம் உடன் இருப்பது தான் அதிகம் வருத்தியது. “டேய் சொன்னா கேளுடா.. நான் கிழவன், எனக்கு எல்லாம் முடிஞ்சு போச்சு, உனக்கு குடும்பம் இருக்குடா, குதிடா..” என்று இறுதியாக மன்றாடினார்.

பரசுராமிற்கு எண்ணம் முழுதும் பெரியவரை காப்பாற்றுவதில் மட்டுமே. என்ன முயன்றும் பலன் தான் இல்லை. டிரக்கும்,  அந்த இரு காரும் இவர்களை வேகத்துடன் இடித்து, தூக்கி அடித்து, சாய்த்து தான் விட்டனர். பெரியவர் அங்கேயே. பரசுராம் போன் செய்த போலீஸ் சில நிமிடங்கள் சென்றே இடத்துக்கு வந்தது.

பரசுராம் உயிர் இன்னும் மிச்சம் இருக்க, வீட்டுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தூங்காமல் இருந்த கம்பன் தான் போனை எடுத்தான். எதிரில் சொன்ன விஷயத்தை கிரகித்து, புரிந்து அவன் அடித்து பிடித்து பைக் எடுத்து கொண்டு பறந்தான்.

அவனின் அப்பா.. அங்கு.. உயிருக்கு போராடி கொண்டு.. அதிர்ச்சில் தொண்டை எழவே இல்லை. மருத்துவர்கள் போராடி கை விரித்துவிட்டனர். சில நொடி உயிர். வேகமாக அப்பாவின் ரத்த முகம் துடைத்து அவர் கை பிடித்தான். அவ்வளவு நடுங்கியது கையும், அவன் உடலும் உயிரும். பரசுராமும் மகன் கையை இறுக்கமாக, தன் இறுதி சக்தியை எல்லாம் சேர்த்து பிடித்தார். அவனிடம்  பேச பாடுபட்டு அவரால் பேச முடியவில்லை. கம்பனுக்கு  பிடித்த கை வலுவிழந்தது. எதுவோ அவனை இழுத்தது. கீழே விழ போறேன்.. கண்கள் கண்ணீரை அணைக்கட்டியது.

  ‘எதாவது சொல்லு, அவர் பார்க்கிறார் பேசுடா..’ உள்ளுக்குள் ஒரு குரல் ஓங்கி ஒலிக்க, மகன் ப்பா.. என்று உதடு மட்டுமே அசைக்க,  அவன் உதட்டசைவை, கண்ணீரை பார்த்தபடி.. பரசுராம் கருவிழிகள் நின்றுவிட்டது. அணைக்கட்டிய கண்ணீர் அவர் கரத்தில் விழ, இவனும் மயங்கி விழுந்தான்.

இரண்டு நாட்களாக சரியாக சாப்பிடாத சோர்வு, அதிர்ச்சி, அப்பாவின் உயிர் கண் முன்னே.. இவன்  தெளிந்து எழ, உறவு யாரோ அவனை வீட்டுக்கு அழைத்து சென்றனர். அப்பாவின் உடல் அங்கு. அம்மா, தம்பி அருகில். இவன் தள்ளி.. எல்லாம் முடிந்தது. இறுதி காரியம் செய்தான். அவரின் மகனாக பிறந்ததற்கு ஒன்றே ஒன்று செய்தான்.

அறைக்கு வந்தான். கதவடைத்தான். அதுவரை அழாத, ஒரு வார்த்தை பேசாத தொண்டை அப்படி வலித்தது. ஊமையாகிட்டேன் நான். இறுக்கி பிடித்த தொண்டையை குத்திவிட்டான். அப்படி ஒரு வலி.. ஆஆஹ்.. என்று வலித்த தொண்டையை பிடித்து எழுந்தமர்ந்தான்.

கனவு.. நடந்தது கனவாக. காவ்யா அவன் கண் முன் கட்டிலில்.. இவன் திவானில். இரவு லேட்டாக வந்தது, இங்கேயே படுத்தது நினைவிற்கு வர, நேரம் பார்த்தான். மணி விடியற்காலை ஐந்து..

இதற்கு மேல் நிச்சயம் தூங்க முடியாது. எழுந்து ரிப்ரெஷ் செய்து அவன் பயிற்சி அறைக்கு சென்றுவிட்டான். எண்ணம் முழுதும் கனவின் தாக்கத்திலே. உடலுடன் மனமும் காலையிலே சோர்வு கண்டது. எல்லா ஜன்னலையும் திறந்து விட்டான். பயிற்சி ஆரம்பித்தான். முடியவில்லை. அமர்ந்துவிட்டான். அவனுக்கு நேரே சூரிய உதயம். அதனையே பார்த்தபடி இவன்.

Advertisement