Advertisement

இறுக்கிய சட்டையின் பிடி தளர, கம்பன் முகம் திருப்பினான். கழுத்தின் நரம்புகள் துடித்து கொண்டிருந்தது. அவரை விட்டு விலகி கார் சென்றான். நீண்ட நேரம் காரிலே அமர்ந்திருந்தான்.

ராம்தாஸ் மகன் வந்தான். “அய்யா.. நைட் மீட்டிங் வேலை பார்க்க சொன்னார்..” என்றான். கம்பன் வீரய்யன் தலையாட்ட, “சாப்பிட வர சொன்னார்..” என்றான் தொடர்ந்து.

“இல்லை.. வேண்டாம்..” கம்பன் மறுத்து, பாலாவை அழைத்தான். நேரம் முன் மாலை. இனி அந்த பத்து பேரை இங்கு வரவழைக்க வேண்டும். மிக மிக ரகசியமாக. அதற்கான திட்டம் சென்றது.

பாலா அவன் சோர்ந்த முகம் பார்த்து காபி எடுத்து வந்தான். குடித்தான். குடித்து கொண்டே இருந்தான். “பாஸ்.. போதும்..” பாலா தான் தடுக்க வேண்டியிருந்தது. “நீங்க ஆரம்பிங்க..” பாலாவை அனுப்பிய கம்பன், போன் எடுத்து காவ்யாவிற்கு அழைத்தான்.

“மீட்டிங்க்ல இருக்கேன்.. திரும்ப கூப்பிடவா..” என்றாள்  மனைவி.

“சரி.. நீ பாரு..” கம்பன் வைத்துவிட்டான்.

காவ்யா இவனுக்கு திரும்ப  அழைத்தவள், “ஏன் வாய்ஸ் டல்லா இருக்கு..?” என்று கேட்டாள்.

“என்னை உனக்கு புரியுதா..?” கம்பன் கேட்க,

“புரியாம தான் நான் மிஸஸ் கம்பன் வீரய்யனா இருக்கேனா..?” என்றாள் காவ்யா மிதப்பாக.

‘பெரிய கம்பன் வீரய்யன்..’ இதோ இப்போது தான் ராம்தாஸ் ஒன்றும் இல்லாதது போல சொன்னது.

அதே கம்பன் வீரய்யனை தான் மனைவி சொல்கிறாள். ஆனால் அவன் பெயரை அவனின் மனைவி மரியாதையாக, உரிமையாக, கெத்தாக, மிதப்பாக சொல்கிறாள்..? இதைவிட அவனுக்கு வேறென்ன வேண்டும்..? அலைபாய்ந்து, ஓய்ந்த உள்ளம் மீண்டது.

‘எனக்காக ஒருத்தி.  என் ஒருத்தி.. என் மனைவி..’ அவள் மீதான அவன் காதலில் இதயம் நிறைந்து, உச்சகட்ட உவகை கொண்டவன், தன்னை மீறி, “ஐ..” என்று  காதல் சொல்ல வர,

“சார்..” என்று பாலா டென்சனாய் வந்தான்.

காவ்யா அந்த ‘ஐ’ வார்த்தையிலே டக்கென எகிறி குதித்த இதய துடிப்பின் வேகத்தில்  படபடத்து நிற்க, கம்பன் சொல்ல முடியா ஏமாற்றத்தை மறைத்து,  “நான் கூப்பிடுறேன்..” என்று வைத்தான்.

அந்த பக்கம் காவ்யா போனை நெஞ்சுக்கு வைத்து, சுவற்றுக்கு சாய்ந்து நின்றுவிட்டாள். அவன் என்ன சொல்ல வந்தான் என்று அவளுக்கு புரிந்து விட்டது. ஆனால் அதை கேட்க கூட தனி தைரியம் வேண்டும் என்பது அந்த நொடி தான் பெண்ணுக்கு புரிந்தது. இன்னும் அந்த படபடப்பு அடங்கவில்லை. தண்ணீர் குடித்து, மீட்டிங் ஹாலுக்குள் சென்றாள்.

“என்ன பாலா..?” கம்பன் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்து கேட்க,

“நம்ம செக்கியூரிட்டி கேமராவை யாரோ ஹேக் பண்ண பார்க்கிறாங்க..” என்றான் அவன்.

கம்பனிடம் சட்டென ஒரு ரௌத்திரம். ‘எவண்டா அது.. என் வேலையில் கை வைப்பது..?’ அங்கிருக்கும் கண்ட்ரோல் அறைக்கு சென்றான். கேமரா எல்லாம் வரிவரியாக விட்டு விட்டு தெரிய ஆரம்பித்தது. அவனிடம் இருக்கும் டெக்னீஷியனை வர சொன்னான்.

“இங்க இருக்கிற அத்தனை கேமரா, சிஸ்டமை மாத்திடு, ஹேக் பண்ண நினைச்ச எதுவும் இங்க இருக்க கூடாது..” என்றுவிட்டவன், ஹேக்கிங் ஸ்பெஷலிஸ்டை வர வைத்து அதை என்ன என்று பார்த்தான்.

அன்றய இரவிற்கான மீட்டிங் நாளை என்று மாறியது. ராம்தாஸ் வந்து பார்த்து சென்றார். கம்பன் அன்றிரவு வீடு செல்லவில்லை. காவ்யாவிற்கு ஹேக் பற்றி மட்டும் சொல்லி வைத்தான். அவள் சூழ்நிலை புரிந்து கொண்டாள்.

மறுநாள் எலெக்ஷ்ன் ரிசல்ட் நாள். கம்பன் அங்கிருக்கும் கார்ட் அறையில் குளித்து கிளம்பினான். ராம்தாஸ்க்கு முடிவு அனுமானம் இருந்தாலும், டேப் எடுத்து நிறைய விஷயங்களை குறித்து கொண்டார். அந்த கட்சி வென்றது. ஆட்சி அமைக்க ஆளுநரை கேட்க செல்கின்றனர் என்று செய்தி ஓடி கொண்டிருந்தது.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் இவர்கள் சஞ்சய் வைத்து கேஸ் தொடுத்த அந்த நால்வரில் மூவர் தோற்றிருந்தனர். கம்பன் தூக்கிய ஆள் மட்டும் வென்றிருந்தார். ராம்தாஸ் முகத்தில் ஒரு மகிழ்ச்சி. அன்றய நாள் இரவு மீட்டிங் நேரம் குறித்தனர். கம்பன் அதற்குள் எல்லாவற்றையும் பக்காவாக மாற்றி, பழையபடி தன் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டான்.

அன்றய இரவில் அந்த கட்சி தலைமை பார்ட்டி வைத்து கொண்டாடி கொண்டிருக்க, இங்கு ராம்தாஸ் வீட்டில் மீட்டிங் ஆரம்பமானது. சஞ்சய்யும் வந்திருந்தான். கம்பன் சோர்ந்த கால்களை கண்டுகொள்ளாமல் சுற்றினான். பேக்கேட்டில் கன் பிடித்திருக்கும் கை மரத்தாலும் கையை வெளியே எடுக்கவில்லை.

‘இன்று ஒரு நாள்.. இத்தனை வருட காத்திருப்புக்கு பலன்.. சோர்ந்திடாத..’ கம்பனுக்குள் ஒரு குரல் கேட்டு கொண்டே இருந்தது. விடிய விடிய நடந்த மீட்டிங்க் அதிகாலையில் முடிவுக்கு வந்தது.

இனி அவரவர் வேலையை அவரவர் செய்துவிட வேண்டும். நாள் அதிகமில்லை. இவர்களுக்கு சாதகமான பலன் என்பது நிச்சயம் இல்லையென்றாலும் விட்டு கொடுக்க யாரும் தயாராக இல்லை. கொண்ட உறுதியில் கலைந்தனர். கம்பன் எல்லோரையும் பத்திரமாக அனுப்பி வைத்தான்.

சஞ்சய் கடைசி வரை இருந்தவன், “நாம கிளம்பலாம்..” என்றான்.

“இல்லை நீங்க கிளம்புங்க.. இங்க பார்க்கணும்..” என்றான் கம்பன்.

“இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துட்டு வா, பாலா பார்க்கட்டும்..” சஞ்சய் விடவில்லை. இரண்டு நாட்களாக சிறிது ஓய்வில்லை. மிகவும் சோர்ந்திருக்க எப்படி விடுவான்..?  கார்ட்ஸ் மூவர் உடன் வர, சஞ்சய் தானே கார் எடுத்தான். கம்பன் இரண்டு நாட்கள் கழித்து கண் மூடி சீட்டில் சாய்ந்தான்.

சஞ்சய் அவன் வீட்டில் நிறுத்த, “பத்திரம்..” என்று கர்ட்ஸுக்கு சொல்லி, வீட்டுக்குள் சென்றான். அவர்கள் சஞ்சய் பத்திரமாக வீடு சேர்க்க, கம்பன் ஹாலில் உள்ள சோபாவிலே விழுந்தான்.  நல்ல தூக்கம்.

குடும்பத்தினர் வந்து பார்த்தவர்கள் அவனுக்கு தொந்தரவு இல்லாமல் அமைதியாக நடந்து கொண்டனர். இந்திராணி அவன் கால் சாக்ஸ் கழட்டி, மூலிகை ஆயில் வைத்து அவன் பாதத்தில் மசாஜ் செய்தார்.

“அவங்க அப்பாக்கு இப்படி தான் செய்வேன்.. நடந்துட்டே, நின்னுட்டே தான் இருப்பாங்க, மத்த கார்ட்ஸ்க்கு எல்லாம் அஞ்சாறு மணி நேரம் மட்டும் தான் டியூட்டி, இவங்களுக்கு அப்படி இல்லை, எல்லாம் இவங்களே தானே பார்க்கணும்..” உணவு டேபிளில் வைத்து இந்திராணி சொன்னார்.

கணவனை திரும்பி பார்த்த காவ்யாவிற்கு இரண்டு இட்லிக்கு மேல் இறங்கவில்லை. இந்திராணி ஆபிஸ் கிளம்ப, காவ்யா வீட்டிலே இருந்தாள். உடன் சூர்யாவும். வீட்டில் இருந்தே வேலை பார்க்க,  மதியத்துக்கு மேல்  தான் கம்பன் கண் விழித்தான்.

நேரே அவன் காவியம்.. அவனை பார்த்தபடி. முகத்தில் ஒரு சோம்பலான புன்னகை. கைகளை தூக்கி சோம்பல் முறித்து எழுந்தான். “குளிச்சுட்டு வாங்க.. சாப்பிடலாம்..” என்றாள் மனைவி.

கம்பனுக்கும் எழுந்ததும்  நல்ல பசி. அதுவும் இரண்டு நாள் கழித்து. சீக்கிரமே குளித்து வந்தான். காவ்யா உணவு வைத்தாள். “நீ சாப்பிட்டியா..?” கம்பன் கேட்டு அமர,

“ஆச்சு.. நீங்க சாப்பிடுங்க..”  என்று பரிமாற, கம்பன் சாப்பிட்டு எழுந்தான்.

“டீ..” காவ்யா கேட்க,

“கொஞ்ச நேரம்..” என்று ஹாலில் அமர்ந்தவன்,  “அங்க என்ன பண்ற வா..?” என்று ஒதுங்க வைத்து கொண்டிருந்த மனைவியை அருகில் அமர்த்தி கொண்டான்.

“வேலை எல்லாம் முடிஞ்சுதா..? உங்களுக்கு ரெஸ்ட் தானே..?” காவ்யா கேட்க,

“ம்ஹ்ம்.. முடிஞ்சதுனு தான் நினைக்கிறேன், பார்ப்போம்..” என்றவன், கால்களை டீபாய் மேல் நீட்டி அமர்ந்தான்.

“வலி இருக்கா.. மசாஜ் பண்ணவா..?” காவ்யா கேட்க, கம்பனிடம் ஒரு அமைதி. முகம் மாறியது. வேண்டாம் என்று தலையாட்டியவன்  தலையை பின்னுக்கு சாய்த்து கண்களை மூடி கொண்டான்.

இந்த ஐந்து வருடம் கொண்ட உறுதிக்காக வேண்டி ஏதோ ஓடி கொண்டிருந்தான். இனி இந்த வேலை, கார்ட் சர்வீஸ்..?

“இன்னும் கொஞ்ச நாள் தான், உன் ப்ரண்டுகிட்ட இருந்து பிடுங்கின செக்கியூரிட்டி சர்வீஸை அவனுக்கே கொடுத்துடுறேன்..” என்றான் மனைவியிடம்.

“இப்போ.. இப்போ இது எதுக்கு..?” காவ்யா சொல்ல,

“உங்களோட ஆக பெரிய கம்பளைண்ட்டே அது தானே..?” என்றான் வெறுமையாக.

“உங்களுக்கு புரியல.. அவன்..  சூர்யா உங்ககிட்ட இருந்து பாசத்தை, கேரை தான் எதிர்பார்க்கிறான்.. இது இல்லை..” காவ்யா சொல்ல,  கம்பன் கண்களை திறந்து மனைவியை வெறித்து பார்த்தான்.

“நான் சொல்றது உண்மைங்க.. அவன் அது கிடைக்காத கோவத்துல, ஏமாற்றத்துல தான் ஏதோ செஞ்சு.. ஆனா அவன் இன்டென்ஸன் அண்ணா வேணுன்றது மட்டும் தான்..”

“நீ அப்போவும் அவனுக்காக தான் என்னை தேடி வந்த, இப்போவும் அவனுக்காக தான் என்கிட்ட பேசிட்டிருக்க இல்லை, எனக்கு ஏன் இப்படி ஒரு ஆள் கூட இல்லை.. இருக்காது.. எனக்கு தெரியும்.. நான் போன பாதை அப்படி..”

“என்னங்க இது..? நான்.. ம்ப்ச்.. சூர்யா உங்ககிட்ட இதெல்லாம் சொல்ல மாட்டான்னு தான் நான் சொன்னேன்..”

“அது எனக்கே தெரியும், அவன் என்கிட்ட எதுவும் சொல்ல மாட்டான், யாரோ ஒருத்தர் வந்தா அவர்கிட்ட என்னை பத்தி சொல்வான்..” காவ்யா அதிர்ந்து போனாள். ஆதிரா அப்பாவிடம் சூர்யா பேசியது பற்றி சொல்கிறான் கணவன்.

“அதுக்காக அவன் ரொம்ப ரொம்ப அசிங்கமா பீல் பண்றான்ங்க, உங்க முன்னாடி வர கூட அவனுக்கு முகம் இல்லை..”

“அவன் ஏன் அசிங்கமா பீல் பண்ணனும், என்னை பத்தி என் தம்பியோட மனசுல இவ்வளவு வெறுப்பு இருக்கிறது தெரிஞ்சு நான் தான் அசிங்கபடணும், அவன் ஏன்..?”

“உங்களுக்கு வந்த வரன், அவன்..”

“பொல்லாத வரன், தூக்கி போடு.. ம்ஹ்ம்.. தூக்கி அவன் தலையில் தான் போட்டுக்கிட்டான், எனக்கு அதுல என்ன..?  நீ தான் எனக்கு, இவன்  அந்த சோமசுந்தரம்கிட்ட சொன்னது.. அவர்ன்னு இல்லை, மத்தவங்க யார் என்னை பத்தி என்ன  நினைச்சாலும் எனக்கும் ஒன்னும் இல்லை, என் தம்பி.. அவனுக்கு என் மேல இவ்வளவு கம்பளைண்ட்ஸ், வெறுப்பு இருக்குன்னா என் சட்டையை பிடிச்சு என்னை கேட்டிருக்கலாம் இல்லை, நான் என்ன அவனுக்கு அவ்வளவு தூரமாவா போயிட்டேன்..?”

“எனக்கு தெரியும், நான் கெட்டவன் தான், திமிர் பிடிச்சு யாரையும் மதிக்காம ஆடினவன் தான், இவனுக்கு நல்ல அண்ணனா இருந்ததில்லை தான், ஆனா இவன் வேற, நல்லவன், இவன் இப்படி பண்ணலாமா..? அந்த மனுஷன் ஒரு நாள் திடீர்ன்னு.. திடீர்ன்னு போய்..  என்னை நெஞ்சுல மிதிச்சுட்டார், அதுவும் நான் அவர் வேணும்ன்னு நினைச்சப்போ.. இவன் அவரோட நல்ல பையன், ரொம்ப நல்ல பையன், இவன் இப்படி பண்ணி என்னை இன்னும் கெட்டவனா, இதுக்கு அவன் என்னை அடிச்சிருக்கலாம் இல்லை.. நீ சொன்னது மாதிரி நான் தான் அவனை கெட்டவனா மாத்தி..”

“ண்ணா.. சாரிண்ணா..” சூர்யா பாய்ந்து வந்து அவனை கட்டி கொள்ள, கம்பன் விறைத்துவிட்டான். தம்பிக்கு அப்படி ஒரு அழுகை. காவ்யா இருவரையும் பார்த்து நிற்க, ஆதிராவும் ஹாலுக்கு வந்துவிட்டாள்.

கம்பன் வீரய்யன் சில நொடி கூட தம்பி அணைப்பில் இல்லை. இருக்க முடியவில்லை அவனால். திமிறி வெளியே வந்துவிட்டவன், எழுந்துவிட்டான்.

“எது.. எதுக்கு இப்போ அழுகை.. நான் தான் தப்பு, என்னால தான் இவன் இப்படி, அதான் இப்போ எனக்கு.. என் இடத்துல அண்ணி நீ இருக்க இல்லை, பார்த்துக்கோ..” என்று வெளியே கிளம்பிவிட்டான்.

பிறப்பால் அண்ணனா இருந்தாலும் இவன்..  கம்பன் வீரய்யன் நல்ல அண்ணனாக இல்லைதானே..? தம்பி கண்ணீர் சுடத்தான் செய்யும்..!

Advertisement