Advertisement

கம்பன் காதல் கொண்டு 23

“இப்போ எங்க என்னை கூட்டிட்டு போற..? எனக்கு கோர்ட் போகணும்டா, ஆர்கியூமன்ட் இருக்கு..” சஞ்சய் கேட்டு கொண்டே வர, கம்பன் பதில் சொல்லாமல் கார் ஓட்டி கொண்டிருந்தான்.

“உன்கிட்ட தான் பேசுறேன், நாம எங்க போறதா இருந்தாலும் மதியத்துக்கு மேல போவோம், அந்த ஆர்கியூமென்ட் மட்டும் முடிச்சிக்குறேன்..” சஞ்சய் மீண்டும் கேட்க, பதில் தான் இல்லை.

“டேய் புரிஞ்சுக்கோடா.. இரண்டு நாளா இந்த கேஸுக்கு பாயிண்ட்ஸ் எடுத்து வச்சிருக்கேன், அந்த எதிர்க்கட்சி லாயரை இன்னைக்கு கிழிச்சு தொங்க விடணும், உனக்கு தெரியுமா எனக்கும் அவருக்கும் ஆகவே ஆகாது, நல்ல சேன்ஸ், போட்டு பொளந்திடுறேன், காரை கோர்ட்டுக்கு விடுடா ப்ளீஸ்..” சஞ்சய் கெஞ்சவே செய்ய, ம்ஹூம் பலன் தான் இல்லை.

“எனக்கு இவ்வளவு தான் பொறுமை, ஒழுங்கா காரை கோர்ட்டுக்கு திருப்பு, நான் இன்னைக்கு சண்டை போட்டே ஆகணும்..” சஞ்சய் கடுப்பாகி பேச,

“சண்டை தானே.. போடலாம் வாங்க..” என்றான் இதற்கு மட்டும் கம்பன்.

“உன் மாடுலேஷனே சரியில்லையே, உண்மையை சொல்லு என்னை எங்க கூட்டிட்டு போய் சொருக பார்க்கிற..?” சஞ்சய் சந்தேகம் கொண்டான்.

“அவ்வளவு தான் வந்துட்டோம்..” கம்பன் ஒரு வீடு கேட்டின் முன் காரை நிறுத்த,

பெரிய கேட்டை பார்த்த சஞ்சய், “யார் வீடு இது..?” என்று கேட்டான்.

“எல்லாம் நமக்கு ரொம்ப தெரிஞ்சவர் வீடு தான்..” கம்பன் சொல்ல, கேட் திறந்தது. வீட்டினுள் முழுக்க முழுக்க இவனின் கார்ட் சர்வீஸ் ஆட்கள். உடன் அடியாட்கள் போன்றும் குவிந்திருந்தனர்.

கம்பன் இறங்கி வீட்டினுள் செல்ல, சஞ்சய் பின் தொடர்ந்தான். அங்கு வீட்டிற்குள் ஒருவர் அமர்ந்திருக்க, அவரின் பின் கொலைவெறியுடன் அவரின் ஆட்கள். அருகில் செல்ல செல்ல அந்த ஆள் யார் என்று கண்டுகொண்டான் சஞ்சய். அவன் கேஸ் பைல் செய்த கட்சியின் பெரிய தலைகளில் இவரும் ஒருவர்.

“இந்த வக்கீல் தானே நம்ம தலைவர் மேல கேஸ் போட்டது.. நம்ம இடத்துக்கே வந்து சிக்கிட்டான், நல்லது, ரொம்ப நல்லது, இவங்களோட சேர்ந்து இவனையும் முடிச்சிடலாம்..”

“இல்லை.. முதல்ல இந்த வக்கீலை தான் முடிக்கிறோம், அப்பறம் தான் மத்தவங்களை..” மற்றவன் சொல்ல,

“இருக்கு,  இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு..” என்றான் இன்னொருவன்.  அந்த மனிதரோ கம்பனையும், சஞ்சய்யையும் அப்படி ஒரு கோபத்துடன் பார்த்திருந்தார்.

“அவுஸ் அரெஸ்ட் பண்ணிட்டியாடா..?” சஞ்சய் அதிர்ந்து போய் கேட்டான். கம்பன் தோள் குலுக்கி சோபவில் அமர்ந்தவன், நின்றிருந்த சஞ்சய்யையும்  கை பிடித்து தன் பக்கம் அமர வைத்தான்.

“விடுடா.. இது ரொம்ப முக்கியம், காலையிலே குஷியா கோர்ட்டுக்கு கிளம்பிட்டிருந்தவன்,  நீ  கூப்பிட்டதும் என்ன எதுன்னு கூட கேட்காம கார்ல ஏறினதுக்கு கிடைச்ச பலனாடா இது..?” சிறு குரலில் காண்டாகி பேசினான்.

“என்ன வேணும்..?” அந்த கட்சியின் பெரிய தலை கேட்டார்.

“பெருசா ஒன்னுமில்லை.. நான் சொல்ற இரண்டு பேர் மட்டும் தான்..” என்று கம்பன் யார் என்று பெயர் சொன்னான்.

“அவங்க எதுக்கு உனக்கு..?” அந்த மனிதர் சந்தேகமாக கேட்டார்.

“வேணும்.. அவ்வளவு தான்..” கம்பன் சொல்ல,

“இனியும் நீங்க நினைக்கிறது நடக்காது, கண்டிப்பா நாங்க தான் ஜெயிக்க போறோம், நாளைக்கு ரிசல்ட், எங்க தலைவர் தான் பதவியேற்க போறார், ஆட்சி ஆள போறார், உங்களால ஒன்னும் பண்ண முடியாது..” என்றார் அவர் திமிராக.

“நான் கேட்டது அந்த இரண்டு பேர் மட்டும் தான், அவங்களை கொடுத்திட்டு நீங்க கிளம்புங்க..” என்றான் கம்பன்.

“முடியாதுடா, நேத்து முளைச்ச காளான் நீ, நீ என்னை தூக்கிட்டு வந்து மிரட்டினா நான் மிரண்டிடுவேனா..? என்னோட அனுபவம் ஐம்பது வருஷம் தம்பி, இதை விட மேலா செஞ்சுட்டு வந்தவன் தான் நான், என்னை எல்லாம் நீ ஒன்னும் பு*ங்கிட முடியாது..” அந்த மனிதர் எழுந்து நின்று ஆவேசமாக பேசினார்.

சஞ்சய் சுதாரித்தான். விஷயம் இன்னதென்று தெரியாவிட்டாலும் கம்பன் தன்னை அழைத்து வந்ததன் காரணம் புரிந்துவிட்டது. “உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா..?” என்றான் சஞ்சய் நிதானமாக.

அந்த மனிதர் என்னவென்று பார்க்க, “உங்களோட சேர்த்து கேஸ் பைல் பண்ண மூணு பேரை விட, உங்க மேல தான் ஸ்ட்ராங் எவிடென்ஸ் இருக்கு, அடுத்த வாரம் கேஸ் இயரிங் இருக்கு,  அந்த எவிடென்ஸ் மட்டும் காட்டினா போதும், நீங்க ஜெயிச்சாலும் MLA பதவியும், அமைச்சர் பதவியும் போயிடும், பைன், ஜெயில்ன்னு ஒரு பக்கம் இருந்தாலும், உங்க தலைவரே உங்களை கட்சி அடிப்படை உறுப்பினர்ல இருந்து கூட தூக்கிடுவார்.. உங்களுக்கு தெரியாத கட்சி சட்டமில்லை..” என்றான்.

“என்ன வக்கீலு பூச்சாண்டி காட்டுறியா..?” அந்த மனிதர் பேச, தன் மொபைல் எடுத்தவன், ஒரு டாகுமெண்ட்ஸ் காட்டினான். அதில் இவரின் மகள், மருமகன் மூலமாக  பணம் அந்த சிங்கப்பூர்  கம்பெனிகளுக்கு சென்றுள்ளது. அதிலும் பல நூறு கோடி. தெளிவான கருப்பு பணத்துக்கான பேப்பர், சாட்சி, வீடியோ ஆதாரமும். அந்த மனிதர் ஆடிபோய்விட்டார்.

அதன் பின் சில நிமிடங்களில் கம்பன் கேட்ட அந்த  இரண்டு ஆட்கள் அவன் வசமாகினர். நிச்சயம் ஆட்சி அமைக்க பாதகம் செய்ய போகின்றனர். அந்த மனிதருக்கு தெரிந்துவிட்டது. உடன் இருந்த அவரின் விசுவாசிகள் இவருக்கு தான் சப்போர்ட் என்பதால்,  கட்சி மேலிடத்துக்கு தெரியாமல் உள்ளுக்குள் அமுக்கிவிட்டனர். கம்பனின் ஆட்கள் அழைத்து வந்தபடி அவரை வழியனுப்பி வைத்தனர்.

“நாம இவங்களை தூக்கினது..  வெளியே.. அந்த கட்சி தலைவருக்கு தெரிய வந்தா..?” சஞ்சய் கேட்டான்.

“ம்ஹூம்.. தெரிய வாய்ப்பில்லை, பக்கத்து வீடு அவர் பினாமி வீடு, அங்க வந்தவரை தான் ஆளுங்களை வச்சு பின் வாசல் வழியா இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம்..” என்றான் கம்பன்.

“இந்த வீடு..?” சஞ்சய் கேட்க,

“நம்ம டீம்ல இருக்கிற அந்த பத்து பேர்ல ஒருத்தர் வீடு..” கம்பன் சொல்லி கொண்டிருக்க, அந்த இருவர் வந்தனர்.

கம்பன் கேட்டிருந்த அந்த கட்சியின் இருவர். அவர்கள் இவனிடம் பேச வர, “உங்ககிட்ட பேச எங்க டீம் வருவாங்க..” கம்பன் சொன்னவன், அவர்களுக்கான வசதியை பார்க்க சொல்லி சஞ்சயுடன் கிளம்பினான்.

“இன்னும் டைம் இருக்கு, கோர்ட் போயிடலாம், கொஞ்சம் சீக்கிரம் போ..” சஞ்சய் நேரம் பார்த்து சொல்ல,

“தேவையில்லை.. கேஸ் அடுத்த வாரத்துக்கு மாத்தியாச்சு..”  என்றான் கம்பன்.

“உன்னை கொல்ல போறேன்டா, எதுக்குடா என் ப்ரொபஷனல்ல தலையிடுற.. யாரை கேட்டு மாத்தின நீ..?” சஞ்சய்க்கு கோவம் வந்துவிட்டது.

“நான் மாத்தலை, உங்க ஆப்போசிட் லாயர் தான்..” கம்பன் சொன்னவன், “என்னை பேசிட்டிங்க இல்லை..” என்றான்.

சஞ்சய் முழித்தவன், “என்.. என்ன.. அப்படியென்ன பேசினேன்.. ஒன்னும்.. ஒன்னுமில்லை..” என்று சமாளிக்க,

“இல்லை என்னை பேசிட்டிங்க.. நான் யார் உங்க ப்ரொபஷன்ல தலையிட கேட்கிறீங்க, அப்படியா நான் செய்வேன்..?” கம்பன் கேட்டான்.

“இப்போ கூட தான் செஞ்ச, என்னை வம்படியா இங்க கூட்டிட்டு வரல..” சஞ்சயும் பேசினான்.

“இதுவும் உங்க வேலை தான்.. ராம்தாஸ் சார்கிட்ட  நீங்க ஒத்துக்கிட்ட வேலை தான்..”

“ஹா.. ஹான்.. தெரியும்.. என்ன இப்போ..?”

“போங்க.. இனி நீங்க யாரோ நான் யாரோ, ஏதோ உங்கிட்ட கொஞ்சம் இம்ப்ரஸ் ஆகிட்டேன் தான், அதுக்காக என்ன வேணாலும் பேசுவீங்களா..? ஏதோ என் காவியத்துக்கு அண்ணனா போயிட்டதால உங்களை இதோட விடுறேன்.. போங்க..” அவன் வீட்டின் முன் காரை நிறுத்தினான்.

“வீரா.. அது..”

“இறங்குங்க.. ஒரு மாதிரி டென்ஷனா இருக்கேன், கொண்டு போய் அந்த கட்சி ஆளுங்ககிட்ட விட்டுட்டு வந்திட போறேன்..” என்றான் கம்பன்.

“எதே.. நீ செஞ்சாலும் செய்வடா.. சரி.. டென்ஷன் குறைஞ்சதும் சொல்லு, பேசலாம்..” சஞ்சய் இறங்கி கொள்ள,

“நோ நீட்..” கம்பன் உர்ரென்று சொல்லி கார் எடுத்து சென்றான்.

நேரே ராம்தாஸ் வீடு சென்றான். அவரிடம் ரிப்போர்ட் செய்ய,  அவர் உடனே ஆக வேண்டிய வேலைகளை பார்த்தவர், கம்பனுக்கு என்னென்ன வேலை என்று பட்டியலிட்டு கொடுத்துவிட்டார்.

“இன்னைக்கு நைட் மீட்டிங்.. நம்ம ஹோட்டல்ல..”

“இல்லை.. வெளியே எங்கேயும் போக  வேண்டாம்..” என்றான் கம்பன்.

“டேய்.. நாம பாதுகாப்பா போய்ட்டு வரலாம், இது கடைசி கட்ட வேலை, நேர்ல பேசினா தான் சரியா வரும்..” ராம்தாஸ் சொல்ல,

“பரவாயில்லை.. ஏதா இருந்தாலும் போன்ல பேசுங்க..” அவன் உறுதியாக நின்றான்.

“வீரா.. நாளைக்கு தான் ரிசல்ட்டே, அதுவும் அவங்களுக்கு சாதகமா தான் ரிசல்ட் வர போகுது,  இப்போ போய் நம்மளை அவன் நெருங்குவானா..?”

“அய்யா.. எனக்கு ஒரு பர்சன்ட் கூட ரிஸ்க் எடுக்க விருப்பமில்லை, அவன் செய்வான், செய்ய மாட்டான், எனக்கு அது வேண்டாம், நாம நம்ம பாதுகாப்புல இருப்போம்..”

“வீரா.. என்னை படுத்தாத.. இப்போ தான் நமக்கு சாதகமா ஏதோ அமைஞ்சிருக்கு, இறங்கி செய்ய வேண்டிய நேரத்துல கை கட்டி உட்கார்ந்திருக்க சொல்றியா..?”

“அய்யா.. வீரா சொல்றது எனக்கு சரியா இருக்கு.. நாம படையோட போனாலும், நம்மளை முடிக்க நினைச்சா முடிச்சுட முடியும், உங்களுக்கு தெரியாது இல்லை..” என்றான் ராம்தாஸ் மகன்.

“இப்போ என்ன மீட்டிங் தானே, நம்ம வீட்ல நான் ஏற்பாடு பண்றேன், வேற எங்கேயும் முடியாது..” கம்பன் வீரய்யன் சொல்ல,

“டேய் அவனுக்கு பயந்துட்டுன்னு என்னை வீட்ல அடங்க சொல்றியா..?” ராம்தாஸ் கொதித்துவிட்டார்.

“இப்படி தான் பெரியவர் கிளம்பி என் அப்பாவையும் கூட்டிட்டு போயிட்டார்..” என்றுவிட்டான் கம்பன் வீரய்யன்.

ராம்தாஸ் கொதித்து போனவர், அவன் ஷர்ட் காலர்  இறுக்கி பிடித்து, “பெரியவர், உன் அப்பா பத்தி பேச நீ ஆள் இல்லைடா,  அவங்க வேற.. உன் அப்பா பக்கத்துல கூட நீ வர முடியாது..” என்றார்.

“நானே என் அப்பாவுக்கு  பிறந்தவன் தான், பக்கத்துல வர என்ன..? இப்போ பேச்சு நீங்க எங்கேயும் போக கூடாதுன்றது தான்..”  என்றான் கம்பன் உள்ளுக்குள் குத்திய வலியை மறைத்து.

“போவேன்டா.. நான் உன்னை பரசு மகன்னு பார்த்து விட்டா நீ ஓவரா பண்ற..?”

“அப்படி தான் பண்ணுவேன், இந்த செகண்டே நீங்க நினைச்சா என்னை அடிச்சு தூக்கி போட்டுட முடியும்ன்னு எனக்கு தெரியும், ஆனாலும் நான் பயப்பட மாட்டேன், என் அப்பாவுக்கு நான் செய்ய நினைக்கிறதை செஞ்சுட்டு தான் போவேன், அதோட நான் வெறும் கம்பன் வீரய்யன் இல்லை, உங்களோட பெர்சனல் கார்ட், நான் சொல்றதை தான் நீங்க கேட்கணும், இது என்னோட முடிவு, நீங்க கேட்டு தான் ஆகணும்..” கம்பன் வீரய்யன் விறைப்பாய் நின்றான்.

“பெரிய கம்பன் வீரய்யன்.. உன் அப்பாவே இல்லன்னா,  நீ ஆடுன ஆட்டத்துக்கு இன்னைக்கு நீ இல்லை.. வந்துட்டான்..” என்றுவிட்டார் ராம்தாஸ்.

“அய்யா.. அய்யா என்ன பண்றீங்க.. போதும்.. விடுங்க..” ராம்தாஸ் மகன் அவர் கையை விடுவிக்க பார்க்க, கம்பன் வீரய்யன் அதே விறைப்பாய் தான்  நின்றிருந்தான். ஆனால் கண்களில் அவ்வளவு வலி, வேதனை, துக்கம். அருகில் பார்த்த ராம்தாஸ் கண்டுகொண்டார்.

Advertisement