Advertisement

கம்பன் காதல் கொண்டு 22

கம்பன் விட்டு விலகி சென்ற பின்னும் காவ்யாவின் நிலை மாறவில்லை. மூடிய கண்களை திறக்கவில்லை. லேசான மூச்சு வாங்கலுடன் அப்படியே படுத்திருந்தவளுக்கு தன் மேலான  கணவனின் பாரமும், வாசமும் இன்னும் மிச்சம் இருப்பதாய் மயக்கம்.

புதிதான உணர்ச்சிகளின் கிளறல்கள். கன்னங்களில் வெட்க சிவப்பு இன்னும் இறங்கவில்லை. எழ தான் நினைக்கிறாள் முடியவில்லை. எங்கோ ஒரு சுக வலி, சோம்பல். நிமிடங்கள் சில சென்ற பின் கணவனின் அரவம் கேட்க, தன் நிலை உணர்ந்து, நகர்ந்து, தலையணையில் தலை வைத்து மறு பக்கம் திரும்பி படுத்து கொண்டாள்.

துடிக்கும் இமைகளின் அசைவுகளை கட்டுப்படுத்த முடியா படபடப்பில் சிலையாய் இருந்தவளின் உச்சியில் மென்முத்தம் வைத்து தள்ளி படுத்தான் கணவன். ஒரு ஆசுவாச மூச்சு பெண்ணிடம். கடந்த சில நிமிட நெருக்கமே அவளை திணற வைத்திருந்தது. எதிர்ப்பாரா உதடுகளின் சங்கமம்.

தன்னை நிதானித்து, சமன் செய்து அவள் தூங்க நெடுநேரம் ஆகிவிட்டது. கணவன் தூங்கிவிட்டானா என்று தெரியவில்லை. பார்க்கவும் அவள் முயலவில்லை.

மறுநாள் காவ்யா எழும் நேரம் கணவன் வழக்கம் போல அறையில் இல்லை. ‘எவ்வளவு லேட்டா தூங்கினாலும் டைமுக்கு எழுந்திடுறார்..’ குளித்து, கீழிறங்கினாள் பெண். அதிசயமாய் ஹாலில் கணவன். மொபைலில் ஏதோ சீரியசாக பேசி கொண்டிருந்தவனை ஆச்சரியமாக பார்த்து சாமி அறை சென்று வந்தாள்.

“சாப்பிடலாமா காவ்யா..?” இந்திராணி வந்தார். காவ்யா திரும்பி கணவனை பார்க்க,  “உன் புருஷன் நேரத்துக்கு சாப்பிட்டுடுவான், காலையிலே எழுந்து அவ்வளவு பயிற்சி எடுக்கிறான் இல்லை, பசிச்சிடும்..” என்றார் இந்திராணி.

“சூர்யா..” காவ்யா கேட்டு அமர,

“அவங்க இன்னும் ரூமை விட்டு வெளியவே வரலை..” என்றார் கொஞ்சம் கவலையாக.

‘நேற்று நடந்தது வைத்து ஏதேனும் சண்டையாக இருக்குமோ..?’ காவ்யா யோசித்தபடி சாப்பிட, சூர்யா வந்தான். முகம் சோர்ந்து இருக்க, இவர்களை பார்த்ததும் லேசாக சிரித்து வந்தமர்ந்தான்.

“டிபன் வைக்கவாடா..?” இந்திராணி கேட்க,

“எடுத்துகிறேன்ம்மா.. நீங்க சாப்பிடுங்க..” என்றவன், அம்மா, அண்ணிக்கு சூடான தோசை வைத்து, தான் சாப்பிட அமர்ந்தான். கண்கள் சிவந்திருக்க, ‘நைட் எல்லாம் தூங்கலையா இவன்..?’   நண்பனை வாடி பார்க்கவும் காவ்யாவிற்கு முகம் சுருங்கிவிட்டது.

“ஆதிரா சாப்பிட வரலையா..?” காவ்யா கேட்க,

“வருவா..” என்றான்.

“சாரிடா..” என்றாள் காவ்யா.

“ஏய்.. நீ ஏன்..? நான் தான் சாரி சொல்லணும் காவ்யா.. அவ.. ஆதிரா இப்படி பேசுவான்னு நானும் எதிர்பார்க்கலை, ஏதோ கொஞ்சம் குழந்தை தனமா நடந்துகிறா, சீக்கிரம் புரிஞ்சுப்பா..” சூர்யா சொல்ல, ஆதிரா வந்தாள்.

கம்பன் போன் பேசி கொண்டே வெளியே செல்ல, அதுவரை ரூமில் காத்திருந்தவள் அதன் பின்னே சாப்பிட வந்தாள். நேற்றைய கம்பனின் கோவத்தில் ஒரு மாதிரி ஆகிவிட்டாள் பெண். இரவெல்லாம் சூர்யாவை நச்சரித்து எடுத்துவிட்டாள்.

“நாம இனி இங்க இருக்க வேணாம், தனியா போயிடுவோம், இல்லை எங்க அப்பா வீட்டுக்கு போயிடுவோம், எங்க அக்கா பேமிலியும் அங்க தானே இருக்காங்க, அந்த சொத்து எல்லாம் எனக்கும், என் அக்காவுக்கும்  தானே, வாங்க அங்கேயே போயிடலாம்.. இங்க  உங்க அண்ணா உங்களை அடிக்க வரார், எனக்கு பிடிக்கலை, நீங்களும் பேசாம இருக்கீங்க, கேட்க மாட்டிங்களா..? என் அப்பாகிட்ட சொல்ல போறேன், அவர் வந்து கேட்கட்டும்..” என்று இரவெல்லாம் இதே பேச்சு தான்.. படுத்திவிட்டாள்.

சூர்யா ஏற்கனவே அண்ணனின் கோவத்தில், மனைவி பேச்சில் சோர்ந்திருந்தவன் மனைவி நச்சுல் கொஞ்சம் வெறுத்து தான் போனான். ஒரு கட்டத்தில் டென்சனாகி,  “என் அண்ணா தானே என்னை அடிக்க வந்தார், எனக்கு ஒன்னுமில்லை, அப்படி எல்லாம் நான் கேட்க மாட்டேன்.. என் வீட்டை விட்டு எங்கேயும் வரவும் மாட்டேன்.. உனக்கு அவ்வளவு பயமா இருந்தா நீ போ.. உன் அப்பா எல்லாம் என் அண்ணனை கேள்வி கேட்க முடியாது, பார்த்துக்கோ..” என்று படுத்துவிட்டான்.

அதன் பின்னும் ஆதிரா இரவெல்லாம்  ஏதோ பேசி, புலம்பி கொண்டு தான் இருந்தாள். இப்போது காலையில் காவ்யா பார்க்கவும், ‘இவளால் தான் எல்லாம்..’ என்று உள்ளுக்குள் பொருமி கொண்டவள், சூர்யா பக்கம் சேர் இழுத்து போட்டு அமர்ந்தாள்.

இந்திராணி உணவு முடித்திருக்க, “காவ்யா இன்னும் ஒரு தோசை..” கேட்க,

“இல்லை.. போதும் ஆன்ட்டி..” என்றாள் காவ்யா.

“உனக்கு ஆதிரா..” இந்திராணி கேட்க,

“முதல்ல அவங்களை கேட்டு தான் என்னை கேட்கிறாங்க, இதுக்கு கூட பெரிய மருமகளா..?” என்று தெளிவாக முணுமுணுத்தாள். இந்திராணி ஆயாசமாக தலையாட்டி ரூம் சென்றுவிட, சூர்யா தளர்ந்து,  சங்கடம் கொண்டு தோழியை பார்த்தான்.

அவன் சங்கட பார்வை காவ்யாவை தான்  அதிகம் சங்கடபடுத்தியது.  என் வயது தானே இவனுக்கு..? ஏன் இவ்வளவு கஷ்டம்..? காவ்யா நிதானித்தாள். அவளின் நண்பன் அவன். நேற்று தான் ஏதோ நடந்துவிட்டது.. இனி எதுவும் வேண்டாம். தெளிவாகி லேசாக  சிரித்தவள், “சின்ன மருமகளே.. இங்க பாருங்க என் பிளேட் காலியா இருக்கு, அதான் அத்தை கேட்டாங்க,  நீங்க இப்போ தானே சாப்பிட ஆரம்பிச்சீங்க..?” என்றாள். சூர்யாவிற்காக ஆதிராவை அனுசரிக்க முடிவெடுத்துவிட்டாள்.

முதன் முதலாக சூர்யாவிற்காக தானே கம்பனையே பார்க்க சென்றாள். அதுவும் அவ்வளவு பிடிக்காத கம்பன் வீரய்யனிடம். இப்போது மட்டும் என்ன மாறிவிட்டது. அதே நட்பு. தோழமை தானே..? சூர்யாவிற்காக பொறுத்து போகலாம். என்ன கேட்கிறாள் அவள் கணவனுக்கு மரியாதை தானே..? போகட்டும்..

ஆதிராவும்  இப்படி ஒரு பொறுமையான பேச்சை காவ்யாவிடம் இருந்து எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவள் திகைத்த முகத்திலே தெரிந்தது. சாப்பிட எடுத்த இட்லி கையிலே இருக்க, விழித்தவளை பார்க்க காவ்யாவிற்கும் கொஞ்சம் சுவாரசியமாக தான் இருந்தது.

“தோசை கொண்டு வரட்டுமா..?” என்று சிரிப்புடன் கேட்டாள்.

“ஆஹ்ன்.. நோ.. தேங்க்ஸ்..” ஆதிரா எடுத்த இட்லியை வேகமாக வாய்க்குள் போட்டு கொண்டாள்.

காவ்யா காலி பிளேட் எடுத்து கொண்டு கிட்சன் செல்ல, பின்னாலே வந்த சூர்யா, “எனக்காக நீ அவகிட்ட இறங்கி போக வேண்டாம் காவ்யா..” என்றான் கண்டிப்புடன்.

“டேய்.. விடுடா..” காவ்யா கை கழுவ,

“நோ காவ்யா.. உன்  மரியாதை முக்கியமில்லையா..? இவ இப்போ ஒரு மாதிரி இருந்தாலும் பின்னாடி புரிஞ்சுப்பா, நீ எனக்காக பார்த்து இவகிட்ட இறங்கி போகாத, அவ பேசுறது தப்பு..” என்றான்.

“சூர்யா.. விடு சொல்றேன் இல்லை, பார்த்துக்கலாம்..” என,

“காவ்யா.. என்னை டென்ஷன் பண்ணாத, எனக்காக பார்த்து நீ பண்றது என்னை ரொம்ப கீழா தான் பீல் பண்ண வைக்குது, புரிஞ்சுக்கோ, நீ எனக்கு பிரண்டா இருந்தாலும், நம்ம வீட்டுக்கு மூத்த மருமக, ப்ளீஸ்.. உன்னோட இடத்துல நீ இரு..” என்றான்.

காவ்யா பதில் இல்லாமல் வெளியே வர, “காவ்யா..” என்று பின்னாலே வந்து அதட்டினான் சூர்யா.

கம்பன் சரியாக உள்ளே வந்தவன், மனைவியை தம்பி அதட்டவும் சட்டென ஒரு கோவம். “என்னடா..?” என்றான் அவன்.

‘போச்சு..’ காவ்யா மானசீகமாக தலையில் கை வைத்து கொள்ள, ஆதிரா மறுபடியுமா என்று அரண்டு எழுந்து நின்றுவிட்டாள்.

“உன்னை தான் கேட்கிறேன்.. எதுக்கு அவளை அதட்டுற..?” கம்பன் வர,

காவ்யா கணவன் முன் நின்றவள், “நானும் அவனும் ஆபிஸ் சம்மந்தமா பேசிட்டு இருக்கோம்.. எங்களுக்குள்ள ஆயிரம் டென்ஸன் இருக்கும்.. நீங்க போங்க..” என்றாள் மனைவியாய். ஆபிஸ் விஷயம் போல கம்பனுக்கு தெரியவில்லை. ஆனால் மனைவியே சொல்லும் போது மேற்கொண்டு என்ன பேச..?

“நீ அவனுக்காக பார்த்து என்கிட்ட ரொம்ப பண்றடி..” கம்பன் அடிக்குரலில் மனைவியை பேசியவன், “நான் கிளம்பறேன்..” என்று கிளம்பிவிட்டான்.

“நாம அப்பறம் பேசலாம்..” நண்பனிடம் சொன்ன காவ்யாவிற்கு நின்றிருந்த ஆதிராவை பார்க்கவும், ஒரு வம்பான சிரிப்பு.

“இங்க பாருங்க ஆதிரா.. நான் இனி  உங்க புருஷருக்கு மரியாதை கொடுத்துடுறேன், அதே போல உங்க புருஷருக்கும் நான் அண்ணி, எனக்கும் அவரை அந்த மரியாதையை  கொடுக்க சொல்லுங்க, அப்புறம் நீங்களும் அந்த ‘தட்’ மரியாதையை ஞாபகமா எனக்கு கொடுத்துடுங்க.. சரியா..” என்றவள், சூர்யாவை பார்த்து, “இனி அண்ணி தான் சொல்லணும்.. காட் இட்..” என்று கெத்தாக முகம் தூக்கி வைத்து சென்றாள்.

சூர்யா சிரித்துவிட, ஆதிரா ஏன் தான் அந்த மரியாதையை கேட்டோம் என்று நொந்து போனாள். இந்திராணி ஆபிஸ் போக கிளம்பி வர, சூர்யா அம்மாவை சென்று விட்டு வந்தான். இன்று காவ்யா, சூர்யா இருவரும் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதாக திட்டம்.

ஆளுக்கொரு டிராப்டிங் டேபிள் ஹாலில் போட்டு வேலை பார்க்க ஆரம்பித்துவிட, ஆதிரா டிவி பார்ப்பது, இவர்களை பார்ப்பது, தூங்குவது என்று பொழுதை தள்ளினாள். மாலை போல மூன்று நண்பர்களும் இவர்களை தேடி கொண்டு வீடு வந்துவிட, காவ்யா வீட்டு ஆளாய் நண்பர்களை உபசரித்தாள்.

ஆதிரா தள்ளி அமர்ந்திருக்க, மூன்று நண்பர்களும் இதற்கு முன் நடந்ததை நினைத்து கொண்டனர். அன்று இதே வீட்டில் காவ்யா விருந்தினராய் வந்த போது,  ஆதிரா அவளை மரியாதை குறைவாய் நடத்தியது அனிச்சையாய் நினைவிற்கு வந்தது. ம்ஹ்ம்.. இன்று அதே வீட்டில் காவ்யா மூத்த மருமகள்.

Advertisement