Advertisement

அதன்படி வாசுதேவன் சொல்ல சொல்ல பாலா அறிக்கை தயார் செய்தான். இந்திராணி அந்த அறிக்கையை அவர்கள் செக்கியூரிட்டி சர்வீஸ் சார்பில்  அபிஷியலாக வெளியிட்டார்.

அதில், “சஞ்சய் பாதுகாப்பு கேட்டதால் மட்டுமே கொடுத்ததாகவும், கம்பனின் மச்சான் சஞ்சய்.. என்ற உறவும் இருப்பதாகவும் சொன்னவர், வேறெந்த காரணமும் இல்லை..” என்று சொன்னார். அதுவும் பரவ ஆரம்பித்திருந்தது.

அந்த கட்சியின் ஒரு ஆள் அவசரப்பட்டு கம்பன் பற்றி கசியவிட்டது அவர்களுக்கே பாதகமாக முடிந்து போனது. “இது நம்ம பிளான்லே இல்லை.. ஆனா நல்லது தான்..” என்றார் ராம்தாஸ்.

எல்லோருக்கும் எல்லாம் தெரிந்துவிட்டதில் சஞ்சய், கம்பன் பாதுகாப்பு பற்றிய பயம் கொஞ்சம் அகன்றது. ராம்தாஸ் மூலம் கமிஷ்னருக்கு லெட்டர் கொடுத்து, வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு கிடைத்தது. பதட்டம் மறைந்து அமைதி நிலவ  ஆரம்பித்தது. இனி எல்லாம் நல்லபடியாக மாறும் என்று நம்பிக்கை வந்தது.

“நான் முதல்ல ரொம்ப பயந்து தான் இதுல இருந்து வெளியே வந்தேன், ஆனா நடக்கிறது பார்த்தா பயம் இல்லை. தைரியமா தான் இருக்கு, நானே சமாளிச்சிருக்கலாம்..” வாசுதேவன் மனைவியிடம் சொன்னார்.

தொடர்ந்த இரண்டு நாட்கள் கேஸ் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்க, வோட்டிங் நாளும்  வந்தது. கேஸ் வோட்டிங் முடித்து என்று ஒத்திவைக்கபட்டது. மக்களுக்கு விஷயம் தெரிந்துவிட்டது, பலன் எப்படி என்று பார்க்க வேண்டும். கம்பனும், சஞ்சயும்  வீடு வருவார்கள் என்று பாலா தகவல் சொன்னான். வீட்டினருக்கு பெருத்த ஆசுவாசம். நிம்மதி.

அன்றய நாள் வாக்களிக்க செல்ல வேண்டும். கம்பன் வீட்டுக்கு வாசுதேவன், சுதாவும் அழைத்து வரப்பட்டிருந்தனர். காவ்யா அம்மாவை அணைத்து கொண்டாள். பேச்சில் தெம்பு வந்தது. வாசுதேவன் அமர்ந்து பொறுமையாக இந்திராணி குடும்பத்தினருக்கு நடந்ததை சொன்னார். வீட்டினருக்கு நல்ல தெளிவு வந்தது. அதே நேரம் ஆதிரா வந்தாள்.

“என்ன வந்திட்ட..? இப்போ பயம் இல்லையா..?” சூர்யா கேட்டுவிட, ஆதிராவிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது. எல்லார் முன்னும் வைத்து கணவன் கேட்டது.. முக்கியமாக காவ்யா முன்.. ஈகோவாக எடுத்து கொண்டாள் ஆதிரா. பதில் சொல்லாமல் ரூம் சென்றுவிட்டாள்.

காவ்யாவிற்கு இதெல்லாம் கவனத்தில் இல்லை. அவளுக்கு  கணவனை பார்க்கும் ஆவல். இத்தனை நாளில்  அவளின் எதிர்பார்ப்பு அவன் மேல் தேடலாக மாறியிருந்தது. தன் உள்ளத்து பரபரப்பை மறைந்து அமர்ந்திருந்தாள்.

முன் மாலை ஆகிவிட்டது “கிளம்பிவிட்டனர்.. இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவர்..”  என்று பாலா தகவல் சொன்னான். இந்திராணி எல்லோருக்கும் டீ கொடுத்தார். சூர்யா, காவ்யா இருவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து பேசியபடி டீ குடித்து கொண்டிருக்க, ஆதிராவும் அவர்களுடன் அமர்ந்தாள்.

வாசுதேவன் சொல்லியிருந்தது பற்றி சூர்யா பேசி கொண்டிருந்தவன், மனைவி வரவும் பேச்சை நிறுத்திவிட்டான். அவனுக்கு இவ்வளவு பெரிய விஷயம் மனைவிக்கு தெரிவதில் விருப்பமில்லை, அவள் மேல் நம்பிக்கை இல்லை.

ஆதிராவிற்கு தன்னை பார்த்து தான் பேச்சை நிறுத்திவிட்டார்கள் என்று கோவம். காவ்யாவை ஒரு மாதிரி பார்க்க, அவள் கவனமே இங்கில்லை. காவ்யாவுக்குள் முழுக்க முழுக்க கம்பன் மட்டுமே. எப்போது வருவான் என்ற ஆர்வம் மட்டுமே.

‘எனக்கு தெரியாம இவளுக்கு என்ன என் புருஷன்கிட்ட ரகசியம்..?’ ஆதிரா கொதிக்கும் டீயை குடித்துவிட, நாக்கு சுட்டுவிட்டது. “ஸ்ஸ்..” என்றாள். காவ்யா புரிந்து உடனே ஐஸ் கட்டி எடுத்து வர, ஆதிரா வாங்கவே இல்லை. கையசைத்து மறுத்தாள்.

சூர்யா மனைவிக்கு தண்ணீர் எடுத்து வந்தவன் இதை பார்த்துவிட்டான். அப்படியென்ன இவளுக்கு திமிர்..? காவ்யா தோள் குலுக்கி திரும்ப அமர்ந்து டீ குடித்தாள். சூர்யா குடிக்காமல் இருக்க, “ஆறிடுச்சா.. வேற போடவடா..?” காவ்யா கவனித்து கேட்க,

“அவர் யாரு உனக்கு..?” ஆதிரா கேட்டாள். காவ்யா, சூர்யா இருவரும் புரியாமல் பார்க்க, “உன்னை தான் கேட்கிறேன், அவர் உனக்கு யாரு..?” என்று ஆதிரா குரல் உயர்த்தி கேட்டாள்.

“என்ன கேட்டுட்டு இருக்க நீ..?” சூர்யா பேச,

“நான் உங்ககிட்ட பேசலை.. நீ சொல்லு.. அவர் உனக்கு யாரு.. எதுக்கு அவரை ‘டா’ போடுற..?” ஆதிரா கேட்க, பெரியவர்கள் வந்துவிட்டனர்.

“ஆதிரா.. காவ்யா என்னோட ப்ரண்ட்..” சூர்யா பல்லை கடித்து பேச,

“அது அப்போ, இப்போ  நீங்க அவளோட கொழுந்தனர், மரியாதை கொடுத்து பேச சொல்லுங்க..” என்றாள் அவள்.

‘இந்த  நேரத்தில் இந்த பிரச்சனை தேவையா..?’ இந்திராணி சின்ன மருமகளை நினைத்து கடுப்பானாலும், பொறுமையாகவே, “அவங்க முதல்ல இருந்தே அப்படி தான், இரண்டு பேருக்கும் ஒரே வயசு ஆதிரா..” என,

“அதுக்காக.. ஒரே வயசுன்னா கொழுந்தனார்க்கு மரியாதை கொடுக்க கூடாதுன்னு ஏதாவது இருக்கா..? இது தான் இந்த வீட்டு பையனுக்கு நீங்க கொடுக்கிற மரியாதையா..? உங்களுக்கு உங்க பெரிய மகன் மட்டும் உசத்தியா..?” என்று இந்திராணி பக்கம் திரும்ப,

“சூர்யா..” என்ற கம்பனின் குரல் அதட்டலாக. மொத்த பேரும் திரும்ப, கம்பன் சஞ்சய்..

காவ்யாவிற்கு கணவனை பார்த்த மகிழ்ச்சி கண்களில் மின்ன, அவனோ தம்பியை பார்த்திருந்தான். முகம் ஒரு மாதிரி கனகனவென தான் இருந்தது. சுதா வேகமாக சென்று மருமகன், மகன் நலம் பார்த்தவர், சஞ்சய் கை பிடித்து கொண்டார்.

இந்திராணி அவர்கள் நலம் பார்த்து ஆசுவாசம் கொள்ள, “உன் வைப் கூட்டிட்டு ரூம் போ சூர்யா..” கம்பன் கோவமாக சொன்னான்.

“ஏன்.. நான் ஏன் போகணும்..? என் புருஷனுக்கு மரியாதை கொடுக்காத அவங்க பொண்டாட்டியை  கேட்காம எங்களை போக சொல்வாரா..?” இந்திராணியை பார்த்து ஆதிரா கேட்க,

“டேய்.. உன்னை தானே சொல்றேன், கூட்டிட்டு போடா..”  என்று சூர்யாவை அப்படி ஒரு கத்தல் அண்ணன்.

“ஆதிரா ப்ளீஸ் பேசாத.. வா ரூம் போலாம்..” சூர்யா அண்ணா கோவத்தில் மனைவி கை பிடித்து கூப்பிட, அவள் திமிறி நின்றவள்,

“நான் உங்களுக்காக தான் பேசிட்டு இருக்கேன், நீங்க இந்த வீட்டுக்கு இன்னொரு மகன், உங்களுக்கான மரியாதையை கொடுக்காமல் டா போட்டு பேசுவாங்களா..? பெரிய மகன், மருமகன்னா  கொம்பு முளைச்சி..”

“என்னடா சொல்லிட்டே இருக்கேன்.. பேச விட்டு வேடிக்கை பார்க்கிறியா..?” கர்ஜனையாக வந்த கம்பன் குரலை தொடர்ந்து அவன் தம்பி மேல் ஏறிக்கொண்டு சென்றுவிட, சூர்யா பயந்தேவிட்டான். ஆதிராவும் நடுங்கி கணவன் கை பிடிக்க, காவ்யா தான் வேகமாக சூர்யா முன் நின்றவள், “என்ன பண்றீங்க..?” என்று சத்தமிட்டாள். கணவன் நெஞ்சின் மீதும் கை வைத்து தடுத்தும் இருந்தாள்.

“என்ன.. என்ன..? எதுக்கு அவன்கிட்ட இப்படி வரீங்க..?”  விட்டிருந்தால் அடித்திருப்பான்.. காவ்யாவிற்கு கணவனின் செயல் சுத்தமாக ஒப்பவில்லை.

“நீ அவனுக்காக பேசாத காவ்யா..” தன் நெஞ்சின் மீதிருந்த அவள் கை எடுத்து தன் பிடிக்குள் வைத்து கம்பன் சொன்னான்.

“நான் பேசாம.. பேசுவேன்..” மனைவி பேச்சில், கம்பன் முகம் இறுக, அவன் கைபிடியில் இருந்த அவளின் கையை இறுக்கமாக பிடித்தான்.

“காவ்யா.. ரிலாக்ஸ், கொஞ்சம் அமைதியா இரு..” சஞ்சய் தங்கையிடம் வந்தான்.

“ண்ணா.. இவங்க இரண்டு பேரும் இன்னைக்கு எங்க லைப்ல வந்தவங்க, இவங்க வந்து சொல்வாங்களா நாங்க எப்படி பேசணும்னு, என்னன்னு.. அண்ட் நீ.. மரியாதை பத்தி தெரியாத நீ எனக்கு கிளாஸ் எடுப்பியா..? நான் உன்னை விட பெரியவ, இந்த வீட்டுக்கு பெரிய மருமக, நீ என்னை வா போ சொல்லி பேசிட்டு, எனக்கு மரியாதை சொல்லி கொடுப்பியா..?” ஆதிரா பார்த்து அழுத்தமாக கேட்டாள் காவ்யா.

“காவ்யா.. பொறுமையா இரும்மா.. இப்போ இந்த பேச்சு  வேணாம்,  சூர்யா நீ உன் பொண்டாட்டியோட ரூம் போ..” இந்திராணி அம்மாவாக சொன்னார். ஆதிரா இந்த முறை அமைதியாக கணவனுடன் ரூம் சென்றுவிட்டாள். கம்பன், காவ்யா தவிர மற்றவர்கள் ஹாலுக்கு சென்றனர்.

கம்பன் பிடித்திருந்த மனைவி கையை விட போக, காவ்யா விடாமல் விரல்கள் கோர்த்து இறுக்கி கொண்டவள், ‘என் கையை விட்டுடுவியா..?’ என்று கணவனை பார்த்தாள். அவன் முகம் திருப்பினான்.

Advertisement