Advertisement

இங்கு கம்பன் தானே ராம்தாஸை வீடு வரை கொண்டுவிட்டு ஹோட்டல் வந்தான். அவர் இருக்கும் நிலையில், இவன் உடன் வருவதை தான் அவர் எதிர்பார்ப்பார். “கேட்டதும் மீட்டிங் அரேஞ்ச் பண்ணிட்ட வீரா..” இவன் தோள் தட்டியவர்,  “செக் நாளைக்கு ஆபிஸ் போயிடும்.. நீ ஈவ்னிங் வந்தா போதும்..” உள்ளே சென்றார்.

அவன் தம்பி பார்ட்டி சாதரணமாகவே நடந்திருக்க வேண்டிய ஒன்று. இவர்களுக்காக தானே இந்தளவு பாதுகாப்பு. பாலா அதற்குள் ஹோட்டலில் எல்லாம் முடித்து வைத்திருக்க, பணம் கட்டி பொருட்களுடன்  கிளம்பினர்.

நேரே ஆபிஸ் வந்தவர்கள் பொருட்களை வைத்து, கார்ட்ஸ் விடைபெற்றனர். பாலா மட்டும் நிற்க, அடுத்த நாள் யாருக்கு யாருடன் டியூட்டி என்று சொல்லி மெசேஜ் அனுப்பி வைத்து, வீடு சென்றான். மணி அதிகாலை மூன்று என்றது. முன்தினம் மாலை ஆறு மணியில் இருந்து இவ்வளவு நேரம் நிமிடம் கூட அமராமல் உடலோடு, மூளைக்கும் வேலை கொடுத்திருந்ததால், படுத்ததும் அப்படி ஒரு தூக்கம்.

தானே தூக்கம் கலையும் வரை நன்றாக தூங்கியே எழுந்தான். அவனுக்கு அந்த தூக்கம் நிச்சயம் வேண்டும். எழுந்ததும் அவன் தளத்திலே உடற்பயிற்சியுடன், ஆயுத பயிற்சியும் முடித்தவன் குளித்து கீழிறங்கினான். மதிய உணவு வேளை அது. இந்திராணி மகன் வரவும் உணவு எடுத்து வைத்தார். தம்பி, தம்பி மனைவி நடமாட்டம் இல்லை. வீட்டில் இல்லை போல.

“மருமக அம்மா வீடு போயிருக்காங்க..” என்றார் இந்திராணி.

“இங்க எல்லாம் ஓகே தானேம்மா..?” மகன் கேட்டான்.

“இப்போதைக்கு..” இந்திராணி மகனுக்கு இன்னும் காய் வைத்தார். ‘சூர்யா அவரசர பட்டுட்டான்னு தோணுது..’ இந்திராணி சொல்ல வந்து நிறுத்தி கொண்டார்.

“இந்த மாசம் அக்கவுண்ட்ஸ் ரெடியா இருக்கும்மா..” என்றான் மகன்.

“நான் நாளைக்கு போய் பார்க்கிறேன்..” இந்திராணி சொல்ல,

“செக் ஒன்னு பிரச்சனை, பசங்களை பேங்குக்கு அனுப்பி என்னன்னு பாருங்க..” என்றான். சரி என்ற இந்திராணியிடம்  தான் அக்கவுண்ட்ஸ் பொறுப்பு. அவன் அப்பா இருந்த போதும், இவன் தலையெடுத்த பின்னும்.

உணவு முடித்தவன் நேரே ராம்தாஸ் வீடு சென்றான். அவர் ஆபிஸ் பக்கம் எல்லாம் அடிக்கடி செல்வதில்லை. அதிக நேரம் வீட்டில் இருந்தபடி தான். இன்று அவரின் அட்டவணைப்படி மாலை ஒரு மீட்டிங், அதற்கு அழைத்து செல்ல வந்திருந்தான்.

இவனின் ஆட்கள் அவரின் வீட்டில் இருபத்தி நான்கு மணி நேரமும் பாதுகாப்பில் இருப்பர். அவரின் மனைவி, பிள்ளைகளுக்கும் தனி தனி கார்ட் உண்டு. ராம்தாஸ்க்கு மட்டும் இவன். அவர் வெளியே செல்ல வேண்டும் என்றால், பங்க்ஷன் போல, கூட்டம் சேரும் இடத்தில் எல்லாம் இவன் அவருடன் தான். அவன் தினப்படி வேலைகள் ஆரம்பித்துவிட, அந்த வாரம் முடிவுக்கு வந்தது.

காவ்யா கேட்டதற்கு கம்பன் மெசேஜ் அனுப்பினான். அவளோ அவனிடம் பேச வேண்டும் என்று கேட்டதை வேண்டுமென்றே மறந்தது போல் இருந்தாள். “இந்த நேரம் ஆபிஸ் வாங்க..” என்ற அவன் மெசேஜ் பார்த்தவள் அந்த நாள் முழுதும் பதில் அனுப்பவில்லை.

வீரா அதை கண்டு கொள்ளவும் இல்லை. அடுத்த நாள், “வெளியே வைச்சு மீட் பண்ணலாம்..” என்று அனுப்பினாள்.

“நோ..” வீரா அனுப்பிவிட,

வந்து தொலையறேன் என்பது போல் ஒரு “ஓகே வரேன்.. மெசேஜ்..”

அவளுக்கு அவனை பார்க்கவே வேண்டாம், அவன் மேல் கசப்புகள் அதிகம். இதுவரை அவனிடம் இருந்து முழுதும் விலகியிருப்பவள் பார்ட்டியில் தானே சென்று பேச காரணம் உண்டு.

அவன் சொன்ன நேரத்திற்கு வீராவின் ஆபிஸ் போக, அவன் இவளை காத்திருக்க எல்லாம் வைக்கவில்லை. உடனே அவன் அறைக்கு அழைத்தான். எடுத்ததும் “சொல்லுங்க என்ன விஷயம்..?” என்றான் அவளை பார்க்காமல் பைல் ஏதோ பார்த்தபடி. அவனுக்கு முடிந்தவரை இவளை பேசி சீக்கிரம் அனுப்பிவிட வேண்டும். குன்றும் மனதினை நிமிர்த்திட வேண்டும். இவள் முன் இருந்தால் முடியாது.

காவ்யாவிற்கு, ‘காபி, டீ ஒன்னும் கொடுக்க மாட்டாரா..?’ என்றிருந்தது.  தலை வலித்தது. மதியம் தூங்கிவிட்டவள், இவனை சந்திக்க நேரம் நெருங்கிவிட்டதால் குளித்து அரக்க பறக்க வந்திருந்தாள். முக்கியமான விஷயம் வேறு. இல்லையென்றால் ‘போய் காபி குடிச்சுட்டு வரேன் இருங்க..’ என்று கிளம்பியிருப்பாள்.

இவள் அமைதியில் நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன், “சொல்லுங்க..” என்றான்.

காவ்யா வேறு வழி இல்லாமல், “இரண்டு விஷயம் கம்பன் சார்..” என்றாள். சீக்கிரமா  சொல்லிட்டு போயிடு.. வீரா வளைந்த உடலை நிமிர்த்தி அமர்ந்தவன், முக்கியமாக எழுதுவது போல குனிந்து கொண்டான்.

“சூர்யாக்கு ஏதோ பிரச்சனை..” என்றாள். வீரா விரல்கள் நின்றுவிட்டன. நெற்றி லேசாக சுருங்கியது, “என்னன்னு பாருங்க ப்ளீஸ்..” என்றாள்.

“அடுத்து..?” வீரா திரும்ப எழுதுவது போல் கேட்க,

‘அடுத்தா..? சொந்த தம்பிக்கு ஏதோ பிரச்சனை சொல்றேன், கண்டுக்காம அடுத்து கேட்டா..?’ காவ்யா வாயை அழுந்த மூடி சில நொடி எடுத்து கொண்டவள், “எனக்கு ஒரு கால் வந்தது.. யாரோ மிரட்டுறாங்க..” என,

“உங்க அப்பா, அண்ணாகிட்ட சொல்லுங்க..” என்றான் இவன்.

“சொன்னேன், அவங்க இது நடக்கிறது தானே, விடுன்னு சொல்லிட்டாங்க..” என்றாள்.

“அவங்க சொல்றது சரி தான்.. உங்க அண்ணா பேமஸ் லாயர், நிறைய முக்கியமான கேஸ் ஹாண்டில் பண்றாங்க, அதுல யாராவது மிரட்டி பார்ப்பாங்க..” என்றான்.

“இல்லை இது ஏதோ எனக்கு தப்பா படுது, என்னோட, அம்மாவோட எல்லா ரொட்டீன் ஆகிட்டிவிட்டி சொல்றாங்க, எங்களை யாரோ ரொம்ப குளோசா வாட்ச் பண்றாங்க, நான் அதை பீல்  பண்ணியிருக்கேன்..” என, வீரா காதோரம் சிவந்து துடித்தது.

“அண்ணா, அப்பா அதை இக்னோர் பண்ணவும் யார்கிட்ட சொல்லலாம்ன்னு தெரியாம இருந்தேன், பங்க்ஷன்ல உங்களை பார்க்கவும் நீங்க ஸ்ட்ரைக் ஆனீங்க, அதான் உங்ககிட்ட..”

“சாரி.. நீங்க கேட்ட இரண்டு விஷயத்திலும் என்னால எதுவும் பண்ண முடியாது..” என்றான்.

முழுதும் கேட்காமல் கூட  இதென்ன..? காவ்யா மூச்சை இழுத்துவிட்டு தன்னை சமன் செய்தவள், “எனக்கு உங்ககிட்ட கேட்டது தப்பு தான், சூர்யாவுக்கு கண்டிப்பா என்னன்னு பாருங்க கம்பன் சார்..” என்றாள்.

அவன் அமைதியாக இருக்க, “சூர்யா எதோ கஷ்டத்துல இருக்கான், என்னால கண்டுபிடிக்க முடியல, ஒர்க்ல கூட ரொம்ப ஸ்லோவா இருக்கான், என்னன்னு விசாரிங்க..” என்றாள் நண்பனுக்காக மீண்டும்.

இருவரும் கட்டிட வடிவமைப்பாளர்கள். நண்பர்கள் ஐவரும் சேர்ந்து தான் கான்ஸ்ட்ரக்ஷ்ன் ஆபிஸ் வைத்திருக்கின்றனர். சூர்யா திருமணம் முடிந்து இந்த ஒரு வாரமாக தான் ஆபிஸ் வருகின்றான்.

பார்ட்டியில் வைத்தே சூர்யாவின் முகம் அவளை  சந்தேகம் கொள்ள வைக்க, இந்த ஒரு வரமாக அவனை கவனித்து, பேச முயற்சி செய்து தோற்று தான் இவனிடம் வந்தாள்.

கம்பன் நிதானித்தான். தன் குன்றலை அடக்கி தள்ளி,  அவளை நேரே பார்த்தவன், “அவனுக்கு பார்த்து செய்ற அளவு நான் இல்லை, அவன் ரொம்ப நல்லவன், மெச்சூர் கூட, கண்டிப்பா அவனை அவனே பார்த்துப்பான்..” என்றான்.

“இருந்தாலும் அண்ணான்னு நீங்க சப்போர்ட் பண்ணலாம் இல்லை, உங்க அப்பா இருந்திருந்தா..”

“காவ்யா.. நீ கிளம்பு..” என்றான் அழுத்தமாக.

“நீங்க ரொம்ப மாறிட்டீங்க கம்பன் சார், காலேஜ் டேஸ் இருந்த மாதிரி நீங்க இல்லை..” என்றாள் ஆதங்கத்துடன்.

“அப்போ முழு  பைத்தியக்காரனா இருந்தேன், இப்போ அரை பைத்தியமா இருக்கேன்..” என்றான் அவன். கிண்டல் செய்கிறானா என்று பார்க்க, மிக உண்மையாக, உணர்ந்து தான் சொல்லியிருந்தான்.

“இல்லை.. நீங்க மாத்தி சொல்றீங்க..” என்றாள் காவ்யா. இப்போ தான் முழு பைத்தியக்காரனா இருக்கேன் சொல்றாளா..? கம்பன் அவளை பார்த்தான். ஆமா என்றது அவள் பார்வை.

உதடுகளில் இளநகை அரும்ப பார்க்க மறைத்துகொண்டவன்,. “கிளம்புங்க..” என்றான்.

காவ்யா எழுந்துவிட்டாள். “அங்கிளுக்கு மகனா நீங்க ரொம்ப ஒர்ஸ்ட்ன்னு  தெரியும், அட்லீஸ்ட் அவர் இல்லாதப்போவாவது சூர்யாவுக்காவது நல்ல அண்ணனா இருந்து அவனை பார்த்துப்பீங்க நினைச்சேன், ஆனா அவன்கிட்ட இருந்து KV கார்ட் சர்வீஸை பிடுங்கின உங்ககிட்ட இருந்து இதை தான் நான் எதிர்பார்த்திருக்கணும்..”

“திரும்ப நீங்க எவ்வளவு மோசம்ன்னு ப்ரூப் பண்ணியிருக்கீங்க, சாரி உங்ககிட்ட உதவி கேட்டதுக்கு, தேங்க்ஸ் நீங்க எங்களுக்கு உதவி பண்ணாததுக்கு..” முகத்துக்கு நேரே அவனை பற்றிய அவளின் எண்ணத்தை சொல்லி கிளம்பியிருந்தாள் பெண்.

Advertisement