Advertisement

கம்பன் காதல் கொண்டு 2

உள்ளே மீட்டிங் நடந்து கொண்டிருக்க, வெளியே பாலாவுடன் நின்றிருந்த வீரா மொபைல் பார்த்தபடி இருந்தான்.  அந்த ஹோட்டலில் உள்ள அத்தனை சிசிடிவி காட்சிகளின் பதிவுகள் அதில் ஓடி கொண்டிருந்தது.

அவனின் கண்கள் அத்தனையும் ஸ்கேன் செய்ய, காதுகள் அக்கம் பக்கம் கேட்கும் சிறு சத்தத்தையும், அசைவுகளையும் நிதானித்து கொண்டிருந்தது. இவன் இருக்கும்  தளத்தில் யாரோ நிதானமாக நடந்து வந்து கொண்டிருந்தனர். அவனுக்கு சில மீட்டர் தொலைவில் அந்த நடை நின்றுவிட, கண்ட்ரோல் அறைக்கு ஆட்கள் வந்திருப்பர். ஹோட்டல் பணியாளர் ஷூ சத்தம்.

மேல் தளத்தில் யாரோ கிளம்புகின்றனர். லக்கேஜ் இழுக்கும் சத்தம். பாலாவை பார்த்து குனிந்து கொண்டான். பாலா புரிந்து சாதாரணமாக நடப்பது போல லிப்ட் பக்கம் சென்றான். மொபைல் பேசுவது போல் கீழிறங்கும் லிப்டை பார்த்தான். சுற்றிலும் கண்ணாடி இருக்கும் லிப்ட்டில் ஒரு கப்பில் உள்ளே இருந்தனர். அந்த லிப்ட் கீழிறங்கி  நின்று, திரும்ப மேலே வருகிறதா என்று கவனித்து வீராவிடம் வந்தான்.

“இந்த காரை கிளம்ப சொல்லு..” என்றான் வீரா மொபைல் பதிவை காட்டி.

பாலா புளூ டூத்தில் பேசி, “அது *** நியூஸ் சேனல் சுந்தரம் சார்  கார்..” என்றான்.

“தெரியும் பார்க்கிங் போக சொல்லு..” வீரா சொல்ல,

“அதுல அவரோட ஆளுங்க இருக்காங்க..” என்றான். அவரின் பாதுகாப்பு ஆட்கள்.

“ஒன்னு காரை விட்டிறங்கி மேல வந்து ஏதாவது ரூம்ல இருக்க சொல்லு,  இல்லை பார்க்கிங் போக சொல்லு, எல்லோரும் பார்க்கிற இடத்துல அவரோட பேர்ல இருக்கிற ரெஜிஸ்டர் காரை நிறுத்தி வைக்க முடியாது..” என்றான். பாலா அதை செய்து முடிக்க, அந்த கார் பார்க்கிங் சென்றது.

பார்ட்டி ஹாலில் இருந்து வீராவிற்கு அழைப்பு வந்தது. ராம்தாஸ், “ட்ரிங்ஸ் வேணும் வீரா..” என்றார்.

“டூ மினிட்ஸ் சார்..” என்று போன் எடுத்து சற்று தள்ளி வந்தான். மற்றவர்கள் ட்ரிங்ஸ் எடுத்திருந்தனர். ராம்தாஸ் இது போல் நேரங்களில் அதிகம் எடுப்பதில்லை. இப்போது எதோ கோவம். டென்ஷனில் கேட்கிறார். வீரா அவரின் பெர்சனல் மருத்துவருக்கு அழைத்து பேசி சம்மதம் சொன்னான்.

ஏதோ காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருக்க அந்த பேச்சுகளை கவனத்தில் எடுக்காமல் திரும்ப வெளியே வந்துவிட்டான். ராம்தாஸ்க்கு அரசியல், ஆட்சி, அதிகார சதுரங்கம் பிடிக்கும். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சி காலத்தில் இவர் உள்ளே இருப்பார். இவருக்கென்று தனிக்கட்சி விருப்பம் கிடையாது. அதிகாரத்தில் மட்டுமே போதை.

இவரிடம் பெரும்பான்மையான பணம் மட்டுமில்ல, ஆட்களும் உண்டு. இவரை பகைத்து கொண்டு யாரும் எதுவும் செய்ய கூடாது என்பதில் திட்டவட்டம். பணம் கொடுத்து முக்கிய அரசு அதிகாரிகள் இருந்து சட்டமன்ற உறுப்பினர் வரை வாங்கி விடுவார். எதிர்ப்பவர்கள், ஏமாற்றுபவர்கள் உயிர் பற்றி துச்சம்.

மிகப்பெரிய பலம் வாய்ந்த, அதிகார வர்க்கத்தினர். ஒரு மாநிலத்தின் இயக்கத்தில் பெரும்பங்கு வகிப்பவர்கள், இது ஒரு கருப்பு உலகம். இதில் தான் எங்கு இருக்க வேண்டும் மிக தெளிவாக முடிவெடுத்தவன் ‘கம்பன் வீரய்யன்..’

அவனுக்கு அவர்களின் KV செக்கியூரிட்டி கார்ட் மட்டுமே வேண்டும். அதற்கு ராம்தாஸ் வேண்டும். அவருக்கு அவன் விசுவாசமாக இருப்பான் அவ்வளவு தான். மற்றபடி அவர் என்ன செய்தாலும், யாரை கொன்றாலும் அவனுக்கு ஒன்றும் கிடையாது. கடந்து விடுவான்.

அடியாள் ஆயிரம் வைத்து உள்ளிருப்பவர்கள் சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபட்டாலும், அங்கு நேர்மையாக நிற்பவன் இவன் ஒருவனே. இவன் தொழில் தர்மத்துக்கு கட்டுப்பட்டவன். இவனுக்கு எந்த தளையும் கிடையாது. வைத்து கொள்ள மாட்டான். யாரிடமும் சிக்கி கொள்ள மாட்டான். எங்கு தான் இருக்க வேண்டும், எங்கு தான் வேண்டாம் என்பதில் அதிக கவனம்.

அவர்களின் பாதுகாப்பு மட்டுமே இவனின் கைகளில். இன்னும் சொல்ல போனால் இங்கு அவன் மட்டுமே பாதுகாப்பு பணியில் இல்லை. உள்ளிருப்பவர்கள் தனி தனியாக ஆட்களை வைத்திருப்பர். ஏன் இந்த ஹோட்டலில் வேலை செய்வது போல். சாலையில், எதிர்பக்க கட்டிடங்களில் எங்கும் ஆட்கள் இருப்பர். யாராக வேண்டுமானாலும் இருப்பர்.

இதோ ஒல்லியாக டிரே தூக்கி கொண்டு செல்லும் ஹோட்டல் பணியாளன் கூட உள்ளே இருக்கும் யாரோ ஒருவரின் ஆள் தான். நோஞ்சான் போல் இருப்பவன், எதாவது ஒன்று என்றால் மின்னல் போல் எதிராளியை சாய்த்து விடுவான். கண்களின் கூர்மை அவனை காட்டி கொடுக்கிறது. வீராவின் பார்வையில் இது படுகிறது. ஆனால் கண்டு கொள்ள மாட்டான்.

அவன் பாதுகாப்பு பணியில் இருக்கும் நேரம் எதுவும் நடந்துவிட கூடாது. இவர்கள் யாரும் உள்ளே நுழைய கூடாது. அந்தளவு இவன் பாதுகாப்பு இருக்க வேண்டும். அப்போது தான் இவன் செக்கியூரிட்டிக்கு மதிப்பு, மரியாதை. இவன் தொழிலில் இவன் ராஜா.. இவன் மட்டுமே..!

“சார்..” பாலா அழைத்து ஏதோ சொல்ல, அந்த தளத்தில் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தவன் நின்று என்னவென கேட்டான். “ஜெனரல் மேனேஜர் வீட்டுக்கு கிளம்ப கேட்கிறார்..” என்றான்.

“நோ.. இங்கேயே இருக்க சொல்லு, நைட் ஸ்டேக்கு பேமெண்ட் அவரோட, மத்த ஸ்டாப்க்கும் பேசிடு..” என்றான். பாலா பேச செல்ல, இவன் திரும்ப நடந்தான். காவ்யா அறைக்கருகில் வர ஏதோ சத்தம். அவதானித்தான். போன் பேசி கொண்டிருக்கிறாள். திரும்ப நடந்தான். பாலா பேசி வந்தான்.

டீ வந்தது. காவ்யா அறையில் இன்னும் பேச்சு கேட்க, “வாசுதேவன் சார்  பொண்ணுக்கு கேட்டு கொடுக்க சொல்லு..” பாலாவிற்கு சொல்லி அவன் டீ எடுத்து கொண்டான்.

பாலா ரூம் சர்வீஸுக்கு அழைத்து கேட்க, அவள் வேண்டும் என்றவள், போன் பேசியபடி கதவை திறந்தாள். “தேங்க்ஸ்..” சிரித்தபடி நன்றி சொன்னவள், கதவை மூடி கொண்டாள்.

மேலும் நேரம் சென்று ஒரு வழியாக மீட்டிங்கும் முடிவுக்கு வந்தது. வீரா பார்ட்டி ஹாலுக்குள் சென்றான். கார்களை ரெடியாக வைக்க சொல்லி புளூ டூத் மூலம் ஆர்டர் கொடுக்க பட்டது. ஒவ்வொருவராக கிளம்பினர். எல்லோரும்  ஜாக்கிரதையாக ஹோட்டலை விட்டு வெளியேறும் வரை கவனித்து பார்ட்டி ஹால் வந்தான்.

வாசுதேவன், ராம்தாஸ், இன்னும் இருவர்  இருந்தனர். வாசுதேவன் இவன் வரவும் மகளை கேட்டார்.  “வாசுதேவன் சார் பொண்ணை ரூம்லே ரெடியா இருக்க சொல்லுங்க..” வீரா புளூ டூத்தில் சொன்னான்.

கண்ட்ரோல் ரூமில் இருந்தவர்கள், அவளின் ரூம் சர்வீஸுக்கு அழைத்து, “கிளம்ப வேண்டும், தயாராக இருங்கள்..” என்றனர்.

காவ்யா அப்போது தான் தூங்க ஆரம்பித்தவள், போன் வரவும் தூங்க முடியா எரிச்சலில் ‘வீட்டுக்கு போயிடலாம், இங்க தூங்க முடியாது..’ வெளியே சத்தம் அடங்கவும் எல்லாம் கிளம்பியிருப்பார்கள் என்று நேரே அப்பாவை தேடி கொண்டு பார்ட்டி ஹால் கதவை திறந்து உள்ளே நுழைந்துவிட்டாள்.

“ஸ்டே அவுட்..” வீரா பட்டென சொன்னான். காவ்யா முகம் சுருங்கியது. வீராவை ஒரு பார்வை பார்த்து வெளியே சென்றாள்.

“நீங்க கிளம்புங்க..” ராம்தாஸ் சொல்ல, வாசுதேவன் வெளியே வந்தார்.

அவருக்கு பின்னால் வந்த வீரா, “இவங்களை ஏன் உள்ள விட்ட..?” என்று காவ்யாவை கை காட்டி பாலாவை வறுத்தான்.

காவ்யாவிற்கு கோவம் வந்தது நிச்சயம். அப்பாவை பார்க்க அவரோ, “வீரா.. பார்ப்போம்..” என்று அவனுக்கு கை கொடுத்து மகள் கை பிடித்து நடந்தார்.

“நான் கண்ட்ரோல் ரூம் போய்ட்டு வரதுக்குள்ள மேம் உள்ள வந்துட்டாங்க சார்..” பாலா விளக்கம் கொடுத்து கொண்டிருக்க, காவ்யா திரும்பி கம்பனிடம் தன் கோவத்தை முகத்தில் காட்டி சென்றாள். அவன் இவளை பார்த்தால் தானே..? அதுவும் பெண்ணுக்கு தாங்கவில்லை.

“சூர்யா அண்ணான்னு பார்த்தா ரொம்ப பண்றார்..” அப்பாவிடம் காரில் பொரிந்தாள் மகள்.

“காவ்யா..” வாசுதேவன் ட்ரைவரை கண் காட்டி எச்சரித்தார். வாய் மூடி கொண்டாள். வீடு வர, “வீரா அவர் வேலையை செய்றார் காவ்யா, அதோட அங்க ட்ரிங்ஸ் வேற..” என்று சொல்லி வாசுதேவன் ரூம் சென்றுவிட்டார். அவர் எப்போதும் எடுப்பதில்லை. அதனாலே மகளை தன்னுடன் வைத்து அழைத்து வந்தார்.

Advertisement