Advertisement

கம்பன் தன்னை சமன் செய்ய தியானத்திற்கு அமர்ந்தான். அவனுக்குள்ளும் கொஞ்சம் படபடப்பு. அவனின் அப்பாவிற்காக முதன் முதலாக ஒன்று செய்ய போகிறான்.. இதில் பெரிதான பலன் இல்லை. அவன் அப்பா இதை எல்லாம் விரும்ப கூட மாட்டார். ஆனால் இவன் செய்ய நினைக்கிறான்.. அவ்வளவு தான்.. என்ன இருந்தாலும் அந்த அடங்கா திமிர் கொண்ட கம்பன் தானே இவன்.. பதிலுக்கு பதில் செய்யாமல் எப்படி ஓய்வான்..?

தியானம் முடித்து குளித்து கிளம்பினான். காவ்யா இன்னும் தூக்கத்தில் இருக்க, அவள் அருகில் சென்றான். அவளை தொட ஒரு உணர்வு. இன்றய நாளிற்கான முக்கியத்துவம் வேறு.. ஒற்றை விரல் நீட்டி மிக மெலிதாக அவள் கன்னம் வருடியவன், தன் இதழ்களால் பட்டும் படாமல் அவள் உச்சியில் ஒரு முத்தம் வைத்து வெளியே வந்தான்.

இந்திராணி கிச்சனில் இருந்தவர் மகன் வரவும் உணவு வைத்தார். இவன் நேரே அவன் அப்பா புகைப்படம் வைத்திருக்கும் பக்க செல்ல, இந்திராணி புருவம் சுருங்கியது. எப்போதும் இப்படி அவன் சென்றதில்லை.. இன்று என்ன..? அம்மாவிற்கு உள்ளம் கருக்கென்றது.

அங்கு மகனோ அப்பா படம் முன் நின்று, “நான் பண்ற வேலை உங்களுக்கு பிடிக்காதுன்னு தெரியும்.. ஆனாலும் நான் செய்வேன்.. இதோட கடைசி தான்.. இனி இப்படி பண்ண மாட்டேன்.. பார்த்துக்கோங்க..”  என்று மட்டும் சொன்னவன், சாப்பிட வந்துவிட்டான்.

அம்மா உணவு வைக்க சாப்பிட்டவன், “நான் வரேன்ம்மா.. இங்க வீட்ல எல்லாம் பார்த்துக்கோங்க..” என்று சொல்லி கிளம்பினான்.

‘வீட்ல பார்த்துக்கணுமா..? என்ன சொல்றான் இவன்..?’ என்ற இந்திராணியின் கேள்விக்கு பதில் சிறிது நேரத்தில் கிடைத்தது. ஆபிஸ் கிளம்பிய அவரை கார்ட்ஸ் கேட்டிலே தடுத்து உள்ளே அனுப்பி வைத்தனர்.

‘நான் போக கூடாதா..? யார் சொன்னா..? என்ன நடக்குது..?’ இந்திராணி டென்ஷன் ஆக, அவர்கள் வீட்டின் பெரியவர் போன் செய்து, நியூஸ் பார்க்க சொன்னார். ‘என்ன நியூஸ்..?’ என்று இந்திராணி வேகமாக டிவி போட, சூர்யாவும் கையில் மொபைலுடன் அம்மாவிடம் வந்தான்.

காவ்யா உடல் சோர்வில் தாமதாக எழ, அவளின் மொபைலுக்கு அத்தனை கால்ஸ். வீடும் பேச்சு சத்தத்துடன் பரபரப்பாக இருந்தது. காவ்யா கணவனை தேட, ஆளில்லை..  ரோஹித் அனுப்பியிருந்த லிங்க் ஓபன் செய்து பார்க்க, சஞ்சய்.

அத்தனை நியூஸ் சேனலிலும் அவன் தான் இருந்தான். ஏதேதோ பேசி கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் ஜுனியர் லாயர்ஸ் மட்டுமில்லை, பாலாவும் இருந்தான். உடனே காவ்யா கண்கள் கணவனை தேட, அவன் கார் பின்னால் இருக்க, உள்ளே இருப்பான் புரிந்தது. அதன் பின்னே காவ்யா விஷயம் என்னவென்று பார்த்தாள்.

ஒரு முக்கியமான கட்சியின் பெரிய தலைகள் மீது சஞ்சய் வழக்கு பதிவு செய்திருப்பதாக செய்தி.  கருப்பு பணத்தில் சிங்கப்பூரில் நால்வரும் சேர்ந்து தொழில் தொடங்கியிருக்கின்றனர். பல ஆயிரம் கோடி. ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகியிருக்க, பினாமி பெயரில் தொழில்கள்.. ஆமாம்.. தொழில்கள் தான்.. ஸ்டார் ஹோட்டல்கள், ஐடி கம்பெனி, கிரானைட் ஏற்றுமதி என்று பல பல இருந்தது.

இவர்கள் நால்வர் தான் அதன் முதலாளிகள், இவர்கள் முதல் போட்ட பணம்.. கருப்பு பணம் தான் என்பதற்கான ஆதாரம் இருப்பதாக சொல்லி கொண்டிருந்தான் சஞ்சய். பத்திரிகையாளர்கள் அதிர்ந்து, “அந்த கட்சி தான் அடுத்து ஆட்சிக்கு வர போறதா எல்லாம் சொல்லும் போது, நீங்க அந்த கட்சியோட பெரிய தலைங்க மேல இப்படிப்பட்ட குற்றசாட்டை வைக்கிறீங்க..?” என்று கேட்டனர்.

சஞ்சய் நிதானமாக, “ஆதாரம் வைச்சு தானே சொல்றோம், அவங்க இல்லைன்னு நிரூபிக்கட்டும், அவ்வளவு தான்..” என்றான்.

“இன்னும் இரண்டு நாள்ல வோட்டிங் இருக்கும் போது நீங்க இதை பண்றது அவங்க ஆட்சிக்கு வர கூடாதுங்கிற எண்ணத்தினாலவா..?” இன்னொரு பத்திரிகையாளர் கேட்டார்.

எதிர்பார்த்திருந்த சஞ்சய் மிக நிதானமாகவே, “நான் ஒரு லீடிங் லாயர்.. மக்களோட கருப்பு பணத்துல ஒரு மிக பெரிய முறைகேடு நடக்கும் போது அதை வெளி உலகத்துக்கு கொண்டு வர வேண்டியது என்னோட கடமை, அதை தான் நான் செய்றேன், இதுக்கு அரசியல் சாயம்  பூச வேண்டாம்ன்னு கேட்டுக்கிறேன், நானும் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை..” என்றான்.

பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து கேள்வி கேட்க, சஞ்சய்யின் வாட்ச் மெல்லிய அதிர்வு கொடுத்தது. உடனே அவன்.. “இது ஒரு ஸ்பெஷல் கேஸா ஜட்ஜ் முன்னாடி பெர்மிஷன் வாங்கி கேஸ் பைல் பண்ணியிருக்கோம்.. அடுத்து வர அப்டேட்ஸ் என்னோட ஜுனியர்ஸ் கொடுப்பாங்க.. நன்றி..” என்று கிளம்பிவிட்டான்.

நியூஸும் முடிந்தது. காவ்யா குளித்து கீழிறங்கினாள். இந்திராணி பதட்டத்துடன் அமர்ந்திருந்தவர், காவ்யா வரவும், ” உன் புருஷன் ஏன்  இப்படி பன்றான்..? அவனை யாரு இதுல தலை கொடுக்க சொன்னது..? அந்த கட்சி.. நான் என்ன செய்வேன்..” என்று கலங்கிய குரலில் ஆற்றாமையுடன் பேச, உள்ளே வேறு  எதோ விஷயம் என்று புரிந்த காவ்யா அங்கிருந்த சூர்யாவை பார்க்க, அவனும் கலக்கத்துடன் தான் நின்றிருந்தான்.

“முன்ன இப்படி தான் அந்த கட்சி ஆட்சிக்கு வர கூடாதுன்னு பெரியவர் பண்ண வேலை இவன் அப்பா உயிரை வாங்கிட்டு போயிடுச்சு, இப்போ இவன் எந்திரிச்சுட்டு இருக்கான்.. என்ன இவன் அவங்க அப்பாக்காக பழி வாங்க நினைக்கிறானா..? அவர் மேல இவனுக்கு அவ்வளவு பாசமா..? இவன் திருந்தவே இல்லையா..? நான் கூட ஏதோ பொறுப்பு வந்து அவன் அப்பா தொழில் எடுத்து செய்றான் நினைச்சா, இதை மனசுல வைச்சு தான் உள்ள வந்திருக்கான், திரும்ப ராம்தாஸ் சார்கிட்ட சேர்ந்திருக்கான், அவன் மாறவே மாட்டான்னு காமிச்சுட்டான் இல்லை..” என்று கோவமாக, புலம்பலாக பேசி கொண்டிருக்க, காவ்யாவிற்கு இப்போது ஓரளவு புரிதல் வந்திருந்தது.

“திரும்ப அந்த கட்சி ஆளுங்க அவன் அப்பாவை போல இவனை எதாவது செஞ்சா.. கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் தானே ஆகியிருக்கு,  அதுக்குள்ள என்னென்ன தூக்கி தலையில போட்டுட்டு இருக்கான், ஐயோ.. நான் என்ன பண்ணுவேன்.. இவனோட என்னால முடியலயே..? சஞ்சய் வேற இதுல.. உங்க அம்மாவும் பயப்படுறாங்க, இவங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை..?” இந்திராணி பேச, காவ்யா அவருக்கு தண்ணீர் கொடுத்தபடி, அம்மாவிற்கு அழைத்தாள்.

சுதாவும் பயத்துடன் தான் பேசினார். வாசுதேவன் அவரை ஓரளவு சமாளித்திருந்தாலும் அச்சம் தானே. மிகப்பெரிய பலம் கொண்ட கட்சி. இந்த முறை ஆட்சிக்கு வர உறுதியான கட்சி மீது இப்படி என்றால்..?  “நாங்க நம்ம வீட்லயே இல்லை காவ்யா.. மாப்பிள்ளை சொன்னார்ன்னு இங்க எதோ வேற வீட்ல இருக்கோம், அங்க நம்ம வீட்டை சுத்தி அவ்வளவு கட்சி ஆளுங்க, நியூஸ்ல காட்டுறாங்க பாரு..” என்றார் சுதா.

சஞ்சய் வீட்டை சுற்றி அந்த கட்சி ஆட்கள் கல் எடுத்து அடித்து, கோஷம் எழுப்பி, வீட்டின் உள்ளே குதிக்க முயன்றபடி.. போலீஸ் அவர்களை தடுக்க பெரிய கலவரமாக இருந்தது.

காவ்யாவின் நண்பர்களும் வீடு தேடி கொண்டு வந்துவிட்டனர். சுற்றி கார்ட்ஸ் அவ்வளவு இருக்க, உள்ளே விட மறுத்தனர். சூர்யா சென்று தான் நண்பர்களை உள்ளே அழைத்து வர வேண்டியிருந்தது.

ஆதிரா நடப்பது எல்லாம் பார்த்து, பயந்து போனவள், “நான் இங்க இருக்க மாட்டேன், என் அம்மா வீட்டுக்கு போறேன்..” என்று நின்றாள். சூர்யா சமாதானம் செய்ய பார்க்க,  “நான் மட்டுமில்லை, நீங்களும் தான்.. கிளம்புங்க.. கிளம்புங்க.. போலாம்..” என்று அவனை படுத்திவிட்டாள்.

சூர்யா இவளை சமாளிக்க முடியாது என்று புரிந்து கொண்டவன், கார்ட்ஸிடம் கேட்டு உடன் அவர்கள் வர, இவளை அழைத்து சென்று அவள் அம்மா வீட்டில் விட்டவன், ஆதிரா மறுப்பை கண்டு கொள்ளாமல் தான் மட்டும் வீடு திரும்பிவிட்டான். அம்மா, அண்ணிக்கு துணையாக இருந்தான்.

இந்திராணி போன் எடுத்து பெரிய மகனுக்கு அழைத்து கொண்டே, “இதுக்கு தான் காலையில கிளம்பும் போது அவன் அப்பா போட்டோகிட்ட போனானா..? என்கிட்ட வீட்ல பார்த்துக்கோங்க சொன்னானா..? எல்லாம் இவன் இஷ்டமேவா..? மாறவே இல்லையா இவன்..? இது வேற ஸ்விட்ச் ஆப், ஸ்விட்ச் ஆப்ன்னே..” என்று போனை டென்சனாக தூக்கி போட்டார்.

நேரம் ஆக ஆக  காவ்யாவிற்குள்ளும் கொஞ்சம் டென்சன் தான். சாதனா வேறு போன் செய்து கேட்டு கொண்டே இருந்தாள். அந்த பக்கம் சுதாவும்.

அன்றய நாள் முழுதும் சஞ்சய், கம்பன் இருவரும் போனை அணைத்து வைத்திருந்தனர். கார்ட் ஒருவர் போன் செய்து இருவரின் பத்திரத்தை உறுதி செய்து கொண்டே இருந்தார். வாசுதேவன் முன்பு பயந்ததுக்கு ஆப்போஸிட்டாக இப்போது தைரியமாக இருந்தார். இரு வீட்டினருக்கும் தைரியம் கொடுத்தார்.

அன்று மாலை போல தான் கம்பன் வீட்டிற்கு அழைத்தான். இந்திராணி போன் எடுத்து அழுது, கோவமாக பேசி, இறுதியில் திட்டி தான் காவ்யாவிடம் கொடுத்தார்.

“அங்க எல்லாம் ஓகே தானே.. நீ ஓகே தானே..?” என்றான் கம்பன். காவ்யா அமைதியாக இருக்க, “உன் அண்ணா ரொம்ப பாதுகாப்பா இருப்பாங்க, பயப்பட வேண்டாம்..” என்றான்.

“என் புருஷனோட பாதுகாப்பு..” என்றாள் காவ்யா பட்டென.

‘ஆஹ்ன்..’ கம்பன் அந்த பக்கம் நின்றுவிட்டான்.

“ம்ம்.. சொல்லுங்க..” என காவ்யா கேட்க,

“காவியம் இருக்கிற வரை கம்பன் இருப்பான்..” என்றான் அவன்.

“அப்போ காவ்யா இல்லா..”

“கம்பன் இருக்கிற வரை காவியமும் இருப்பாங்க..” என்று வைத்துவிட்டான். காவ்யா முகத்தில் அதுவரை இருந்த டென்ஷன் மறைந்து, ஒரு புன்னகை.

என்னமோ இந்த நேரம் அவனை நேரில் பார்க்க தோன்றியது. முதல் முறை இப்படி தோன்றவும் செய்தது. ஆரம்பிக்கும் வரை தானே எல்லாம்..!

எதற்கும் தொடக்கம் வேண்டுமல்லவா..?

இருப்பது ஒரு மனது..

இதுவரை அது எனது..

என்னைவிட்டு மெதுவாய்

அது போக கண்டேனே..!!!

Advertisement