Advertisement

கம்பன் காதல் கொண்டு 19

“அதாவது அடங்காத காளையை கோவில் காளையா நேந்து விடுறது போல உங்களை காதல் காளையா எனக்கு நேந்து விட்டராக்கும்..” என்றாள் மனைவி. கம்பன் நிமிர்ந்து மனைவி முகம் பார்த்தான்.

அவள் நிதானமாக, பொறுமையாக இருந்தாள். முகத்திலும் எந்த விதமான ஒவ்வாத கேலி, கிண்டல் பாவனை இல்லை. மண்டியிட்டு அமர்ந்திருந்தவள் அப்படியே கீழே சம்மணமிட்டு அமர்ந்தாள்.

“டிசைனர் டிரஸ்.. ஸ்டோன்ஸ் குத்துது..” என்றாள் இயல்பாக. விருந்துக்கான  உடையில் இருந்தாள்

‘நான் காதல் காளையா இவளுக்கு..?’ அவள் வார்த்தைகள் புன்னைகையை கொடுத்த நேரம், அவள் இயல்பில் கொஞ்சம் சந்தேகமும். “உனக்கு.. நான்.. நான் சொன்னது புரிஞ்சுதா..?” என்றான் கம்பன்.

“நல்லா புரிஞ்சது..” என்றாள் காவ்யா. அதற்கு மேல் அது பற்றி பேச இவனுக்கு இஷ்டம் இல்லை. எப்போதுமே இல்லை.

இறுக்கி பிடிப்பதாக ஷர்ட்டின் முதல் பட்டனை அவிழ்த்தான். அது இறுக்கி பிடிக்கவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு விடுதலை வேண்டும்.

“என்கிட்ட ஏன் உங்களுக்கு இவ்வளவு சங்கடம், தவிப்பு..?” காவ்யா கேட்க,

“உனக்கு என் மேல அந்தளவு நல்ல ஒப்பீனியன் இல்லைன்னு தெரியும்..” என்ற கம்பன், இது பற்றி மேலும் பேசாத என்று தன் பார்வையால் மனைவியிடம் சொன்னான்.

காவ்யாவிற்கு அவன் கண்களின் பாஷை புரியும் அளவு அவனை நெருங்காததால், “அப்புறம் எப்படி என்கிட்ட கேட்டு விடாம கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க..?” என்றாள்.

“உன்கிட்ட கேட்டு தான் பண்ணிக்கிட்டேன், இல்லங்கலை.. அதுக்காக இதையே திரும்ப  திரும்ப சொல்லாத..” என்றான்.

“இதுல கூட ஈகோவா..?” காவ்யா புருவம் தூக்கினாள்.

“ஆமா.. நான் உன்கிட்ட கேட்டேன் தான்,  எனக்கு வாழ்க்கை கொடு, பிடிப்பு கொடு, காரணம் கொடுன்னு, ஆனா நீ அதை சொல்லாத..” என்றான்.

“நீங்க சொல்லலாம், நான் சொன்னா என்ன..? எனக்கு உண்மைக்கும் புரியல..” காவ்யா இரு கால்களையும் சேர்த்து பிடித்து அமர்ந்தாள்.

“கால் வலிக்குதா..? ஸ்ட்ரைன் பண்ண வேண்டாம், மேல வா..” என்றான் கணவன்.

“நின்னது கால் வலிக்குது தான், சாய்ஞ்சு உட்காரணும்.. கொஞ்சம் தள்ளுங்க..” என்றவள் கட்டிலில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்தவள், “ஹப்பா.. செம ரிலீப்..” என்றாள்.

“எதாவது குடிக்கிறியா..?” கம்பன் கேட்க,

“ஆன்ட்டி ரூமுக்கு வெளியே பிளாஸ்க்ல பால் வைக்கிறேன், ரிப்ரெஷ் பண்ணிட்டு வந்து எடுத்துக்கோ சொன்னாங்க..” என்றாள் தகவலாக.

கம்பன் எழுந்து சென்று எடுத்து கதவடைத்து வந்தவன், “ரிப்ரெஷ் பண்ணு.. எழு..” என்றான் மனைவியிடம்.

“இல்லை.. இப்படியே கொடுங்க ப்ளீஸ்..” காவ்யா கண்களை சுருக்கி சொல்ல, அவளின் சோர்வு புரிந்தவன்,

“நீ குடி, நான் போய் ரிப்ரெஷ் பண்ணிட்டு வரேன்..” என்றான்.

“இல்லை.. நீங்களும் வாங்க.. சேர்ந்தே குடிக்கலாம்..” என்றாள் மனைவி. நின்று ஒரு நொடி மனைவியை பார்த்து சென்றான்.

உடை மாற்றி, முகம் கழுவி டிராக்கில் வந்தவன், அவள் பக்கத்தில் பாலுடன் அமர்ந்தான். பேச்சின்றி இளம் சூட்டில் உள்ள பாதம் பாலை இருவரும் குடித்தனர். காலி கப்பை பக்கத்திலே வைத்து, கட்டிலுக்கு தலை சாய்த்து கொண்டான் கம்பன்.

காவ்யா கண்கள் கணவன் பக்கம் சென்றது. முகம் கழுவியதில் முன் உச்சி முடி ஈரத்துடன் நெற்றியில் அலைந்து கொண்டிருக்க, அதற்கு இணையாக கண் இமைகளும்.

“என்னை பார்க்காத.. எனக்கு அன் கம்பர்டிபிளா இருக்கு..” என்றான் கண்களை மூடியபடி.

“நீங்க என்னை இப்படி பார்க்கணும், நானாவது செய்றேன்னு சந்தோஷபடுங்க..” என்றாள் காவ்யா கிண்டலாக.

“நான் உன்னை போதும் போதுங்கிற அளவு பார்த்தாச்சு..” கம்பன் மூச்சு இழுத்துவிட்டு சொன்னான்.

“சோ.. இனி பார்க்க மாட்டிங்களா..?” காவ்யா அவன் பக்கம் திரும்பி அமர்ந்தாள். அதில் கொஞ்சம் அவனுக்கு  அருகில் அவள். மனைவியின் வாசம் வெகு அருகில்.

கம்பனின் நெஞ்சு ஏறி இறங்க, “பார்க்கணும் சொல்றியா.. பார்த்தா தாங்குவியா..?” என்றான்.

“பார்த்தா எல்லாம் தாங்குவேன்ன்ன்ன்..” மனைவி  ராகமாக சொன்னாள்.

‘டபுள் மீனிங்ல ராகம் இழுக்குறா..’ கம்பன் உதடுகள் அடக்க முடியாமல் விரிந்தது.

காவ்யாவும் அடக்கப்பட்ட சிரிப்புடன் கணவனை பார்த்திருந்தவள், தயங்காமல் அவன் கை எடுத்து தன்னுடன் கோர்த்து கொண்டாள். கம்பனின் விரல்கள் இறுக்கம் கொண்டு இளகியது. உள்ளங்கை மிதமான சூட்டில் இருக்க, கணவன் நார்மலாகிவிட்டான் என்று புரிந்தது. அவனுக்கே தெரியாமல் அவனை கண்டுகொள்ள மனைவிக்கான வழி..

“என்ன நினைக்கிற..?” கம்பன் கேட்டான்.

“என்ன நினைக்கட்டும் நான்..?” காவ்யா கேட்க, கம்பன் அமைதியாகிவிட்டான்.

“உங்களுக்கு பாஸ்ட் பத்தி பேச பிடிக்கலை, ஆனா நான் என்ன நினைக்கிறேன் தெரியணும், அது எப்படி முடியும்..?” என்றாள் காவ்யா தெளிவாக.

“நீ எப்படி என்னை புரிஞ்சுக்கிற..?” கம்பன் கொஞ்சம் ஆச்சரியத்துடன்  மனைவியை பார்த்தான்.

“இப்படி தான்..” என்று கோர்த்திருத்த கைகளை காட்டியவள், “உங்களுக்கு எப்போ என்கிட்ட எல்லாம் சொல்ல முடியுதோ அப்போ..”

“நான் எப்போவும் இனி அது பத்தி  பேச மாட்டேன்.. அதான் என்னன்னு தெரிஞ்சிருச்சு இல்லை, இது போதும்.. விடு..” என்றான் கம்பன் இடையிட்டு விரும்பா குரலில்.

“நீங்களே ஒரு நாள் நிச்சயம் என்கிட்ட சொல்வீங்க..” காவ்யா உறுதியாக சொன்னாள். கம்பன் ஏற்கவில்லை. அவனின் வாழ்க்கையின் கருப்பு பக்கங்கள் அது.

நமக்கு நல்லது சொல்லும் அப்பாவோ, அம்மாவோ, மனைவியோ, கணவனோ உனக்கு கசக்கிறார்கள், அவர்களை நீ எதிர்க்கிறாய் என்றால் நீ அங்கு சரியில்லை என்று தானே அர்த்தம்.. ஆமாம் நான் சரியில்லை.. எனக்கான உறவுகளை நான் இழந்துவிட்டேன் என்று கம்பன் புரிந்து கொண்ட நேரம்..?

ஒரு தலை காதல் கொண்டு, தோற்று போகும் கோடி பேரில் கம்பனும் ஒருவன் தான்..

ஆனால் உயிர் கொடுத்து, கஷ்டம் என்றால் என்ன என்று கேள்வி கேட்கும் அளவு சொகுசான வாழ்க்கை கொடுத்த அப்பாவையே எதிரியாய் பார்க்கும் இவன் ஆணவம், இருபதுகளின் ஆரம்பத்திலே வாழ்க்கையே வென்றுவிட்டதாக இவன் கொண்டிருந்த அகம்பாவம்,  நான் தான் எனக்கு ராஜா என்ற இவனின் திமிர்..  எல்லாம்.. எல்லாம் ஒரே நாளில் ஒன்றுமே இல்லாமல் சரிந்து உலகத்திலே நீ தான் அதி முட்டாள் என்று இதயத்திலே குத்தும் போது வரும் வலி..?

துரோகியை நண்பனாய் நினைத்து அவனால் முட்டாளாக்கபட்டு, தாங்க முடியா கோவத்தில் அவனை அடித்து, ஸ்டேஷன் சென்று, அப்பாவை பார்த்ததும் தனக்கே தெரியாமல் அவரிடம் அடைக்கலம் தேடி, சொல்லி அழ தவித்து, இறுதியாக அவரை அணைத்தது.. இப்போதும் இதயத்தில் சுருக்கென வலி.

அந்த வலியை ஜீரணிக்க முடியாமல் வாழும் இவனின் கருப்பு பக்கங்களை என்னவென்று மனைவியிடம் சொல்வது..? பெருமைப்பட்டு கொள்ளும் விஷயமா இது..? அவனின் மீத வாழ்க்கைக்கே இவள் தான் இனி பிடிப்பு எனும் போது அவள் முன் சிறுமைபட தான் முடியுமா..?

அவனே மறந்துவிட நினைக்கும்.. மறந்துவிடவே முடியாத  நினைவுகளை வெளியே பேச தான் அவன் விரும்புவானா..?  மனைவி அவளிடம் இதை எல்லாம் சொல்வேன் என்கிறாள்..? அவனின் உதடுகள் கசப்பாக சிரித்தது.

“பார்ப்போம்.. நீங்களே சொல்றீங்களா இல்லையான்னு..?” என்றாள் காவ்யா. என்னமோ அவளுக்குள் ஒரு உறுதி.. நம்பிக்கை..

புரிந்த கம்பன் அவள் கை எடுத்து என் தன் நெஞ்சின் மீது வைத்தவன், “இதுக்கு மேல சொல்ல அங்க பெருசா ஒன்னும் இல்லை. ஒருத்தனை நம்பி.. அவன் அவனோட சுயலாபத்துக்காக கேட்ட விஷயத்தை நான் மறுக்கவும் நண்பன் துரோகியாயிட்டான், அவ்வளவு தான்..”

“உன் முன்னாடி நான் ஹீரோவா எப்போவும் இருந்தது இல்லை.. இனியும் இருக்க முடியாது.. அட்லீஸ்ட் நீ என்னை பார்க்கிற பார்வையாவது கொஞ்சம் நல்லபடியா இருக்கனும் நினைக்கிறேன்.. இல்லைன்னா நீ என்னோட வாழவே முடியாது.. ஏற்கனவே உன்கிட்ட நான் தோத்துட்டேன்.. இது என்னோட செகண்ட் சேன்ஸ்.. இதுலயும் நான் பாஸ்ட் லைப் கொண்டு வந்து தோற்க விரும்பல.. ப்ளீஸ்..” என்றான் அவளின் கைக்கு அழுத்தம் கொடுத்து.

காவ்யாவும், “முன்ன நீங்க என்னை.. உங்க லவ் எப்படி எனக்கு தெரியாது.. அதுல நீங்க தோத்ததா சொல்றதும் எனக்கு ஏத்துக்க முடியல.. என்னோட நேர் மறுப்பு மட்டுமே உங்களை தோற்க வைக்கும், அப்படி பார்த்தா நான் இப்போ உங்களுக்கு ‘எஸ்’ சொல்லி நீங்க ஜெயிச்சு தான் இருக்கீங்க.. சோ.. இப்போதைக்கு இதை விடுவோம்..” என்று அன்றய நாளுக்கான அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தாள்.

கம்பனுக்கு மனைவி அந்த பேச்சை முடித்தது அவ்வளவு ஆறுதல். இருவரும் வேறு பேசாமல் எழுந்து தூங்கவும் சென்றனர். கம்பன் வழக்கம் போல திவானில் படுக்க, உடைமாற்றி வந்த காவ்யா, “இங்க.. கட்டில்லே படுங்க..” என்றாள். அவளின் அம்மா வீட்டில் அருகருகே படுத்தவர்கள் தான் என்பதால் கம்பன் அமைதியாக மறுபக்கம் படுத்துகொண்டான்.

இருவருக்கும் உடல் சோர்வுடன், மனவுளைச்சலும் சேர்ந்து கொள்ள நேரம் கழித்து வந்து தூக்கம் என்றாலும் நல்ல தூக்கம் தான். மறுநாள் முதலில் விழித்த கம்பனுக்கு பாரம் கொஞ்சம் குறைந்த உணர்வு. ‘மனைவிக்கு சொல்லிவிட்டோம், அவள் நான் பயந்தபடி பெரிதாக ஏதும் பேசிவிடவில்லை..’ என்ற ஆசுவாசம்.

முதலில் அவள் முகத்தில் வந்த ஒவ்வாமை மட்டும்.. அது கூட இல்லையென்றால் எப்படி..?  எழுந்தவன் மறுபக்கம் படுத்திருந்தவளின் முகம் பார்த்து அவனின் வழமைகளை பார்க்க சென்றான்.

 

பயிற்சியில் இருக்கும் போதே சஞ்சய், ராம்தாஸ் இருவரும் அழைத்துவிட்டனர். பயிற்சி முடித்து இவன்  பேசினான். “இன்று தான்  ஆரம்ப நாள். முதல் அடி எடுத்து வைக்க போகின்றோம்..” என்றார் ராம்தாஸ்.

சஞ்சய்க்கு  பதட்டம்.. “நீ எப்போ வர..?” என்றான் கம்பனிடம்.

ராம்தாஸ், “நீ சஞ்சய் கூடவே இரு..” என்றார். “நான் இனி எங்கேயும் வெளியே போக மாட்டேன்.. நீ என்னை பத்தின டென்ஷன் விடு..” என்று வைத்தார்.

Advertisement