Advertisement

இப்படியே  விருந்துக்கான  நாளும் வந்தது. காலையில் கிளம்பிய கணவனிடம், “வந்துடுவீங்க தானே, இல்லை நான் மட்டும் நின்னுட்டு வரணுமா..?” என்று கேட்டுவிட்டாள்.

கன் எடுத்த கம்பன் கைகள் அப்படியே நின்றது. மனது சுருண்டது. அவள் கேட்பது சரிதானே..? ஓடி ஒளிஞ்சுட்டு தானே இருக்க..?

“வந்திடுவேன்..” என்றான் அவள் முகம் பார்த்து.

“ரொம்ப சந்தோசம்..” என்று சென்றுவிட்டாள் அவள்.

கம்பன் பெருமூச்சுடன் கிளம்பி சென்றவன், முன் மாலையே வந்துவிட்டான். சஞ்சய் அவனை தயார் செய்ய ஆட்களை அனுப்ப கேட்க மறுத்து, தானே கிளம்பினான். மனைவியை பார்க்க முடியவில்லை. இந்திராணி அறையில் வைத்து பார்லர் பெண்கள் அவளை தயார் செய்து கொண்டிருந்தனர்.

கம்பன் குளித்து வந்தவன், காவ்யா எடுத்து வைத்திருந்த கோட், சூட்டில் தயாரானான். நீண்ட வருடங்கள் கழித்து தலைக்கு ஜெல் வைத்தவன், பிடித்த பெர்பியூமும் அடித்து கொண்டான். கொஞ்சம் நல்ல மாதிரி உணர்ந்தான். முன்போல உள்ளம் அழுத்தம் கொடுக்கவில்லை.

நேரம் பார்த்து கீழே வர, காவ்யாவும் தயாராகி வந்தாள். பேபி பிங்க் வண்ண டிசைனர் ஹால்ப் சேரி மாடல் புடவையில், மரகத செட் நகையில் பெண் ஒளிர்ந்தாள்..

கம்பன் நின்று மனைவியை பார்த்தான். அழுத்தம் கொடுக்கா உள்ளம் இப்போது பரவசத்தையும் அள்ளி கொடுத்தது. ரசித்தான். அவ்வளவு ரசித்தான். காவ்யா அதில் கொஞ்சம் அமைதியானாள். முகத்தில் புன்னகை இடம் பெற்றது.

காவியத்தை கம்பன் கொண்டாடினால் தானே காவியம் மிளிரும். அவளும் மிளிர்ந்தாள். மின்னினாள்..!

பாலா கார் எடுக்க, இருவரும் காரில் ஏறினர். அருகருகே அமர்ந்த இதம், நெருக்கம், என் காவியம்.. என் மனைவி  கம்பன் உவகை கொண்டான். விருந்து நடக்கும் மண்டபம் வரவும், மனைவி கை பிடித்து இறங்கினான். இன்று அவன் உள்ளங்கை மிதமான சூட்டில் இருந்தது. அவன் நல்ல மனநிலையில் இருக்கிறான்.. காவ்யா அவனை புரிந்து கொள்ள ஆரம்பித்திருந்தாள்.

விரல்கள் கோர்த்து இருவரும் உள்ளே நுழைய, பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை ரசித்து பார்த்தனர். விருந்தினர்களும் வந்திருந்தனர். மேடை போல் இல்லாமல் ஒவ்வொருவராக கம்பன், காவ்யாவை விஷ் செய்து சென்றனர். மணமக்களிடம் அதிக கூட்டம் இல்லாமல் கார்ட்ஸ் பார்த்து கொண்டனர்.

சஞ்சய் ஜுனியர்ஸும் வந்திருந்தனர். சாதனா குடும்பம், ஆதிரா குடும்பமும். டியூட்டி நேரம் மாற்றிவிட்டு மொத்த கார்ட்ஸும் வந்து சென்றனர். அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தான் கம்பன். அவர்கள் வெய்ட் செய்யவிடவில்லை. உடனே பார்த்து, பேசி, போட்டோ எடுத்து சாப்பிட அனுப்பி வைத்தான்.

பாலா மணமக்களை விட்டு நேரே ராம்தாஸ் வீடு சென்று அவரை அழைத்து வந்தான். அவருடன் மொத்த குடும்பமும்  வந்திருந்தனர். ஆசீர்வாதம் செய்தார். தனியே உணவுக்கு அழைத்து சென்றனர். சஞ்சய் தான் முன் நின்று அவர்களை கவனித்தான். “உன் ப்ரண்ட் இதை கூட செய்ய மாட்டானா..?” கம்பன் கோவம் அவன் அடக்கப்பட்ட வார்த்தையில் தெரிந்தது.

“என்னாச்சு..?” காவ்யா கேட்க,

“விடு..” என்ற கம்பன் அடுத்த விருந்தினரை பார்த்தான். ராம்தாஸ் குடும்பமும் சொல்லி கொண்டு சீக்கிரம் கிளம்பிவிட்டனர். விருந்தினர் எண்ணிக்கை ஓரளவு குறைய, அப்போது தான் அவன் வந்தான்.

கம்பன் உள்ளங்கை திடீரென சில்லிட்டது. கோர்த்தே இருந்த கரங்களில் காவ்யா நிமிர்ந்து கணவனை பார்த்தாள். அவன் பார்வை. அங்கு.. அது.. “உங்க ப்ரண்ட் தானே..?” என்று கணவனிடம் கேட்டும்விட்டாள்.

கம்பன் நிமிர்ந்த உடலில் தன்னை போல ஒரு குறுகல். உடனே விறைத்து நிமிர்ந்தான்.

 “யார் கூப்பிட்டது அவனை..?” மனைவியிடம் கேட்டான்.

“உங்க ப்ரண்ட்ஸ் எல்லோருக்கும்.. சூர்யா.. நானும்..” அவன் முக சிவக்க, காவ்யா குரல் உள் சென்றது.

அவன் இவர்களை நெருங்கினான். ராகுல்..  என்ன சொல்வான்..? என்ன பேசுவான்..? நக்கலாக பார்ப்பானா..? உள்ளுக்குள் அவ்வளவு படபடத்தது. மறைத்து  வெளியே விறைத்து நிமிர்ந்து நின்றிருந்த கம்பன் அவனை நேரே பார்த்தான்.

ராகுல் அமைதியாக “வாழ்த்துக்கள்..”  என்றான்.

கம்பன் அமைதியில், வெறித்த பார்வையில், “நன்றி..” என்று காவ்யா தான் சொன்னாள்.

ராகுலை புகைப்படம் எடுக்க நிற்க சொல்ல, கம்பன் ஒற்றை விரல் நீட்டி மறுத்தான். அந்த நீட்டிய விரலுடன் ராகுலை பார்த்தவன், “அவுட்..” என்றான் கர்ஜனையாக.

“என்னங்க..” காவ்யா அவன் கை பிடித்து அழுத்தம் கொடுத்தாள். விருந்துக்கு வந்தவரை விரட்டுவதா..?

“நான் ஆரம்பிச்சு வைச்ச விதம் தப்புன்னாலும் உனக்கு அது  நல்லதா தான் முடிஞ்சிருக்கு வீரா..” ராகுல் சொன்னவன் சென்றுவிட்டான். அவன் வார்த்தைகளில் கம்பன் உள்ளம் கொதிக்க, காவ்யா யோசனையானாள்.

சூர்யா தூரத்தில் இருந்து பார்த்தவன் என்னவோ எதோ என்று காவ்யாவை நெருங்கினான். “யாரை கேட்டுடா அவனை கூப்பிட்ட..” அப்படி ஒரு சத்தம் தம்பியை.

“உன்.. உன் ப்ரண்ட்ஸ்ன்னு பொதுவா தான்.. இவர்ன்னு இல்லை..” பதற்றத்துடன் சொன்னான்.

“இன்னொரு முறை அவனை என்  ப்ரண்ட் சொன்னா உன்னை சாவடிச்சிடுவேன்.. போ.. போடா..” என்றான். சூர்யா அவன் கோவத்தில்.. அண்ணனின் நீண்ட வருடங்கள் கழித்த கோவத்தில் வெலவெலத்து போய்விட்டான்.

எதுக்கு இவ்வளவு கோவம்..? அப்படியும் இந்த உள்ளங்கை ஏன் இவ்வளவு சில்லன்னு இருக்கு.. காவ்யா புரியாத புதிராக கணவனை பார்த்தாள்.

அதன் பிறகான விருந்து இருவருக்கும் ரசிக்கவில்லை. சஞ்சய் கேள்வியாக பார்த்து சென்றான். விருந்தும் முடிய உணவும்  பேருக்கு எடுத்து கொண்டு மணமக்கள் வீடு திரும்பினர்.

கம்பன் கோட்டை கழட்டி வீசி கட்டிலில் அமர்ந்தான். “என்ன பிரச்சனை உங்களுக்கு..?” காவ்யா கேட்டு நின்றாள்.

“ப்ளீஸ்.. இப்போ எதுவும் பேசாத..” என்றான் கம்பன்.

“ஏன்.. ஏன் பேச கூடாது..? என்ன பிரச்சனை உங்களுக்குன்னு சொன்னா தானே எனக்கு தெரியும்..” காவ்யா கேட்க,

“உனக்கு  இது தெரியணும்ன்னு இல்லை, ஏன் உனக்கு தெரியணும் நினைக்கிற..?” கம்பன் இப்போது படபடத்தான்.

“நான் சம்மந்தப்பட்டதா..?” காவ்யா நிதானமாக கேட்டாள்.

“இல்.. இல்லை..” கம்பன் சொல்ல,

“ஆமா.. இவர் தான் அன்னைக்கு என்கிட்ட உங்களை பத்தி ஏதோ கேட்டார்..? அதே நாள் தான் தான் நீங்க இவரை அடிச்சு ஸ்டேஷன் வரை போய்ட்டு வந்தீங்க, இன்னைக்கும் அவர் தான் எதோ ஆரம்பிச்சு வைச்சேன் சொல்லிட்டு போறார்.. என்ன அதுன்னு சொல்லுங்க..” காவ்யா இவ்வளவு நேரம் யோசித்ததை தெளிவாக கேட்க, கம்பன் தலை பிடித்தான்.

“என்னை வைச்சு தான் உங்களுக்குள்ள ஏதோ..? என்னன்னு சொல்லுங்க..” அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தாள். அவன் கை பிடித்தாள். பொறுமையை கையில் எடுத்தாள். கணவன் மறுகுகிறான், குறுகுகிறான்.. எதையோ நினைத்து தவிக்கிறான்.. என்னிடம் சொன்னால் என்ன..?

“இன்னும் எத்தனை நாளைக்கு என்கிட்ட இருந்து எல்லாத்தையும் மறைக்க முடியும்..? நீங்க பாஸ்ட்ல என்னை லவ் பண்ணியிருக்கீங்கன்னு சொல்றீங்க, ஆனா அது பத்தி ஏதும் சொல்ல மாட்டேங்கிறீங்க, ஏன்..? நமக்குள்ள இவ்வளவு ஒளிவு மறைவு இருந்தா நாம எப்படி வாழ முடியும், உங்களுக்கு எப்படியோ எனக்கு என் லைப் நல்லா இருக்கனும், தோற்க கூடாது.. உங்ககிட்டயும் சரி.. என் வாழ்க்கையிலும் சரி..” என்றாள் நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக.

கம்பனுக்கு மனைவியின் கேள்விகள்.. அதில் உள்ள நியாயங்கள் புரியாமல் இல்லை. அவனும் இதை சொல்ல தான் வேண்டும் என்று தெரிந்து தான் அவளை திருமணமும் செய்து கொண்டான். ஆனால் இப்போது முடியாது என்று பின்னால் கால் வைக்க நினைப்பது.. சொல்லிவிடலாம். ஆனால் விஷயம் தெரிந்தால் என்னை முட்டாள் என்று சொல்லிவிடுவாளா..? இவ்வளவு தான் நீ என்று கேட்டுவிடுவாளா..? அவள் பார்வையில் நான் இறங்கிவிடுவேனா..? அவ்வளவு கேள்வி.

தன் முன் இருந்த மனைவியை பார்த்தான். தன் பதிலுக்கான எதிர்பார்ப்புடன் இருந்தாள். அவனின் காவியம் இவள்.. காதல் இவள்.. அவனின் இத்தனை வருட அழுத்தம்.. மனைவிக்கு சொல்லி தான் ஆக வேண்டும் என்று ஆழ் மனதின் வேண்டுதல்.. கம்பனை உடைக்க செய்தது.

“இப்போ உனக்கு என்ன தெரியணும்..? ஆமா நீ.. உன்னை வைச்சு தான் நான் அவனை அடிச்சேன், அவன்.. அவன் என்ன செஞ்சான் தெரியுமா..? அவன் உன்னை.. என்னை.. அவன் நீ என்னை லவ் பண்ற சொல்லி நான் உன்னை.. நான் உன்னை.. விட்டுடி.. இவ்வளவு தான்..” என்றான் இறுதியில் ஓய்ந்து போய்.

காவ்யா நொடிகள் எடுத்து புரிந்து கொண்டாள். நான் இவரை லவ் பண்றேன்னு ராகுல் சொல்லி, இவரும் அதை நம்பி என்னை காதலித்து.. ஓஹ் காட்.. அதெப்படி ஒருவர் சொல்வதை நம்பி காதலிக்க முடியும்..? சட்டென அவள் முகத்தில் ஒரு ஒவ்வாமை கேள்வி. கம்பன் கண்டுகொண்டான். உள்ளம் செத்து போனது. “இதுக்கு தான் உன்கிட்ட சொல்ல மாட்டேன் சொன்னேன்..” என்றான் கரகரத்த குரலில்.

இதை நினைச்சு தான் இவ்வளவு மறுகிறரா..? காவ்யா தன்னை சமன் செய்தாள். இப்போது கணவனை பார்க்க வேண்டும். அவன் சில்லிட்ட உள்ளங்கையை இறுக்கமாக.. மிக இறுக்கமாக தன்னுள் கோர்த்து கொண்டாள்.

“அதாவது அடங்காத காளையை கோவில் காளையா நேந்து விடுறது போல உங்களை காதல் காளையா எனக்கு நேந்து விட்டராக்கும்..” என்றாள்.

கம்பன் அவளின் வார்த்தைகளில் நிமிர்ந்தான். அவள் முகம் பார்த்தான்.

Advertisement