Advertisement

கம்பன் காதல் கொண்டு 18

கம்பன் விழித்தே இருக்க, விடியலும் வந்தது. எழுந்து, அவன் அறைக்கு செல்ல காவ்யா நல்ல தூக்கத்தில் இருந்தாள். விடுதலை மனதுடன் ரிப்ரெஷ் செய்து, மேலே அவன் பயிற்சி இடத்திற்கு சென்றான்.

சூரியன் உதித்து சிறிது நேரம் சென்று காவ்யாவிற்கு விழிப்பு வர, கணவனை அறையில் தேடினாள். இல்லை.. கீழ போய்ட்டாரா..? இவளும் குளித்து  கீழிறங்கினாள். இந்திராணி மருமகளை விளக்கேற்ற சொல்லி, கையில் காபி கொடுத்தார். “எங்கத்தை அவர்..?” காவ்யா கேட்க,

“மேல.. மொட்டை மாடியில இருப்பான்ம்மா.. ஜிம், தற்காப்பு பயிற்சி, துப்பாக்கி  பயிற்சி எல்லாம் செய்வான்..” என, சூர்யா குளித்து வந்தான்.

காவ்யா.. அண்ணியாக, அவன் வீட்டில் இருக்க பார்த்த கணம் ஒரு உற்சாக முறுவல் அவனிடம். அந்த காலை இனிய காலை தான் அவனுக்கு. இந்திராணி மகனுக்கும் காபி கொடுக்க, காவ்யா பக்கத்தில் அமர்ந்து பேசியபடி காபி குடித்தான்.

ஆதிரா எப்போதும் போல லேட்டாக எழுந்து வந்தவள், கிட்சன் சென்று சமையல் செய்பவரிடம் காபி வாங்கி கொண்டு சூர்யாவின் மறுபக்கம் அமர்ந்தாள். ‘அவ புருஷனாம்..’ காவ்யா உள்ளுக்குள் சிரித்து கொண்டாள்.  அது மூவர் அமரும் சோபா என்றாலும், தோழி முன்  மனைவி இடித்து கொண்டு அமர்ந்ததில் சூர்யாவிற்கு தான் கொஞ்சம் சங்கடமாக இருந்தது.

கம்பன் வீரய்யன் பயிற்சி முடித்து குளித்து கீழே வர, காவ்யா திரும்பி கணவனை பார்த்தாள். அவன் நேரே சாப்பிட டேபிளுக்கு சென்றுவிட்டான். என்னை பார்க்கல தானே அவர்..? ஏன்..? காவ்யா தன் கேள்வியை மனதில் வைத்து,

“நாமளும் சாப்பிட போலாமா..?” என்று இருவரையும் பார்த்து பொதுவாக கேட்டாள்.

சூர்யா அண்ணா முன்பா என்று தயங்க, ஆதிரா, “அவர் என்னோட தான்  சாப்பிடுவார்..” என்றாள்.

 காவ்யா சரியென்று கணவனை தேடி செல்ல, இந்திராணி மகனுக்கு உணவு வைத்து கொண்டிருந்தவர், “நீயும் உட்காரும்மா..” என்றார் காவ்யாவிடம். அவளுக்கும் பசி இருக்க, “நீங்க ஆன்ட்டி..?” என்று கேட்டு அமர்ந்தாள்.

“நான் முன்னமே சாப்பிட்டேன்ம்மா..” என்ற இந்திராணி மருமகளுக்கு வைக்க, தன்னை நிமிர்ந்தே பார்க்காத கணவனை  பார்த்தபடி சாப்பிட்டாள் காவ்யா.

மனைவி பார்வை தன்னை தொடர்வது கம்பனுக்கு தெரியாமல் இல்லை. ஆனாலும் உணவில் கவனமாக இருக்க, சஞ்சய்  வந்தான்.  மறுவீடு அழைத்து செல்ல. மணமக்கள் இரண்டு நாட்கள் அங்கே தங்குவதாக ஏற்பாடு.

சஞ்சய்யை  வரவேற்று சாப்பிட கேட்க, அவன் மறுத்து காபி மட்டும் எடுத்து கொண்டான். கம்பன் உணவு முடித்து, மச்சானிடம் பேசி கொண்டிருக்க, காவ்யா கிளம்ப மேலே சென்றாள்.

உடை எடுக்க வேண்டும். அவளுக்கு வீட்டில் இருக்கும், கணவனுக்கு..? கேள்வி பிறக்க, அவன் கப்போர்ட் திறந்து வைத்து முழித்து நின்றாள். “தள்ளு..” பின்னால் கம்பன் குரல்.

“வந்துட்டீங்களா..? என்ன ட்ரஸ் எடுக்க தெரியாம முழிச்சிட்டு இருந்தேன்..” என,  கம்பன் பதிலே இல்லாமல், ஒரு நிமிடத்தில் பேக் செய்துவிட்டான்.

“என்ன வேகம்..? இருங்க நான் கிளம்பிடுறேன்..” காவ்யா சொல்ல,

“நீ கிளம்பி வா.. நான் கீழே இருக்கேன்..” என்று கணவன் சென்றும்விட்டான்.

‘ஏன் எனக்காக வெய்ட் பண்ண மாட்டாரா..?’ சிறு கோவம். அவள் கிளம்பி வர, வீட்டில் சொல்லி கொண்டு மணமக்கள் கிளம்பினர். சஞ்சய் உடன் இருக்க, காவ்யாவால்  கணவனிடம் பேச முடியவில்லை.

காவ்யா வீட்டில்  ஆரத்தி எடுத்து மணமக்களை வீட்டுக்குள் அழைத்தனர். தொடர்ந்த சடங்குகளில் நேற்று போல இன்று கம்பன் இல்லை. அவள் பக்கத்தில் அவன் சவுகரியமாக இல்லை. காவ்யாவிற்கு புரிய, உறவுகள் முன் என்ன கேட்க..?

நேற்று திருமண விருந்து கம்பன் வீட்டில் முடிந்திருக்க, இன்று இங்கு மதிய உணவு பெரிய விருந்து தான். உறவுகளும் அதிகமே இருந்தனர். இந்திராணிக்கு போன் செய்து சுதா அழைத்திருக்க, ஆதிரா மறுத்துவிட இந்திராணி, சூர்யா மட்டும் வந்திருந்தனர். இரவு உணவு வரை எல்லாம் இருந்து தான் கிளம்பினர்.

காவ்யா இரவு கணவனை அவள் அறைக்கு அழைத்து செல்ல, அவன் அமைதியாக ரிப்ரெஷ் செய்து வந்தவன், கட்டில் மட்டும் இருக்க நின்றான். “மௌன விரதமா..?” காவ்யா கேட்டாள்.

“தூங்கணும்..” என்றான் இவன் கட்டிலை பார்த்தபடி.

என்னாச்சு இவருக்கு..? காவ்யா நினைத்தவள், “பெரிய கட்டில் தானே அந்த பக்கம் படுங்க..” என்றாள். கம்பன் நொடி நின்று அமைதியாக படுத்தும்விட்டான். நேற்றிவு தூக்கம் இல்லாததில் அவனுக்கு நல்ல தூக்கம். காவ்யாவிற்கு தான் இந்த இரவு நீண்டது. கணவனை புரிந்து கொள்ள முடியாமல் விழித்தாள் பெண்.

அடுத்த நாள் கம்பன் எழுந்து சஞ்சயுடன் ஜிம் சென்றான். வெளியே தான். அதை தொடர்ந்த காலை உணவும் முடிய, மனைவியுடன் அறைக்கு வந்த கம்பன், “வெளியே போகணும்.. உன் அண்ணாவும், ராம்தாஸ்  சார் வீட்டுக்கு, வர லேட் ஆகும்..” என்றான் வாட்ச் கட்டியபடி.

காவ்யா கை கட்டி கணவனை பார்த்து நின்றாள். ‘பதில் சொல்ல மாட்டேங்கிறாளே..?’ கம்பன் பர்ஸ் எடுத்து, மூச்சை இழுத்துவிட்டு மனைவியை பார்த்தான். “இப்போ சொல்லுங்க..” என்றாள் அவள் கொஞ்சம் அதிகாரம் கலந்த கோபத்துடன்.

“போய்ட்டு வரேன்..” என்றான் கம்பன் வீரய்யன்.

“நல்லது..” என்ற காவ்யாவின் கோவம் புரிந்தவன் ஏதும் செய்ய முடியா இயலாமையுடன் கிளம்பினான்.

சஞ்சய் தயாராக இருக்க இருவரும் சொல்லி கொண்டு கிளம்பினர்.  எலெக்ஷன் பிரச்சாரம் இன்றோடு முடிய, சஞ்சய் இனி செய்ய வேண்டிய வேலை பற்றி பேச்சு சென்றது. இரவு தான் வந்தனர்.

சுதாவிற்கு மகளுடன் மாப்பிள்ளை இல்லாததில் வருத்தம் தான். வாசுதேவனுக்கு விஷயம் தெரியும் என்பதால், அவர்தான் மனைவியை சமாளித்தார். “முக்கியமான வேலை.. கொஞ்ச நாள், இந்த வாரம் முழுசா இப்படி தான் இருக்கும்..” என்றார். காவ்யாவும் அங்கு இருந்தாள்.

அன்றய இரவு வீடு வந்த கம்பன், சஞ்சய் மிகவும் சோர்ந்து தான் இருந்தனர். உணவு அங்கேயே.. ராம்தாஸ் வீட்டிலே  முடிந்திருக்க, இருவரும் நேரே வாசுதேவனுடன் ஆபிஸ் அறைக்கு சென்றனர்.

காவ்யாவும், சுதாவும் உணவு முடித்து  பேசி கொண்டிருக்க, “காவ்யா.. காபி வேணும்..” கதவு திறந்து கேட்டான் சஞ்சய். காவ்யா மூவருக்கும் போட்டு எடுத்து செல்ல,  கம்பன் தலை சாய்த்து அமர்ந்திருந்தான்.

சஞ்சய் காபி எடுத்து அவனிடம் கொடுக்க, “தேங்க்ஸ்..” என்று வாங்கி கொண்டான் கம்பன்.

“காபி போட்டது நான்..” என்றாள் காவ்யா.

கம்பன் மனைவியை பார்த்தவன், “தேங்க்ஸ்..” என்றான். என்னமோ நன்றிக்காக கேட்டது போல.. இவரை.. காவ்யா பல்லை கடித்து வெளியே வந்துவிட்டாள்.

வாசுதேவனுடன் பேச்சு நீண்டு கம்பன் தூங்க வந்த நேரம், காவ்யா தூங்கியிருந்தாள். ஆசுவாசத்துடன் அவள் பக்கம் படுத்தான். மறுநாள் காவ்யா மாமியார் வீடு கிளம்ப வேண்டும். வீட்டு பெண்ணை வழியனுப்பி வைக்க, உறவுகள் வந்துவிட்டனர். இந்திராணி, சூர்யா பக்க உறவுகளுக்கும் அழைப்பு இருக்க, அவர்களும் வந்திருந்தனர்.

இன்றும் ஒரு விருந்துடன் காவ்யா கிளம்பினாள். எல்லோரிடமும் விடைபெற்றாள். அம்மாவை அணைத்து, அப்பா தோள் சாய்ந்து, பெரியவர்கள் பாதம் பணிந்து என்று உணர்ச்சிகரமான நிமிடங்கள்.

“சாரி காவ்யா.. உன்னோட இருக்க முடியாம போச்சு..” சஞ்சய் தங்கையிடம் வருத்தம் தெரிவித்து கண் கலங்கினான். சாதனாவும் வந்திருந்தாள். சஞ்சய் தானே சீருடன் சென்று  தங்கையை, தங்கை கணவனை வீட்டில் விட்டு வந்தான்.

கம்பன் அன்று மாலை, “ஒரு இடத்துக்கு போகணும்..” என்றான் மனைவியிடம்.

“போகலாம்..” என்று காவ்யாவும் கிளம்பி வர, ட்ரவைர் கார் எடுத்தார். சென்னை விட்டு வெளியே சிறிது தூரம் வந்தவர்கள், ஒரு கேட் முன் நின்று ஹார்ன் அடித்தனர். கேட் திறக்கப்பட, சில ஏக்கரில் பரந்து விரிந்திருந்தது அந்த மாந்தோப்பு.

நல்ல காற்று. சில்லென்று இருக்க, காவ்யா ரசித்து கணவனை பார்க்க, அவன் முகம் மிகவும் இறுகி சிவந்து போய் இருந்தது. ‘கிளம்பினதுல இருந்து இப்படி தான் இருக்கார்..’ காவ்யா நினைத்து அவன் பின் சென்றாள்.

சற்று தள்ளி உள்ளே வர, ஒரு சிறு மண்டபம் போல. அதில் அவன் அப்பா பரசுராம் புகைப்படம். காவ்யாவிற்கு புரிந்தது அவர் நினைவிடம் என்று. கம்பன் ஷூவை கழட்டி மனைவியை பார்க்க, அவள் செருப்பை கழட்டி வந்தாள். கம்பன் அருகில் வந்தவளின் கை பிடித்து அழைத்து சென்றான்.

இப்போதும் அவன் உள்ளங்கை சில்லென்று தான் இருந்தது. காவ்யா அவளின் உள்ளங்கை சூட்டை விரல் கோர்த்து கணவனுக்கு கொடுத்தாள். ஆட்கள் சுத்தம் செய்து வைத்திருக்க, முன் சம்மணமிட்டு அமர்ந்தான். காவ்யாவும் அப்படியே அமர்ந்தாள்.

கண் மூடிய கம்பனின் மேல் இமைகள் துடித்து அடங்கியது. சில நிமிடம் அப்படியே அமர்ந்திருந்தவன், எழுந்து மனைவியுடன் ஆசீர்வாதம் வாங்கி வெளியே வந்தான். காவ்யா அமைதியாக அவனை உள்வாங்கி கொண்டிருந்தாள். இருள் சூழ்ந்த பின் அங்கிருந்து கிளம்பினர்.

கம்பனின் அமைதியில், அவன் கலக்கத்தில் காவ்யா பேச்சு கொடுக்கவில்லை. இருவரும் வீடு வரவும், “காலையில குலதெய்வ கோவிலுக்கு போக வேண்டும்..”  என்றார் இந்திராணி. அதன்படி அடுத்தநாள் எல்லோரும் குலதெய்வ கோவில் சென்று  வந்தனர்.

அந்த வார இறுதியில் கம்பன், காவ்யா திருமண விருந்து ஏற்பாடாகி இருந்தது. முழு பொறுப்பும் வாசுதேவனிடம் இருக்க, சஞ்சய், கம்பன் இருவரும் வெளியவே அலைந்து கொண்டிருந்தனர்.

‘இப்படி ஓடுறதுக்கு எதுக்கு இவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ணனும்..?’   காவ்யா பொருமலுடன் நடுஇரவு வந்த கணவனிடம், விருந்துக்கான உடை பற்றி கேட்க, அவன் சோர்வாக திவானில் படுத்தவன், “நீயே எடுத்துடு ப்ளீஸ்..” என்றான்.

Advertisement