Advertisement

“காவ்யா.. ரிலாக்ஸ்.. பேசாத..” ரோஹித் தோழியை கண்ட்ரோல் செய்ய நினைத்தான்.

“என்னடா அங்க..?” ரோஹித்தையும் அவன் அதட்ட,

“அவங்க அப்பா டெபியுட்டி கலெக்டர், கூப்பிடவா கேட்கிறான்..” என்றாள் காவ்யா அசராமல்.

“ஆமா சீனியர்.. இவங்க அப்பாக்கு மகன்னா உயிர், அவன் கண்ணுல தண்ணீர் வந்தா மனுஷன் தாங்க மாட்டார், போலீசை ஏவிவிட்டுடுவார்..” மற்ற நண்பன் தினேஷ் கண்களை விரித்து பெரிதாக  சொன்னான்.

“என்னங்கடா பில்லி சூனியம் ஏவி விடுறதை போல சொல்றீங்க..” ஒரு சீனியர் கேட்க,

“பில்லி சூனியம் எல்லாம் கூட கொஞ்ச நாள் கழிச்சு தான் வேலையை காட்டுமாம், போலீஸ் வந்த நின்ன உடனே கை, காலை தூக்கிடுவாங்க.. உங்களுக்கு தெரியாததா போன மாசம் கூட ஏதோ உங்க ஏரியா கலாட்டான்னு ஸ்டேஷன் போய்ட்டு வந்தீங்களாமே..” இன்னொரு நண்பன் ராஜ் சொன்னான்.

“ஓஹ் எங்களை பத்தி எல்லாம் தெரிஞ்சு தான் இந்த பேச்சா, ஆமா நாங்க அப்படி தான், என்ன எங்களையே மிரட்டுறீங்களா..?” சுதர்சன் சத்தம் விட்டான்.

“டேய் விடுடா.. சின்ன பசங்க கிட்ட போய் என்ன பேச்சு..? எல்லாம் நம்ம ஜுனியர்ஸ் வேற..” போலீஸ் அடி நினைவில் வர ஒருவன் நல்லவனாகிவிட்டான்.

“சரி விட்டுடுறோம்.. நீ  வீரா அண்ணா தோற்கணும் சொல்லு, விட்டுடலாம்..” என்றான் சுதர்சன்  மட்டும் காவ்யாவிடம். இவன் சொல்லி நான் சொல்வதா..? காவ்யா அமைதியாக நின்றாள்.

“என்ன சொல்ல மாட்டியா..? சொல்லு..” என்று மிரட்ட,

காவ்யா, “சொல்ல முடியாது.. என்ன பண்ணுவ..?” என்றாள்.

“என்ன அவன் மேல லவ்வா..?” அவன் வன்மத்துடன் கேட்க,

“ஏன் இருக்க கூடாதா..? நீ ரெடியா இரு..” என்றாள் விரல் நீட்டி மிரட்டி.

“என்ன செஞ்சிடுவ..?” சுதர்சன் இவள் அருகில் வர பார்க்க, நண்பர்கள் நால்வரும் காவ்யாவை சுற்றி நின்றுவிட்டனர்.

“சீனியர் இது நல்லா இல்லை.. நான் கரஸ்கிட்ட போக வேண்டியிருக்கும்..” சூர்யா எச்சரித்தான்.

“பொண்ணுகிட்ட வம்பு பண்ணா மொத்தமா சீட் வாங்கிட்டு போக வேண்டியது தான்.. நான் எங்க அப்பாகிட்ட பேசுறேன்..”  ரோஹித்தும் கோவமாக பேச, சீனியர்கள் சுதர்சனை இழுத்து கொண்டு சென்றனர்.

“காவ்யா வா.. டென்ஷன் ஆகாத..” நண்பர்கள் தோழியை தேற்றி கூட்டி கொண்டு செல்ல,

“என்னடா வீரா சொல்லவே இல்லை.. அந்த பொண்ணு உன்னை லவ் பண்ணுதா, ஏய் மச்சான்..” என்று அவனை.. கம்பன் வீரய்யனை கட்டிக்கொண்டான் ராகுல்.

“டேய்.. சும்மா இரு, அவளுக்கு என் மேல லவ் இருக்க எல்லாம் வாய்ப்பில்லை..” கம்பன் அந்த ஸ்போர்ட்ஸ் ரூமில் இருந்து வெளியே வந்தான். இருவரும் அன்று நடக்க இருக்கும் கிரிக்கெட் மேட்சுக்காக பொருட்களை எடுக்க வர, வெளியே இந்த கலாட்டா.

கம்பன் முதலிலே வந்து அவர்களை ஒரு வழி செய்திருப்பான். அவனுக்கு தம்பி என்ன செய்வான் என்று பார்க்க வேண்டும். தம்பி அந்த சீனியர்களை எதிர்த்து தைரியமாக பேசுவான் என்று கம்பன் காத்திருக்க, அவனோ அமைதியாக நிற்கிறான். என்ன பையன் இவன்..? இவன் எப்படி எனக்கு தம்பியா பிறந்தான்..? அடி வாங்கட்டும்.. என்று கடுப்பாகி  விட்டான் அண்ணன்.

அப்போது தான் காவ்யா பேச, கம்பன் காதுகள் கூர்மையானது. காவ்யா அவனை அண்ணா கூப்பிடாத காரணம் தான் அவனுக்கு தெரியுமே. அதனால் அதை பெரிதாக எடுக்காமல் இருக்க, ராகுலோ அது காதல் தான் என்று அடித்து பேசி கொண்டிருந்தான். கம்பனின் நெருங்கிய நண்பன் தான் ராகுல்.

“டேய் நிறுத்துடா.. அவ என்னை முதல்ல அண்ணா தான் கூப்பிட்டா, நான் தான் வேணாம் சொன்னேன்..” சொல்ல,

“பார்த்தியா.. அப்போ நீ தான் முதல்ல ஆரம்பிச்சு வைச்சிருக்க..” ராகுல் இன்னும் ஆர்பரித்தான். கம்பனுக்கு அவன் ஆர்பரிப்பில் சிரிப்பு தான்.

“நீ இவ்வளவு எக்ஸைட் ஆகுற அளவு எதுவும் இல்லை..” என,

“சரி உனக்கு இல்லன்னா இருந்திட்டு போகுது, கண்டிப்பா அந்த பொண்ணுக்கு..”

“காவியம்.. சாரி காவ்யா..” கம்பன் இடையிட்டு சொல்ல,

“பார்றா கம்பன் காவியமா..? அல்டி காம்பினேஷன் டா மச்சான்.. காவியத்துக்கு கண்டிப்பா உன்மேல லவ் இருக்கு, எனக்கு புரிஞ்சது, உனக்கும் புரியும்..” என்று அது பற்றி பேசியே அவனை ஒரு வழி செய்தான்.

 ஜுஸ் குடிக்க இருவரும் புட் கோர்ட் செல்ல, காவ்யா நண்பர்களுடன் எதிரில் வந்து கொண்டிருந்தாள். கம்பனை பார்த்து, இவனால் தான் எல்லாம்.. என்று அவள் முகம் திருப்ப, “பாரு.. காவியம் உன்னை பார்த்து உரிமையா முகம் திருப்புறாங்க.. லவ்லி.. பார்க்கவே நல்லா இருக்கு..” என்றான் அதற்கும் ராகுல்.

‘அப்படியா..?’ என்று கம்பன் அவளை பார்க்க, அவள் மூக்கு விடைக்க கோவத்தில் இருக்க, அருகே சென்றுவிட்டவன், “எனக்கும் ஜுஸ் வேணும்..” என்றான் காவ்யாவிடம்  வம்பாக தான்.

‘இவரை யார் என்கிட்ட வந்து  பேச சொல்றா..?’ காவ்யா கோவத்தை அடக்கி அவள் கையில் இருந்த ஜுஸ் பாட்டிலை அவனிடம் கொடுத்து நடந்துவிட்டாள். கம்பனுக்கு ஆச்சரியம். அவ குடிச்ச ஜுஸா..? என்று. அது உண்மைக்கும் சூர்யா குடித்தது. இவளிடம் வைக்க சொல்லி, பேக் சிப் போட்டு கொண்டிருந்தான்.

ராகுலோ “பாரு நான் சொன்னப்போ நம்பலை, இப்போ அவங்களே சிக்னல் கொடுத்துட்டு போறாங்க, இதை விடவா ஒரு பொண்ணு சொல்லுவாங்க.. இனி நீ தான் மூவ் பண்ணனும் மச்சான், சும்மா சொல்ல கூடாது செம செலக்ஷன் மச்சான்..” என்று தொடர்ந்து பேசினான். பேசி கொண்டே இருந்தான். முழுதும் காவ்யா தான். ஒரு கட்டத்தில் கம்பனும் மறுக்கவில்லை அமைதியாகிவிட்டான்.

அடங்காத திமிறி நிற்கும் காளையின் திமிலில் சந்தனம் தடவி, பொட்டு வைத்து, பூ பூட்டி அதை அடக்க, தன் பகையை  தீர்க்க அடிக்கல் நாட்டினான் ராகுல்.

‘என்னை பார்க்கிறாளா அவ..? என்னை பிடிக்குமா..? அதான் வீரா அண்ணா கூப்பிட சொன்னா கம்பன் சார் கூப்பிடுறேன் சொல்லி கேட்டாளா..?’

“என்ன அவன் மேல லவ்வா..?”

“ஏன் இருக்க கூடாதா..?” காவ்யாவின் கேள்வி.. இருக்குமோ..? என்ற குழப்பத்தை விதைத்தது. இவள் மற்றவர்களுக்காக எல்லாம் பேச்சுக்கு கூட இப்படி என்று சொல்பவளா..? இல்லையே.. அப்போ.. தெளிவாக இருந்தவன் குழம்ப ஆரம்பித்தான். அந்த குழப்பமும்.. அவனுக்கு.. கம்பன் வீரய்யனுக்கு இனித்தது விசித்திரம்.

இதுவரை பெண்களை சைட் அடித்திருக்கிறான். ஆனால் யாரிடமும் நெருங்கியதில்லை. இவன் திமிரில், அடங்கா தனத்தில், அலட்சியத்தில் பெண்களும் இவனிடம் நெருங்காமல் இருக்க, முதல் முறை காவ்யா அவனில் அந்த பக்கத்தை தொட்டாள். அது தரும் பரவசம் அவனுக்கு இளமை எனும் போதையை கிளப்பிவிட்டது.

கம்பன் வீரய்யனின் இளமை தரும் போதை,  காதலாக..  இல்லையில்லை.. காதல் எனும் மாயையாக அவனுள் ஊடுருவ ஆரம்பித்தது. போதை மூளையையும் மழுங்க வைக்க ஆரம்பித்தது. அவனால் நண்பன் எனும் பெயரில் இருக்கும் துரோகியை உடனே கண்டறிய முடியவில்லை. காவ்யாவிடம் காதல் இல்லாததையும் கண்டறிய முடியவில்லை.

ராகுல் உள்ளுக்குள் பல வேலைகள் செய்தான். காவ்யா காதல் அவன் மேல்தான் என்பது போல.. அப்படி தெரிய வைப்பது போல.. பல செய்தான். அதற்கு அவனின் தம்பி காவ்யா வகுப்பில் இருந்ததும் அவனுக்கு வசதியாகி போனது.

கம்பன் வீரய்யன் காதல் இல்லா பெண் பின்னால் காதல் பைத்தியமாக  செல்ல ஆரம்பித்தான்.

தொடர்ந்த சில மாதங்கள்  ஒரு மாதிரி செல்ல,  கண்டுபிடித்துவிட்டான் கம்பன் வீரய்யன். நண்பனையும், காவ்யாவையும். நண்பன் பெயரில் இருக்கும் துரோகி. காதல் இல்லா காவ்யா என்று. ஆனால் கீழே வீழ்ந்தது..  வீழ்ந்தது தானே..? வலி.. அவமானம், குன்றல் மறையாதுதானே..?

அன்று அவனை.. ராகுலை  அடித்து, போலீஸ் ஸ்டேஷன் சென்றது.. அப்பாவை அணைத்தது.. அவரை தேடியது.. அடுத்த சிறிது நாட்களிலேயே அவன் கை பிடியிலே அவர் உயிர் பிரிந்தது.. பட்டென விழித்தான் கம்பன் வீரய்யன். வேர்த்து நனைந்து போயிருந்தான்.

பழைய நினைவுகள் கனவாக திரும்ப. கண்களோடு உடலும், மனமும் கூட எரிந்தது. எழுந்து தண்ணீர் குடித்து அமர்ந்தான். கண் முன்னால் காவ்யா. அவனின் மனைவியாக. திரும்ப அவன் உடல் குன்ற ஆரம்பித்தது. இவளுக்கு தெரிந்தால்.. இவ்வளவு முட்டாளா நீ என்று கேட்பாளா..? அவளை பார்க்கவே முடியவில்லை.

தூரத்தில் இருக்கும் போதே கனவுகள் அவனை வதைக்கும். இப்போது அவள் அருகில் என்றால்..?

அவளுடன்  ஒரு அறையில் இருக்க முடியும் என்று தோன்றவில்லை. கதவு திறந்து வெளியே வந்தான். வீடு முழு இருளில். எதிர் அறைக்கு சென்றான். கீழே படுத்தான். தூக்கம் இனி வராது.

Advertisement