Advertisement

கம்பன் காதல் கொண்டு 17

மனைவியின் சேலை உரச நின்ற நெருக்கமே கம்பனுக்கு புதிது. ஆழ்ந்து மனைவியை பார்த்தவன், “இது விளையாட்டில்லை காவியமே..  நான் என் காவியத்தை பிரிச்சு படிக்க ஆரம்பிச்சிட்டா  என்ன பண்ணுவீங்க..?” என்றான்.

காவ்யாக்குள் சட்டென ஒரு நொடி நடுக்கம் வந்தது நிச்சயம். ஆனால் உடனே தெளிந்தும்விட்டாள் பெண். “மடியில உட்கார வந்ததுக்கே அப்படி பதறுனீங்க..?” என்றாள் இவள்.

“பதறினேனா..? இல்லையே..?” கம்பனின் கண்ணோரம் சிறு வெட்கத்தின் சுருக்கம்.  அவ்வளவு வேகமா எழுந்து உட்கார்ந்து கேட்க மாட்டாளாடா..? தன்னை தானே குட்டி கொண்டான்.

“அப்போ என்னமோ பொண்டாட்டியா இருந்தா தான் என்னை பத்தி தெரிஞ்சுக்க முடியும்ன்னு சொன்னீங்க..? இப்போ இப்படி பேக் அடிக்கிறீங்க..?” காவ்யா ஆதங்கத்துடன் கேட்க,

“இனி என்னோட தானே இருக்க போறீங்க, முதல்ல என்னை புரிஞ்சுப்பீங்களாம், அப்பறம் தானே தெரிஞ்சுக்கவும் செய்வீங்களாம்..” என்றான் கணவன்.

“நம்ம கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நேரத்துல என்கிட்ட வரவே கூடாதுன்னு இருந்தேன் சொல்றீங்க, என் கையை விடுறீங்க..? ஏன்..?” காவ்யா அதற்கு பதில் வேண்டும் என்று நின்றாள்.

கம்பன் மூச்சை இழுத்துவிட்டான். “நீ முதல்ல போய் கட்டில்ல உட்காரு, கை கட்டி ஸ்ட்ரிக்ட்டா கேள்வி கேட்கிறதுல ஏதோ டீச்சர், ஸ்டூடன்ட் பீல் வருது..” என்றான்.

காவ்யாவிடம் மெல்லிய சிரிப்பு. “நீங்க டீச்சருக்கு பயப்படுற ஆளா..?” என்றாள். கல்லூரியில் அவனை பார்த்தவள் தானே..?

“இந்த டீச்சர்  பயம் காட்டுறாங்க..” என்றான் கம்பன்.

“நீங்களும் பயப்படுறீங்க..? நம்புற மாதிரி சொல்லுங்க, என்னோட கேள்விக்கு பதில் சொல்ல இஷ்டமில்லன்னா நேரா சொல்லுங்க..” என்றவள், கட்டிலுக்கு சென்றமர்ந்தாள்.

“யாரும் அவங்களோட தோல்வியை, அவமானத்தை வெளியே பேச விரும்ப மாட்டாங்க..” என்றான் கம்பன்.

“நான் இப்போ உங்ககிட்ட வந்துட்டேன் தானே, அப்பறம் என்ன தோல்வி, அது இதுன்னு..” காவ்யா கேட்க,

“வந்துட்ட தான், ஆனா இது வேற, அது.. ம்ஹம்.. வேண்டாம்.. இன்னைக்கு கண்டிப்பா வேண்டாம், நீ என்னோட.. என் ரூம்ல..  என் பொண்டாட்டியா இருக்கிறதை பீல் பண்ண விடு, நைட் எல்லாம் நீ என்ன பண்ணுவியோன்னு தூக்கமே இல்லை, அவ்வளவு பதட்டம்..” என்றான்.

“ஆஹ்ன்.. நான் அப்படியா வராம இருந்திடுவேன்..” காவ்யா வேகமாக சொன்னாள்.

“காவியம் பதறுதே..” கம்பனிடம் சுவாரசியம். “உனக்கு என்னை கல்யாணம் பண்ற அளவு பிடிக்காதுன்னு தெரியும், எனக்கு ஓகே சொல்லிட்டாலும் எங்க என்னை நேர்ல பார்த்தா வேண்டாம் சொல்லிடுவோம்ன்னு கடைசி வரை பார்க்காம இருந்த தானே, அப்பறம் என்ன..?” கம்பன் சிரிப்புடன் கேட்டான்.

“என்ன.. என்னை இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கீங்க..?” காவ்யா ஆச்சரியத்துடனே கேட்டாள்.

“காவியம் எப்போ என்னை தெரிஞ்சுக்க போறீங்க..?” கம்பன் மறைக்க முடியா எதிர்பார்ப்புடன், ஆர்வத்துடன் கேட்டான். காவ்யாவிற்கும் புரிந்தது.

அப்படியென்ன இவருக்கு என்மேல ஒரு காதல்..? கணவனாகிவிட்டவனை பார்க்க, அவனும் அவளை தான் பார்த்திருந்தான். இருவரின் பார்வையும் பேச்சில்லாமல் உரச, ஐந்து வருடங்களுக்கு முன்பே பற்றி கொண்ட தீயின் மிச்சம் இன்னும் அவனுள் இருக்க, அதன் தகிப்பை தாங்க முடியா கம்பன் தன் பார்வையை விலக்கி கொண்டான்.

காவ்யாவிற்கு இதோ..  இந்த நொடி அவன் பார்வையில், அதன் எதிர்பார்ப்பில், இன்னும் ஏதோ ஒன்றில்.. உரசலின் கங்கு பற்ற தயாரானது. கம்பன் அதற்கு மேல் பேசவில்லை. கண் மூடி கொண்டான்.

காவ்யாவிற்கு அவன் கேள்விக்கு பதில் சொல்ல முனைப்பு. ஆனால் என்ன சொல்ல..? அவளும் அமைதியாக, அமைதி நீண்டு, தூக்கத்தில் முடிந்தது. கட்டிலில் படுத்து கொண்டாள். கம்பனுக்கு அவள் படுப்பது புரிந்தது. கண்களை திறக்கவில்லை. சிறிது நேரம் சென்று மனைவியை பார்த்தான். ஒரு பக்கமாக திரும்பி, ஒரு கையை தலை பக்கத்தில் வைத்து, மற்றொரு கையை கால் மேல் வைத்து படுத்திருந்தாள்.

‘புடவை மாத்தி வசதியா தூங்கியிருக்கலாம்..’ கணவன் நினைத்தான். ‘இவ்வளவு பூ எல்லாம் இவ வைச்சதே இல்லை, இப்போ பாரு..’ ஒரு புன்னகை. உடன் தனக்கான அந்த பூ என்பதில் சிலிர்ப்பும், ரசனையும். அப்படியே அவளை பார்த்தபடி தூக்கத்திற்கு சென்றான்.

கனவு அவனை கலைக்க ஆரம்பித்தது…

“உங்க அண்ணா என்ன பெரிய ரவுடியா..? எங்க அவனை எங்ககிட்ட வர சொல்லு பார்ப்போம், பெருசா உதார் காட்டுறான்,  பாவம் பார்த்து விடுறோம்..”

“நீ எங்க ஜுனியர் தானே, உன் அண்ணாகிட்ட சொல்ல மாட்டியா..? இன்னைக்கு மேட்ச் மட்டும் எதாவது ஆகட்டும், அப்பறம் இருக்கு அவனுக்கு, உனக்கு எல்லாம்..”

“என்ன எங்க மொத்த பேரையும் ஜெயிச்சிடுவானுங்களா, மெக்கானிக்கல்ன்னா பெரிய கொம்பா, சிதைச்சிடுவோம், முக்கியமா உன் அண்ணா, ஏதோ அவனுக்கு உங்க அப்பா முதலாளி சப்போர்ட் இருக்கிறதால தான் இவ்வளவு ஆட்டம்..? இல்லன்னா தெரியும் சங்கதி..”

“இருங்கடா இன்னைக்கே அவனை சம்பவம் செஞ்சு விட்டுடுவோம், பந்து அவன் தலையை தொடம போயிடுமா என்ன..?”

“அதானே..  என்ன சூர்யா செஞ்சிடலாமா..? சொல்லுடா.. சீனியர் கேட்கிறோம் இல்லை..” என்று சூர்யாவின் தோளை வலுவாக தட்டினர். முதல் வருட மாணவன் அவன். அவனின் சீனியர்கள் பேச பேச முழித்து தான் நின்றிருந்தான் உடன் அவனின் நண்பர்களும்.

“என்னடா பதில் சொல்ல மாட்டேங்கிற..? அண்ணா பாசமா, அதெல்லாம் கேம்பஸ்க்கு வெளியே புரிஞ்சுதா..?” ஒருவன் அதட்ட, சூர்யா தலையை சரி என்று கூட ஆட்டவில்லை.

“சீனியர்.. இவன் சொன்னா வீரா அண்ணா கேட்டுக்க மாட்டார்..” சூர்யாவின் நண்பன் ரோஹித் சொன்னான்.

“அதெப்படி கேட்டுக்க  மாட்டான், இவனை நாங்க பொளப்போம்ன்னு தெரிஞ்சா மேட்ச் விட மாட்டானா..?” மற்றவன் சூர்யாவை நெருங்கி கேட்டான். காவ்யா நண்பன் பக்கத்தில் நிற்க, இவளை உரசி நின்றான் அந்த சீனியர். பெண்ணுக்கு அப்படி ஒரு அருவருப்பு. சற்று தள்ளி நிற்க, அவன் மேலும் சூர்யாவை தட்டுவது போல இவளை நெருங்கினான்.

“என்னடா.. சொல்ற..? உன் அண்ணாவை பொளந்திடுவோமா..? நீ சொன்னா நான் செஞ்சிடுறேன்.. சொல்லுடா.. நான் தான் பர்ஸ்ட் பேட்டிங்..” என்று காவ்யாவை பார்த்தே பேசினான் அவன்.

சூர்யா அண்ணனை பற்றி ஒரு சொல் கூட பேச மாட்டேன் என்பது போல நின்றான். “பார்க்க தான் ஊமையாட்டம் இருக்கான், ஆனா அவன் அண்ணா திமிர் இவன்கிட்டேயும் இருக்குடா,  எவ்வளவு தெனாவட்டா நிக்கிறான் பாரு..” என்று அந்த சீனியர் சூர்யா நெஞ்சின் மீது அடித்து தள்ளிவிட, அவன் பேலன்ஸ் இல்லாமல் காவ்யா மேல் சாய்ந்தான். அந்த சீனியரும் வேண்டுமென்றே தான் இவள் மேல் தள்ளிவிட்டது புரிய, காவ்யாவின் பொறுமை பறந்துவிட்டது.

சூர்யா முதுகு மேல் தன் கை வைத்து தடுத்துவிட்டவள், “நீங்க கம்பன் சாரை செய்றதா இருந்தா செய்ங்க, அதை ஏன் சூர்யாகிட்ட சொல்லிட்டு இருக்கீங்க..? என்ன இவன் உங்களுக்காக பேசி மேட்ச் விட்டு கொடுக்க சொல்லனுமா..?” என்று கேட்டுவிட்டாள். அவளுக்கு இந்த கேங் அறவே பிடிக்காது. ஒழுக்கமற்ற, மட்டமான கூட்டம். கல்லூரியிலும் பிளாக் மார்க் இருக்கும் கேங் இது.

அவளுக்கு அண்ணா தைர்யம். சஞ்சய் முதலிலே தங்கைக்கு, “நீங்க அஞ்சு பேரும் மெரிட்ல சீட் வாங்கி போயிருக்கீங்க, இங்க எல்லாம் மெரிட்ல சீட் வாங்கிட்டு வரவனை விட பணம் கட்டி வரவங்க தான் அதிகம், உஷாரா இருங்க, எதாவது பிரச்சனைன்னா பயப்பட வேண்டியதில்லை. தைரியமா பேசு,  மேனேஜ்மென்ட்ல சொல்லு, என்கிட்டேயும் சொல்லு, நான் பார்த்துகிறேன்..” என்று அவ்வளவு தைரியம் கொடுத்திருக்கிறான்.

காவ்யாவிற்கும் இந்த கூட்டத்திற்கு பயப்பட வேண்டுமா என்பது தான் எண்ணம். “ஏய் என்ன சீனியரை எதிர்த்து பேசுற..?” ஒருவன் காவ்யாவை அதட்டினான்.

அந்த உரசி நின்றவனோ, “அதென்ன கம்பன் சார்.. அவன் பேர் வீரா தானே..” என்று சந்தேமாக கேட்டான்.

“கம்பன் வீரய்யன் மச்சான் அவன் பேரு, அதான் கம்பன் சார்..” என்று ஒருவன் சொல்ல,

“சரி கம்பன் அண்ணா சொல்லு, கம்பன் சாரா.. ஏன் அண்ணா எல்லாம் சொல்ல மாட்டிங்களா..?” என்றான் அவன். சுதர்சன்.. அவனுக்கு காவ்யா மேல் ஒரு எண்ணம். அது காவ்யாவிற்கும் இப்போது புரிந்துவிட்டது.

“அது என் இஷ்டம்.. நீங்க சொல்லாதீங்க..?” என்றுவிட்டாள்.

Advertisement