Advertisement

கம்பன் காதல் கொண்டு 16

கம்பன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறான் என்பது அவன் வார்த்தையிலும், கரகரத்த குரலிலும் புரிய, காவ்யா கண்களை விரித்து தான் அவனை பார்த்தாள். “ஏன்.. ஏன் இப்படி..?” என்று மெல்லிய குரலில் கேட்கவும் செய்தாள்.

“எனக்கு நீ வேண்டவே வேண்டாம்ன்னு நினைச்சிருந்தேன், ஆனா இப்போ.. இப்படி உன் புருஷனா கை பிடிச்சு நிக்கிறேன்..” என்றான் கம்பன்.

“அதுக்கு என்ன பண்ண முடியும்..? நீங்க தானே என்கிட்ட கேட்டீங்க..?” என்றாள் காவ்யாவும் சட்டென. கம்பன் முகம் உடனே மாறிவிட்டது. அவள் கையை விட நினைக்க, காவ்யா இறுக்கி பிடித்தாள் இப்போது.

கம்பன் அவளை பார்க்க, “என்கிட்ட வர வரைக்கும் தான் உங்க சாய்ஸ், வந்துட்டீங்க இல்லை, அப்படியே இருங்க..” என்றாள் கோவத்தை கட்டுப்படுத்தி.

“நான் கேட்டு தான் நீ என் லைஃபுக்குள்ள வந்த, இல்லைன்னு சொல்லலை, அதுக்காக அதை உடனே சொல்லணுமா..?” அவன் குரலில் அவ்வளவு ஆதங்கம், குன்றல்.

“கை பிடிச்ச கொஞ்ச நேரத்துக்குள்ள விட நினைச்ச உங்களுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்..” காவ்யா மூக்கு விடைக்க சொன்னாள்.

“ஹேய்.. அது..”

“வீரா கிளம்பணும்.. டைம் ஆச்சு..?” சஞ்சய் அவர்களை நெருங்கினான். எல்லாம் இவர்களுக்காக காத்திருப்பது புரிய, பேச்சை தொடர முடியாமல் மணமக்கள் கிளம்பினர்.

கோவிலில் இருந்து நேர கம்பன் வீடு சென்றனர். அங்கு தான் எல்லோருக்கும் உணவு. மொத்த விருந்தினர் எண்ணிக்கை நூறுக்குள் தான் அடங்கும். இருபக்கமும் மிக நெருங்கிய உறவுகளுக்கு மட்டுமே அழைப்பு. அதில் காவ்யாவின் நண்பர்கள், சஞ்சயின் வருங்கால மாமனார் குடும்பம், சூர்யாவின் மாமனார் குடும்பமும் அடக்கம்.

மணமக்களின் புது காரை சஞ்சய் ஓட்டி கொண்டு வர, உடன் அவன் வருங்கால மனைவி சாதனா. காரில் வைத்து கம்பனுக்கு அவளை அறிமுகம் செய்து வைத்தான் சஞ்சய். சாதனாவும் முறையே ‘அண்ணா’ என்றழைத்து கம்பனிடம் சகஜமாக பேச, காவ்யா வெளியே பார்த்தபடி வந்தாள்.

கம்பன் பேசியபடி சீட்டில் இருந்த அவள் கையை பிடிக்க போக, அவள் பட்டென எடுத்து தன் மடிமேல் வைத்துகொண்டாள். கம்பன் முகம் சுருங்கி, இறுகி போனது.

கார் அவர்கள்  வீட்டை அடைய, முறையாய் தம்பதிகளை நிற்க வைத்து ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து மற்ற சடங்குகள் முடிய, பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர் மணமக்கள்.

ராம்தாஸும் கோவிலில் இருந்து அவரின் மனைவியுடன் கம்பன் வீட்டிற்கு வந்திருக்க, கம்பன் முறையே மனைவியுடன் நின்று அவரிடம் ஆசீர்வாதம் வாங்கியவன், புகைப்படம் எடுத்து கொண்டான். உணவுக்கும் தானே அழைத்து சென்று,  முன் நின்று பரிமாறினான். உடன் சஞ்சய்யும் இருந்தான்.

வாசுதேவன் கோவிலில் வைத்து  ராம்தாஸை வரவேற்று பேசியிருந்தார். ஹலோ சார்.. வாங்க சார்.. என்பது போல தான். ராம்தாஸும் அவரிடம் முகம் எல்லாம்  காட்டவில்லை. ஆனால் அந்த கோவம் உள்ளுக்குள் இன்னும் இருக்க, மேற்கொண்டு அவரிடம் பேசவில்லை. வாசுதேவனுக்கும் தன் தவறு புரியாமல் இல்லை. ஆனால் அவர் நியாயம் அவருக்கு. குடும்பம், உயிர் கண் முன் இருக்க எல்லோரும் சுயநலவாதிகளே.

ராம்தாஸ் உணவு முடித்து இந்திராணியிடம் பேசி கொண்டிருக்க, பாலா தான் அவரின் பாதுகாப்பில் இருந்தான். கம்பன் அவனிடம் அது பற்றி கேட்டு கொண்டிருக்க, “பெரிய மாப்பிள்ளை..” என்று வந்தார் சூர்யாவின் மாமனார் சோமசுந்தரம்.

பெரிய மாப்பிள்ளையா..? கம்பன் அவரை பார்க்க, “ராம்தாஸ் சார்கிட்ட இன்ட்ரோ கொடுங்க பெரிய மாப்பிள்ளை..” என்றார் அவர்.

அதானே.. கம்பன் தம்பியை தேடி, “சூர்யா..” என்றான் சத்தமாக. அவன் காவ்யாவுடன் இருந்தான். உடன் மூன்று நண்பர்களும்.

சூர்யாவிற்கு அண்ணன் திடீரென கூப்பிட்டதும் படபடப்பு. இதுவரை அவனை நேரில் பார்க்காமல் ஓடி ஒளிந்தாயிற்று. இன்றும் அங்கும் இங்கும் சுற்றி அண்ணா முன் வராமல் இருந்தான். இப்போது கம்பனே கூப்பிட்டுவிட, அவ்வளவு திணறினான்.

“டேய் அண்ணா உன்னை தாண்டா கூப்பிடுறார், எழுந்து போ..” அவனின் நண்பன் தினேஷ் வேறு தோள் தட்டினான். காவ்யாவிற்கு புரிந்தது நண்பனின்  நிலை. எத்தனை நாள் இப்படி இருக்க முடியும்..? என்றாவது ஒருநாள் அவரை நேரில் எதிர்கொள்ள தான் வேண்டும்.. காவ்யா அமைதியாக இருந்தாள்.

சூர்யா தோழியை தான் கெஞ்சலாக பார்த்தான். “சூர்யா..” கம்பன் திரும்ப கூப்பிட்டுவிட, “வா காவ்யா..” என்றான் சூர்யா.  அவர்களின் நண்பர்கள் புரியாமல் பார்க்க, காவ்யா எழுந்து அவனுடன் சென்றாள்.

மனைவியும் உடன் வருவதை பார்த்த கம்பன் புருவம் சுருக்கினாலும், “உன் மாமனாரை ராம்தாஸ் சார்கிட்ட அறிமுகப்படுத்தி வை..” என்றான் தம்பியிடம்.

அவன் அண்ணனை நேராக பார்க்காமல் “சரி..” என்று தலையசைத்து உடனே அங்கிருந்து செல்ல, சோமசுந்தரம் தானே  மருமகன் பின் செல்ல வேண்டியிருந்தது.

“என்ன அவனுக்கு..?” கம்பன் மனைவியிடம் கேட்டான்.

“கெட்டவர் நல்லவரா மாறி, நல்லவனை  கெட்டவனா மாத்திட்டார்..” என்றாள் அவள்.

கம்பனுக்கு மனைவி தன்னை தான் சொல்கிறாள் என்று புரிய,
“இப்போவும் நான் நல்லவன் எல்லாம் இல்லை..” என்றான்.

“எனக்கும் அப்படி தான் தெரியுது..” காவ்யாவும் சொல்ல,

“தாலி ஏறின கொஞ்ச நேரத்துல என்னை ஏறுற இல்லை..” என்றான் கணவன். காவ்யா முகம் திருப்பி சென்றாள். கம்பன் அவளை ரசிக்கவே செய்தான்.

“சார்..” பாலா அவனை கலைக்க, கம்பன் மனைவியிடம் இருந்து தன் பார்வையையும், கவனத்தையும் திருப்பியவன், பாலாவிற்கு மேலும் சில இன்ஸ்ட்ரக்ஷன் சொன்னவன், ராம்தாஸிடம் சென்றான்.

சோமசுந்தரம் அவரிடம் ஏதோ பிஸ்னஸ் கேட்டு கொண்டிருக்க, “சார் கிளம்பலாம்..” என்றான் கம்பன்.

ராம்தாஸ் மனைவியுடன் எழுந்து கொண்டவர், “பார்க்கிறேன்..” என்று மட்டும் சோமசுந்தரத்துக்கு சொல்லிவிட்டு, எல்லோரிடமும் பொதுவாக கை குவித்து விடைபெற்று கொண்டார்., சஞ்சயும் அவரை வழியனுப்ப வர, ராம்தாஸ் காருக்கருகில் சென்று நின்றார்.

மனைவியை காருக்குள் அமர சொன்னவர், “உங்க அப்பாவை வர சொல்லுங்க..” என்றார் சஞ்சயிடம். சஞ்சய் ஏன் என்று சற்று கலவரத்துடன் தான் கம்பனை பார்த்தான். திருமண வீட்டில் எல்லாம் இருக்கும் நேரம் வேறு. கம்பன் ஆறுதலாக கண் காட்ட, சஞ்சய் சென்று அப்பாவை அழைத்து வந்தான்.

வாசுதேவனும்  வர, “உங்க பையனுக்கு கைட் பண்ணுங்க, அப்படி எல்லாம் உங்களை விட்டுட மாட்டோம்..” என்றார் ராம்தாஸ் அழுத்தமாக. கடினம் முகத்தில் இருந்தது நிச்சயம்.

வாசுதேவன் அந்த நேரம் மனதார “சாரி..” சொன்னவர், “நான் கைட் பண்றேன்..” என்றுவிட்டார்.

 “இன்னும் இரண்டு நாள் பிரச்சாரம் எல்லாம் முடிஞ்சிரும், அப்பறம் நம்ம வேலை தான், பார்த்துக்கோங்க சஞ்சய்..” என்ற ராம்தாஸ், கம்பன் வீரய்யன் தோள் தட்டி, கிளம்பிவிட்டார்.

அடுத்து மணமக்களுடன், மற்றவர்கள் உணவும்  முடிந்தது. வீட்டில் ஓரிடத்தில் புகைப்படம் எடுக்க அலங்காரம் செய்திருக்க,  மணமக்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்திராணி வர, கம்பன் உடல் தளர ஆரம்பித்தது. அவர் மிக்க மகிழ்ச்சியுடன் மகன், மருமகள் கை பிடித்து நின்றார்.

கம்பன் அம்மாவின் கையை இறுக்கமாக பிடிக்க, இந்திராணி மகனை திரும்பி பார்த்தவர், “என்ன வீரா..” என்றார். மகன் எதுவும் இல்லையென தலையசைக்க, “சந்தோஷமா இருடா..” என்றார் அதட்டலாக, அன்பாக, அதிகாரமாக.

அடுத்து சஞ்சய், சாதனா மணமக்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். “சூர்யா நீ மருமகளோட போ..” என்று இந்திராணி இரண்டாம் முறையும் சொல்லவே, இருவரும் சென்றனர்.

மணமக்களில் யார் பக்கத்தில் நிற்க என்று இருவருக்கும் தடுமாற்றம். ஆதிராவிற்கு காவ்யா பக்கம் நிற்க பிடிக்கவில்லை, கம்பன் பக்கமும் முடியாது. சூர்யாவிற்கோ அண்ணன் பக்கமா என்று ஜெர்க் ஆனது.

“சீக்கிரம் நில்லுங்க சார்..” போட்டோகிராபர் சொல்ல, கம்பன் இருவரையும் வேடிக்கை பார்த்திருந்தான். காவ்யாவிற்கு நண்பனின் தடுமாற்றம் ரசிக்கவில்லை.

“பேசாம அவங்களை மட்டும் தனியே எடுத்துட்டு கிளம்ப சொல்லு..” என்றான் கம்பன் வேறு மனைவியிடம்.

“உங்க தம்பி தானே, கூப்பிட மாட்டிங்களா அவனை, கூப்பிடுங்க..” காவ்யா சொல்ல,

“ஓஹ்.. காவியம் அதிகாரம் பண்றாங்க..” என்றான் கணவன் புருவம் தூக்கி.

“ஏன் காவியத்துல அதிகாரம் இருக்கு தானே..?” மனைவியும் கேட்க,

“நிச்சயமா.. அதிகாரம் இல்லாம காவியம் எப்படி..?” கம்பன் சொன்னவன்,

“சூர்யா..” என்று தம்பியை அழைத்து, அவன் கை பிடித்து தன் பக்கம் நிற்க வைத்தான். சூர்யா இதை எதிர்பார்க்காமல் அண்ணனுடன் நிற்க, ஆதிரா வேறு வழி இல்லாமல், காவ்யா பக்கம் முகம் தூக்கி வைத்து நின்றாள். அப்படியே போட்டோ பதிவாக, அதன் பின் நண்பர்கள் வந்தனர்.

சூர்யா இந்த முறை தோழியின் பக்கம் சென்று நின்று கொள்ள, தினேஷ் தான் கம்பன் பக்கம். காவ்யாவுடன் நண்பர்கள் நால்வர் இருப்பது போலவும் போட்டோ எடுத்து முடிக்க, காவ்யா பெற்றவர்களுடன், ஜோடியாக சில எடுத்து முடித்தனர்.

இறுதியாக, “இருங்க..” என்ற கம்பன், சஞ்சய்யை அழைத்து  மனைவியுடன் வைத்தும்,  தனியேவும்  எடுத்து கொண்டான்.

“தனியா ஏண்டா..?” சஞ்சய் கேட்க,

“ஆமா.. என் அண்ணாகூட நானே தனியா எடுக்கலை.. நீங்க என்ன..?” என்று காவ்யாவும் கணவனிடம் கேட்டாள்.

“உங்க அண்ணாவே சொல்வார்..” என்றான் கம்பன் குறும்பாக.

அவள் அண்ணனை பார்கக, “என்னை எதுக்கு பார்க்கிற..? உன் புருஷனுக்கு என்னை பிடிக்குமாம், இம்ப்ரஸ்’ன்னு ஏதேதோ சொல்றான், எனக்கு ஒன்னும் தெரியாது..” அண்ணன் சொல்லி சென்றுவிட்டான்.

கம்பன் தனியே சென்று போட்டோகிராஃரிடம் ஏதோ சொல்லி வந்தான். நேரமும் மதியத்தை நெருங்கியிருக்க, உறவுகளும் மதிய விருந்தை முடித்து கிளம்பினர். இறுதியாக இரு குடும்பம் மட்டும் நின்றனர்.

Advertisement