Advertisement

தோட்டத்தில் இருந்தான் அவன். கையில் மொபைல் இருக்க, கண்கள் அதை வெறித்து கொண்டிருந்தது. இவர் சென்று அவன் முன் நின்றார். நிமிரவே இல்லை அவன். ‘ஆள் நிக்கிறது கூட தெரியலையா, அவ்வளவு அலட்சியமா..?’ பட்டென அவன் தோள் தட்டினார்.  பார்த்தான். இவரை  நிமிர்ந்து பார்த்தான்.

அவனிடம் அலட்சியம் இல்லை. அந்த கண்கள்.. சோர்ந்து வாடியிருந்த முகம்.. எதையோ யாசிக்கும் பாவனை.. ராம்தாஸ் நிதானமானார், கனிவாக.. “என்ன வீரா..?”  என்றார் அவன் தோள் மேல் கை வைத்து ஆறுதலாக.. திரும்பி அந்த கைகளை பார்த்தவன், என்ன நினைத்தானோ பிடித்து கொண்டான். இறுக்கமாக தன் கைகளுக்குள் பொத்தி வைத்து கொண்டான்.

அவனுக்கான முதல் ஆறுதல். இவனை விசாரிக்கும் முதல் மனிதர். இந்த ஒரு வாரமாக அப்பா இழப்பு அவனை பாதிக்காதது போல நடந்து கொண்டவன், அந்த நொடி உடைந்தான். அவரின் கையில்  முகம் புதைத்து அழுதான். சத்தமே இல்லாத கண்ணீர், அவர் கையை தாண்டி நிலத்தில் வீழ்ந்தது.

அன்று போல இன்று நிற்கிறான். அவர் கை பிடிக்கிறான், “என்ன ஆச்சு..? ஏதாவது பிரச்சனையா வீரா..?” என்றார்.

“நான் எப்போவும் சுயநலவாதி தான் இல்லை அய்யா..” என்றான் கம்பன்.

“ஏண்டா..? என்ன..? யார் என்ன சொன்னா..?” ராம்தாஸ் கேட்க,

“தோணுச்சு அய்யா..” என்றான்.

“அதெப்படி சும்மா தோணுமா..?” ராம்தாஸ் கேட்க,

“நான் கிளம்புறேன்..” என்றான் அவர் கை விட்டு.

“வீரா.. நில்லு.. என்னன்னு சொல்லிட்டு போ, அந்த பொண்ணு ஏதும், வாசுதேவன் வெளியே மாப்பிள்ளை பார்க்கிறாரா..? சொல்லுடா நான் பார்த்துகிறேன்..”

“எனக்கு தான் சரி சொல்லியிருக்கா..” என்றான் கம்பன்.

“அப்புறம் என்னடா.. சந்தோசமா இல்லாம இதென்ன..? அப்பாவை மிஸ் பண்றியா..? அப்படி தான் இருக்கும், பரசு உன்னை பார்த்து சந்தோஷபட்டுட்டு தான் இருப்பார், நீ ஹாப்பியா இரு, ம்ம்.. எப்போ கல்யாணம் பேச போறாங்க,  நாம இந்த வேலை முடிஞ்சதும் கல்யாணம் வைச்சுக்கலாம், சரியா..” என்று அவனிடம் மேலும் பேச பேச, கம்பன் முகம் ஓரளவு தெளிந்தது. காபி வரவைத்து கொடுத்தார்.

அவருக்கு போன் வர, “பார்த்து போ..” என்று சொல்லி சென்றார்.

கம்பன் காரை கிளப்பினான். என் அப்பா கண்டிப்பா சந்தோஷப்படுவார்..  நம்பிக்கை கொண்டான். அவனின் காவியத்தை பார்க்க வேண்டும். ஆனால் பயம். என்னை நேரில் பார்த்து திரும்ப அவள் ஏதும் யோசித்தால்..? அவனுக்கு தெரியும் இவனை முழுதும் பிடித்து, விருப்பப்பட்டு எல்லாம் அவள் சம்மதம் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

அன்று அவள் வீடு சென்ற போது கூட அவனை திடீரென பார்த்த இனிய ஆச்சரியம்,  மகிழ்ச்சி போல அவளிடம் எதுவும் இல்லை. அவனுக்காக பார்த்து போக சொன்னாள். தனக்காக பெண் யோசிக்கிறாள், பார்க்கிறாள் என்று புரிய, சிறு நம்பிக்கை அன்று முளைத்தது  நிச்சயம். இன்று அவன் காவியமாக மாற அவள் சம்மதமும் சொல்லியிருக்க, கட்டுப்படுத்த முடியாமல் அவள் வீடு வழி சென்றான். சஞ்சய்க்கு அழைத்தான். “நீ என் மச்சானா..?” என்றான் சஞ்சய் எடுத்ததும்.

“ஏன் அதுல ஏதும் பிரச்சனையா லாயர் சாருக்கு..?” கம்பன் கேட்க,

“குரலே ஜோஷா வருதே.. அவ்வளுவா என் தங்கச்சி சம்மதத்துக்கு காத்திக்கிட்டு  இருந்த..?” சஞ்சய் கிண்டலாக கேட்டான்.

“இப்போ உங்க வீட்டுக்கு வெளியே தான் இருக்கேன், நேர்ல வாங்க எவ்வளவு’ன்னு சொல்றேன்..” என்றான்.

“வந்துட்டியா..? தெரியுமே..” சஞ்சய் சொல்லி வாசலுக்கு நடந்தவன், நின்று காவ்யா அறைக்கதவை தட்டினான்.

“என்னடா..?” காவ்யா கதவு திறந்து கேட்க,

“வீரா வெளியே இருக்கார்..” என்றான். அந்த பக்கம் லைனில் இருந்த கம்பனுக்கு என்ன சொல்வாள் என்ற குறுகுறுப்பு.

“இருக்கட்டும்..” என்று கதவை மூடிவிட்டாள்.

‘அதானே எனக்கு அவளை தெரியாம இருக்குமா..?’ காதலின் கர்வம். காதலியை புரிந்த கர்வம். ஏமாற்றம் கூட பின்னுக்கு சென்றுவிட்டது.

‘அப்புறம் எதுக்கு அவனுக்கு சம்மதம் சொன்னா..? பார்க்கிற இன்டிரெஸ்ட் கூட இல்லையா..?’ சஞ்சய் அண்ணனாக யோசித்தபடி வெளியே வந்தான். கம்பன் காரில் சாய்ந்து நின்றிருந்தான். “நீ என் தங்கச்சிய ஏதும் மிரட்டினியா..?” சஞ்சய் கேட்டான்.

“மிரட்டினா உன் தங்கச்சி பயந்துக்குவான்னா இத்தனை வருஷம் நான் காத்திருந்திருக்கவே வேண்டாம்..” என்றான் கம்பன்.

“அதுவும் சரி தான்..” சஞ்சய் யோசனையாக தலையாட்ட,

“அவளுக்கு என்னை நேர்ல பார்த்தா வேணாம் சொல்லிடுவோம்ன்னு பயம்..” என்றான் கம்பன்.

சஞ்சய் ஆச்சரியமாக பார்க்க, “நீங்க ரொம்ப குழம்புவீங்க தான் சொன்னேன், இனி ஒன்னும் பண்ண முடியாது, சீக்கிரம் கல்யாணம் வைக்க பாருங்க..” என்றான்.

“நாளைக்கே வச்சுக்கலாமா..?” சஞ்சய் கேட்க, கம்பன் தோள் குலுக்கினான். “உன்கிட்ட பேச முடியாது.. வா உள்ள போலாம்..” என்று அழைத்தான்.

“என் மாமனார், என் காவியத்தை டென்சன் பண்ண வேண்டாம், நான் இப்படியே கிளம்புறேன்..” என்றான்.

“அப்புறம் எதுக்கு வந்த..?” சஞ்சய் கேட்க,

“உங்களை பார்க்க தான், பார்த்து ரொம்ப நாள் ஆச்சு இல்லை, அதான்..”

“நீ முதல்ல கிளம்பு..” என்றான் சஞ்சய்.

கம்பன் சிரித்தபடி, “அடுத்த மாசம் கல்யாணம் வைக்க முடியுமா பாருங்க..” என்றான்.

“ஏன் அடுத்த மாசம், பயமா காவ்யா மேல..” சஞ்சய் கேட்க, கம்பன் பதில் சொல்லாமல் கிளம்பிவிட்டான். உண்மையா..? அடப்பாவி.. என்ன நடக்குது இவங்களுக்குள்ள.. சஞ்சய் உள்ளே சென்றான்.

இந்திராணி பெரிய மகன் வீடு வரவும் அமர வைத்து திருமண ஏற்பாடு பற்றி பேசினார். “இந்த வார வெள்ளி நல்ல நாளா இருக்கு, அன்னைக்கே உறுதி பண்ணிடலாம், கல்யாணம் மூணாவது மாசம்..”

“இல்லைம்மா.. அடுத்த மாசம் பாருங்க..” என்றான் மகன் இடையிட்டு.

“ஏண்டா.. அதுக்குள்ள எல்லா ஏற்பாடும் பண்ணிட முடியுமா..? பொறுமையா..”

“ம்மா.. ப்ளீஸ்.. செய்ங்க, பெரியவங்ககிட்ட, காவ்யா வீட்ல பேசி முடிங்க..” என்று அவர் கை பிடித்தவன், “அப்புறம் கல்யாணம் நம்ம ஏரியா முருகன் கோவில்ல தான் ம்மா..” என்றவன், அவர் பதிலை எதிர்பார்க்காமல் ரூம் சென்றுவிட்டான்.

இந்திராணி தான் இவ்வளவு சீக்கிரம் முடியுமா என்று அமர்ந்திருந்தார். அடுத்த நாள் பெரியவரிடமும், சுதாவிடமும் பேசினார். அவர்கள் வீட்டின் பெரியவர் சரி என்று உடனே நாள் பார்த்து சொன்னார். சுதா மறுத்தார். “இன்னும் இருபது நாள் கூட இல்லை. ஏன் இவ்வளவு அவசரம்..?” என்றார்.

காவ்யாவிற்கு தெரிய வர, அமைதி மட்டுமே. சஞ்சய் “சரி பண்ணிடலாம் விடுங்கம்மா..” என்றான்.

காவ்யா அண்ணனை முறைத்து  பார்த்தவள், “அவ்வளவு அவசரமாடா  என்னை துரத்திட்டு சாதனவை கட்டிக்க..?” என்றாள்.

“பின்ன இல்லையா..? நீ முதல்ல கிளம்பு தாயே..” சஞ்சய் அவளை வெறுப்பேத்த,

“முதல்ல இதை பேசுங்க, எப்போ எது முக்கியம்ன்னு தெரியுதா உங்களுக்கு..?” சுதா கோவமாக பேசினார்.

வாசுதேவன் “முடியாது சொல்லு..” என்றார்.

“முதல்ல கம்பன் வீரய்யனை மாப்பிளையா ஒத்துக்கிட்டதே நீங்க தான்ப்பா மறந்துடாதீங்க..” என்றான் சஞ்சய்.

“அது அப்போ..?”

“ப்பா.. ப்ளீஸ்..” சஞ்சய் சொல்ல, சுதா, காவ்யா இருப்பதால் வாசுதேவன் அமைதியாகிவிட்டார்.

இவர்கள் முடிவெடுக்க முடியாமல் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டே இருக்க, அந்த வெள்ளியும் வந்துவிட்டது. இந்திராணி குடும்பம் உறவுகளோடு காவ்யா வீடு கிளம்பினர். ஆதிரா முகம் தூக்கி வைத்து தான் கிளம்பினாள். சூர்யா திணறி நிற்க, கம்பன் வெளியில் இருந்தவன் போன் செய்து, “தான் வரவில்லை..” என்றான்.

சூர்யா அதில் நிம்மதியாக, “என்னடா கடைசி நேரத்தில..” இந்திராணி டென்ஷன் ஆகிவிட்டார்.

“ம்மா.. ப்ளீஸ்.. நீங்களே பார்த்து முடிச்சுட்டு வாங்க..” என்று வைத்துவிட்டான் மகன்.

இவர்கள் காவ்யா வீடு செல்ல, அங்கும் உறவுகள் நிறைந்திருந்தனர். காவ்யாவின் நண்பர்களும் வந்துவிட்டிருந்தனர். கம்பன் இல்லாதது தவிர வேறு ஒரு குறையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் உறுதி முடித்தனர். வாசுதேவன் கூட மலர்ந்த முகமாக தான் இருந்தார்.

காவ்யாவிற்கு பூ வைத்து, நகை பூட்டினர். அவளின் போட்டோ கம்பனுக்கு சென்றது. பார்த்து கொண்டான், அடிக்கடி பார்த்து கொண்டான். திருமணம் அடுத்த இருபது நாளில் என்று முடிவானது. சஞ்சய், இந்திராணியால் அதுவும். குறைந்த நாட்கள் தானே உடனே திருமண வேலைகளை ஆரம்பித்துவிட்டனர்.

அன்றே நாள் நன்றாக இருப்பதால் பத்திரிக்கை அடிக்கவும், மாங்கல்யம் செய்யவும் கொடுத்துவிட்டு தான் மாப்பிள்ளை வீட்டினர் கிளம்பினர். முகூர்த்த பட்டு எடுக்க அடுத்த நான்காம் நாளே சென்றனர். அதற்கும் கம்பன் இல்லை. காவ்யாவும் கேட்டு கொள்ளவில்லை. என்னவோ அமைதியாகவே இருந்தாள்.

திருமணம் கோவிலில் என்பதால் பெரிதான ஆடம்பரம், ஏற்பாடு இல்லை. ரிசப்ஷன் எல்லாம் நான் சொல்றேன் என்றுவிட்டான் கம்பன். நெருங்கிய உறவுகள் மட்டுமே. திருமண நாளும் வந்தது.  அதற்கு முன்னான சடங்குகள் நிறைவாக அவரவர் வீட்டில் நடந்தது.

ராம்தாஸ் ஒருவருக்கு மட்டும் கம்பன் பத்திரிக்கை வைத்து அழைத்தான். அவர் “இப்போ ஏண்டா..? இந்த வேலை ஆரம்பிக்கும் போது போய்.. போடா..” என்று கடிந்து கொண்டாலும் திருமணத்திற்கு மனைவியுடன் வந்தார்.

முகூர்த்த நாள் அன்று முதலில் கம்பன் கோவில் வந்தான். பின்னால் காவ்யா. இருவரின் பார்வையும் மற்றவர் மீது படிந்தது. ஒரு நொடி தான். அதன்பின் மணமக்களாக இருவரும் அருகருகே நின்றனர்.

சடங்கு சம்பிரதாயம் முடிந்து மாங்கல்யம் கம்பன் வீரய்யன் கைக்கு வந்தது. கனத்தது மாங்கல்யம் அவனுக்கு.  காவ்யா கை குவித்து மாங்கல்யம் ஏற்க நின்றவள், தாமதத்தில் நிமிர்ந்து அவனை பார்த்தாள். படபடப்பில் அவன். “அவ்வளவு பயமா இருந்தா நான் வேணா உங்களுக்கு கட்டிடவா..?” என்றாள் காவ்யா மெல்லிய குரலில்.

“ஏன் உனக்கு பயமில்லையா..?” கம்பன் உண்மையாகவே கேட்டான்.

“இல்லை..” என்ற காவ்யா திரும்ப கை குவித்து கடவுளை வேண்டி நிற்க, கம்பன் அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு, காவியத்தை தன்னுடன் இணைத்தான். உடன் குங்குமம் வைத்து, அவள் கையுடன் தன் கையை பிணைத்து கொண்டான். சுற்றி இருக்கும் யாரையும் அவன் கவனத்தில் கொள்வதாகவே  இல்லை.

கம்பனின் சிலிட்ட உள்ளங்கையில், காவ்யா தன் உள்ளங்கை சூட்டை அவனுக்கு கொடுத்தாள். அவள் விரல்கள் பிணைந்ததில், “நன்றி சொன்னா ஏத்துக்குவியா..?” என்றான் கம்பன்.

“ஏன்  உங்களுக்கு வாழ்க்கை கொடுத்துக்காவா..?” காவ்யா கேட்க,

“வாழ காரணமா வந்ததுக்கு..” என்றான் கம்பன் வீரய்யன்.

காவ்யா கண்களை விரித்து கணவனை பார்க்க, “நன்றி மிசஸ் காவ்யா கம்பன்..” என்றான் அவன் கரகரத்த குரலில்.

Advertisement