Advertisement

கம்பன் காதல் கொண்டு 15

நம்பத்தான் முடியவில்லை கம்பன் வீரய்யனை திருமணம் செய்ய காவ்யா சம்மதம் சொல்வாள் என்று..!  அவளின் குடும்பம் மட்டுமில்லை, கம்பன் வீரய்யனின் குடும்பமும் கூட.

ஏன் அவளின் நண்பர்களும்  அதிர்ந்து, “பிராங்க் ஏதும் பண்றியா காவ்யா..?” என்று  கேட்டனர்.

இதுநாள் வரை கம்பன் மேல் தான் கொண்ட எண்ணங்களை காவ்யா மறைத்ததே இல்லையே..? ஒரு நாள் ஒரு முறை கூட கம்பன் பற்றி சாதாரணமாக கூட பேசியே  இராதவள், இன்று அவனுடன் தன் வாழ்க்கையையே பிணைக்க போகிறாள் என்றால்..? சுதா மகளை சந்தேகமாக பார்க்க, வாசுதேவன் அதிருப்தியுடன் பார்த்தார்.

ஏன் இந்த திடீர் மாற்றம்..?  சஞ்சய்  தங்கையிடம் தனியே விசாரித்தான். “கம்பன் வீரய்யனுக்கு நீ கான்பிடண்ட்டா சம்மதம் சொல்ற மாதிரி எனக்கு தெரியல காவ்யா,  இன்னும் கொஞ்சம் கூட டைம் எடுத்து யோசி..” என்றான்.

காவ்யாவோ, “இல்லைண்ணா.. எனக்கு  ஓகே  தான்..” என்றாள்.

“பிடிச்சிருக்கு, விருப்பம் இருக்குன்னு சொல்ல மாட்டேங்கிறியே..?” சஞ்சய் கூர்மையாக கேட்டான்.

“ண்ணா.. எனக்கு தெரியும், என் லைப் இது, அப்படி எல்லாம் ரிஸ்க் எடுத்திட மாட்டேன், என்னமோ எனக்கு.. எனக்கு அவர் மேல ஒரு நம்பிக்கை இருக்கு, ஹோப் குட்’ண்ணா..” என்றாள்.

“ஹோப் குட்’ன்னா என்ன மீன் பண்ற நீ..? யூ டிசர்வ் தி  பெஸ்ட் காவ்யா..”

“ண்ணா.. ப்ளீஸ்.. எனக்கு கம்பன் சார் ஓகே தான், என்னால.. ம்ப்ச்..  நான் என்ன பீல் பண்றேன்னு என்னால உன்கிட்ட சொல்ல முடியல, விட்டுடேன்..” என்றாள் தங்கை.

நிறைய யோசித்திருக்கிறாள்..

“சரி.. இன்னும் ஒரு வாரம் டைம், நீ இதே பதிலை அப்போ சொல்லு, நான் மேற்கொண்டு மூவ் ஆன் பண்றேன்..” என்றுவிட்டான் சஞ்சய்.

“அவ்வளவு தானே..” காவ்யா தலையாட்டி சென்றுவிட்டாள்.

ஒரு வாரம் சென்று சஞ்சய் தங்கை முன் நிற்க, காவ்யாவிடம் அதே பதில் தான். “நீ யோசிச்சியா இல்லையா..?” சஞ்சய் கேட்க,

“உனக்கு அவர் மேல இவ்வளவு சந்தேகம் இருக்குன்னா, எதுக்கு அந்த ரிசப்ஷன்ல வைச்சு அவர் ப்ரோபோசலை கன்சிடர் பண்ண சொன்ன..?” என்று தங்கை கேட்டாள்.

“இப்போவும் சொல்றேன்  கம்பன் வீரய்யன் ஓகே தான். ஆனா உனக்கு விருப்பம் இருந்து எஸ் சொன்னா நான் சந்தோஷபடுவேன் காவ்யா, என்னமோ என்னால உன்கிட்ட அந்த ஹாப்பினஸ் பீல் பண்ண முடியல.. சரி விடு, நான் அம்மா, அப்பாகிட்ட பேசுறேன்..” என்றுவிட்டான்.

சுதாவும் இறுதியாக மகளிடம் பேசியே, இந்திராணிக்கு அழைத்தார். அன்றைய நாள் சுபநாளாக இந்திராணிக்கு அமைந்துவிட்டது. காலையிலே இப்படி என்று சுதா போன். அவருக்கு மகிழ்ச்சியில் கண்ணீரே  தேங்கிவிட்டது. “ரொம்ப சந்தோசம் சுதா.. எதிர்பார்க்கவே இல்லை, ரொம்ப சந்தோசம்.. கூடிய சீக்கிரம் நல்ல நாள் பார்த்து வீட்டுக்கு வரோம்.. ரொம்ப சந்தோசம்..” என்று வைத்தவர், பெரிய மகனை தேடினால் அவன் வீட்டிலே இல்லை.

சூர்யா ஆபிஸ் கிளம்பி செல்ல மனைவியுடன்  வர, இந்திராணி சின்ன மகன், மருமகளிடம் இப்படி என்று சொன்னார். சூர்யா, ஆதிரா இருவருக்கும் அதிர்ச்சி. காவ்யா அண்ணி என்பதில் சூர்யாவிற்கு அளவில்லா மகிழ்ச்சி, அண்ணனின் மனைவி என்பது சிறு கசப்பும், அவனுக்கு இன்னமும் அண்ணனின் சில விஷயங்களை ஏற்க முடியவில்லை, அதை கொண்டு அவன் செய்த தவறும் அவனை வருத்தி கொண்டே இருக்கிறதே..?

ஆதிராவிற்கோ பிடிக்கவே இல்லை. ஏற்கனவே காவ்யா மேல் கோவத்தில் இருப்பவளுக்கு, அவள் தான் அந்த வீட்டின் மூத்த மருமகளாக வர போகிறாள் என்பதில் அவ்வளவு கடுப்பு. “ஏன்..? அவங்க ஏன் அத்தை..? நாம வேற இடம் பார்க்கலாம்..” என்றாள் வேகமாக.

“ஏன் ஆதிரா..? காவ்யாக்கு என்ன..?” இந்திராணி கேட்க,

“எனக்கு பிடிக்கலை.. அவ இந்த வீட்டுக்கு பெரிய மருமகளா வர கூடாது..” என்றாள் சின்ன மருமகள் சட்டமாக.

இந்திராணிக்கு கோவம் வந்துவிட்டது. “உனக்கு பிடிக்கலைன்னா ஒன்னும் பண்ண முடியாது, உன் எண்ணத்தை யாரும் இங்க கேட்கலை..”  என்றுவிட்டார் அவள் முகத்துக்கு நேரே.

பெரிய மகனின் வாழ்க்கையை நினைத்து அவ்வளவு கவலை பட்டு கொண்டிருந்தவர் வயிற்றில் காவ்யா பால் வார்த்திருக்க, இவள் திரும்ப மண்ணள்ளி போட பார்க்கிறாளே..?

“இங்க பாருங்க உங்க அம்மா என்ன பேசுறாங்கன்னு, அமைதியா இருக்கீங்க..” ஆதிரா கணவனை பிடித்தாள்.

“உன் புருஷன் பேசினாலும் இதே பதில் தான் ஆதிரா..?” என்ற இந்திராணி, “சூர்யா.. உன் பொண்டாட்டிகிட்ட சொல்லிடு, இது என் பெரிய மகன் வாழ்க்கை, உன் பொண்டாட்டி அதுல தலையிட கூடாது, இப்போ பேசினது கடைசியா இருக்கணும், அப்பறம் நான் வேற மாதிரி முடிவெடுக்க வேண்டியிருக்கும்..” சின்ன மகனை கடுமையாக எச்சரித்து சென்றார்.

மனைவி பேசியது சூர்யாவிற்கு அறவே பிடிக்கவில்லை. அதிலும் காவ்யா பற்றி அவன் முன்னே.. “என்ன முடிவெடுப்பாங்களாம்..? என்ன மிரட்டுறாங்களா..?” ஆதிரா கணவனிடம் கத்த, அவன் இவளை சட்டை செய்யாமல் ஆபிஸ் கிளம்பிவிட்டான். ஆதிரா உடனே போன் எடுத்து அப்பாவிற்கு பேச, இந்திராணி அறையில் தலை பிடித்து அமர்ந்தார்.

‘கொஞ்ச நேரத்தில டென்ஷன் பண்ணிட்டாளே..? ச்சு.. இந்திராணி இவளை பார்த்தா ஆகாது, நீ வீட்டு பெரியவங்ககிட்ட பேசி, சட்டு புட்டுன்னு கல்யாண வேலையை ஆரம்பிக்கிற வழியை பாரு..’ என்று மனம் அறிவுறுத்த, போன் எடுத்தவர் முதலில் கம்பனுக்கு தான் அழைத்தார். அவன் எடுக்கவில்லை, ‘திரும்ப கூப்பிடட்டும்..’ என்று வீட்டின் பெரிய ஆளுக்கு அழைத்து பேசி, பெண் பார்க்க நாள் குறித்தார்.

“முன்னமே தெரிஞ்ச பொண்ணுன்னா கையோட உறுதி முடிச்சுக்கலாம்மா..” என்றார் அவர். இந்திராணிக்குக்கும் பிடித்துவிட்டது. உடனே சரி என்றுவிட்டவர், சுதாவிற்கு அழைத்து பேசினார்.

அவரும் ஏற்று கொள்ள அந்த நாளிலே எல்லாம் முடிவாகிவிட, கம்பனுக்கு மட்டும் இன்னும் விஷயம் தெரியவில்லை. காவ்யா ஆபிஸ் கிளம்பி சென்றுவிட்டாள். அவளுக்கு முன் நண்பர்கள் மொத்த பேரும் ஆபிசில். “காவ்யா.. இல்லை அண்ணி.. வாங்க அண்ணி வாங்க..” என்று சூர்யா ஆர்ப்பாட்டமாக வரவேற்றான்.

நண்பர்கள் கேள்வி கேட்டு அவளை படுத்தி எடுத்தவர்கள், இறுதியாக ட்ரீட் எனும் பெயரில் ஒரு பிரியாணியில் வாய் மூடினர். “உங்களை எல்லாம் ப்ரண்டா வைச்சுகிட்டு..” காவ்யா பில்லை கட்டி தலையில் அடித்து கொண்டாள். சூர்யா சிரித்து மகிழ்ந்தாலும் உள்ளே இன்னும் சிறு கசப்பு மிச்சமாய்.

இந்திராணி பெரிய மகன் எப்போது அழைப்பான் என்று காத்திருக்க, மாலை போல தான் கம்பன் போன் எடுத்து பார்த்தவன் அம்மாவிற்கு அழைத்தான். “எவ்வளவு நேரம் வீரா.. முக்கியமான விஷயம் சொல்லணும்ன்னு காலையில இருந்து வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்..” என்று இந்திராணி பூரிப்புடன்.

“அப்படி என்ன விஷயம்மா..?” என்றான் மகன் சோர்வாக. காலையில இருந்து அவனுக்கு டியூட்டி. ராம்தாஸுடன் வெளியே சென்றிருந்தான். மாநிலத்தின் எலெக்ஷன் பிரச்சாரம் வேறு ஆரம்பித்திருக்க, கூடுதல் கவனம் ராம்தாஸ் பாதுகாப்பில். பிரேக் எடுக்கவே இல்லை. ஓரிடத்தில் அமரவும் இல்லை. நாள் முழுதும் நின்றது நின்றபடி, நடந்தது நடந்தபடி தான் இருந்தான்.

இதோ இப்போது தான் ராம்தாஸை பத்திரமாக வீட்டில் விட்டு, தன் காரில் அமர்ந்து பெர்சனல் போன் எடுத்து பார்த்து அம்மாவிற்கு அழைக்கிறான். இந்திராணி மகிழ்ச்சியாக, “காவ்யா உன்னை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லிட்டா வீரா..” என்றார்.

கம்பன் கார் எடுக்க கீ போட சென்றவன் அப்படியே அமர்ந்துவிட்டான். கண்கள் நேரே மறையும் சூரியனில் நிலைத்தது. “வீரா.. வீரா..” இந்திராணி அந்த பக்கம் அழைத்து கொண்டிருக்க,

“நா.. க்கும்.. நான் கூப்பிடுறேன் ம்மா..” என்று வைத்துவிட்டான். இத்தனை நாட்களாய் ஆர்ப்பரித்த மனதில் இப்போது அமைதி மட்டுமே.

ஐந்து வருடங்களாய் அடக்கி வைத்திருந்த அவனின் காதல் மனம், காவ்யா திருமண பேச்சில் ஆர்ப்பரித்து அடங்காமல் அவனை ஆட்டி வைத்து,  பெண் கேட்க வைத்து, இப்போது அவள் சம்மதத்தில் அமைதி கொண்டுவிட்டது.

சந்தோஷம் கொள்ள, மகிழ்ச்சியில் திளைக்க, கொண்டாட.. ம்ஹூம்.. எதுவும் இல்லை. ஆளில்லா காட்டிலோ, பரந்து விரிந்த கடலிலோ அவனை தனியே தள்ளினால்..? அந்த காட்டின் மிரட்சியும், கடலின் ஆழமும் அவனை பாதிக்குமா..? தெரியாது..

அவனின் காவியத்தின் சம்மதமும் ஒருவிதத்தில் அவனுக்கு மிரட்சியை கொடுத்திருக்க வேண்டும். பெண் மனதின் ஆழம், தன் மீதான அவளின் எதிர்மறை எண்ணங்கள் அவனை அச்சுறுத்த வேண்டும். ஆனால் இல்லை. காடு அவனை அப்படியே அரவணைத்து கொண்டால், கடல் அதன் ஆழத்தில் இவனை சுகமாக இழுத்து சென்றால்.. ம்ஹ்ம்..

அதன் பிரமாண்டம்.. தான் கொண்ட காதல். அதன் தோல்வி.. தொடர்ந்த பிரச்சனைகள், அப்பா.. அவனின் அப்பா.. நினைத்த கணம் சட்டென மூச்சடைக்க வைத்தது, ஒரு அழுத்தம் தாங்க முடியா பாரமாக அவன் நெஞ்சில் கனக்க ஆரம்பித்தது. தேடி பிடித்து தண்ணீர் எடுத்து வேகமாக குடித்தான். கண்ணாடியை இறக்கிவிட்டான். மூச்சை இழுத்துவிட்டான். போதவில்லை. கதவை திறந்து இறங்கி நின்றான்.

பாலா பார்த்து அருகில் வந்தான். “என்ன சார்..?” என்றான். கம்பன் போக சொல்லி கை அசைத்தவன், அங்கேயே நின்றுவிட்டான். இருள் சூழ ஆரம்பித்தது. ராம்தாஸ் கேமராவில் இவனை பார்த்தவர், தேடி கொண்டு வந்துவிட்டார்.

“என்னடா..” என்று அவன் தோள் தட்டினார். அவரை பார்த்த கம்பன் அப்படியே தோள் தட்டிய கையை பிடித்து கொண்டான். இறுக்கமாக.. மிக இறுக்கமாக. அவன் அப்பா இறந்த பின் ஓர் நாள் இப்படி தான் அவர் கை பிடித்து நின்றான். ராம்தாஸ்க்கு புரிந்துவிட்டது. இருவரும் ஒரே நேரத்தில் அப்பாவை பறிகொடுத்தவர்கள். வலியும், துக்கமும் ஒன்று தானே.

அதிலும் கம்பனின் அப்பா இவரின் அப்பாவிற்காக வேண்டி உயிர் விட்டவர். விசுவாசம், பணம், வேலை  என்று அதற்கு ஆயிரம் காரணம்  இருந்தாலும் அந்த அன்பு..  பெரியவர் மீது பரசுராம் வைத்திருந்த ஆத்மார்த்தமான  அன்பு.. அதை பெரியவர் உணர்ந்து தானே மகனிடம் பேசினார்.

அவர்களின் ஆக்சிடென்ட் நடப்பதற்கு இரண்டு நாள் முன்னிரவு மகனை அவரின் அறைக்கு வர வைத்த பெரியவர்,  “தாஸ்.. என்னோட உள்ளுணர்வு ஏதோ சொல்லுது, பார்த்துக்கோ தாஸ், குடும்பம் தொழில் எல்லாம். கூட பரசு.. எனக்கு ஏதாவது ஆபத்துன்னா அவன் என்னை விட்டு ஓட மாட்டான், அப்படி ஏதாவது ஆச்சு அவன் குடும்பம் உன் பொறுப்பு. முக்கியமா பெரியவன்.. வீரா.. அவனை விட்டுடாத, சின்னவன் பொறுப்பு, பெரியவன் அடங்காதவன், அவன் எப்படி வேணும்ன்னாலயும் போயிடுவான், சேர்த்து பிடிச்சுக்கோ.. அவனுக்கு நான் இதெல்லாம் யோசிச்சிருக்கேன், செஞ்சிடு..” என்று மகனிடம் சொல்லி வைத்திருந்தார் பெரியவர்.

மறக்கவில்லை ராம்தாஸ். பெரியவர் அவரின் அன்பிற்குரிய அப்பா மட்டுமில்லை குருவும் கூட. அதனாலே இருவரின் இறப்பிற்கு பின் ஒரு வாரம் சென்று, ஆள் விட்டு கம்பனை வர சொன்னார் ராம்தாஸ். ஆனால் அவன் வரவில்லை. “ஏன் வரணும்..?” என்று கேட்டு அனுப்பிவிட்டான்.

ராம்தாஸ்க்கு கோவம்.  ‘வயசுல பெரியவங்கன்ற மரியாதை கூட கொடுக்க மாட்டானா..? பரசுராம் மகனா இந்த பையன்..?  ஸ்டேஷன் வரைக்கும் போய்ட்டு வந்தவன் தானே.. இப்படி தான் இருப்பான்..’ ஒருவித கடுப்போடு, கோவத்தோடு அப்பா சொன்னதற்காக, பரசுராமிற்காக  இவரே கம்பன் வீர்யயனை தேடி கொண்டு வீட்டுக்கு சென்றார்.

Advertisement