Advertisement

சஞ்சய் அவரிடம் சென்று வணக்கம் சொன்னவன், எடுத்ததும் அப்பா செய்ததுக்கு மன்னிப்பு வேண்டினான். ராம்தாஸ் முகம் அதில் கொஞ்சம் இளக,  கம்பனிடம் சொன்னதை அவரிடமும் சொன்னான். “எனக்கு அப்பா அளவுக்கு சட்டம் நுணுக்கம் தெரியாதுன்னாலும், நிச்சயம் நல்லபடியா செய்வேன்..” என்றான்.

“சட்டம் நுணுக்கம் இல்லைனாலும் சரி,  உங்க அப்பா மாதிரி ஓட நினைக்காம தைரியமா நின்னா போதும்..” ராம்தாஸ் சொன்னார். அதில் சஞ்சய் முகம் கருத்து போனது.

உண்மைகள் சுடத்தான் செய்யும்.. ராம்தாஸ் நினைத்தவர், “இதுவரை நடந்தது, இனி உள்ள பிளான் எல்லாம் உன் அப்பாகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க.. நான் சொல்றப்போ ஒவ்வொண்ணா ஆரம்பிக்கணும்..” முடித்துவிட்டார்.

அவ்வளவு தான்.. எல்லாம் திரும்ப நேர் கோட்டுக்கு வந்துவிட்டது.  இனி இது பற்றி கவலை பட வேண்டியதில்லை.  வாசுதேவன் இடத்தில் சஞ்சய். இவன் சொதப்ப மாட்டான். கம்பனுக்கு  நம்பிக்கை உண்டு. மற்றபடி பாதுகாப்பு இவன் தலைவலி. சஞ்சய் இவர்களை நம்புகிறான். போதும்.. பார்த்துக்கொள்ளலாம்..

ராம்தாஸ் எழுந்து கொண்டவர், கம்பனை முறைத்து சென்றார். “அய்யா..” கம்பன் கூப்பிட,

“எடுத்திருக்கிற வேலை முடியட்டும்.. உன்கிட்ட வரேன்..” ராம்தாஸ் சென்றுவிட்டார்.

கம்பன் முகம் சுருங்கியது. “எங்களாலவா..?” சஞ்சய் காரில் வைத்து கேட்டான்.

“நான் நேத்தே சொல்லிட்டேன் எனக்காகவும் தான்..” என்றான் கம்பன்.

தொடர்ந்த சில நிமிட அமைதிக்கு பிறகு, “என் அப்பாக்கு நான் செய்யவே முடியாததை நீங்க உங்க அப்பாக்கு செய்றீங்க..? அட்லீஸ்ட் இதுக்கு நான் சப்போர்ட் கூட பண்ணலைன்னா எப்படி..?” சாலையை நேரே பார்த்து கம்பன் சொன்னான்.

சஞ்சய்கு அவன் பேச்சில் உள்ள வலி புரிந்தது. “சப்போஸ் உங்க அப்பா இப்போ இருந்திருந்தா..?” சஞ்சய் கேட்க,

கம்பனே பல லட்சம் முறை நினைக்கும் கேள்வி தானே இது. ஒரு விரக்தி சிரிப்புடன், “இல்லையில்லை..” என்றவன், “தண்டனை கிடைச்சு அனுபவிக்கிறது எல்லாம் ஒன்னுமே இல்லைங்க.. தண்டனை கொடுக்க ஆள் இல்லாம இருக்கிறது தான்.. ச்சு.. விடுங்க..” வெறுமையுடன் சொன்னான்.

“புரியுது..” என்ற சஞ்சய், அதற்கு மேல் அது பற்றி பேசவில்லை. சிலருக்கு பேசினால் வலி, துக்கம் குறையும். இவனை போன்ற ஆட்களுக்கு பேசினால் கூடும்.. கூடி கொண்டே போகும்.

சஞ்சய் வீடு வர, “உங்க அப்பாகிட்ட சொல்லிட்டீங்களா..?” கம்பன் காரை நிறுத்தி கேட்டான்.

“சொல்லணும்.. கண்டிப்பா ஒத்துக்க மாட்டார், எங்களுக்காக பார்த்து தான் அவர் இங்கிருந்து கிளம்ப நினைச்சதே, இப்போ நானே செய்றேன்னும் போது அக்சப்ட் பண்ண மாட்டார்..” என்றான் யோசனையுடன்.

“பேசுங்க.. எலக்ஷன் வந்திடுச்சு, எப்போ உங்க வேலை ஆரம்பிக்கும் தெரியாது.. பார்த்துக்கோங்க..” என்றான் கம்பன்.

சரியென்ற சஞ்சய், “தேங்க்ஸ் எல்லாத்துக்கும்..” என்றான்.

“அவ்வளவு தானா..?” கம்பன் கேட்க,

“அவ்வளவு தான்னா..?” சஞ்சய் முகம் உடனே மாறிவிட்டது. காவ்யா வை மீன் பண்ணி கேட்கிறானா..? அண்ணனாக மாறி கம்பனை முறைத்தான். புரிந்த கம்பன் வீரய்யனின் அவ்வளவு நேர அழுத்தம் குறைய,  சிரித்துவிட்டவன்,  “காவியத்துகிட்ட தான் காவியத்தை கேட்பேன், உங்ககிட்ட வேற..” என்றான்.

“என்கிட்ட என்ன..?” சஞ்சய் சந்தேகமாக கேட்க,

“இந்த  ‘ங்க’ இடத்துல ‘டா’ போட்டு  பேசுற உரிமை..” என்றான் கம்பன்.

‘ஆஹ்ன்..’ சஞ்சய் விழித்தான்.

அடப்பாவி ப்ரண்ட்ஷிப் வேணுங்கிறதையா இப்படி கேட்கிறான்..?

“அதென்ன முதல்ல என் தங்கச்சி வேணும், இப்போ என் ப்ரண்ட்ஷிப் வேணும், எங்க பேமிலிகிட்ட இருந்து உனக்கு எதாவது வேணுமே இருக்கா..?” சஞ்சய் கேட்க,

“கேட்டாலும் கொடுக்க மாட்டேங்கிறீங்களே..? பிகு பண்றதுல அண்ணனும், தங்கச்சியும் ஒரே மாதிரி இருக்கீங்க, கொஞ்ச நல்ல பையனா இருக்கிறதால தான் கேட்டுட்டு இருக்கேன்.. இல்லன்னா தெரியும் இல்லை என்னை பத்தி, ரொம்ப வெய்ட் பண்ண வைக்காம, சீக்கிரம் இரண்டு பேரும் யோசிச்சு ‘எஸ்’ சொல்லுங்க..” என்றான் கம்பன்.

“யோசிச்சா ‘நோ’ தான் சொல்வோம் பரவாயில்லையா..?” சஞ்சய் கிண்டலாக கேட்க,

“நோ சொன்னா நான் விட்டுடுவேன் நினைக்கிறீங்களா..?” கம்பன் புருவம் தூக்கி கேட்டான்.

“என்ன திடீர் என் ப்ரண்ட்ஷிப்..?” சஞ்சய் கேட்க,

“பிடிக்குதே..” என்றான் கம்பன்.

“பிடிக்குதா..? டேய்..” சஞ்சய் வேகமாக காரில் இருந்து இறங்கிவிட்டான்.

“ஆமா நான் உங்ககிட்ட ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டேன்..” என்றான் கம்பன் அடக்கி வைத்த சிரிப்புடன்.

“இம்ப்ரஸ்ஸா.. இல்லை.. இது சரி வராது, உனக்கென்ன ‘டா’ தானே சொல்லணும், சொல்லிக்கோ போ..” என்ற சஞ்சய் வீட்டுக்குள் ஓடிவிட்டான்.

அவன் ஓட்டத்தில் கம்பனிடம் வெடித்த சிரிப்பு. நீண்ட வருடங்கள் கழித்து இப்படியான குறும்பு பேச்சு, கலாட்டாவில் கம்பன் முகம் விகசித்திருக்க, கண்கள் சிரித்திருக்க, காரை கிளப்பினான்.

***********

சஞ்சய்  மறுநாள் காலையில் அம்மா, தங்கை ஆபிஸ் கிளம்பி செல்லவும்,  அப்பாவிடம் இப்படி என்று சொல்லிவிட்டான். வாசுதேவன் பதறி, படபடத்து போய்விட்டார்.

எடுத்ததும், “இதுக்கு நான் ஒத்துக்கவே  மாட்டேன், உங்களுக்கு பார்த்து தான் நானே இதுல இருந்து விலகினேன், நீ ஏண்டா உள்ள வந்த..? ம்ஹூம்.. வேண்டாம், நீ முடியாது சொல்லு, இல்லை நான் ராம்தாஸ் சார்கிட்ட பேசுறேன்.. நேர்ல போலாம்.. நமக்கு இது வேண்டாம்..” என்று அந்த நாள் முழுதும் அமர்க்களம் செய்துவிட்டார்.

அவரை அமைதிப்படுத்தி புரிய வைப்பதே சஞ்சய்க்கு பெரும்பாடாகி போனது. அவர் இறுதிவரை கூட இதற்கு ஒத்துக்கொள்ளாமல் போக, “நமக்கு வேற வழி இல்லைப்பா.. செய்யலாம், நான் ராம்தாஸ் சார்கிட்ட நேர்ல சொல்லிட்டேன், திரும்ப ‘முடியாது’ சொல்லி அதே தப்பை பண்ண வேண்டாம், இத்தோடு இதை  விடுங்க.. மேல பேசி அம்மா, தங்கச்சிக்கு தெரிய வேண்டாம்.. இப்போ எந்த வேலையும் இல்லை, வரும் போது பார்த்துக்கலாம்.. விடுங்கப்பா.. ப்ளீஸ்ப்பா..” என்று அப்போதைக்கு அதை முடித்து வைத்தான் மகன்.

வாசுதேவன் போராடினாலும் மகன் முடிவாக நின்றுவிட்டான். அந்த வாரம் முழுதும் ஒரு மாதிரி செல்ல, வார இறுதி நாளும் வந்தது. நால்வரும் குடும்பமாய் காலை உணவில் இருக்க, சுதா மகளின் திருமண பேச்சை ஆரம்பித்தார்.

“அன்னைக்கு தான்.. அந்த ரிசப்ஷன்ல வைச்சு மாப்பிள்ளை பையன் வர முடியாம போச்சு, அவங்களும் அதுக்கடுத்து திரும்ப கூப்பிட்டு கேட்டுட்டு இருக்காங்க, நீங்க மூணு பேரும் அமைதியா இருந்தா என்ன அர்த்தம்..? இதோ இன்னைக்கு கூட நல்ல நாள் தான். ஈவினிங் கோவிலுக்கு வர சொல்லி பார்க்கலாமா..? என்ன சொல்றீங்க..?” என்று கேட்டார்.

அப்பா, அண்ணாவோ காவ்யாவை தான் பார்த்தனர். “என்ன காவ்யா..?  இன்னும் எவ்வளவு தான் யோசிப்ப..? நேர்ல ஒரு முறை அந்த பையனை பார்த்து பேசினா ஐடியா கிடைக்கும் இல்லை, அவங்களும் நமக்காக வெய்ட் பண்ண வேண்டாம் இல்லை..” சுதா மகளிடம் கேட்க, அவள் தட்டில் விரலை வைத்து சுற்றி கொண்டிருந்தாள்.

“காவ்யா..” சுதா அதட்ட,

“வெய்ட் பண்ண வேண்டாம் சொல்லிடுங்கம்மா..” என்றாள் மகள் நிமிராமல்.

“வெய்ட் பண்ண வேண்டாம்ன்னா.. என்ன சொல்ல வர நீ..? அவன் ஓகே இல்லையா..?” சுதா கேட்க,

“இல்லைம்மா..” என்றாள் மகள்.

“இதை நீ முதல்லே சொல்லியிருக்கலாம் இல்லை காவ்யா.. அவங்களும் வேற பார்க்கணும், நாமும் உனக்கு வேற இடம் பார்க்கணும் இல்லை, நாள் போயிட்டே இருக்கு..” சுதா அங்கலாய்த்தார்.

“ம்மா.. பொறுமையா இருங்க..” சஞ்சய் சொல்ல,

“இதுக்கு மேல நான் எப்படி பொறுமையா இருக்கணும்ன்னு அண்ணனும் தங்கச்சியும் எனக்கு சொல்லிடுங்க, இவ்வளவு நாள் அமைதியா இருந்துட்டு இப்போ நான் கேட்டதுக்கு அப்பறம் அந்த பையன் வேண்டாம் சொல்றா.. சரி விடு போகட்டும், இன்னொரு இடமும் இருக்கு, அந்த டீடையில்ஸ் உனக்கு..”

“ம்மா.. எனக்கு எதுவும் அனுப்பாதீங்க ப்ளீஸ்..” என்றாள் மகள்.

சுதா தன்னை நிதானப்படுத்தியவர், “சரி சொல்லு.. என்ன முடிவுல இருக்க.. இன்னும் ஒரு வருஷம் டைம் ஏதும் வேணுமா..?” என்றார்.

மகள்  அமைதியாக இருக்க, “காவ்யா முதல்ல எங்களை நிமிர்ந்து பாரு..” அம்மா அதட்டலிட்டார்.

காவ்யா நிமிர்ந்து அண்ணனை தான் கெஞ்சலாக பார்த்தாள். அவனுக்கு ஏதோ புரிவதாய் இருக்க, “கம்பன் வீரய்யன் பார்ப்போமா..?” தானே கேட்டான்.

வாசுதேவன் இப்போது உர்ரென்ரானார். “அவன் வேண்டாம்..” என்றார் உடனே. கம்பன் மேல் அப்பா ஏதோ  கோவமாக இருக்கிறார் என்று காவ்யாவிற்கு தெரியுமே..?

“ப்பா.. நீங்க முதல்ல சொன்னது தான், மாப்பிள்ளை விருப்பம் காவ்யா முடிவு தான்’னு, அப்புறம் என்ன..?” என்ற சஞ்சய், “நீ சொல்லு காவ்யா அவனை பார்ப்போமா..?” என்று கேட்டான்.

காவ்யா “ம்ம்..” என்று தலையாட்டிவிட்டாள்.

“உனக்கு விருப்பம் இருந்து தானே சொல்ற காவ்யா..?” அண்ணன் அழுத்தமாக கேட்டான்.

அவள் விருப்பம்.. இதற்கு நிச்சயம் காவ்யாவிடம் பதிலில்லை.

ஆனால் அவன் விருப்பத்தை பெண் உணருகிறாள்.. முதல் போல அதை ஒரேடியாக ஒதுக்கி தள்ள முடியவில்லை.

அவன் வீட்டுக்கு வந்த போது அப்பா, அண்ணாவை கூப்பிடாததிலே, எங்கேயோ அவளை நெருங்குகிறான் என்று அவளுக்கு புரிந்துவிட்டது. என்னவென்று அதில் தெளிவு இல்லாத போதும், அவனுடனான திருமணத்தில் தெளிவு தான்.

ஒத்துக்கொண்டுவிட்டாள் கம்பனின் காவியமாக மாற.. வாழ..!!!

Advertisement